Advertisements

மிஸ்டர் கழுகு: ஸ்டாலினுக்கு சம்மன்?

 

”நீக்கப்பட் ​ட​நிர்வாகிகளை சேர்த்துக்​​கொண்டதன் மூலம், ‘அண்​ணாவின் அன்பு​வழி’யை அனைவருக்கும் சுட்டிக்காட்டி​யுள்ளார் கருணாநிதி!” என்று தி.மு.க தகவல்களுடன் துள்ளிக் குதித்து வந்தார் கழுகார்!

”கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. அதற்கு சில நிர்வாகி கள்தான் காரணம் என்று முடிவுசெய்த ஸ்டாலின், ஒரு பட்டியலைத் தயாரித்தார்.அதில், மாவட்டச் செயலாளர்​களான பழனிமாணிக்கம், முல்லைவேந்தன், இன்பசேகரன் உள்பட 33 பேர் இடம்பெற்று இருந்தனர். இவர்களில் பழனிமாணிக்கம் நீங்கலாக அனைவரது பேட்டியையும் ஜூ.வி-யில் வெளியிட்டு இருந்தீர். ராஜ்யசபா உறுப்பினரான கே.பி.ராமலிங்கமும் நீக்கப்பட்டார். இவர்கள் அனைவரும் தங்கள் விளக்கத்தை தலைமைக்கு அனுப்பினர். இந்த நிலையில் முல்லைவேந்தன் மட்டும் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். கே.பி.ராமலிங்கம் பற்றி எதுவும் சொல்லவில்லை. மற்ற அனைவரும் கட்சியில் சேர்க்கப்படுவதாக தி.மு.க தலைமை அறிவித்துள்ளது!”

”ஆச்சர்யமான திருப்பம்தான்!”

”இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன், கடந்த சனிக்கிழமை ஓர் அறிக்கை வெளியிட்டார். ‘கழகத் தலைமை ஏற்றுக்கொள்கிற அளவுக்கு விளக்கம் அளித்திருப்பதைக் கருதிப் பார்த்து, கழகத் தலைமையை எதிர்த்து குற்றம்சாட்டியவர்கள் நீங்கலாக மற்றவர்கள் எல்லாம் தொடர்ந்து கழகப் பணியில் ஈடுபடுவதற்கு ஏதுவாக, அவர்கள் மீது எடுக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்ட நடவடிக்கை தலைமைக் கழகத்தால் கைவிடப்படுகிறது’ என்று சொல்லியிருக்கிறார். தஞ்சை மாவட்டச் செயலாளர் பதவி பழனிமாணிக்கத்துக்கு கிடையாது. ஆனால், அவர் கட்சியில் நீடிக்கலாம். தர்மபுரி வடக்கு மாவட்டச் செயலாளராக இன்பசேகரன் மீண்டும் ஆக முடியாது. ஆனால், கட்சியில் தொடரலாம்.”

”முல்லைவேந்தனுக்கு மட்டும் சிக்கலா?”

”ஆமாம்! ‘விளக்கம் கோரியபோது தலைமைக்கு எதிராக அறிக்கைவிடுத்தார் முல்லைவேந்தன்’ என்று அவர் மீது குற்றச்சாட்டு.தலைமைக்கு எதிராக அறிக்கை மட்டுமல்ல, ஸ்டாலின், அவரின் மருமகன் சபரீசன் மீது வெளிப்படையாகக் குற்றம்சாட்டினார் முல்லைவேந்தன். ‘கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தொடங்கி ஸ்டாலினின் போக்குதான் கட்சியின் தோல்விக்கு முழுக்க முழுக்கக் காரணம். விஜயகாந்த்திடம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த தனது மருமகனை அனுப்புகிறார். இந்தக் கட்சியில் வேற ஆள் இல்லையா? ஸ்டாலினுக்கு முற்றுப்புள்ளி வைத்தால்தான் கட்சியினுடைய எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும்’ என்று பேட்டி அளித்த முல்லைவேந்தனை எப்படி ஏற்பார்கள்?”

”இப்படிப் பார்த்தால் முல்லைவேந்தனைவிட மிகக் கடுமையாகப் பேட்டி அளித்தவர் கே.பி.ராமலிங்கம்தானே?”

”ம்! கருணாநிதிக்குப் பகிரங்க கேள்விகள் என்று பத்திரிகைகள் மூலமாகக் கேட்டவர் கே.பி.ஆர். ‘உங்க ரெண்டாவது புள்ளைக்கு கட்சியில பதவி கொடுங்க, ஆட்சியில பதவி கொடுங்க. ஆனா, என்னைப் போன்ற கட்சிக்காக கண்ணீர் வடிக்கிற தொண்டனை அவமானப்படுத்துகிற அதிகாரத்தை எப்படி நீங்கள் தரலாம்?’ என்று கேட்டவர். ‘சட்டமன்றத் தேர்தல்ல தோற்று மூணு வருஷம் ஆன பிறகும் நம்ம மேல இரக்கம் வரலைன்னா, அதிகாரத்துல இருந்தப்ப கட்சியிலயும் ஆட்சியிலயும் அடாவடியைத் தவிர வேற எதையும் பண்ணலைன்னுதான் தெரியுது’ என்று சொன்னவர். ஆனால் அவரை நீக்கவில்லை. உள்விவரங்கள் அறிந்தவர்களைக் கேட்டால், ‘தலைவர் நினைத்ததைச் சாதித்துவிட்டார்’ என்கிறார்கள்!”

”அப்படியா?”

”கட்சியை விட்டு நீக்கப்பட வேண்டியவர்களின் முதலாவது பட்டியலைத் தயாரித்து ஸ்டாலின் கொடுத்தபோது, அவர்களை நீக்க வேண்டாம் என்று கருணாநிதி சொன்னதை, முன்பே நான் சொல்லியிருந்தேன். ‘இப்படி நீக்க ஆரம்பித்தால், அதற்கு முற்றுப்புள்ளியே இல்லை’ என்று கருணாநிதி சொன்னார். ‘பழனிமாணிக்கத்தை நீக்குவதில் தலைவருக்கு உடன்பாடே இல்லை’ என்றும் அப்போதே நிர்வாகிகள் சிலர் சொன்னார்கள். ‘ஜெயலலிதாபோல கட்டுப்பாடு காட்டினால்தான் கட்சியை வளர்க்க முடியும்’ என்று அப்போது ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். வேறு வழியில்லாமல்தான் கருணாநிதி இதற்குச் சம்மதித்தார். அவர்கள் விளக்கம் கொடுத்ததும் முதல்கட்டமாக ஏழு பேரை மட்டும் சேர்க்க ஸ்டாலின் சம்மதித்தார். அதற்கான அனுமதியை மட்டும் வழங்கிவிட்டு லண்டன் போனார். வந்தவரிடம், கருணாநிதி தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாகச் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. ‘தற்காலிகமாக நீக்கப்பட்டவர்களுக்கு இது ஓர் எச்சரிக்கை​போல அமைந்துவிட்டது. எனவே, அவர்களை மறுபடி சேர்க்க வேண்டும்’ என்று கருணாநிதி சொல்லி யிருக்கிறார். இதற்கு ஸ்டாலின் உடன்படவில்லையாம். ‘அப்படியானால் கட்சி கன்ட்ரோலாக இருக்காது’ என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். கடந்த 21-ம் தேதி முரசொலியில் கருணாநிதி எழுதிய கடிதம், தொண்டர்களுக்காக எழுதப்பட்டது என்ற போர்வையில் ஸ்டாலினுக்காக எழுதப்பட்டுள்ளது. குற்றம் பார்க்கின் ‘சுற்றம் இல்லை, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை…’ என்று பழமொழிகளைச் சொல்லி மகனுக்குப் பாடம் நடத்தியிருக்கிறார்.”

”ஸ்டாலின் கேட்பாரா?”

”அவருக்குள்ளும் ஒரு மாற்றம் தெரிகிறது என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம். தி.மு.க மாநில மாணவர் அணிச் செயலாளர் இள.புகழேந்தியின் மகள் காவியச்செல்விக்கு கடந்த 19-ம் தேதி கடலூரில் திருமணம். ஸ்டாலின்தான் திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது, ‘உங்கள் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் வையுங்கள்’ என்று கேட்டுக்கொண்ட ஸ்டாலின், ‘இதைச் சொல்லக்கூடிய உன்னுடைய பெயர் தமிழ்ப் பெயரா என்று நீங்கள் கேட்கக் கூடும். என்னுடைய பெயர் காரணப் பெயர். மற்ற அனைவர் பெயரும் தமிழ்ப் பெயர்கள்தான். தலைவருடைய தந்தை முத்துவேலர் நினைவாக மூத்த அண்ணனுக்கு மு.க.முத்து என்று பெயர் வைக்கப்பட்டது. அடுத்து என்னுடைய அண்ணன் அழகிரிக்கு, பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் நினைவாக தலைவர் அந்தப் பெயரைச் சூட்டினார். தமிழ்ச்செல்வி, கனிமொழி, தமிழரசு என்று தமிழ்ப் பெயர்கள்தான்’ என்று சொல்லியிருக்கிறார். ஸ்டாலின் நினைத்திருந்தால் இந்தப் பெயர் பட்டியலை தவிர்த்திருக்கலாம். தமிழ்ப் பெயர் சூட்டுங்கள் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். ஆனால், ‘என்னுடைய அண்ணன் அழகிரி’ என்று சொன்னதன் மூலமாக, ஸ்டாலின் கொஞ்சம் இறங்கி வருவதற்கான சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள்” என்ற கழுகார் அடுத்த சப்ஜெக்ட் மாறினார்.

”முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கருணாநிதி, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி லஹோத்தி ஆகியோர் குறித்து திடுக்கிட வைக்கும் புகார் ஒன்றைச் சொல்லியிருக்கிறார் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவராக இருக்கும் மார்கண்டேய கட்ஜு. ஃபேஸ்புக்கிலும், வலைப்பூவிலும் இவர் எழுதியிருக்கும் கட்டுரைகள், பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியானதை அடுத்து, நாடாளுமன்றமே தகித்துக்கொண்டிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மார்கண்டேய கட்ஜு தலைமை நீதிபதியாக பதவியேற்க வந்த சமயம்… நடைமுறையில் இருந்த வழக்கப்படி சக நீதிபதிகள் யாரும் தன்னை வரவேற்க விமான நிலையம் வர வேண்டாம் என்று அதிரடியாகக் கூறியவர். அவரது தீர்ப்புகள், ஓய்வுக்குப் பிறகு அவர் எழுதிய கட்டுரைகள், பேட்டிகள் சர்ச்சைக்குரியவை. ஜூலை 20-ம் தேதி எழுதிய கட்டுரையில், ‘நான் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றபோது, அந்த நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக ஒருவர் பதவி வகித்துவந்தார். இதற்கு முன்பு மாவட்ட நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்பட்டு அந்தப் பதவியில் பணியாற்றியவர் அவர். மாவட்ட நீதிபதியாக இருந்த காலத்தில் அவர் மீது தீவிரமான எட்டு குற்றச்சாட்டுகள் இருந்தன. இந்த எட்டு குற்றச்சாட்டுகளையும் தற்காலிக தலைமை  நீதிபதியாக இருந்த ஒருவர் ஒரே சமயத்தில் ரத்துசெய்ததை அடுத்துதான், அவர் சென்னை நீதிமன்றத்தின் கூடுதல் தலைமை நீதிபதியானார் என்ற விவரமும் எனக்குத் தெரியவந்தது. இதெல்லாம் எப்படி நடந்தது? ஏன் நடந்தது என்று விசாரித்தபோது, தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் தலைவராக இருந்த ஒருவருக்கு இவர் ஜாமீன் வழங்கியதுதான் காரணம் என்று தெரியவந்தது’ என்றும் அவரது பதவியை நீட்டிக்க அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை நிர்பந்தித்தார்கள் என்றும் சொல்லியிருக்கிறார்.”

”யாராம் அந்த நீதிபதி?”

”மார்க்கண்டேய கட்ஜுவின் பேட்டியை வைத்துக்கொண்டு, அ.தி.மு.க உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்துள்​ளனர் என்றால், அந்தக் கட்சிக்கு வேண்டவே வேண்டாத மனிதராகத்தானே இருப்பார்!” என்று சிரித்த கழுகார்,

”அ.தி.மு.க உறுப்பினர் மைத்ரேயன், மாநிலங்களவையில் இந்தப் பிரச்னையைக் கிளப்பும்​போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சபையில்தான் இருந்தார். ‘தி.மு.க தனக்கு நெருக்கடி கொடுத்ததா என்பதை மன்மோகன் சிங் தெரிவிக்க வேண்டும்’ என்று மைத்ரேயன் சொன்னார். அ.தி.மு.க-வினர் தொடர்ந்து இதுபற்றி பேசியதால், சபை ஒத்திவைக்கப்பட்டது. ‘இதனைத் தொடர்ந்து எழுப்ப அ.தி.மு.க முடிவெடுத்துள்ளது. அப்போது இன்னும் பல அதிர்ச்சியான தகவல்களை வெளியிடுவோம்’ என்று அ.தி.மு.க எம்.பி ஒருவர் சொல்கிறார். அவர்கள் சொல்வதைப் பார்த்தால் இந்த விஷயம் பெரிய சர்ச்சைகளைக் கிளப்பும்​போல!” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார்,

”2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு சம்பந்தமான அமலாக்கத் துறையின் மூவ் பரபரப்பாகத் தொடங்கிவிட்டது என்கிறார்கள். குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகிவிட்டது. இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கலாமா என்பதற்கான விவாதம் முடிந்து விட்டது. இந்த நிலையில் சாதிக் பாட்ஷா அளித்ததாகச் சொல்லப்படும் வாக்குமூலம் பற்றியும், சென்னைக்கு வந்த சாகித் பால்வா, ஸ்டாலினை சந்தித்தார் என்று அந்த வாக்குமூலத்தில் வருகிறது என்பதைப் பற்றியும் ஏற்கெனவே உமக்குச் சொல்லியிருந்தேன். இதுபற்றிய விசாரணை படலத்தை அமலாக்கத் துறை ஆரம்பித்துள்ளது. சாதிக் பாட்ஷா இறந்துவிட்டார். எனவே, அவரது வாக்குமூலத்தால் பயன் இல்லை. ஆனால், அவரது நண்பர் ஒருவருக்கு இது சம்பந்தமான விஷயங்கள் தெரியும் என்றும் சொல்லியிருந்தேன். அவரை டெல்லியில் இருந்து அதிகாரிகள் சிலர் தொடர்புகொண்டு விசாரணையைத் தொடங்கிவிட்டார்கள். இதனை அடிப்படையாக வைத்து ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க​லாமா என்று அமலாக்கத் துறையின் டெல்லி அதிகாரிகள் தங்களது சட்டத் துறைக்கு கேள்விகளை அனுப்பியுள்ளதாகச் சொல்லப் படுகிறது. ‘ஜூலை மாதக் கடைசியில் இதற்கான தேதி குறிக்கப்பட்டுவிட்டது’ என்றே சிலர் சொல்ல ஆரம்பித்துள்ளனர். அப்படி அழைக்கப்பட்டால், விசாரணை இடம் டெல்லியாகத்தான் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது” என்று சொல்லிவிட்டுப் பறந்தார்!

Advertisements
%d bloggers like this: