சொத்து சேர்ப்பது தவறு இல்லை… கணக்கு காட்டத் தவறுவதுதான் தவறு! பெங்களூரு வழக்கில் ஜெ. வழக்கறிஞர் வாதம் தொடர்கிறது!

பத்து நாட்களுக்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமாரின் இறுதிவாதம் 23 நாட்களைக் கடந்தும் அனல் பறக்கிறது.

 

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பல கிடுக்கிப்பிடி கேள்விகளைக் கேட்க, அதற்கு சளைக்காமல் பதில் கொடுக்கிறார் குமார். அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பவானி சிங், மராடி இருவரும் குமாரின் வாதங்களை உன்னிப்பாக கவனிக்க… தி.மு.க வழக்கறிஞர்கள் தாமரைசெல்வன், குமரேசன், சரவணன், நடேசன், ராமசாமி ஆகியோர் அந்த வாதங்களை நோட்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள்.

இனி குமாரின் வாதத்தில் இருந்து…

ஜெயலலிதா செய்தது தவறு இல்லையா?

”ஜெயலலிதா, சசிகலா பங்குதாரர்களாக இருக்கும் ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்தின் கீழ் இயங்கி வந்தது ‘நமது எம்.ஜி.ஆர்’ என்ற நாளிதழ். இந்த நிறுவனத்தில் இருந்து வெளிவரும் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கத்தில் புதிய சந்தாதாரர்களைச் சேர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களில் இருந்தும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என சுமார் 9,500 பேருக்கு மேல் சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டனர். வருடம் 18 ஆயிரம் டெபாசிட் செலுத்தியவர்களுக்கு தினமும் மூன்று பத்திரிகையும், 15 ஆயிரம் டெபாசிட் செலுத்தியவர்களுக்கு தினமும் ஐந்து பத்திரிகையும், 12 ஆயிரம் டெபாசிட் செலுத்தியவர்களுக்கு தினமும் ஒரு பத்திரிகையும் அனுப்பி வைக்கப்பட்டது.

இப்படி சந்தாதாரர்களிடம் இருந்து நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் நிறுவனத்துக்கு வந்த மொத்தத் தொகை 14 கோடியே 25 லட்சம். இதற்கு முறையாக வரி செலுத்தியிருக்கிறோம். இந்தத் தொகையை போலீஸார் என் கட்சிக்காரர் ஜெயலலிதாவின் வருமான லிஸ்டில் சேர்க்காதது ஏன்? இப்படி டெபாசிட் ஸ்கீம் மூலம் சேர்க்கப்பட்ட தொகையை 1998-ம் ஆண்டுக்குப் பிறகு ரீ-பேமென்ட் செய்திருக்கிறோம்” என்று சொல்ல… அப்போது குறுக்கிட்ட நீதிபதி குன்ஹா, ”அப்படியென்றால் உங்க மனுதாரர் இந்தச் சொத்துகளைச் சேர்த்தது தவறு கிடையாது என்கிறீர்களா?” என்றார்.

அதற்கு குமார், ”நீதிபதி அவர்களே… யாராக இருந்தாலும் எவ்வளவு சொத்துகள் வேண்டும் என்றாலும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அவர்கள் சேர்த்த சொத்து களுக்கான கணக்குகளை காண்பிக்க தவறும்போதே அது குற்றமாகிறது” என்று பதில் கொடுத்தார்.

 

வருமானம் தந்த நமது எம்.ஜி.ஆர்!

”நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் மூலம் ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்துக்கு ஒரு கோடியே 15 லட்சத்து 68 ஆயிரம் வருவாய் கிடைத்தது. ஆனால் தமிழக லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் 40 லட்சம் மட்டுமே வருவாய் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதனால் விட்டுப்போன 75,68,000 தொகையை எனது கட்சிக்காரர் ஜெயலலிதாவின் வருமானத்தில் சேர்க்க வேண்டும்.

மன்னார்குடி அடுத்த சுந்தரக்கோட்டையில் சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தை வாடகைக்கு விட்டதில் 7,00,000 வருமானம் கிடைத்தது. அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் கிடைத்த வருமானம் 5,11,000. இந்தத் தொகையையும் எனது கட்சிக்காரர் வருமானத்தில் சேர்க்கத் தவறிவிட்டனர்” என்று கணக்கு சொன்னார் குமார்.

ஜெயலலிதா வீட்டில் ஜனாதிபதி கார்!

”ஜனாதிபதி பயன்படுத்திய ஒரு பென்ஸ் காரை அக்ரி கிருஷ்ணமூர்த்தி 1992 பிப்ரவரி மாதம் 9,15,000-க்கு வாங்கினார். அவரிடம் இருந்து ஜெயா பப்ளிகேஷன் 1992 செப்டம்பரில் 6,76,000 ரூபாய்க்கு அந்தக் காரை  வாங்கியது. இந்த காருக்கு வருமான வரியும் கட்டியிருக்கிறோம். இந்த காரின் மதிப்பை 9,15,000 ரூபாய் என்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதிகப்படுத்திக் காட்டியுள்ளனர். இந்தத் தொகையை என் மனுதாரர் செலவுப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்” என்று குமார் வாதிட்டார்.

நீதிபதி குன்ஹா, ”ஜெயலலிதா அடிக்கடி 50 லட்சம், ஒரு கோடி என டெபாசிட் செய்துள்ளாரே… இந்தப் பணம் எப்படி வந்தது?” என்று கேட்க, குமார் யோசித்தார். பிறகு, ”விவசாய நிலத்தில் வந்த வருமானம், கட்டட வாடகை மூலம் கிடைத்த வருமானம் என்று கிடைத்த வருமானங்களை வங்கியில் மொத்தமாக செலுத்தியுள்ளார்” என்று சொன்னார்.

போயஸ் கார்டனுக்கு ஒரு நாளுக்கு 18 லிட்டர் பால்!

”என் கட்சிக்காரர் ஜெயலலிதா குடியிருந்த போயஸ் கார்டன் பங்களாவில் வேலைப்பார்த்து ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஜெயராமனுக்கு மாதம் 3,000 ரூபாய் வீதம் 37 மாதத்துக்கு 1,11,000 ரூபாயும், விஜயன் என்பவருக்கு மாதம் 1500 வீதம் 59 மாதத்துக்கு 88,500 ரூபாயும், ஆறு டிரைவர்களுக்கு மாதம் 1500 வீதம் 59 மாதத்துக்கு 5,31,000 ரூபாயும், எலெட்ரீஷியனுக்கு மாதம் 1500 வீதம் 59 மாதத்துக்கு 88,500 ரூபாயும், இரண்டு துப்புறவு பணியாளர்களுக்கு மாதம் 750 வீதம் 59 மாதத்துக்கு 88,500 ரூபாயும், செல்வராஜ் என்ற சமையல்காரருக்கு மாதம் 750 வீதம் 59 மாதத்துக்கு 44,250 ரூபாயும், ராஜம்மா என்ற சமையல்காரப் பெண்ணுக்கு மாதம் 500 வீதம் 59 மாதத்துக்கு 29,500 ரூபாயும், வீடு பராமரிப்புக்கு ஏழு ஆண், பெண் வேலைக்காரர்களுக்கு மாதம் 200 வீதம் 59 மாதத்துக்கு 82,600 ரூபாயும், டோபிக்கு மாதம் 3,000 வீதம் 59 மாதத்துக்கு 1,77,000 ரூபாயும், பால் செலவு ஒரு நாளைக்கு 18 லிட்டருக்கு ஒரு லிட்டர் 7.50 காசு வீதம் 59 மாதத்துக்கு 2,38,950 ரூபாயும், டெலிபோன் பில் மாதம் 1000 வீதம் 59 மாதத்துக்கு 59,000 ரூபாயும், பூ வாங்கியது மாதம் 1,300 வீதம் 59 மாதத்துக்கு 76,700 ரூபாயும் என ஐந்து ஆண்டுகளில் மொத்த செலவுகள் 16,15,500 என்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கணக்குக் காட்டியிருக்கிறார்கள்.

பொதுவாக வீட்டுத் தேவைகளுக்கு செலவிடும் பணத்தை யாரும் வருமானத்தில் சேர்க்க மாட்டார்கள். அன்றாடத் தேவைகளுக்கு செலவழிக்கப்பட்ட தொகையைக்கூட வருமானத்தில் காட்டியிருப்பது என்ன நியாயம்? அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால், ஐந்து ஆண்டுகளில் 22 லட்சம் மட்டுமே செலவழிக்கப்பட்டது என்று நாங்களே சொல்கிறோம்” என்று மூச்சுவிடாமல் பேசினார் குமார். 

நாய்க்கு மட்டன் வாங்கினார்களா?

”வீட்டு பராமரிப்புச் செலவுகளைத் தவிர, போயஸ் கார்டனில் 12 உயர்ரக நாய்கள் இருந்தது. அந்த நாய்களுக்கு பாண்டி பஜாரில் இருந்து தினமும் எட்டு கிலோ மட்டன் வாங்கி வருவதாக இந்த வழக்கின் 198-வது அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயராமன் தன்னுடைய வாக்குமூலத்தில் சொல்லியிருக்கிறார். இந்த செலவு எதற்கும் ரசீது கிடையாது. என் மனுதாரர் வீட்டுப் பராமரிப்புக்காக  1 லட்சம் முதல் 7 லட்சம் வரை செலவழிக்கப்பட்ட தொகைகளை வருமானவரித் துறையில் காட்டி அதற்கு வரியும் கட்டியிருக்கிறார்.

என் மனுதாரர் ஜெயலலிதா, ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களில் மட்டுமே பங்குதாரராக உள்ளார். அந்த நிறுவனத்தின் இயக்குநர் உள்பட எந்த நிர்வாகப் பொறுப்புகளிலும் இல்லை. ஆனால் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள மெடோ, அக்ரோ ஃபார்ம், லெக்ஸ் பிராபர்ட்டீஸ், ராம்ராஜ் காட்டன், அக்ரோ ஃபார்ம்ஸ், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் உள்பட பல கம்பெனிகளில் என் மனுதாரர் ஜெயலலிதா பங்குதாரராக இருப்பதாகவும், அந்த நிறுவனங்களின் வங்கி பணப்பரிமாற்றம் என் மனுதாரர் ஜெயலலிதா கணக்கில் இருந்து நடந்திருப்பதாகவும் தெரிவித்திருப்பது தவறு. ஜெயலலிதாவுக்கும் இந்த நிறுவனங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

என் மனுதாரர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும், அதை பினாமி பெயரில் கம்பெனிகள் தொடங்கி முதலீடு செய்துள்ளதாகவும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் குறிப்பிடுவது உண்மைக்குப் புறம்பானது. அதற்கு எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கவில்லை. கம்பெனிகளுக்கு இடையிலான பணப்பரிமாற்றத்துக்கும் எனது கட்சிக்காரர் ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, கம்பெனிகளில் முதலீடு செய்யப்பட்டதாக சொல்லப்படும் 4.5 கோடியை வருமான கணக்கில் இருந்து நீக்க வேண்டும்” என்று அழுத்தம் திருத்தமாகப் பேசினார்.

பெரும் எதிர்பார்ப்புகளுடன் குமாரின் வாதம் தொடர்கிறது.

%d bloggers like this: