மிஸ்டர் கழுகு: சட்டமன்ற சர்ச்சை மக்கள் மன்றம் வரும் தி.மு.க.!

”2ஜி விவகாரம் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற விசாரணைப் படலத்தை எட்டி நடந்து​வரும் நிலையில், ஏர்செல் மற்றும் மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் இப்போது தலைதூக்க இருப்பதாக டெல்லி தகவல்கள் சொல்கின்றன” என்ற தகவலை வீசியபடியே வந்தார் கழுகார்!

”தயாநிதிமாறன் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது நடந்த ஒரு விஷயம் இப்போது பூதாகாரமாக ஆகத் தொடங்கியுள்ளது. ‘ஏர்செல் நிறுவனத்தை மிரட்டி அதன் பங்குகளை மேக்சிஸ் என்ற மலேசிய நிறுவனத்துக்கு அடிமாட்டு விலைக்கு விற்க வைத்தார். இந்த வியாபாரத்தின் மூலம் லாபம் சம்பாதித்த மேக்சிஸ் நிறுவனம், அதற்கு கைமாறாக சன் டி.வி-யின் பங்குகளை 600 கோடி ரூபாய்க்கு வாங்கியது’ என்ற

குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டு மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணும், சுப்பிரமணியன் சுவாமியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், ‘2ஜி அலைக்கற்றை வழக்குடன் சேர்ந்து இதைக் குழப்பிக்கொள்ள வேண்டாம். இந்தப் பிரச்னையை தனியாகவும், 2ஜி அலைக்கற்றை வழக்கை தனியாகவும் விசாரிக்கலாம்’ என்று கடந்த 2011-ம் ஆண்டு சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் நிறுவனர் சிவசங்கரன், ‘தயாநிதி மாறன் நெருக்கடியால்தான் ஏர்செல் நிறுவனப் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றேன்’ என்று சி.பி.ஐ-யிடம் ஒரு புகாரைக் கொடுத்தார். சி.பி.ஐ எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து தன்னுடைய விசாரணையைத் தொடங்கியது. ‘மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவன அதிபர் டி.எஸ்.அனந்த கிருஷ்ணனைத் தொடர்ந்து விசாரிக்கவும், மேக்சிஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகள், பங்கு வர்த்தகம் பற்றிய விவரங்களைப் பெறவும் மலேசிய அரசு ஒத்துழைக்கவில்லை’ என்று நீதிமன்றத்தில் சி.பி.ஐ குறிப்பிட்டது. ‘இந்தியாவில் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த வழக்கைத் தொடர முடியுமா என்று பாருங்கள்’ என உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ-யிடம் வலியுறுத்தியது.”

”ஆமாம்!”

”அதுவரை சி.பி.ஐ நடத்திய விசாரணைகளை ஆராய்ந்த சி.பி.ஐ சட்டப்பிரிவு இயக்குநரான ஓ.பி.வர்மா, ‘இந்த வழக்கை தொடர்ந்து நடத்தலாம். தற்போது வரை கிடைத்துள்ள ஆவணங்கள், ஆதாரங்கள், சாட்சிகளே போதுமானது’ என்று குறிப்பு எழுதினார். ஆனால், சி.பி.ஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா, ‘இந்த வழக்கை தொடர்ந்து நடத்த இந்த ஆதாரங்கள் போதுமானது அல்ல. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கும் எந்த முகாந்திரமும் இல்லை’ என்று குறிப்பு எழுதியதாகக் கூறப்படுகிறது. ஒரே விசாரணை அமைப்புக்குள் எழுந்த இந்த முரண்பாடு, இந்த வழக்கைத் தாமதப்படுத்தி வந்தது. இதையடுத்து, ‘இந்த வழக்கை தொடர்ந்து நடத்தலாமா… வேண்டாமா?’ என்பது பற்றி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்துக் கேட்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அப்போதைய சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரனிடம் இந்தப் பிரச்னை கொண்டுபோகப்​பட்டது. அதற்குள் அவருடைய பதவிக்காலமும், அப்போதைய மத்திய அரசின் பதவிக்காலமும் முடிந்துவிட்டது. இதையடுத்து மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் பொறுப்புக்கு வந்த முகுல் ரோத்தகியிடம் இந்தப் பிரச்னை நிலுவையில் இருந்தது.”

”ம்!”

”இப்படிப்பட்ட சூழ்​நிலையில்​தான் கடந்த வாரம் அ.தி.மு.க உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தனர். ‘யாரையும் காப்பாற்ற நாங்கள் முயற்சிக்கவில்லை. சட்டம் அதன் கடமையைச் செய்யும்’ என்று சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சொன்னார். இதைத் தொடர்ந்து மேல்மட்ட அளவில் இந்த விஷயம் பரிசீலனை செய்யப்பட்டது. ‘சட்டப்படி உங்கள் முடிவு என்னவோ அதனைச் செய்யுங்கள்’ என்று அட்வகேட் ஜெனரலுக்கு சிக்னல் காட்டப்பட்டது.  இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள், வாங்கப்பட்ட வாக்குமூலங்கள், திரட்டப்பட்ட ஆவணங்களைப் பரிசோதித்த அவர், ‘இதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யலாம்’ என்று இப்போது அறிக்கை அனுப்பியுள்ளார். ‘இப்போது சி.பி.ஐ வசம் இந்த விவகாரம் வந்துவிட்டது. குற்றப்பத்திரிகையில் என்ன சொல்லப்போகிறார்கள், யார் யாரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்​போகிறார்கள் என்பது விரைவில் தெரிந்து​விடும்’ என்று டெல்லி தகவல்கள் சொல்கின்றன.”

”ஓஹோ!”

”இரண்டு நாட்களுக்கு முன் சென்னை விமானநிலைய அதிகாரி​களைச் சந்தித்த சி.பி.ஐ அதிகாரி ஒருவர், மாறன் சகோதரர்களின் பயண விவரங்களைக் கேட்டு வாங்கிச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. இனி, இந்த விவகாரத்தில் பரபரப்பான காட்சிகளைப் பார்க்கலாம்” என்றபடி அடுத்த மேட்டருக்குத் தாவினார் கழுகார்!

”அழகிரி மீது புது புகார் வந்துள்ளது. இப்போது கட்சியில் ஸ்டாலின் கொடுக்கும் இம்சையைவிட, தயா கல்லூரியால் வரும் பிரச்னைகள்தான் அதிகமாக அழகிரியை அப்செட் ஆக்கி வருகிறதாம். மதுரை கலெக்டராக சகாயம் இருந்தபோது, விதிகளை மீறி கட்டப்பட்டதாக தயா கல்லூரிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிறகு, நீர்வரத்துக் கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக சிவரக்கோட்டை விவசாய சங்கத் தலைவர் ராமலிங்கத்தால் வழக்கு போடப்பட்டது. இதற்கிடையே நீதிமன்றம் போனார் அழகிரி. தன் கல்லூரிக்கு அண்ணா பல்கலையின் இணைப்பு வழங்கி உத்தரவிடும்படி கோரிக்கை வைத்தார்கள். நீதிமன்றமும் உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு அதற்கு தடை வாங்கியது. இந்த நிலையில் தயா கல்லூரிக்காக வாங்கப்பட்ட விநாயகர் கோயில் இடமும் போலி பத்திரம் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று ராமலிங்கம் என்பவர் புகார் செய்தார். இந்து சமய அறநிலையத் துறையினர் அந்த இடத்தை வேலி அடைத்து இப்போது பெயர் பலகை வைத்துள்ளனர். இதை எதிர்த்து கோர்ட்டுக்குச் சென்றது அழகிரி தரப்பு. இவர்களது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அறநிலையத் துறை சார்பாக பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.”

”சரி!”

”இந்த நிலையில் தயா கல்லூரி பற்றிய புதிய புகார் ஒன்றை கடந்த 23-ம் தேதி கலெக்டரிடம் கொடுத்துள்ளார் ராமலிங்கம். அதில், ‘கிராமப் பஞ்சாயத்து தீர்மானம் மூலம், சுடுகாட்டு மேம்பாட்டுக்காக நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த நிலத்தை பஞ்சாயத்து தலைவரின் போலி கையெழுத்திட்டு கல்லூரிக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இந்தப் புகார் அடுத்து என்ன மாதிரியான பிரச்னைகளைக் கிளப்பப்போகிறதோ?”

”சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக தி.மு.க பொங்க ஆரம்பித்துள்ளதே?”

”ம்! ‘தமிழகச் சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு’ என்ற தலைப்பில் ஆகஸ்ட் 1, 2 தேதிகளில் தமிழகம் முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்களை தி.மு.க ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் ஜூலை 31-ம் தேதி கருணாநிதியும் ஸ்டாலினும் பேசுகிறார்கள். 1-ம் தேதி மதுரையிலும் 2-ம் தேதி திருச்சியிலும் ஸ்டாலின் பேசுகிறார். அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, திருச்சி சிவா, உள்ளிட்டவர்கள் பேசுகிறார்கள். சட்டமன்ற சமாசாரம் என்பதால், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் பேசுகிறார்கள். திருவொற்றியூரிலும் விழுப்புரத்திலும் கனிமொழி பேசுகிறார். முக்கியமான இந்தப் பட்டியலில் ஆ.ராசா இல்லை. அவர், தி.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாளர் என்ற முக்கியப் பொறுப்பில் இருப்பவர். அவரை ஏனோ விட்டுவிட்டார்கள்.”

”வேண்டுமென்றேதானோ?”

”இருக்கலாம். ‘ஆ.ராசா கொஞ்சம் ஒதுங்கி இருக்கலாம்’ என்று நினைத்திருக்கலாம். மாநிலம் முழுவதும் ஸ்டாலின் பயணம் செய்யப்போகிறார். அப்போது கிளைக் கழக நிர்வாகிகள் வரை நேருக்கு நேராக சந்தித்துப் பேசுகிறார். அடிமட்டத் தொண்டனின் உள்ளக் குமுறலை அடையாளம் காணுவதற்காக இந்தப் பயணமாம். ‘நந்திகள் இல்லாமல் நடந்தால் நல்லது நடக்கும்’ என்கிறார்கள் கட்சியில்!”

– என்றபடி பறந்தார் கழுகார்!

%d bloggers like this: