கருணாநிதிக்கு கட்ஜு தரும் கசப்பு மாத்திரைகள்!

‘ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்புக்கும் பூகம்பத்துக்கும் தொடர்பு உண்டு!” என்ற கேயாஸ் தியரியை நிரூபிப்பதாக இருக்கிறது, நாட்டையும் நாடாளுமன்றத்தையும் உலுக்கிவரும் மார்கண்டேய கட்ஜுவின் குற்றச்சாட்டுகள்.

மார்கண்டேய கட்ஜு, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தவர். அதற்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர். மார்கண்டேய கட்ஜுவும் சர்ச்சைகளும் எப்போதும் இணைந்தே இருப்பவை. ஆனால் இப்போது மன்மோகன் சிங், கருணாநிதி, முன்னாள் தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி… என்று பெரிய மனிதர்களை இழுத்துவிட்டிருப்பதால், அது இப்போது புயலைக் கிளப்பிவருகின்றன.

ஜூலை 19 மற்றும் 20-ம் தேதிகளில் கட்ஜு தனது வலைப்பூவில் அவர் ‘பகீர்’ந்துகொண்ட தகவல்கள்…

”2004-ம் ஆண்டு. நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டேன். அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதிக்குப் பாதி இடங்கள் காலியாக இருந்தன. அப்போது நடைமுறையில் இருந்த வழக்கப்படி, தலைமை நீதிபதியாக இருப்பவர், சீனியராக இருக்கும் வேறு இரண்டு நீதிபதிகளின் ஆலோசனைப்படிதான், புதிய நீதிபதிகளுக்கான வரைவுப் பட்டியலைத் தயாரிக்க வேண்டும். ஆனால், நான் 12 நீதிபதிகளிடம் ஆலோசனைக் கேட்டு ஒரு பட்டியலைத் தயாரித்து உச்ச நீதிமன்றத்தின் அப்போதையை தலைமை நீதிபதி லஹோத்திக்கு அனுப்பினேன்.

அப்போது மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, இந்த நீதிபதி பட்டியலை நாங்கள் தயாரிக்கும்போது எந்தவித குறுக்கீடும் செய்யவில்லை. ஆனால், இந்த வார்த்தைகளை அடுத்த கட்சி (தி.மு.க) பற்றி சொல்ல முடியாது. ‘இவரை நீதிபதியாக நியமியுங்கள். அவரை நியமியுங்கள்!’ என்று கொஞ்சம்கூட தகுதியே இல்லாதவர்களை எல்லாம், அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனக்குப் பரிந்துரைத்தார்கள். அவர்கள் சிபாரிசு செய்தவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள்; அந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள். மத்திய அரசில் செல்வாக்கோடு இருந்த அவர்களால், அதிகபட்சம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகவிடாமல் என்னைத் தடுக்க முடியும். அவ்வளவுதானே? அதனால் அவர்கள் நிர்பந்தத்துக்கு கட்டுப்படவில்லை.

நான் பணியாற்றிய காலகட்டத்தில், அதில் கூடுதல் நீதிபதியாக ஒருவர் பதவி வகித்துவந்தார். மாவட்ட நீதிபதியாக இருந்தபோது, அவர் மீது எட்டு குற்றச்சாட்டுகள் இருந்தன. இதை எல்லாம் தாண்டி அவர் எப்படி சென்னை நீதிமன்றத்தின் கூடுதல் தலைமை நீதிபதியானார் என்று விசாரித்தபோதுதான், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் தலைவராக இருந்த ஒருவருக்கு, இவர் ஜாமீன் வழங்கிய தகவல் தெரியவந்தது. நான் திரட்டிய தகவல்களை எல்லாம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த லஹோத்திக்கு தெரியப்படுத்தினேன். அதன் அடிப்படையில் ‘ஐ.பி’ ஓர் ரகசிய விசாரணையை நடத்தியது. இதையடுத்து லஹோத்தி என்னை டெலிபோனில் தொடர்புகொண்டு, அந்தக் கூடுதல் நீதிபதி குறித்து சந்தேகப்பட்டது எல்லாம் உண்மைதான் என்று ஊர்ஜிதமும் செய்தார். இருந்தபோதும், சில மாதங்களுக்குப் பிறகு, அந்தக் கூடுதல் நீதிபதியின் பதவிக் காலம் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

நீதிபதிகள் லஹோத்தி, சபர்வால் மற்றும் ரூமா பால் அடங்கிய குழு, இந்தக் கூடுதல் நீதிபதியை மறுதலித்த செய்தியை தெரிந்துகொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிப் பிரமுகர் ஒருவர், நியூயார்க் நகருக்குச் செல்ல விமானநிலையம் சென்ற பிரதமரை வழியனுப்பும் சாக்கில் அணுகி, ‘நீங்கள் திரும்ப வரும்போது இங்கே உங்கள் அரசு இருக்காது’ என்று கூறியிருக்கிறார். இதைக் கேட்டு திடுக்கிட்ட பிரதமரை பக்கத்தில் இருந்த ஒரு மூத்த காங்கிரஸ் அமைச்சர் அமைதிப்படுத்தி விமானம் வழியனுப்பிவிட்டு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை அணுகி, ‘இந்த கூடுதல் நீதிபதிக்கு நீங்கள் ஒரு வருட நீட்டிப்பு கொடுக்காவிட்டால், கூட்டணிக்கு அபாயம் இருப்பதாகக் கூறியிருக்கிறார். இதை அடுத்துதான் அந்தக் கூடுதல் நீதிபதிக்கு ஒரு ஆண்டு பதவி நீட்டிப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சபர்வால் அவருக்கு மேலும் ஒரு வருட பதவி நீட்டிப்பு கொடுத்தார். அடுத்து வந்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அந்த ஊழல் கூடுதல் நீதிபதியை உயர் நீதிமன்றத்தின் நிரந்தரமான நீதிபதியாக மாற்றி, வேறு ஊருக்கு மாற்றலும் கொடுத்தார்” என்று எழுதி இருக்கிறார் கட்ஜு.

காங்கிரஸ் கட்சி கட்ஜுவின் குற்றசாட்டுகளை ஆரம்பத்தில் மறுத்தது. ”கட்ஜுவால் குற்றம் சுமத்தப்பட்ட நீதிபதி மறைந்துவிட்டார். அவருக்குப் பதவி நீட்டிப்பு கொடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்லாம், பதவியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்கள். புதையுண்டு போய்விட்ட இந்த விவகாரத்தை இத்தனை ஆண்டுகள் கழித்து, கட்ஜு இப்போது வெளிக்கொண்டு வருவது ஏன்? யாருக்காக?” என்று எதிர்க்கேள்வி கேட்டது.

கட்ஜு குறிப்பிட்டுச் சொல்லும் நீதிபதி அசோக்குமார். அவர் சென்னை உயர் நீதிமன்றத்திலும் பின்னர் ஆந்திர உயர் நீதிமன்றத்திலும் நீதிபதியாக இருந்தவர். ‘நீதிபதி அசோக்குமாருக்கு பதவி நீட்டிப்பு இல்லை’ என்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தேர்வுக்குழு முடிவெடுத்திருந்த நிலையில், ‘நீதிபதி அசோக்குமாருக்கு ஏன் பதவி நீட்டிப்பு கொடுக்கவில்லை?’ என்று விளக்கம் கேட்டு, பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகமே நேரடியாக நீதித்துறைக்கு எழுதிய கடிதம் வெளியானதை அடுத்து… முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இப்போது ‘கார்னர்’ செய்யப்பட்டிருக்கிறார்.

கட்ஜு ஏன் இப்படி பேச ஆரம்பித்துள்ளார் என்பதை வைத்து டெல்லியில் அரசியல்ரீதியாக சில பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. முன்னாள் சட்ட அமைச்சர் கபில்சிபல், கட்ஜுவைப் பற்றி சில பத்திரிகையாளர்களிடம் பேசிக்கொண்டு இருந்தாராம். அவர்கள், ‘இதை நீங்களும் இணையதளத்தில் எழுதலாமே’ என்று சொல்ல, கபில்சிபல் விலகி ஓடுகிறாராம். ”காங்கிரஸ் ஆட்சியின்போது கட்ஜுவை ஏதாவது ஒரு மாநிலத்துக்கு கவர்னராக ஆக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஒருவர், கபில்சிபலிடம் சொன்னார். ஆனால் அதனை கபில்சிபல் ஏற்கவில்லை. அதனால்தான் காங்கிரஸ் மீது கட்ஜுவுக்குக் கோபம்” என்றும் சொல்கிறார்கள்.

”கட்ஜு இப்போது பிரஸ் கவுன்சில் பதவியில் இருக்கிறார். அவரது பதவிக்காலம் அக்டோபர் மாதம் முடியப்போகிறது. இந்த ஓய்வுக்குப் பின்னரும் பதவி நீட்டிப்பு வேண்டும் அல்லது வேறு பதவிக்குப் போக வேண்டும் என்பதுதான் கட்ஜுவின் ஆசை. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட ஒருவருக்கு தற்போதைய ஆட்சியில் பதவி நீட்டிப்பு அளிப்பதோ மற்ற பதவியில் அமர்த்துவதோ எளிதானது அல்ல. அதனால்தான், இப்படி ஒரு சர்ச்சையை காங்கிரஸ் மீது கிளப்பி தனக்கு அனுதாபம் தேடப் பார்க்கிறார். இதே கட்ஜு முன்பு மோடியையும் அருண் ஜெட்லியும் கடுமையாகக் குட்டியவர். இந்த நிலையில் கட்ஜுவின் பதவி நீட்டிப்பு, மாற்றுப் பதவி என்பதெல்லாம் நடக்கக் கூடியதா?” என்றும் சிலர் கேட்கிறார்கள்.

2011-ம் ஆண்டு கட்ஜு, பிரஸ் கவுன்சில் சேர்மன் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டார். இந்தப் பதவிக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வி.எஸ்.சிர்புர்கர் உட்பட மூன்று நீதிபதிகள் கொண்ட பெயர் பட்டியல் தயாராக இருந்தது. ஆனால் கட்ஜு பெயரை சிபாரிசு செய்தவர், அப்போதைய அமைச்சர் ராஜீவ் சுக்லா. அவரது ஆசீர்வாதம் இப்போதும் கட்ஜுவுக்கு இருக்கிறது. இன்று சட்ட அமைச்சராக இருக்கும் ரவிசங்கர் பிரசாத்தின் சகோதரியைத்தான் ராஜீவ் சுக்லா திருமணம் செய்துகொண்டுள்ளார். எனவே, இந்தச் செல்வாக்கும் கட்ஜுவுக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

%d bloggers like this: