ஜெயலலிதா குற்றமற்றவர்! பெங்களூரு லைவ்!

ஜெயலலிதாவின் 66 கோடி ரூபாய் சொத்துக்காக 25 நாட்களில் 80 மணி நேரம் தன் இறுதி வாதத்தை எடுத்துவைத்து நிறைவு செய்திருக்கிறார் வழக்கறிஞர் குமார். அவரது இறுதி வாதம் கடந்த 23-ம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முடிந்தது. அடுத்து சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கரின் இறுதிவாதம் தொடங்க இருக்கிறது. இவருக்கு உதவியாக அசோகன், சீனிவாசன், அன்புக்கரசு, பன்னீர்செல்வம், தனஞ்செயன், கருப்பையா ஆகிய அ.தி.மு.க வழக்கறிஞர்கள் பெங்களூருக்கு வந்திருக்கிறார்கள்.

குமாரின் இறுதி வாதத்தில் இருந்து…

”இந்த கம்பெனிகளுக்கும் ஜெயலலிதாவுக்கும் தொடர்பு இல்லை!”

”எனது கட்சிக்காரர் மீது போடப்பட்ட வழக்கில் உள்ள குறைபாடுகளை சுருக்கமாகச் சொல்கிறேன். பங்கு முதலீடு மூலமாக 10 நபர்கள் மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ரிவர்வே அக்ரோ ஃபார்ம்ஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் ஆகிய மூன்று கம்பெனிகளில் சேர்கிறார்கள். அவர்களின் முதலீட்டாளர்களைக் காண்பிக்கும்படி வருமானவரிச் சட்டம் 148 மூலமாக நோட்டீஸ் அனுப்பியது வருமானவரித் துறை. சட்ட விதிகளுக்கு பதிலளிக்கும் விதத்தில், அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய அனைத்து முதலீட்டாளர்களையும் காட்டியிருக்கிறார்கள்.

15.10.1990-ல் தொடங்கப்பட்ட மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ரிவர்வே அக்ரோ ஃபார்ம்ஸ் கம்பெனிகளுக்காக இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சசிகலாவின் சொத்துகளை விற்பனை செய்ய அக்ரிமென்ட் போடப்பட்டது. அதில் கிடைத்த கிரையத் தொகை மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ்-க்கு 32,90,000 ரூபாயும், ரிவர்வே அக்ரோ ஃபார்ம்ஸ்-க்கு 52,00,000 ரூபாயும் காசோலையாக வந்தது. இதை அப்போது வருமானவரித் துறையில் தாக்கல் செய்கிறோம். அதை வருமானவரித் துறையும் ஏற்றுக்கொண்டு உள்ளது. இந்த கம்பெனிகளும் ஜெயலலிதாவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் கம்பெனி, கடந்த 1986-ல் சென்னையைச் சேர்ந்த காந்தி குடும்பத்தினரால் தொடங்கப்பட்டது. அவரிடம் இருந்து 1994 முடிவில் சுதாகரன், சுந்தரவடிவேல், இளவரசி, பிரபா ஆகியோர் 14,00,000-க்கு வாங்குகிறார்கள். அதன் பிறகு இந்த கம்பெனிக்கு சுதாகரன், சுந்தரவடிவேல், இளவரசி, பிரபா ஆகியோர் பங்குதாரர்களாகவும், கூடுதல் இயக்குநர்களாகவும் சேர்ந்து, பின் கம்பெனியின் வளர்ச்சிக்காக பங்குகளை விற்பனை செய்தார்கள். ஒரு பங்கு மூன்று ரூபாய் வீதம் ஆறு லட்சத்து 14 ஆயிரம் பேர் பங்குதாரர்களாக சேர்ந்ததால், 18,42,000 ரூபாய் வருவாய் கிடைத்தது. கம்பெனிக்குச் சொந்தமாக 40,20,000 ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்டப்பட்டது. மேலும், கம்பெனியின் வளர்ச்சிக்காக சிப்காட் நிறுவனத்தில் 52,82,999 மற்றும் சென்னை அபிராமபுரம் கனரா வங்கியில் 1,64,000 கடன் வாங்கப்பட்டது.” 

”ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் கட்டட மதிப்பு தவறு!”

”மேலும் இந்த கம்பெனிக்கு தஞ்சையில் கட்டடம் கட்டியதில் 6,02,000 செலவானது. ஆனால் இந்தக் கட்டடத்தை ஆய்வுசெய்த தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் கீழ் செயல்பட்ட பொதுப்பணித் துறை பொறியாளர் பாஸ்கரன், இந்தக் கட்டடத்தின் மதிப்பை 1,40,00,000 என்று அதிகப்படுத்தி மதிப்பீடு செய்திருக்கிறார். தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை விதியின்படி நீதிமன்றத்தின் அனுமதியோடு கட்டட உரிமையாளர்கள் இருக்கும்போதுதான் கட்டடத்தை அளவீடு செய்ய வேண்டும். ஆனால், பொதுப்பணித் துறை பொறியாளர், நீதிமன்ற அனுமதி பெறாமல் கம்பெனிக்குத் தெரியாமல் அளவீடு செய்திருக்கிறார்.

கட்டடத்தின் அளவைக் குறிப்பிடாமல் மதிப்பீடு செய்திருக்கிறார். அது எப்படி சாத்தியமாகும்? கட்டடத்தின் அளவு தெரிந்தால்தானே, அந்தக் கட்டடத்தின் மதிப்பீட்டைச் சரியாகக் குறிப்பிட முடியும். அதுமட்டுமல்லாமல் கட்டடத்துக்குப் போடப்பட்ட கான்கிரீட், மரப் பொருட்கள், மார்பிள்ஸ் ஆகியவற்றை எப்படி அளவீடு செய்தோம் என்பதையும் சொல்லவில்லை.   

பொதுப்பணித் துறை ஒவ்வொரு வருடமும் வெளியிடும் கட்டடத்தின் கட்டுமானப் பொருட்களின் மதிப்பைத்தான் எடுத்துக்கொண்டதாக அறிக்கையில் காட்டியிருக்கிறார்கள். ஆனால், அரசு தரப்பு சாட்சியாக விசாரிக்கப்பட்ட பொதுப்பணித் துறையின் 153-வது சாட்சியான பாஸ்கரன், கட்டடம் கட்டப்பட்ட வருடத்துக்குப் பிறகுதான் மதிப்பீடு செய்ததாகச் சொல்லியிருக்கிறார். அது தவறு என்று தெரிந்து மூல ஆவணத்தில் அந்த மதிப்பீட்டை அடித்து திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதை யார் திருத்தியது, எந்த வருடத்தில் திருத்தம் செய்யப்பட்டது என்று குறிப்பிடவில்லை. திருத்தம் செய்யப்பட்ட இடத்திலும் மேலே கையெழுத்து எதுவும் போடாமல், விதிமுறை மீறி தவறான மதிப்பீடு செய்திருக்கிறார்கள். இதற்கு எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை. கம்பெனியின் சொத்து மதிப்பை அதிகப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக, 78,00,000 கூடுதலாக மதிப்பீடு செய்திருக்கிறார்கள். மேலும், ராம்ராஜ் அக்ரோ மில்ஸின் சொத்துகளைக் காட்டி வங்கியில் ஒரு கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது. அதையும் குறிப்பிடவில்லை.”

”ஜெயலலிதா பணம் தரவில்லை!”

”லெக்ஸ் பிராபர்டீஸுக்குச் சொந்தமாக கட்டடம் கட்டியதை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் 27,00,000 செலவானதாகக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், அதற்கான ஆதாரங்களைச் சரியாகக் காட்டவில்லை. லெக்ஸ் பிராபர்ட்டீஸ் தன்னுடைய வருமானத்தை அடிப்படையாக வைத்து சென்னை அபிராமபுரத்தில் உள்ள இந்தியன் வங்கியில் ரூ.1,33,00,000 கடன் பெற்றுள்ளது. இந்தக் கடன் பெற்றதற்கான ஆவணங்களை வருமானவரித் துறையில் காட்டியிருக்கிறோம். ஆனால், இந்த கம்பெனிகளின் கட்டடம் கட்ட ஜெயலலிதா பணம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டிருப்பது தவறு. இந்த கம்பெனிகளுக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர் பணமும் தரவில்லை” என்று ஆதாரங்களுடன் சொன்னார் குமார்.

”விசாரணை அதிகாரி சுதந்திரமாக செயல்படவில்லை!”

”என் இறுதி வாதத்தில் இறுதி கட்டத்துக்கு வந்திருக்கிறேன்…” என்ற முன்னுரையுடன் சொல்ல ஆரம்பித்தார் குமார். ”புலன்விசாரணை அதிகாரி விசாரணையை முடித்த பிறகு, இறுதி விசாரணை அறிக்கை தயாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது அந்த புலன்விசாரணை அதிகாரியின் கடமை. இதில் யாரும் தலையிட முடியாது. ஆனால், இந்த வழக்கில் அரசு சாட்சியாக சேர்க்கப்பட்ட அப்போதைய உள்துறை செயலாளர்  தேவராஜன் அளித்த சாட்சியத்தில் இருந்து, முக்கியமான சில தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. தமிழக லஞ்சஒழிப்புத் துறை இயக்குநர் ராகவன் உதவியுடன் மாதிரி குற்றப்பத்திரிகை தயார் செய்து, மூத்த வழக்கறிஞர் நடராஜனிடம் காட்டியிருக்கிறார்கள். அதன் பிறகு மாநில அரசு குற்றவியல் மூத்த அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம் தெரிவித்துள்ளார்கள். பின், குற்றப்பத்திரிகையை நல்லம நாயுடு மூலமாக தாக்கல் செய்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இருந்து விசாரணை அதிகாரி தன்னிச்சையாக செயல்படுவதைத் தடுத்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. இது பெரும் தவறு.

‘குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது அரசு வழக்கறிஞரை கலந்து ஆலோசிக்கக் கூடாது’ என்று, உச்ச நீதிமன்றத்தில் 1965-ல் நடைபெற்ற அபிநந்தன்ஷாம் வழக்கிலும், 2004 சரளா வழக்கிலும், 2013 அகிலேஷ் யாதவ் வழக்கிலும் நீதிமன்றம் கண்டித்து இருக்கிறது.

ஆக, இந்த வழக்கில் விசாரணையின் ஆரம்பம் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து எஃப்.ஐ.ஆர் போட்டது வரை இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கு விரோதமாக, அன்றைய ஆட்சியில் இருந்த தி.மு.க அரசாங்கத்தின் தலையீட்டால் நடைபெற்றிருக்கிறது. என் மனுதாரர் ஜெயலலிதா குற்றமற்றவர்” என்று கூறி, கடந்த 23-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு தன் இறுதி வாதத்தை நிறைவு செய்தார். அதன் பிறகு, நீதிபதி குன்ஹாவிடம் ஒரு இறுதி வேண்டுகோள் வைத்தார் குமார்.

”கனம் பொருந்திய நீதிபதி அவர்களே… ஏ2, ஏ3, ஏ4 வழக்கறிஞர்களின் இறுதி வாதம் நிறைவு பெற்றவுடன் இறுதியாக என் இறுதிவாதப் பட்டியலை மட்டும் வாசிக்க எனக்கு இரண்டு மணி நேர கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று அன்போடு வேண்டிக்கொள்கிறேன்” என்றார். சற்று யோசித்த நீதிபதி குன்ஹா, அதற்கு அனுமதி கொடுத்ததோடு, அதை ஆவணமாகவும் பதிவுசெய்துகொண்டார்.

அடுத்து சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர் வாதமும் தொடங்கிவிட்டது! 

%d bloggers like this: