Advertisements

இணைத்த நோக்கியா இளைத்தது ஏன்?

முதன் முதலில் மொபைல் போன்கள் மக்களை அடைந்த போது அனைவரின் மனதிலும் இருந்த ஒரு பெயர் நோக்கியா. பின்லாந்து நாட்டில் எஸ்போ (Espoo) நகரில் தன் தலைமை இடத்தைக் கொண்டு, பன்னாடுகளில் கிளைகளை அமைத்து, மொபைல் போன்களை அனைத்து நிலை மக்களுக்கும் என தயார் செய்து வளர்ந்து, உயர்ந்த நிறுவனம் நோக்கியா. கடந்த 12 ஆண்டுகளாக மொபைல் போன் பயன்படுத்தும் அனைவரும், நோக்கியா போனில் தான் முதன் முதலில் தொடங்கி இருப்போம். பச்சை நிறப் பின்னணியில், ஒரே நிற எழுத்துக்களோடும், தெளிவான அழைப்பு பரிமாற்றங்களுடனும், ஸ்நேக் என்னும் விளையாட்டுடனும் நமக்குக் கிடைத்த நோக்கியாவை ஒரு பொக்கிஷமாகவே தொடர்ந்து கருதி வந்திருக்கிறோம். கையில் எடுத்துச் சென்று பயன்படுத்தும் டிஜிட்டல் சாதனமாக, நோக்கியா போன்கள் தான் முதலில் நமக்கு அறிமுகமாயின.
இன்று அதற்கு விடை கொடுத்துவிட்டோம். நோக்கியாவினை முழுமையாக, மைக்ரோசாப்ட் சென்ற ஏப்ரல் 25 அன்று தனதாக்கிக் கொண்டது. அதற்கு Microsoft Mobile Oy எனப் பெயர் சூட்டியுள்ளது. மிக நன்றாக இயங்கும் வலிமையான நிறுவனங்கள் கூட ஒரு நாளில் விழலாம் என்ற படிப்பினையை நாம் நோக்கியாவிடமிருந்து கற்றுக் கொண்டுள்ளோம். 750 கோடி டாலர் தொகைக்குத்தான் நோக்கியா கை மாறியுள்ளது. 2007 வரை 41 சதவீத சந்தைப் பங்கினைக் கொண்டிருந்த நோக்கியா தொடர்ந்து சரிந்து, வேறு வழியின்றி தன்னை மைக்ரோசாப்ட் வசம் ஒப்படைத்துள்ளது. ஏன், சென்ற ஆண்டு கூட, நோக்கியா 15% பங்கு கொண்டிருந்தது.

நோக்கியா உச்சத்திலிருந்த போது, வேறு எந்த நிறுவனமும் அதனைத் தொட முடியவில்லை. அதுவே, ஓர் அரக்கத்தனத்தை அந்நிறுவனத்திற்குக் கொடுத்தது. முதலில் அதனை அசைத்துப் பார்த்தது மோட்டாரோலா ரேசர் மற்றும் ஆப்பிள் ஐபோன்களே. தன்னுடைய பங்கு இல்லாமலே, தான் ஆண்டு வந்த மொபைல் சாம்ராஜ்யம் முன்னேறுவதனைப் பார்த்த போது, நோக்கியா தன் தவறை உணர்ந்தது. தனக்கே உரிமையான மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கைவிட்டு, விண்டோஸ் போன் சிஸ்டத்தினை தத்தெடுத்தது. மூன்று ஆண்டுகள், தன் லூமியா போன்களை சந்தையில் கொண்டு வந்து ஓரளவு இடம் பிடித்தது. ஆனாலும், இறுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் தஞ்சம் கொண்டது. இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சாதனங்கள் பிரிவின் ஒரு அம்சமாக நோக்கியா இயங்க உள்ளது.
1992 ஆம் ஆண்டில், ஜோர்மா ஒலைலா, நோக்கியா சிதிலமடைந்து திண்டாடிய போது தலைமைப் பொறுப்பினை ஏற்றார். அதன் மொபைல் போன் பிரிவினை மற்றவருக்கு விற்று விடலாம் என்ற முடிவை, வன்மையாக எதிர்த்தார். அதனை விட்டுவிட வேண்டாம் என்று அறிவித்து, தொலை தொடர்பு கட்டமைப்பு தொழில் பிரிவுடன், மொபைல் போன் பிரிவையும் வளமாக்க முயற்சிகள் எடுத்தார்.
அதன் பின்னர், இன்று உலக நாடுகள் அனைத்திலும் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் ஜி.எஸ்.எம். தொழில் நுட்பத்தினை முன்னெடுத்துச் செல்வதில், நோக்கியா பெரும் பங்கு வகித்தது. கூடவே, மொபைல் போன் வடிவமைப்பிலும், தயாரிப்பிலும் பெரும் மாற்றங்களை மேற்கொண்டது.
அப்போது மொபைல் போன் சந்தை, ஒவ்வொரு நாடும் தனித்தனியே நிர்வகித்து, தனிப் பண்புகளோடு இயங்கி வந்தது. நோக்கியா அதனை மாற்றி, உலகளாவிய ஒரு சந்தையாக அமைத்தது. கூடுதல் வசதிகள் கொண்ட போன்களை மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைத்த அதே வேளையில், இந்தியா போன்ற நாடுகளில் முதல் தலைமுறையினருக்கு, 40 டாலர் அளவில் விலையிட்டு மொபைல் போன்களை வழங்கியது. 1998ல், மொபைல் சந்தையில் முதல் இடம் கொண்டிருந்த மோட்டாரோலாவினைத் தூக்கி எறிந்தது. ஒவ்வொரு புதிய மாடல் வெளிவரும்போதும், மொபைல் போனின் பரிமாணம் குறைக்கப்பட்டு, சிறிய அழகிய பயனுள்ள பேசும் பொம்மையாக மொபைல் போன்களை வடிவமைத்து வழங்கியது. பயன்களை அடுத்து, அழகான அமைப்பிற்கும் முன்னுரிமை கொடுத்து, ஸ்டைலான போன்களைக் கொண்டு வந்தது. உலகில் பயன்படுத்தப்பட்ட நான்கு போன்களில் ஒன்று நோக்கியா நிறுவனத்தினுடையதாக இருந்தது. தொடர்ந்து பல நாடுகளில் தன் எல்லையை விரித்தது. அனைத்து நாடுகளிலும் வல்லுநர்களையும், தொழிலாளர்களையும் தனக்கென பிடித்தது. அப்போது புயல் போல சுழன்று வந்த சாப்ட்வேர் பொறியாளர் தேவை மற்றும் வேலை வாய்ப்பு, நோக்கியாவின் தேவைகளை அசைக்க முடியவில்லை.
தன்னுடைய போன்கள் அனைத்தும் நோக்கியாவின் தனித்தன்மை என ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் நோக்கியா மிகக் கவனமாக இருந்தது. இதனை "Nokia DNA” என அனைவரும் அழைத்தனர். "candy bar” என்னும் பார் டைப் வடிவமைப்பினை நோக்கியா தனதெனக் கொண்டு, அதில் புதுமைகளைப் படைத்தது. அதனை மாற்ற நோக்கியா பொறியாளர்கள் தயங்கினர். அதுதான், நோக்கியா நிறுவனத்திற்கு முதல் அடியாக இருந்தது. அமெரிக்க வாடிக்கையாளர்கள், பிளிப் டைப் (flip phone) எனப்படும் மடக்கி விரித்து பயன்படுத்தும் போனை நாடத் தொடங்கினர். உடன் clamshell என்னும் ஷெல் டைப் மொபைல் போனும் மற்ற நிறுவனங்களிடமிருந்து வந்து, மக்கள் மனதினைப் பிடித்தன. மோட்டாரோலா நிறுவனம் தடிமன் மிகக் குறைந்த ultraslim போன்களைக் கொண்டு வந்து, அந்த வகையில் தானே ராஜா என உறுதியாகச் சொன்னது. இது 2004ல் தொடங்கியது.
ஒரு சில நாட்டின் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வடிவமைப்பை விரும்பிய போது, நோக்கியா அதனைப் பொருட்படுத்தாமல், தன் னுடைய கேண்டி பார் வடிவ மொபைல் போன்களையே மக்கள் வாங்க வேண்டும் என விரும்பியது. இதனால், அமெரிக்க சந்தையில் தன் இடத்தை நோக்கியா இழந்தது. அமெரிக்காவில், மொபைல் சேவை நிறுவனங்களே மொபைல் போன்களை விற்பனை செய்ததால், அவை மக்களின் விருப்பத்திற்கே போன்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என விரும்பின. இதற்கு நோக்கியா உடன்பட மறுத்த போது, சாம்சங் மற்றும் எல்.ஜி. நிறுவனங்கள் அந்த இடத்தைப் பிடித்தன. மேலும் கொரிய நிறுவனங்களால், உடனுக்குடன் தேவைப்படும் வடிவங்களில், மொபைல் போன்களைத் தயாரித்து வழங்க முடிந்தது. அதே நேரத்தில், மோட்டாரோலாவின் ரேசர் மாடல், நோக்கியாவின் இடத்தை மிக எளிதாகத் தகர்த்தது. நோக்கியா அமெரிக்க சந்தை இழந்ததைப் பற்றிக் கவலைப்படாமல், மற்ற நாடுகளில் தன் கவனத்தைச் செலுத்தியது. 2007ன் முதல் பாதி வரை, நோக்கியா தன் இடத்தைத் தக்க வைத்தது. ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோன் இப்போது போட்டிக்கு வந்து, அமெரிக்காவில் முதல் இடத்தை இலக்காக்கியது. நோக்கியா ஸ்மார்ட் போன்களைக் கொண்டிருந்தாலும், ஆப்பிளின் ஐபோன் தான், ஒரு ஸ்மார்ட் போன் என்னவெல்லாம் செய்திடலாம் என்று உலகுக்குக் காட்டியது. இதனால், ஐபோன் மக்களின் போனாக மாறியது.
அப்போதும் கூட நோக்கியா டச் ஸ்கிரீன் பக்கம் செல்ல மறுத்தது. புதிய மாற்றங்களுக்கு மாற்றிக் கொள்ள முடியாத இயலா நிலை மக்களுக்குத் தெரிய ஆரம்பித்தது. பின்னர் நோக்கியா 5800 மாடல் போன் டச் ஸ்கிரீன் கொண்டு வெளியானது. துரதிருஷ்டவசமாக, அது ஸ்மார்ட் போன் என்பதைக் காட்டிலும், ஒரு மியூசிக் போனாகவே கருதப்பட்டது.
தொடர்ந்து வந்த ஆண்ட்ராய்ட் போன்ற பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள், நோக்கியாவை பின்னுக்குத் தள்ளின. நோக்கியா, அது போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இறங்குவது சிக்கலை வரவழைக்கும் என முடிவெடுத்து ஒன்றும் செய்யாமல் இருந்தது.
இந்த நேரத்தில், 2010 ஆம் ஆண்டில் நோக்கியாவின் தலைமைப் பொறுப்பேற்ற, மைக்ரோசாப்ட் முன்னாள் நிர்வாகி, ஸ்டீபன், நிறுவனத்தின் சிக்கலான நிலையை விளக்கி அறிக்கை ஒன்றை சுற்றுக்கு அனுப்பினார். அதில் நோக்கியா நிறுவனம் மாற வேண்டும் அல்லது மறைய வேண்டும் என தெளிவு படுத்தினார். இதனைத் தொடர்ந்து, நோக்கியா தன் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை விட்டுவிட்டு, விண்டோஸ் போன் சிஸ்டத்தினை ஏற்றது. 2011 அக்டோபரில், லூமியா 800 மற்றும் லூமியா 710 வெளியானது. பின்னர் ஓராண்டு கழித்து லூமியா 920, வெளியான போது, அதனைத் தன் சிறப்பான போன் என அறிவித்தது. மிக மென்மையான டச் ஸ்கிரீன், முதன் முதலாக வயர்லெஸ் சார்ஜிங் என இதில் சில அம்சங்கள் புதியதாக இருந்தன. இவற்றின் மூலம் இழந்த தன் வாடிக்கையாளர்களைத் திரும்பப் பெற்றுவிடலாம் என எண்ணியது. அதற்கு இதில் தரப்பட்ட பியூர் வியூ லென்ஸ் கொண்ட கேமரா உதவும் என்ற நம்பிக்கையும் அதற்கு இருந்தது. தொடர்ந்து அடுத்த ஆண்டில், லூமியா 1020, 41 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவுடன் வெளியானது. ஆனால், இவை எதுவும் ஐபோன் மற்றும் காலக்ஸி போன்களின் பின்னால் சென்று கொண்டிருந்த மக்களிடம் எடுபடவில்லை.
இதற்கிடையே நோக்கியாவின் நிதி நிலையும் Œரிந்ததனால், வேறு வழியின்றி, மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் தன்னை விற்றுவிட்டது நோக்கியா. ஆனால், நோக்கியா மொத்தமாக மூடப்படவில்லை. மொபைல் போன் தவிர, அதன் தொலைதொடர்பு கட்டமைப்பு தொழில் பிரிவு, மேப்பிங் சேவைகள், இற்றைநாள் தொழில் நுட்பப் பிரிவுகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
இனி, மைக்ரோசாப்ட் நிறுவனம், லூமியா போன்களில், தன் விண்டோஸ் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் கூடுதல் வசதிகளைத் தந்து, நோக்கியா போன்களை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு வரலாம்.
இருந்தாலும், அந்தக் காலத்தில் எளிமையான வசதிகளுடன், அனைவரும் வாங்கும் விலையில் வந்த நோக்கியா மொபைல் போன்கள், என்றும் மக்கள் மனதில், நோக்கியா நிறுவனத்தை நிலை நிறுத்தும்.
அனைவரையும் இணைத்த நோக்கியாவிற்கு இனிய வணக்கமும் நன்றியும் கூறுவதைத் தவிர இனி என்ன இருக்கிறது.

Advertisements
%d bloggers like this: