Advertisements

உண்மை வெளிவர புத்தகம் எழுதுவேன்: நட்வர் சிங்குக்கு சோனியா பதிலடி

புதுடில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா பதிலடி கொடுத்துள்ளார். தானும் புத்தகம் எழுத உள்ளதாகவும், அப்போது உண்மையை மக்கள் அறிந்து கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் தனியார் டி.வி., ஒன்றிற்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் தலைவர் சோனியா பிரதமர் பதவிக்கு வரமுடியாததற்கு காரணம் ராகுலே என்றும், சோனியா பிரதமர் ஆனால் அவர் கொல்லப்படலாம் என ராகுல் அச்சப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், மத்திய அரசின் செயல்பாடுகளில் சோனியா தலையிட்டதாகவும், முக்கிய கோப்புகள் சோனியாவின் பார்வைக்கு சென்ற பின்னரே ஒப்புதல் பெறப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா, நானும் புத்தகம் எழுத உள்ளேன். அப்போது தான் உண்மை என்னவென்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள முடியும். நட்வர் சிங்கின் குற்றச்சாட்டுகள் மிகவும் சீரியசானது. இதன் காரணமாகவே நான் புத்தகம் எழுத உள்ளேன். இதுவே உண்மையை வெளிக்கொண்டு வரும். நட்வரின் குற்றச்சாட்டுகள் என்னை பாதிக்கவில்லை. அவரது குற்றச்சாட்டுகளால் நான் மனவேதனை அடையவில்லை. நான் எனது கணவரின் மரணத்தை பார்த்திருக்கிறேன். எனது மாமியார் துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாக துளைக்கப்பட்டதை பார்த்திருக்கிறேன். இது போன்ற குற்றச்சாட்டுகள் என்னை பாதிப்பதில்லை. அவற்றிலிருந்து நான் மிகவும் தள்ளி இருக்கிறேன். என்னைப் பற்றி அவதூறு பரப்புகிறவர்கள் அப்பணியை தொடர்ந்து செய்யட்டும். இவ்வாறு சோனியா தெரிவித்தார்.

சோனியாவுக்கு மன்மோகன்சிங் ஆதரவு: நட்வர்சிங்கின் கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்த சோனியாவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மத்திய அரசு தொடர்பான எந்த ஒரு பைலும், சோனியாவின் வீட்டிற்கு அனுப்பப்படவில்லை. சில விஷயங்கள் குறித்து இருவரும் பேசிக்கொண்டதை ஒரு குற்றமாக கருத முடியாது என்று தெரிவித்தார்.

Advertisements
%d bloggers like this: