Advertisements

மிஸ்டர் கழுகு: விஜயகாந்த்துக்கு என்னாச்சு?

”தி.மு.க ஆட்சிக் காலத்தில் செய்த விஷயங்களாக இருந்தால், கண்ணை மூடிக்கொண்டு கல்தா கொடுப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதுவே பசையான மேட்டராக இருந்தால், எப்படி நடந்துகொள்வார்கள் என்பதற்கு உதாரணமான சமாசாரம் ஒன்றைச் சொல்கிறேன்!” என்ற பீடிகையுடன் வந்த கழுகார், அந்த மேட்டரை அவிழ்க்க ஆரம்பித்தார்.

”தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில், திருவான்மியூர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 7.44 ஏக்கர் நிலத்தை, தனியார் கல்வி நிறுவன அறக்கட்டளைக்கு  ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான தீர்மானம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் வாரியக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த வட்டாரத்தில் கிரவுண்ட் வேல்யூ சுமார் 60 லட்சம் என்று சொல்லப்படுகிறது. விற்பனை செய்யப்படுவது 1 கோடி ரூபாய்க்கு மேல். ஆனால், அடிமாட்டு விலைக்குக் கொடுத்துள்ளதாக தீர்மானம் கூறுகிறது!”

”ரொம்பவும் செல்வாக்கானவர்களாக இருக்கும்!”

”இரண்டு ஆட்சியிலும் செல்வாக்கான ஆட்களாக இருந்தால்தான் இப்படிச் செய்ய முடியும். ஒரு கிரவுண்ட் சுமார் 6 லட்சம் ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்தது 12.6.1998 அன்று. அதாவது, அப்போது தி.மு.க ஆட்சி. நிலம் ஒதுக்கீடு செய்து, விலையும் நிர்ணயம் செய்தார்களே தவிர, அப்போது நிலம் பத்திரம் ஆகவில்லை. அப்படியே கிடப்பில் போடப்பட்டது. 2001 – 2006 அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது இதில் எந்த முடிவும் எடுக்கவில்லை. ‘1998-ல் நிர்ணயிக்கப்பட்ட விலையுடன் சேர்த்து அதற்குரிய வட்டி 9.5 சதவிகிதம் செலுத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று இந்த நிறுவனம் சொல்லியிருக்கிறது. ஆனாலும், முடிவு எடுக்கப்படவில்லை. ஆட்சி மாறி மீண்டும் தி.மு.க வந்தபோது, 2007-ம் ஆண்டு இதே கல்வி அறக்கட்டளைக்கு இதே நிலத்தை இதே விலைக்குத் தருவதற்கு முடிவெடுத்தார்கள். அறக்கட்டளை கூறிய 9.5 சதவிகித வட்டித்தொகையை ஏற்றுக்கொண்டது தி.மு.க அரசு. ஆனாலும், பத்திரம் ஆகவில்லை. இப்போது திடீரென கடந்த ஜூலை 1-ம் தேதி இந்தக் கோப்புகளைத் தோண்டி எடுத்து அதே அறக்கட்டளைக்கு அதே நிலத்தை அதே விலைக்குத் தருவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 1998-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு, 2005-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட வட்டியில் 2014-ம் ஆண்டு நிலத்தைக் கொடுத்துள்ளனர். அரசாங்கத்துக்கு இதனால் எவ்வளவு நஷ்டம் என்பதை விவரம் அறிந்தவர்கள்தான் கணக்குப் போட்டுச் சொல்ல வேண்டும்!”

”எதிர்க்கட்சிகள் இதனைக் கையில் எடுக்குமோ?”

”தி.மு.க கையில் எடுத்தால், அவர்கள் ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட தொகையும் சேர்ந்து அல்லவா சிக்கலை உருவாக்கும். அதனால் வாயைத் திறக்க மாட்டார்கள்!” என்ற கழுகாரிடம்,

”எம்.ஏ.எம்.ராமசாமி, போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிருக்கிறாரே… என்ன விவகாரம்?” என்று கேட்டோம்.

”ஏதோ ஒருவித பயத்தில் எம்.ஏ.எம்.ராமசாமி இருப்பதாகச் சொல்கிறார்கள். ‘என்னுடைய அரண்மனையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அது, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று பயமாக இருக்கிறது’ என்று பட்டினப்பாக்கம் போலீஸில் புகார் கொடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். தன்னுடைய மகன் முத்தையா மீது சந்தேகப்பட்டு இந்தப் புகாரைச் சொல்லியிருக்கிறாராம்.”

”ஏனாம் திடீரென்று?”

”இதுபற்றி போலீஸார் விசாரித்து வருகிறார்களாம். ‘பாதுகாப்பு காரணங்களுக்காக செட்டிநாட்டு அரசரின் அனைத்து நிறுவனங்களிலும் ஆறு மாதங்களுக்கு முன்பே கேமராக்கள் பொருத்தப்பட்டன. டெல்லி, மும்பை என்று அவர்களின் அனைத்து அலுவலகங்களிலும் இதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கிண்டி ரேஸ் மைதான நிர்வாகி அருணா, ரேஸ் மைதான ஊழியர்களால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்துதான் இந்தப் பாதுகாப்பு கேமராக்கள் வேகவேகமாக பொருத்தப்பட்டன. எம்.ஏ.எம்.ராமசாமி இருக்கும் அந்த அரண்மனையைச் சுற்றி மட்டும் 20 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், திடீரென இந்த கேமரா பற்றி எம்.ஏ.எம்.ராமசாமி ஏன் சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!”

”அவரது உயிருக்கு அச்சுறுத்தலான சூழ்நிலை நிலவுகிறதா?”

”எம்.ஏ.எம்.ராமசாமி, முத்தையா என்ற இளைஞரை 20 ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுத்தார். ‘அண்ணாமலை பல்கலைக்கழகம், கிண்டி ரேஸ் கிளப், செட்டிநாடு ஹெல்த் சிட்டி, செட்டிநாடு சிமென்ட் ஆகிய தொழில்களை முத்தையாதான் கவனித்து வந்தார். எம்.ஏ.எம்.ராமசாமியுடன் இருந்து வந்த சிலருக்கு முத்தையாவின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. இதற்கிடையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தை 2013-ம் ஆண்டு தமிழக அரசு கையகப்படுத்தியதைத் தடுக்க முத்தையா முறைப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்று எம்.ஏ.எம்.ராமசாமியிடம் அவரைச் சுற்றி இருக்கும் ஆட்கள் போட்டுக்கொடுத்தார்கள். இதுவே இருவருக்கும் இடையே மோதலை உருவாக்கி போலீஸ் புகார் வரைக்கும் போனது’ என்கிறார்கள்.

‘அண்ணாமலை பல்கலைக்கழகத்தை மோசமாக நிர்வகித்ததாலும், இஷ்டப்படி பணியாளர்களைப் போட்டதாலும் நிதி நெருக்கடி ஏற்பட்டு பிரச்னை உருவானது. எம்.ஏ.எம்.ராமசாமியின் பிற நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழகத்தை நடத்த பணம் எடுக்க முத்தையா மறுத்துவிட்டார். இப்போது  நிர்வாகம் கைமாறியதால் எம்..ஏ.எம்.ராமசாமியுடன் இருப்போர் வெறும் மாதச் சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்’ என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிழல் மனிதர்களது உண்மையான சொரூபத்தைப் புரிந்துகொள்ளாமல் போலீஸ் வரைக்கும் போய்விட்டார் என்றும் சொல்கிறார்கள்.”

”ஏற்கெனவே ஆளுங்கட்சி இவர்கள் மீது கோபமாக இருக்கும்போது, இவர்களே வலியப்போய் மாட்டுகிறார்களே!” என்றதும், சிரித்தபடி அழகிரி மேட்டருக்கு வந்தார் கழுகார்.

”வாரம் ஒன்று என்ற கணக்கில் மு.க.அழகிரியை மையமாக வைத்து புதுப் புது புகார்கள் கிளம்புவது சாதாரணமாகிவிட்டது. அவர் மத்திய உரத்துறை அமைச்சராக இருந்தபோது, அவருடைய விசுவாசிகள் சிலர் விளையாடிவிட்டது வினையாக மாறிக்கொண்டு இருக்கிறது. மத்திய அரசின் உர நிறுவனமான ‘மெட்ராஸ் பெர்டிலைசர் லிமிடெட்’ நிறுவனத்துக்கு ஆள் எடுப்பதாகச் சொல்லி, தமிழ்நாடு முழுவதும் இருந்து பலரிடமும் தலா பத்து லட்சம் ரூபாய் வீதம் வாங்கியதாகவும், கடைசியில் அவர்களுக்கு வேலை கொடுக்காமல் ஏமாற்றியதாகவும் இப்போது புகார் கிளம்பியுள்ளது.”

”அடுத்த அவஸ்தையா?”

”மு.க.அழகிரி மத்திய உரத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்ட சூழ்நிலையில், வேலைக்காகப் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பணத்தைக் கேட்டு தினமும் அலைந்துகொண்டிருப்பதாகவும் தகவல் உலவுகிறது. இந்த நிலையில்தான், பாதிக்கப்பட்ட சுப்புராஜ் என்ற வழக்கறிஞர், மதுரை மத்திய குற்றப்பிரிவில் புகார் செய்திருக்கிறார். இவர் மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தில் பொறுப்பில் இருந்தவராம். தி.மு.க மாவட்ட பொறுப்புக் குழு தலைவராக இருக்கும் கோ.தளபதியின் உறவினர். முன்பு அழகிரி மீது போலீஸ் போட்ட திருட்டு வீடியோ வழக்கில் அவருக்காக ஆஜராகி, அந்த வழக்கில் இருந்து விடுதலை வாங்கித் தந்தவராம். இவ்வளவு தொடர்பு இருந்தும் சுப்புராஜ் ஏமாற்றப்பட்டாராம்.”

”என்ன சொல்லியிருக்கிறாராம் புகாரில்?”

” ‘என் பையன் பேரு மிதுன். பி.டெக் முடித்திருந்தான். அரசு, தனியார் நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளை எழுதி, வேலை தேடிக் கொண்டிருந்தான். 2011 டிசம்பர் மாதம் கோ.தளபதி என் உறவினர் மூலம், ‘மு.க.அழகிரியின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மெட்ராஸ் பெர்டிலைசர் கம்பெனிக்கு புரபஷனரி இன்ஜினீயர் பதவிக்கு ஆள் எடுக்கிறார்கள். நல்ல சம்பளம். உடனே தயா மஹாலுக்கு வரச் சொல்லுங்கள்’ என்று சொல்லியிருந்தார். மத்திய அரசு வேலை கிடைத்தால் நல்லதுதானே என்று நானும் என் மகனும் தயா மஹாலுக்குப் போனோம். அங்கு எங்களை மாதிரி நிறைய பேர் வந்திருந்தார்கள். தளபதியும் அவனியாபுரம் தி.மு.க நிர்வாகி சலீமும் இருந்தார்கள். இந்த வேலைக்காக ஒரு ஆளுக்கு பத்து லட்ச ரூபாய் கட்ட வேண்டும் என்று சொன்னார்கள். நான் தளபதியின் உறவுக்காரன் என்பதால், எனக்கு மட்டும் எட்டு லட்சம் என்றார்கள். நாங்களும் சம்மதித்தோம். அதற்கடுத்து சில நாட்கள் கழித்து சென்னையில் எழுத்துத் தேர்வுக்கு வர வேண்டும் என்று சொன்னார்கள். 8.12.12-ல் சென்னையில் தேர்வு நடந்தது. அதில் பல மாநிலங்களில் இருந்து இளைஞர்கள் வந்திருந்தார்கள். சில நாள் கழித்து, ‘எழுத்துத் தேர்வில் உங்கள் மகன் தேறிவிட்டான். அடுத்து சென்னையில் நடக்கும் நேர்முகத் தேர்வுக்கு சர்ட்டிஃபிகேட்களுடன் வாருங்கள். வரும்போது ஏற்கனவே சொன்னது மாதிரி பணத்துடன் வாருங்கள்’ என்றார்கள். என் குடும்பத்தினரின் நகைகளையும் காரையும் அதிக வட்டிக்கு அடமானம் வைத்து, எட்டு லட்சத்தை எடுத்துக்கொண்டு கோ.தளபதி சொன்னதன்பேரில் சலீமிடம் கொடுத்தேன். தேனாம்பேட்டை சித்ரஞ்சன் ரோட்டில் உள்ள ஒரு பங்களாவில் நேர்முகத் தேர்வு நடந்தது. அதிலும் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். சீக்கிரம் அப்பாயின்மென்ட் ஆர்டர் வந்துவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தேன். ஆனால், எந்தத் தகவலும் இல்லை. எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் தெரிந்தவர் ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘அப்படியொரு வேலையே அங்கு இல்லை. நீங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறீர்கள்’ என்று சொன்னார். தளபதியிடமும் சலீமுடமும் நான் விசாரித்ததைச் சொன்னேன். ‘இந்த வேலை இல்லாவிட்டால் என்ன? அண்ணனின் துறையில் வேறு ஒரு வேலை வாங்கித் தருகிறேன்’ என்று சொல்லி பணத்தைத் தர மறுத்துவிட்டார்கள். நாட்கள் போய்க்கொண்டிருந்தன. இந்த நிலையில்தான் அழகிரியும் தன் மந்திரிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். நான் பணத்தைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக சில தொகையைக் கொடுத்தார்கள். அது ஃபைனான்ஸ் கம்பெனிக்கு வட்டி கட்டவே பயன்பட்டது. முழுப்பணத்தையும் கேட்டால், மிரட்டும் தொனியில் பேசினார்கள். இல்லாத வேலைக்கு பொய்யானத் தேர்வுகளை நடத்தியதே மோசடித்தனமானது’ என்று புகார் கொடுத்துள்ளாராம்!”

”இதற்கு என்ன சொல்கிறாராம் கோ.தளபதி?”

”இப்போது ஸ்டாலின் அணியில் இருக்கிறார் கோ.தளபதி. ‘ சுப்புராஜ் எனக்கு நெருங்கிய உறவுக்காரர்தான். இப்படி ஒரு வாய்ப்பு வருதுன்னு சலீமைப் பார்க்க சொல்லி உதவிதான் செஞ்சேன். மத்தபடி இந்த வேலை வாங்கிக் கொடுக்கிறதுக்கு நான் ஏற்பாடு பண்ணலை. போஸ்டிங் போடலைன்னு தெரிஞ்சதும் ஓரளவு பணத்தை அந்த சலீம், சுப்புராஜ்கிட்டே திருப்பிக் கொடுத்துட்டார். இதுல ஏன் என் பேரை சேர்த்து சொல்றார்னு தெரியலை’ என்று மையமாகச் சொல்கிறாராம். இப்படி பலரும் புகார் கொடுக்கத் தயாராகி வருகிறார்களாம்!”

”ஓஹோ!”

”பி.ஜே.பி கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து இந்திய முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தலைவர் சதக்கத்துல்லா, கடந்த 26-ம் தேதி சென்னையில் இஃப்தார் நோன்புத் திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ், வைகோ, அன்புமணி, சுதீஷ், பாரிவேந்தர், ஈஸ்வரன் ஆகியோரை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போனில் தொடர்புகொண்டு இஃப்தார் நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்தாராம். அதுபோல, சதக்கத்துல்லாவும் ஒவ்வொரு கட்சி ஆபீஸுக்கும் சென்று அழைப்பிதழைக் கொடுத்தாராம். ஆனால், தலைவர்கள் யாரும் வரவில்லை. ம.தி.மு.க சார்பில் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பா.ம.க மாநிலப் பொருளாளர் சையது, தொழிற்சங்க பொதுச்செயலாளர் ராம.முத்துகுமார், காந்திய மக்கள் கட்சியின் இனியன் ஜான் ஆகியோர் வந்தனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், டாக்டர் தமிழிசை, மோகன்ராஜுலு, சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் முனவர் பேகம் என்று பி.ஜே.பி-யினர் ஏராளமாகக் கலந்துகொண்டனர். ஆனால், தே.மு.தி.க தலைமை நிலையச் செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான பார்த்தசாரதி அழைப்பிதழை வாங்கும்போது, ‘ஐந்து எம்.எல்.ஏ-க்கள் வருவோம்’ என்றாராம். ஆனால், ஒருவரையும் காணோம். இந்த நிலைமையில்தான் இருக்கிறது அந்தக் கூட்டணி!”

”சிங்கப்பூரில் இருந்து விஜயகாந்த் திரும்பிவிட்டாரே?”

”சில வாரங்களுக்கு முன்பு சென்னை அப்போலோ மருத்துவமனைக்குத் திடீரென வந்தார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். வழக்கமான செக்-அப் என்று விஜயகாந்த்க்கு நெருக்கமான வட்டாரம் சொன்னது. ஆனால், அந்த சமயத்தில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ‘உங்களுக்கு கிட்னியில் பிரச்னைகள் அதிகமா இருக்கு. உடனடியா அதுக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க வேண்டியது அவசியம். அட்மிட் ஆனால்தான் அதைச் செய்ய முடியும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் பலரும் தன்னைப் பார்க்க வருவார்கள்… என்ன பிரச்னை என்பது வெளியில் தெரியவரும். அதனால் எந்த சிகிச்சையாக இருந்தாலும் சென்னையில் வேண்டாம்’ என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார் விஜயகாந்த். சிங்கப்பூரில் ரஜினியை அட்மிட் செய்திருந்த மவுன்ட் எலிசபெத் ஹாஸ்பிட்டலுக்குப் போகலாம் என யோசனை சொல்லியிருக்கிறார் சுதீஷ். ‘அந்த ஹாஸ்பிட்டலைப் பத்தி எதுவும் தெரியாம அங்கே போனா சரியா இருக்காது. நான் ரஜினி சார்கிட்ட கேட்கிறேன்…’ என்று சொன்ன விஜயகாந்த், உடனே ரஜினியைத் தொடர்புகொண்டாராம். அப்போது ரஜினி, ‘லிங்கா’ ஷூட்டிங்கில் இருக்க, அவருக்கு விஜயகாந்த் பேசிய தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. உடனே ரஜினி, அவரது லைனுக்குப் போயிருக்கிறார்.”

”ம்…”

” ‘சொல்லுங்க விஜி… எப்படி இருக்கீங்க? நானே பேசணும்னு நினைச்சிட்டு இருந்தேன். நீங்க கூப்பிட்டுட்டீங்க. வீட்டுல எல்லோரும் எப்படியிருக்காங்க?’ என்று படபடவென பேசியிருக்கிறார் ரஜினி. பரஸ்பரம் விசாரிப்புகள் முடிந்ததும், தன் உடல்நிலை பற்றி ரஜினியிடம் சொல்லியிருக்கிறார் விஜயகாந்த். சிங்கப்பூர் மருத்துவமனைப் பற்றியும் கேட்டிருக்கிறார். ரஜினியும் சிங்கப்பூர் மருத்துவமனைப் பற்றி சிலாகித்துப் பேசினாராம். பிறகு, ‘அங்கிருக்கும் டாக்டர்கள்கிட்ட நான் பேசுறேன். நீங்க உடனே கிளம்பிப் போங்க. எதுவா இருந்தாலும் அவங்க சாதாரணமா சரிபண்ணிடுவாங்க. நல்லா ரெஸ்ட் எடுங்க… எல்லாம் சரியாகிடும். ஆண்டவன் இருக்கான். நிச்சயம் நல்லதே நடக்கும்’ என்று ரஜினி உருக… விஜயகாந்த்க்கு அளவில்லாத சந்தோஷம்.

ரஜினியின் வழிகாட்டுதல்படி சிங்கப்பூருக்குக் கிளம்பியிருக்கிறார் விஜயகாந்த். மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனை டாக்டர்களிடம் தொடர்ந்து ரஜினி பேசி விஜயகாந்த் உடல்நிலை பற்றி விசாரித்தும் வந்திருக்கிறார்.”

”யாரெல்லாம் சிங்கப்பூர் போனார்கள்?”

”விஜயகாந்த்துடன் பிரேமலதாவும் சுதீஷ§ம் மட்டும்தான் போனார்கள். மலேசியாவைச் சேர்ந்த முஸ்லிம் நண்பர் ஒருவர் மட்டும் உதவிக்காக உடன் இருந்திருக்கிறார். சிகிச்சைக்குப் பிறகு சென்னை திரும்பிய​போதும் ஏர்போர்ட்டில் அவர்கள் இருவர் மட்டும்தான் உடன் இருந்தார்கள். விமானத்தில் இருந்து வீல்சேரில் உட்கார வைத்துதான் விஜயகாந்த்தை தள்ளிக்கொண்டு வந்தார்கள். ஒரு போர்வையைப் போத்தியபடி அவர் வீல்சேரில் வந்ததால் சென்னை ஏர்போர்ட்டில் யாருக்குமே அடையாளம் தெரியவில்லை.”

”கட்சிக்காரர்கள் வீட்டுக்குப் போய் பார்க்கிறார்களா?”

”எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் மாறி மாறி சுதீஷிடம் பேசுகிறார்கள். ‘நாங்க சொல்லாம யாரும் இந்தப் பக்கம் வந்துடாதீங்க. கேப்டன் கம்ப்ளீட் ரெஸ்ட்ல இருக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்காரு. அதனால தயவுசெஞ்சு யாரும் இங்கே வந்து தொந்தரவு செய்யாதீங்க. அவருக்கு சரியானதும் நானே சொல்றேன்’ என்று சொல்லி வருகிறாராம்.”

”கண்ணில் பிரச்னை என்றும் சொன்னார்களே?”

”அதையும் சிலர் சொல்கிறார்கள். வெளிச்சத்தைப் பார்த்தால் கண்ணில் தண்ணீர் வர ஆரம்பித்துவிடுகிறதாம். அந்த சிகிச்சைக்காகவும் போனதாகச் சொல்கிறார்கள். சீக்கிரம் குணமாகி வரட்டும்!” என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்.

Advertisements
%d bloggers like this: