‘ஜெயலலிதாவும் சசிகலாவும் பிசினஸ் பார்ட்னர்கள்!’ சொல்கிறார் வழக்கறிஞர் மணிசங்கர்

”இந்த வழக்கு காலகட்டத்துக்கு ( 1991_96) முன்பே ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் பழக்கம் இருந்தது. முன்பே அவர்கள் இருவரும் பிசினஸ் பார்ட்னர்கள். ஒரே வீட்டில் இருக்கிறார்கள் என்பதற்காக ஜெயலலிதாவின் பணத்தில் பல கம்பெனிகளில் சசிகலா முதலீடு செய்துள்ளார் என்பது ஏற்புடையதல்ல. சசிகலாவுக்கு ஜெயலலிதா பணம் கொடுக்கவும் இல்லை. ஜெயலலிதாவிடம் சசிகலா பணம் வாங்கவும் இல்லை என்பதே உண்மை!” – பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்துவரும் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர் வைத்த இறுதிவாதம்தான் இது.

மணிசங்கரின் வாதங்களை நீதிமன்றத்துக்குள் தனி மேஜையில் அமர்ந்து இரண்டு பயிற்சி நீதிபதிகள் குறிப்பு எடுத்துக் கொண்டிருக்க… ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் செந்தில், குலசேகரன், பன்னீர்செல்வம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மணிசங்கருக்கு குறிப்பு எடுத்துக் கொடுத்தபடியே இருக்கிறார்கள். அரசு வழக்கறிஞர் மராடி, அவ்வப்போது குறுக்கிட்டு கேள்விகளைக் கேட்டபடியே இருக்கிறார்.

மணிசங்கரின் வாதத்தில் இருந்து…

தாமதத்துக்குக் காரணம் தி.மு.க!

”நீதிபதி அவர்களே… முதலில் நான் சொல்ல விரும்புவது, இந்த வழக்கு இவ்வளவு காலம் தாமதம் ஆனதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும். சென்னையில் நடைபெற்று வந்த ஜெயலலிதா சம்பந்தப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கும், லண்டன் ஹோட்டல் வழக்கும் 2003-ல் பெங்களூரு தனி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளையும் இணைத்து பெங்களூரு தனி நீதிமன்றம் விசாரித்து வந்தது. அதை எதிர்த்து அன்பழகன் தரப்பினர் 2005-ல் உச்ச நீதிமன்றத்தில், ‘இந்த இரண்டு வழக்குகளையும் இணைத்து விசாரிக்கக் கூடாது’ என்று மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்குக்கு இடைக்காலத் தடை விதித்தது.

அதன் பிறகே சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். என் மனுதாரர் சசிகலாவிடம் விசாரணை நடந்தபோது, ‘சில கேள்விகள் மிக நீளமாக இருக்கின்றன. அதனால் அந்தக் கேள்விகளுக்கு உண்டான ஆவணங்களைப் பார்க்காமல் என்னால் பதில் சொல்ல முடியாது’ என இந்த நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பிறகே அவருக்கு ஆவணங்களைப் பார்க்க அனுமதி கிடைத்தது.

இந்த வழக்கு முடியும் தருவாயில் தி.மு.க-வைச் சேர்ந்த க.அன்பழகன் தரப்பினர், ‘இந்த வழக்கில் அரசு தரப்பு பக்கம் நாங்களும் வாதாட அனுமதிக்க வேண்டும்’ என்று மனுதாக்கல் செய்தார்கள். அந்த மனு மீது விசாரணை நடந்தது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என்று போய், இந்த வழக்கில் பல்வேறு தடைகளை வாங்கியது தி.மு.க-வைச் சேர்ந்த அன்பழகன் தரப்பினர்தான். எனவே வழக்கு தாமதத்துக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது” என்று ஆரம்பித்தார்.

சசிகலா தொடங்கிய வீடியோ கடை!

”இந்த வழக்கில் என் மனுதாரர் சசிகலா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு, அவர் தொடங்கியுள்ள கம்பெனிகளுக்கு ஜெயலலிதா பணம் கொடுத்தார் என்பதுதான். இந்த வழக்கு காலத்துக்கு முன்பே அவர்கள் இருவருக்கும் நட்பு இருந்தது. இருவரும் பிசினஸ் பார்ட்னர்கள். ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் நிறுவனங்களில் இருவரும் பங்குதாரர்கள். வழக்கு காலகட்டத்துக்கு முன்பே என் மனுதாரர் பல பிசினஸ்களை நடத்தி வந்தார். 1986-ம் ஆண்டு வினோத் வீடியோ விஷன் தொடங்கி, அதன் பிறகு மெட்டல் கிங், கிரீன் ஃபார்ம் ஹவுஸ், ஜெ ரியல் எஸ்டேட், ஜெ.எஸ். ஹவுஸிங், ஜெ ஃபார்ம் ஹவுஸ், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், நமச்சிவாயா கன்ஸ்ட்ரக்ஷன், சக்தி கன்ஸ்ட்ரக்ஷன் உள்ளிட்ட 19 கம்பெனிகளில் சசிகலா பங்குதாரராக உள்ளார். இவை அனைத்தும் வழக்கு காலகட்டத்துக்கு முன்பே தொடங்கப்பட்டவை.

ஜெயலலிதாவின் பணத்தில் சசிகலா இந்தக் கம்பெனிகளில் முதலீடு செய்துள்ளதாகக் குற்றம்சாட்டுகிறார்கள். அதற்குக் காரணமாகச் சொல்வது இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருக்கிறார்கள் என்பதைத்தான். இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருக்கிறார்கள் என்பதற்காக இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கக் கூடாது. ஜெயலலிதாவின் பணத்தை சசிகலா பங்குதாரராக உள்ள கம்பெனிகளில் முதலீடு செய்துள்ளார் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் சமர்பிக்கவில்லை. ஆக, ஜெயலலிதாவிடம் இருந்து சசிகலா பணம் வாங்கினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை!”

ரொக்கமாக சசிகலா கொடுக்கவில்லை!

”சசிகலா பங்குதாரராக உள்ள கம்பெனிகளுக்குக் கட்டடம், நிலம் வாங்கியபோது விற்பனை பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தொகையைக் காட்டிலும் கூடுதல் தொகை கொடுத்து சொத்துகளை வாங்கியதாகவும், ஒரு குறிப்பிட்ட தொகையை காசோலையாகவும், மீதி தொகையை ரொக்கமாகவும் கொடுத்துள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர். ஆனால், சசிகலா ரொக்கமாகப் பணம் கொடுத்தார் என்பதற்கு எந்த ஆவணத்தையும் நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை.

இது சம்பந்தப்பட்ட சாட்சிகள்கூட நீதிமன்றத்தில் பணமாகப் பெற்றோம் என்று சொல்லவில்லை. ரொக்கப் பணம் கொடுத்து ஒப்பந்தம் எதுவும் தாக்கல் செய்யவில்லை. வாய்மொழியாக கொடுத்த வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது. அதை ஆதாரமாகக் கருதவும் கூடாது. ஏற்கெனவே 2007-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில், ‘எவிடன்ஸ் ஆக்ட் 91, 92-வது பிரிவின்படி சொத்து வாங்கும்போது அதற்கான விற்பனை பத்திரத்தில் என்ன தொகை குறிப்பிடப்பட்டுள்ளதோ அதை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். வாய்மொழியாக இவ்வளவு தொகை கொடுத்தேன்… அவ்வளவு தொகை கொடுத்தேன் என்று சொல்வதை சட்டப்படி ஏற்க முடியாது’ என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதுபோல இந்த வழக்கில் வாய்மொழி உத்தரவுகளை ஏற்றுக்கொள்ளக் கூடாது.”

சசிகலா குற்றமற்றவர்!

”சசிகலா பங்குதாரராக உள்ள கம்பெனிகளுக்கு சொந்தமான கட்டடத்தை அரசு பொறியாளர்கள் ரவிசங்கர், திருத்துவராஜை வைத்து மிகைப்படுத்தி மதிப்பீடுசெய்து தாக்கல் செய்திருப்பது தவறு. அரசு தரப்பு பொறியாளர்கள் யாரும் தங்களுடைய விளக்கத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை. மேலும், வழக்கு காலகட்டத்துக்கு முன்பு வாங்கிய சொத்துகளை வழக்கு காலகட்டத்தில் வாங்கியதாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர். வழக்கு காலகட்டத்தில் எந்த சொத்தும் சசிகலா வாங்கவில்லை.

அப்போதைய அரசின் உத்தரவுபடி அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய பொறியாளர்களை வைத்து என் மனுதாரர் பங்குதாரராக உள்ள கம்பெனிகளின் கட்டட மதிப்புகளை மிகைப்படுத்திக் காட்டி இருக்கின்றனர். எந்தெந்த தேதிகளில் எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டது என்ற விவரத்தையும் குறிப்பிடவில்லை. கட்டடங்கள் கட்டி ஆறு மாதங்களுக்குப் பிறகே மதிப்பீடு செய்திருக்கிறார்கள். இது சரியான மதிப்பீடு இல்லை. எனவே, என் மனுதாரர் பங்குதாரராக இருக்கும் கம்பெனிகளின் சொத்து மதிப்பீடு பற்றி கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை. சசிகலா குற்றமற்றவர்!” என்றார்.

ரம்ஜான் விடுமுறைக்குப் பிறகு மணிசங்கரின் வாதம் தொடர இருக்கிறது!

%d bloggers like this: