பிரிக்ஸ் பேங்க்:உலக வங்கிக்கு ‘செக்’!

சீனா, ரஷ்யா, பிரேசில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் கூட்டாக இணைந்து தங்கள் நாடுகளின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக 50 பில்லியன் டாலரில் புதிய வளர்ச்சி வங்கியை சீனாவின் ஷாங்காய் நகரில் தொடங்க முடிவு செய்திருக்கிறது. தவிர, இந்த ஐந்து நாடுகளுக்கும் பொருளாதாரச் சிக்கல் ஏற்படும்பட்சத்தில் உதவி செய்வதற்காக அவசரகால நிதி ஏற்பாடாக 100 பில்லியன் டாலர் பணத்தையும் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்திருக்கிறது.

பிரிக்ஸ் நாடுகள் தொடங்கும் இந்த வங்கியில் இந்தியா 28 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் 1.68 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு செய்ய வேண்டும். இந்த பிரிக்ஸ் வங்கி பற்றி தெளிவாக எடுத்துச் சொன்னார் சர்வதேச பொருளாதார நிபுணர் டாக்டர் அனந்த நாகேஸ்வரன்.

‘‘பிரிக்ஸ் பேங்க் அமைப்பதற்கான வேலையில் சீனாவானது இந்தியாவை யும் இணைத்துக்கொண்டு, அதற்கான வேலையில் இறங்கியிருப்பது பெரிய விஷயம்தான். காரணம், கடந்த காலத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியில் சீனா தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, நமது அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நாம் செய்யவிருந்த சில திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டது. அப்படி செய்த சீனா இன்றைக்கு பிரிக்ஸ் வங்கியை அமைக்க இந்தியாவின் உதவியை நாடியிருக்கிறது. இந்த வங்கியின் தலைமைப் பொறுப்பு முதலில் இந்தியாவிடம் இருக்கும். பிற்பாடு அது வேறு பிரிக்ஸ் நாடுகளுக்குச் செல்லும் என்பதற்கெல்லாம் சீனா ஒப்புதல் தந்திருப்பது பெரிய விஷயமே.

பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கென ஒரு வங்கியைத் தொடங்கவேண்டிய அவசியத்தை இப்போது உணர்ந் திருக்கின்றன. காரணம், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் வட்டி விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் இந்த நாடுகளிலிருந்து பிரிக்ஸ் நாடுகளுக்கு பணம் எக்கச்சக்கமாக வருகிறது. இப்படி வரும் பணம் நீண்ட காலத்துக்கு நிற்பதில்லை.

அடுத்த முக்கியமான காரணம், சர்வதேச நிதி ஆணையம், உலக வங்கி ஆகிய அமைப்புகள் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகள் காரணமாக பிற நாடு களில் ஏற்படும் விளைவுகளைப் பற்றி கவனத்தில் கொண்டு செயல்படுவோம் என அமெரிக்காவும் இன்னபிற நாடுகளும் 2009-ல் நடந்த ஜி20 நாடுகள் கூட்டத்தில் வாக்குறுதி தந்தன. ஆனால், அமெரிக்கா இதுவரை இந்த வாக்குறுதியைக் கண்டுகொள்ளவே இல்லை.

தவிர, இந்த இரு அமைப்புகளிலும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடு களுக்கு ஓட்டு விகிதம் அதிக அளவில் இருக்கிறது. இந்த ஓட்டு விகிதத்தைப் படிப்படியாகக் குறைக்கவும், ஷேர் ஹோல்டிங்கை மாற்றியமைக்கவும் தேவையான நடவடிக்கை எடுப்ப தற்கான எந்த ஒரு சிறு முயற்சியும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, சர்வதேச நிதி ஆணையம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றையே முழுவதுமாக நம்பி இருக்காமல், பிரிக்ஸ் நாடுகளுக்கென ஒரு தனி வங்கி தேவை என்று உணர்ந்து, அதற்கான முயற்சியில் இறங்கியிருப்பது நல்ல விஷயம்தான்.

இந்த பிரிக்ஸ் வங்கியை சீனாவின் ஷாங்காய் நகரில் ஏன் அமைக்க வேண்டும்; இந்தியாவில் மும்பையிலோ அல்லது டெல்லியிலோ அமைக்கலாமே என சிலர் கேட்கிறார்கள். இது அபத்தமான வாதம். இந்தியாவைவிட சீனாதான் வளர்ந்த நாடு. அதன் ஜிடிபி பெரிது. இந்த வங்கியில் அதிக முதலீடு செய்யப்போவதும் சீனாதான். அப்படி இருக்க, அந்த வங்கியை சீனாவில் அமைப்பதுதான் சரியாக இருக்கும்.

பிரிக்ஸ் பேங்கை சீனாவில் அமைக்கிற முடிவை முந்தைய காங்கிரஸ் அரசாங்கமே ஒப்புக்கொண்டது. மோடி பிரதமரானபின், இந்த வங்கியை இந்தியாவில் தொடங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து பேச்சு வார்த்தை நடந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், இந்தக் கோரிக்கையை சீனா ஏற்றுக்கொள்ளவில்லை.

1998-ம் ஆண்டிலேயே ஏசியன் மானிட்டரி ஃபண்ட் என்கிற ஓர் அமைப்பை நிறுவ ஜப்பான் முயற்சி செய்தது. ஜப்பானின் இந்த முயற்சி எடுபடவில்லை. காரணம், ஜப்பான் மீது பல நாடுகளுக்கு பெரிய நம்பிக்கை இருக்கவில்லை. அதனால் அந்த முயற்சி கருவிலேயே கலைந்தது. அதன்பிறகு இப்போதுதான் பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கென ஒரு வங்கி அமைக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

பிரிக்ஸ் பேங்க் தொடங்குவதில் இப்படி சில சாதகமான அம்சங்கள் இருந்தாலும், சில நெருடலான விஷயங்களும் இருக்கவே செய்கிறது. அதாவது, மேலைநாடுகளின் செயல்பாடு களையும் கொள்கைகளையும்
விமர்சனம் செய்துவிட்டு, இதுமாதிரி யான ஓர் அமைப்பைத் தொடங்கும் இந்த நாடுகளின் கொள்கையும் செயல்பாடுகளும் முன்னுதாரணமாக இருக்கிறதா என்றால், அதுதான் இல்லை.

உதாரணமாக, சீனாவின் பொருளாதார நிலை இப்போது மோசமாக இருக்கிறது. அது நன்றாக இருப்பதுபோல முலாம் பூசிக் காட்டு கிறார்கள். இந்த பொய் குண்டு எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். சீனாவில் தொழில் நிறுவனங்கள் கஷ்டப்படும்போதெல்லாம் அதிக கடன் தரும்படி சீன வங்கிகளை அந்த அரசாங்கம் சொல்கிறது. இப்படி தரும் கடன் திரும்ப வராமல் போனால், பெரும்பாதிப்பு ஏற்படும்.

ரஷ்யாவும் பல்வேறு சிக்கல்களில் மாட்டித் தவிக்கிறது. உக்ரைன் விஷயத் தில் ரஷ்யா தலையீடு தொடங்கியபிறகு, அதன் பொருளாதாரம் மோசமாகி இருக்கிறது. தவிர, மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபின் ரஷ்யா மீதான நெருக்கடி மேலும் அதிகரித்திருக்கிறது. பிரேசிலிலும் பொருளாதார நெருக்கடி சிறிய அளவில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. நம் இந்தியாவுக்கும் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது நமக்கே தெரியும். ஆக, பிரிக்ஸ் நாடுகள் இத்தனை பிரச்னைகளை வைத்துக்கொண்டு எப்படி இந்த வங்கியை நடத்தும் என்பது கேள்விக்குறியே!

சர்வதேச நிதி ஆணையத்தையும் உலக வங்கியையும் அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் வர்த்தக நலனைக் காக்க ஒரு கருவியாகப் பயன்படுத்தியமாதிரி, பிரிக்ஸ் வங்கியை சீனா ஒரு கருவியாகப் பயன்படுத்த வாய்ப்புண்டு. என்றாலும், இந்த ஒரு காரணத்துக்காகவே இந்த வங்கியை நாம் எதிர்க்கத் தேவையில்லை.

தவிர, இந்த வங்கி தொடங்க இந்தியா தனது சார்பில் 28 பில்லியன் டாலரை முதலீடாக தரவேண்டும். நமக்கு ஏற்கெனவே பணப் பற்றாக்குறை பெரிய அளவில் இருக்கும்போது, இது சாத்தியமா என்று சிலர் கேட்கிறார்கள். 2 ட்ரில்லியன் டாலர் பொருளாதார மதிப்பு கொண்ட ஒரு நாட்டுக்கு 28 பில்லியன் டாலர் என்பது பெரிய விஷயமல்ல. தவிர, இந்த வங்கியிலிருந்து உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக நமக்கு நிறைய கடன் கிடைக்கும்’’ என்றார்.

இந்த பிரிக்ஸ் வங்கி, சர்வதேச நிதி ஆணையத்துக்கும் உலக வங்கிக்கும் ஒரு சரியான ‘செக்’காக அமைந்தால்,  நல்லதுதான்!

%d bloggers like this: