மனிதன் மாறி விட்டான்!-8

 

‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிரைத் தும்பி’ என்கிற பாடல் ‘திருவிளையாடல்’ படத்தில் ஒலித்தது. பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா என்கிற விரிவான சர்ச்சை அதன்மூலமாக நடந்தது. புலவர் நக்கீரர், ‘தேவலோகப் பெண்களுக்குக்கூட கூந்தலில் மணம் இருக்க முடியாது’ என்று ஏதோ அவர் தேவலோகத்தில் எல்லாம் நுழைந்து முகர்ந்தது மாதிரி பேசுவார். ஆனால் உண்மை என்ன?

நம்முடைய தலைமுடியில் சிபாசியஸ் சுரப்பி என்கிற ஒன்று இருக்கிறது. இந்த நுண்ணிய சுரப்பிகள் முடியின் வேர்ப்பகுதியில் இருந்துகொண்டு சீபம் என்கிற எண்ணெய்ப் பதம் கொண்ட ஒரு திரவத்தை உற்பத்திச் செய்கின்றன. அவை தலைமுடியை உலராமல் வைத்திருப்பதோடு, பாதுகாப்பையும் தருகின்றன. சிபாசியஸ் சுரப்பிகள் அதிகம் சுரந்தால், எண்ணெய் பதம் உள்ள தலைமுடி இருக்கும். அதில் வந்து தூசு ஒட்டிக்கொள்ளும். அதனால்தான் அடிக்கடி தலைக்குக் குளிக்கிறோம். அதிகம் தலைக்குக் குளித்தாலும் சீபம் பாதிக்கப்படும். இந்த வேதியியல் பொருளால் தலைக்கு என்று ஒரு மணம் இருக்கிறது.

சிகைக்கு மட்டுமல்ல… ஒவ்வொருவருடைய உடலுக்கும் ஒரு தனி மணம் இருக்கிறது. கைரேகையைப்போல ஆளுக்கு ஆள் அது வித்தியாசப்படுகிறது. இரட்டையர்களிடம் இருக்கும் வேறுபாட்டைக் கூட நாயால் அடையாளம் காண முடியும். மனிதர்களுக்கு 50 லட்சம் முகரும் செல்கள் இருக்கின்றன. நாய்களுக்கு 22 கோடி செல்கள். அதனால்தான் அது நம்மைவிட 44 மடங்கு மோப்பசக்தி கொண்டதாக இருக்கிறது.

தலைமுடி மூலம் நாம் நம்மை ஒப்பனை மட்டும் செய்துகொள்வது இல்லை. பலவற்றை உணர்த்தவும் செய்கிறோம். துறவைக் குறிக்க, பக்தியைக் குறிக்க, பறிகொடுத்ததைக் குறிக்க தலைமுடியை அடையாளப்படுத்துகிறோம்.

முடி என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல. சீக்கியர்கள் தங்கள் அடையாளத்தை எல்லா நேரங்களிலும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நீளமான தாடி, வெட்டப்படாத தலைமுடி அவற்றை அணிசெய்யும் தலைப்பாகை, கத்தி, உள்கால் சட்டை, வலது கையில் வளையம் ஆகியவை அவர்களின் அடையாளம். சீக்கியர்கள் தலைமுடியை ஒருபோதும் வெட்டி அழகுபடுத்தக் கூடாது. இந்த அடையாளங்களைக் காப்பாற்றுவதும், அவற்றை அலட்சியம் செய்பவர்களை வெறுப்பதும் நிகழ்ந்துகொண்டிருந்தது. 

இதுகுறித்த சம்பவம் ஒன்று உண்டு…

டெல்லியில் தார்மாக் சதுரம் என்கிற இடம் உண்டு. அங்கு ஹர்தேவ் சிங், சுக்தேவ் சிங், பல்தேவ் சிங் என்ற மூவர் இருந்தனர். 1984-ம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி. அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு மறுநாள், கும்பல் கும்பலாக மக்கள் திரண்டு சீக்கியர்கள் கடைகளையெல்லாம் அடித்து உடைத்தனர். ஹர்தேவ் சிங் தன்னுடைய தலையையும் தாடியையும் மழித்து, தன் அடையாளங்களை அறவே அழித்துக்கொண்டதால், தப்பினார். சுக்தேவ் சிங் நம்பிக்கையை அதிகமாகப் போற்றுபவர். பக்கத்து வீட்டில் அடைக்கலம் புகுந்து தன் உயிரைக் காப்பாற்றிக்கொண்டார். மூன்றாவது மகன் பல்தேவ் சிங் பஞ்சாபில் சொந்த ஊருக்குச் சென்றிருந்ததால் உயிர் தப்பினார்.  கடைசிவரை அவர் தாயும் தந்தையும், மத அடையாளங்களை இழந்ததால் ஹர்தேவ் சிங்கை மன்னிக்கவில்லை. எனவே, முடி என்பது அழகுக்கான பொருள் மட்டுமல்ல.

பாலூட்டிகளில் உடலின் வெப்பத்தை ஒழுங்குபடுத்துவது முடிதான். சில விலங்குகளுக்கு முடி வேறுவிதமாகவும் உதவுகிறது. செம்மறிகளுக்கு கம்பளியாக குளிரில் இதம் தருகிறது. வால்ரஸ் போன்ற உயிரினங்களின் நீண்ட மீசை முடியின் நீட்சியே. முள்ளம்பன்றியின் முள் நீண்ட கூர்மையான அதன் உடல் ரோமமே. காண்டாமிருகத்தில் முகத்தின் மீதுள்ள முடிக்கற்றை வளர்ந்து கொம்பாக மருவுகிறது.

உடலின் பருமன் வெப்பத்தை ஒழுங்குபடுத்துவதாக இருக்கிறது. பெரிய உருவில் இருக்கும் விலங்குகளுக்கு உடற்பரப்பு அதிகமாக இருப்பதால், அவை குறைவான வெப்பத்தையே வெளிவிடுகின்றன. எனவே அவை உடலின் வெப்பத்தை தக்கவைத்துக்கொள்ள முடிகிறது. அதனால்தான் குளிர் பிரதேசங்களில் இருக்கும் விலங்குகளின் உடல், நிலநடுக்கோட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற அதே வகை விலங்குகளைவிட பருமனாக இருக்கிறது. மசூரி போன்ற மலைவாழ் இடங்களில் நாட்டு நாய்கூட அல்சேஷன்போல பொசுபொசுவென முடியோடு இருக்கும். முதலாம் உலகப் போர் முடிந்தபோது ஜெர்மனிக்கு செமத்தியான அடி. பல ஐரோப்பிய நாடுகளுக்கு அதன்மீது அதிருப்தி. எனவே, ஜெர்மனி என்கிற பெயரை உச்சரிக்கவே தயக்கம் காட்டி ஜெர்மன் ஷெஃபர்ட் என்கிற அந்த அருமையான நாய் வகையை அல்சேஷன் என்று அழைக்க ஆரம்பித்தார்கள் என்பது காய்கறிக்கடையில் கொத்துமல்லி கொடுப்பதுபோலக் கொசுறுச் செய்தி. (உபயம்: கால்நடைப் பேராசிரியர் குமரவேலு, நூல்: கால்நடைக் கதம்பம்) 

உடலில் முடி இல்லாத யானை போன்ற விலங்கினங்கள், உடலில் உள்ள வெப்பத்தை காதுகளின் வழியாக வெளியேற்றுகின்றன. எலி போன்ற உயிரினங்களில் உடல் முடி சிலிர்த்து வேறு விலங்கு தாக்க வருகிறபோது, பெரிய உருவம் இருப்பதைப்போன்ற தோற்றத்தை உண்டாக்கி தப்பிக்க முடிகிறது. 

மனிதனைப் பொறுத்தவரை குரங்குகளைப்போல உடல் முழுவதும் முடி இல்லாததால், அவனை நிர்வாண குரங்கு என்று அழைப்பது வழக்கம். ஆனாலும், முக்கியமான இடங்களில் அவனுக்கு முடி இருக்கவே செய்கிறது. 

மனித உடலில் வயதாக வயதாக முடி முளைக்கும் விகிதம் அதிகரிக்கிறது. தாடையில் வளரும் முடியும் மீசையும், ஆணுக்கு பாலை உணர்த்தும் இரண்டாவது அடையாளங்களாகத் தெரிகின்றன. அதன் விகிதம் இனத்துக்கு இனம் மாறுபடுகிறது.  மங்கோலாய்டு பிரிவைச் சார்ந்தவர்கள் அதிகம் இந்த வளர்ச்சியைப் பெறுவது இல்லை. தலையில் இருக்கும் முடி 20 வயதுக்குப் பின், உதிர ஆரம்பிப்பது உண்டு. அதிலும், சிலருக்கு அதிக வீழ்ச்சி ஏற்படும். வயதாக வயதாக முடி கறுப்பு வண்ணத்தை இழப்பதும் தொடங்க ஆரம்பிக்கிறது.

வழுக்கை என்பது பாலோடு தொடர்புடையது. பெண்கள் வழுக்கைத் தலைக்கான மரபுக்கூறுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்பவர்களாக இருக்கிறார்கள். ஆண் வாரிசுகளில்தான் அது வெளிப்படுகிறது. 

  மனித முடி ஒரு நாளைக்கு 0.3 மில்லி மீட்டர் அளவு வளர்கிறது. 10 வாரத்தில் ஓர் அங்குலம் வளரும். இடைவெளி விட்டு முடி உதிர்வதும், புதிய முடி அங்கு முளைப்பதும் நிகழவே செய்கிறது. சில விலங்குகளில் பருவத்துக்கு ஏற்ப முடி உதிர்வது நடக்கிறது. கோடைப் பருவத்தில் முடி உதிரும்; குளிர் பருவத்தில் முடி வளரும். 

கத்திகளும் கத்திரிகளும் சீப்புகளும் கண்டுபிடிப்பதற்கு முன்னால், தலைமுடியை எப்படி ஆதிவாசிகள் பராமரித்திருப்பார்கள் என்பதும் இப்போது ஆச்சர்யமாக இருக்கிறது.  உலகின் மிகப் பழமையான தொழிலில் சிகை திருத்துதலும் ஒன்று. 

ஆண்களைவிட பெண்களுக்கு நீளமான தலைமுடி இருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் முன்மொழியப்படுகின்றன. மனித வாழ்வு நீரில் தோன்றியிருக்கும் என்பதைச் சொல்பவர்கள், குழந்தைகள் நீந்தும்போது தாயைப் பிடித்துக்கொள்வதற்குத்தான் நீளமான தலைமுடி தேவைப்பட்டது என்கிறார்கள். இந்த வாதம் நம் பரிணாம வளர்ச்சி ஆப்பிக்காவில் நடந்திருந்தால் பொருந்தாததாகிவிடுகிறது. ஆனால், மற்ற இனங்களில் இருந்து மனித இனத்தில் ஆணையும் பெண்ணையும் முடியே அடையாளப்படுத்துவதாக இருக்கிறது. வேறு சில இனங்களில் பிடறி முடி, தோகை போன்றவை இருபாலையும் பிரித்துக்காட்டுகிறது.

ஒரு கட்டத்தில் ஆண் தலைவர்கள் நீளமான முடியையே ஆண்மையின் அடையாளமாக வைத்துக்கொண்டது உண்டு. ‘ஜார்’ என்றால் நீளமான முடிகொண்டவர் என்பதுதான் பொருள். பைபிளில் வருகிற சாம்ஸன் கதையில், நாயகனின் முடி இழப்பு அவனுக்கு பலவீனத்தையும் வீழ்ச்சியையும் கொண்டுவந்துவிடுகிறது. 

ஒரு பூனையின் மீசையை வெட்டி விட்டால், அது இரவு நேரத்தில் நெருக்கடியான இடங்களில் தலையை நுழைத்து மாட்டிக்கொள்ளும். மீசையே இரவில் அதன் வழியைத் தீர்மானிக்கிறது.

தூரத்தில் இருக்கும்போதே தலையில் மாத்திரம் இருக்கும் முடி குரங்கினங்களில் இருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டியது. 

இன்றிருக்கும் நவீன வசதிகளைப் பார்க்கும்போது உடலைக் காப்பாற்றும் பணியில் முடியின் பணி குறைந்து, அவை வேறுவிதமாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள உதவுகின்றன. சில நேரங்களில் அது பெருந்தொல்லையாகவும் இருந்துவிடுகிறது!

%d bloggers like this: