மிஸ்டர் கழுகு: ஆண்மை சோதனைக்கு உடன்பட மாட்டேன்!

 

”சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொள்ளும்!” என்று வாட்ஸ் அப்பில் கழுகார் தகவல் அனுப்பியிருந்தார். போட்டோவை சேகரிப்பதற்குள் கழுகார் அலுவலகத்துக்குள் வந்து குதித்தார்!

”சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள சஞ்சய் கிஷன் கவுலை, ‘நிர்வாகச் சீர்திருத்த நீதிபதி என்கிறார்கள். பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தபோது இவர்தான் இ-பைலிங் முறையில் இணையதளத்தின் மூலம் வழக்குகளை தாக்கல் செய்யும் முறையைக் கொண்டுவந்தார். மேலும், வழக்கு எப்போது விசாரணைக்கு வருகிறது என்பதை வழக்கறிஞர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவிக்கும் முறையையும் அறிமுகம் செய்தார். நவீன தகவல் தொடர்பு மற்றும் கம்ப்யூட்டரில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தேங்கியிருந்த வழக்குகளை முதல் வேலையாக முடித்தார் என்று அவரது டெக்னாலஜி ஆர்வம் பற்றி விவரம் அறிந்தவர்கள் நிறையவே பேசுகிறார்கள்!”

”ஓஹோ!”

”கடந்த 26-ம் தேதி ஆளுநர் மாளிகையில் வைத்து தமிழக ஆளுநர் ரோசய்யா மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்ட இவருக்கு கடந்த 30-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வரவேற்பு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் பேசிய அவர், ‘பொதுமக்கள் நீதி கிடைக்கும் என்ற எண்ணத்துடன் இங்கு வருகின்றனர். அவர்களது எதிர்பார்ப்பை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஆகியோர் நிறைவேற்ற வேண்டும். நீதி பரிபாலனம் என்பது புனிதமான பணியாகும். கோயில்கள் எப்போதும் மூடியிருக்காது என்பதுபோல நீதிமன்றங்களும் மூடியிருக்காமல் செயல்பட வேண்டும். எந்தக் காரணத்தினாலும் நீதிமன்றங்கள் செயல்படவில்லை என்ற பேச்சு எழக் கூடாது’ என்று கூறியதைக் கேட்டு வக்கீல்கள் பலரும் ஜெர்க் ஆனார்கள்!”

”ம்!”

”இதை எல்லாவற்றையும்விட நீதிபதியின் சொத்து மதிப்பைக் கேட்டுத்தான் அனைவரும் மலைத்துப் போயிருக்கிறார்கள். நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், காஷ்மீர் பண்டிட் தாத்தரேய் கவுல் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். முகலாயர்கள் காலத்திலேயே அரச குடும்பத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்பும் செல்வாக்கும் மிக்கவர்களாக இருந்தவர்கள். காஷ்மீர், இமாச்சல பிரதேசம், டெல்லியில் இவருக்கு ஏராளமான அசையா சொத்துகள் உள்ளன. அதுபோல், இந்தியாவில் உள்ள பிரபலமான நிறுவனங்கள் அனைத்திலும் இவர்கள் குடும்பத்துக்குப் பங்கு உள்ளது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது இவர் தாக்கல் செய்த சொத்துகளின் பட்டியலே எட்டு பக்கத்துக்கு இருக்கிறது. மதிப்பே எவ்வளவோ கோடிகள் என்கிறார்கள். இந்தியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வர நீதிபதி இவர்தான் என்றும் சொல்கிறார்கள்.”

”ஏ! அப்பா!”

”உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் பற்றி ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டு இருக்கிறது. பணியில் இருந்து ஓய்வுபெற்ற அவரை லோக்பால் குழுவுக்கு நீதிபதியாகப் போடப் போகிறார்கள் என்று முதலில் செய்தி வந்தது. அது அப்படியே அமுங்கிய நிலையில், அவரை கர்நாடக மாநில கவர்னராக நியமிக்கப் போகிறார்கள் என்று அடுத்த செய்தி பரவி வருகிறது!”

”பொதுவாக இதுபோன்ற செய்திகள் வந்தால், ‘கவர்னராகப் போகிறார்’ என்றுதான் சொல்வார்கள். ஆனால், இப்போது மட்டும், ‘கர்நாடக கவர்னர் ஆகப் போகிறார்’ என்று செய்தி பரவுவது ஏன்?”

”அரசியல் உள்விவகாரங்களை அறிந்தவர்களுக்கு இதெல்லாம் சொல்லாமலே புரியும்! இந்த செய்தி டெல்லியில் இருந்து வெளியான ஆங்கில நாளிதழில் வெளியானது. அதைப் பார்த்த அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆதிஷ் சி அகர்வால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறாராம். ‘இந்தச் செய்திக்கு எங்களது சங்கத்தின் கவலையை தெரிவித்துக் கொள்கிறோம். இது நடந்தால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் புனிதமாக வைக்கப்பட்ட கொள்கைகளில் இருந்து விலகிச் செல்வதாகும். இவர் 26.4.14 அன்றுதான் ஓய்வுபெற்றார். ஓய்வுபெற்ற உடனேயே ஒரு பொறுப்பை அளிப்பது சந்தேகத்துடன் பார்க்கக் கூடியதாகும்’ என்று சொல்லி பல்வேறு தகவல்கள் அந்தக் கடிதத்தில் உள்ளன. இதில் மோடி என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. மார்க்கண்டேய கட்ஜு சர்ச்சையில் சிக்கியிருந்த தி.மு.க இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. ஆதிஷ் சி அகர்வாலின் கடிதத்தை அச்சிட்டு வெளியில் கொடுக்க இருக்கிறதாம் தி.மு.க!”

”நீதித் துறை பிரமுகர்கள் சர்ச்சையில் சிக்குவது அதிகமாகி வருகிறதே!”

”நீதியோடு இருந்தால் பரவாயில்லை, அரசியலில் தலையிட்டால் இப்படி பிரச்னை வரத்தானே செய்யும்!” என்றபடி கழுகார் சொல்ல ஆரம்பித்ததும், கர்நாடக மேட்டர்தான்!

”நித்தியானந்தா சில மாதங்கள் நிம்மதியாக இருந்தார். அவருக்குக் கடுமையான வலை விரிக்கப்பட்டுவிட்டது. இப்போது அவர் சிக்கியிருப்பது, ‘ஆண்மை வலை’. ‘அவரை பிழிந்தெடுத்துத்தான் விடுவோம்’ என்கிறார்கள் கர்நாடக போலீஸார்!”

”சொல்லும்!”

”நித்தியானந்தாவின் பெண் சீடர் ஆர்த்தி ராவ் கடந்த 2011-ம் ஆண்டு பிடதி காவல் நிலையத்தில் அவர் மீது ஒரு செக்ஸ் புகார் கொடுத்தார். அதையடுத்து பிடதி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து நித்தியானந்தாவைக் கைதுசெய்தனர். மைசூர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பிறகு பிடதி போலீஸார் நித்தியானந்தாவுக்கு ஆண்மைப் பரிசோதனையும், ரத்தப் பரிசோதனையும் செய்ய  அனுமதி கேட்டு ராம்நகர் அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த ராம்நகர் நீதிமன்றம், ஆண்மை பரிசோதனை செய்ய அனுமதி அளித்தது. அத்தோடு, ‘நித்தியானந்தா இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நித்தியானந்தா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த 25-ம் தேதி தள்ளுபடி செய்தது. அதையடுத்து ராம்நகர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 28-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அன்று நித்தியானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. போலீஸ் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், ‘ஆகஸ்ட் 6-ம் தேதி பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் நித்தியானந்தாவுக்கு ஆண்மைப் பரிசோதனை செய்ய திட்டமிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நாளில் நித்தியானந்தா மருத்துவமனைக்கு வந்து எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என்று வாதிட்டார். அதற்கு நித்தியானந்தா வழக்கறிஞர் முத்து மல்லையா, ‘ஸ்வாமி ஆன்மிகப் பயணமாக ஹரித்வார் சென்றிருப்பதால் போலீஸார் திட்டமிட்டுள்ள நாளில் ஸ்வாமி வர இயலாது. ஆகவே அவருக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்றார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹொசகவுடர், ‘நித்தியானந்தாவுக்கு போலீஸார் திட்டமிட்ட ஆகஸ்ட் 6-ம் தேதி கண்டிப்பாக ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும். அதையடுத்து 7-ம் தேதி இந்த நீதிமன்றத்தில் அவரை கைதுசெய்து ஆஜர்படுத்த வேண்டும். வெளியே தப்பித்துச் செல்லாமல் இருக்க பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிடுகிறேன்’ என்றார்.”

”பரபரப்புத் திருப்பங்களாக இருக்கிறதே!”

”கடந்த 28-ம் தேதி அன்று மாலையே  போலீஸ் டீம் நித்தியானந்தாவை தேடி தியானபீட ஆசிரமம், ஹரித்வார் என பல இடங்களுக்குப் போய்விட்டது. இந்தச் செய்தி வந்தபோது ஹரித்துவாரில் இருந்தார் நித்தி. தீர்ப்பைக் கேட்டு ஆடிப் போய்விட்டாராம் நித்தி. ‘ஆண்மைப் பரிசோதனைக்கு நான் வரமாட்டேன். என்ன செய்வீர்களோ தெரியாது, இந்தத் தீர்ப்புக்கு ஸ்டே வாங்குங்கள்’ என்றாராம். ‘ஏற்கெனவே, கர்நாடக உயர் நீதிமன்றம் வரைக்கும் போய் ஒன்றும் ஆகவில்லை. அதனால் மறுபடியும் உயர் நீதிமன்றம் போக முடியாதே’ என்றார்களாம் வக்கீல்கள். தன்னால் ஆண்மை சோதனைக்கு ஏன் சம்மதிக்க முடியாது என்பதற்காக காரணங்களை அடுக்கினாராம் நித்தியானந்தா. என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார்கள் அவரது சட்ட சீடர்கள்!”

”ஆகஸ்ட் 6-ம் தேதி என்றால், இன்னும் ஒரு வாரம்கூட இல்லையே… அதற்குள் தடை வாங்குவது கஷ்டமாச்சே?”

”அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதால் நித்திக்கு எதிரான அமைப்பினர் தங்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ளார்கள். கடந்த 30-ம் தேதி கர்நாடக ஜனப்புரா வேதிகா அமைப்பினர் நித்தியானந்தா உருவ பொம்மை செய்து பாடைகட்டி, அதில் படுக்க வைத்து, தேங்காய் பழம் வைத்து சூடம் ஏற்றி, சாவு மேளம் முழங்க, தீச்சட்டி ஏந்தி சவ யாத்திரை நடத்தினார்கள். ஜனப்புரா வேதிகா அமைப்பின் தலைவர் ரமேஷ் கவுடா, ‘இந்த ஆசிரமத்தை முழு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். சட்ட விரோதமாக அரசு நிலங்களைக் கையகப்படுத்தி கட்டடம் கட்டப்பட்டுள்ளதை அப்புறப்படுத்த வேண்டும். உடனே நித்தியானந்தாவை கைதுசெய்து ஆண்மைப் பரிசோதனை நடத்த வேண்டும்’ என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

‘இந்த ஆசிரமம் 23 ஏக்கர் நிலத்தில் இருக்கிறது. 2 ஏக்கர் மட்டும்தான் அவருடைய நிலம். மீதி 21 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம். அந்த நிலத்தில் கவர்மென்ட் அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டியிருக்கிறார்’ என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.”

”சிக்கல்தான்!”

”போராட்டம் நடத்துபவர்கள் பற்றி, ‘300 ரூபாய் கொடுத்து கூட்டி வந்திருக்கிறார்கள்’ என்று நித்தி அடித்த கமென்ட், அவருக்கு இன்னும் தலைவலியைக் கொடுத்துள்ளது. கோர்ட், போலீஸ், பொதுமக்கள் ஆகிய முக்கோண வலையில் சிக்கிவிட்டார் நித்தி. அவர் மீண்டுவருவது கஷ்டம்தான் என்கிறார்கள்!” என்ற கழுகார் அழகிரி மேட்டருக்கு வந்தார்.

”முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தந்தை விருதுநகர் தங்கப்பாண்டியனின் நினைவு தினம் கடந்த 31-ம் தேதி. மு.க.அழகிரிக்கு நெருக்கமான நண்பராக இருந்தவர். தங்கப்பாண்டியன் மறைவுக்குப்பின் ஒவ்வொரு ஆண்டும் அவரது சொந்த ஊரான மல்லாங்கிணறுக்கு செல்வதை அழகிரி வழக்கமாக வைத்திருந்தார். கடந்த வியாழக்கிழமை, மதுரையில் இருந்து காலை 7 மணிக்கு தனது ஆதரவாளர்கள் பி.எம்.மன்னன் உள்பட பலருடன் 15 காரில் புறப்பட்ட மு.க.அழகிரி நேராக மல்லாங்கிணறு வந்து ‘முதல் ஆளாக’ தங்கப்பாண்டியனின் சமாதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு விறுவிறுவென்று காரில் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.”

”தங்கம் தென்னரசு வரவேற்பு கொடுத்தாரா?”

”கடந்த ஆண்டு அழகிரி வந்தபோது அவரை வரவேற்க தங்கம் தென்னரசு நின்றார். ஆனால் அவரைப் பார்க்காமல் போய்விட்டார் அழகிரி. அதனால் இந்த முறை தங்கம் தென்னரசு நினைவு இல்லத்துக்கு வரவில்லை. தங்கம் தென்னரசு தனது வீட்டில்தான் இருந்துள்ளார். அழகிரி வருவதை முன்கூட்டியே அறிந்த தங்கம் தென்னரசு அவரைச் சந்திப்பதை தவிர்க்கத்தான் வீட்டில் இருந்துகொண்டாராம். பிறகு, காலை 9 மணிக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் தங்கம் தென்னரசு மற்றும் தி.மு.க-வினர் தங்கப்பாண்டியன் சமாதிக்கு போய் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர்.”

”தங்கம் தென்னரசு அணி மாறினாலும் தங்கப்பாண்டியனுக்கு அஞ்சலி செலுத்த வந்துவிட்டாரே அழகிரி?”

”மல்லாங்கிணறில் அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்ற அழகிரியிடம் அவரது ஆதரவாளர்கள், ‘தங்கம் தென்னரசு கோஷ்டி மாறிவிட்டார். அவரது அப்பா நினைவு நாள் நிகழ்ச்சிக்குப் போகணுமா?’ என்று கேட்டுள்ளார்கள். ‘நான் மதுரையில் செட்டில் ஆனதும் எனக்கு நண்பரானவர் தங்கப்பாண்டியன். எங்க குடும்பத்தில், கட்சியில் பல பிரச்னைகள் ஏற்பட்டு நான் பாதிக்கப்படும்போது காரை எடுத்துக்கொண்டு மல்லாங்கிணறு வந்துவிடுவேன். தங்கப்பாண்டியனின் தோட்டத்தில் என்னை தங்கவைத்து வீட்டில்  இருந்து சாப்பாடு எடுத்து வந்து ஆறுதல் கூறி என்னை புது மனிதனாக மதுரைக்கு அனுப்பிவைப்பார். எந்தச் சூழ்நிலையிலும் பிறரிடம் என்னை விட்டுக்கொடுக்க மாட்டார். இப்போது உயிரோடு இருந்திருந்தால் எனக்கு உறுதுணையாக இருந்திருப்பார். நானும் அவரும் உயிர் நண்பர்கள்.  தங்கம் தென்னரசுக்கு இதெல்லாம் தெரியுமா? அவர் என்னை மதித்தாலும் மதிக்காவிட்டாலும் தங்கப்பாண்டியன் சமாதியில் நினைவு அஞ்சலி செலுத்துவதை விடமாட்டேன்’ என்று பதில் அளித்தாராம் அழகிரி!” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார்,

”கடந்த ஆட்சியில் மதுபான விற்பனையில் முக்கியஸ்தர்கள் சிலர் மூழ்கித் திளைத்தார்கள் அல்லவா? அதனைப்போல தற்போது ஆளுங்கட்சியைச் சேர்ந்த தென் மாவட்டத்து வி.வி.ஐ.பி ஒருவர், மதுபான கம்பெனி ஒன்றை வாங்கிவிடத் துடிக்கிறாராம். வட இந்தியர் ஒருவர் பெயரில் கம்பெனியை வாங்கி பிறகு தன் பெயருக்கு மாற்றிக்கொள்வதாகத் திட்டமாம்!” என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்.

%d bloggers like this: