மனிதன் மாறி விட்டான்!-9

தலைப்பாகைக்கு வந்தது தலையைத் தகர்க்குமா?

‘முதல் மரியாதை’ திரைப்படத்தில் நாயகனின் வெள்ளி முடியில் நாயகி மணிகளைக் கோத்துக்கொள்வதுபோல ஒரு காட்சி வரும். நேசிப்பவருக்கு கழுத்து டாலரில் வைத்து அணிந்துகொள்ள கொஞ்சம் முடியைக் கொடுப்பது ஒருவிதமான பழக்கமாக இருந்துள்ளது. அது மேற்கத்திய நாடுகளில் உண்டு. அதே நேரத்தில் அதை ஆபத்தாகவும் கருதுபவர்கள் இருக்கிறார்கள். அதன் மூலம் மாந்த்ரீகம் செய்துவிட முடியும்;  ஒருவருக்கு எதிராக சூனியம் வைத்துவிட முடியும் என்பதெல்லாம்கூட ஒருவிதமான நம்பிக்கை. டாலரில் அணிந்துகொள்கிற கற்றை முடி ஒருவருடைய உயிர் ஆற்றலாக ஒரு கட்டத்தில் கருதப்பட்டது. தலைமுடிக்கு வந்தது தலையையே வெட்டிவிட்டது என்பதற்கு சரித்திரச் சான்று உண்டு. பிரெஞ்சுப் புரட்சியின்போது மேட்டுக்குடி மக்களை கில்லெட்டினின் துணைகொண்டு கொல்ல வேண்டும் என்பதால், யாரெல்லாம் அவ்வாறு ஸ்டைலாக முடியலங்காரம் வைத்திருந்தார்களோ அவர்கள் அத்தனை பேருடைய தலையும் அந்த இயந்திரத்துக்குப் பலியானது என்பார்கள்.

 

பெண்களைப் பொறுத்தவரை நீண்ட தலைமுடி பளபளப்பான அவர்களுடைய முகத்துக்கு முற்றிலும் முரணானதாக இருப்பதால், தோற்றப் பொலிவைத் தோற்றுவிக்கிறது. அவர்கள் முடியைப்போல உடலின் வேறெந்தப் பாகமும் இந்த அளவுக்கு ஆண்டுக்கு ஆண்டு, நூற்றாண்டுக்கு நூற்றாண்டு பல்வேறுவிதமான பண்பாட்டு மாற்றத்துக்கு உட்பட்டிருக்காது. சராசரியாக ஒரு லட்சம் முடி தலையில் உள்ளது. இளம் பொன்நிறமான தலைமுடியுடைய பெண்ணுக்கு சராசரியைவிட  அதிகமான முடி இருக்கும். அவர்களுக்கு 1,40,000; மா நிறத்தில் இருக்கும் புரூனட் வகையைச் சார்ந்த பெண்களுக்கு 1,08,000; செம்பட்டை தலையுடைய பெண்களுக்கு 90,000 முடிகள் இருக்கும்.

முடி ஆறு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கிறது. உதிர்வதற்கு முன்னால் மூன்று மாதங்கள் ஓய்வெடுக்கிறது. எந்த நேரத்திலும் 90 விழுக்காடு முடி வேகமாக வளர்ந்துகொண்டே இருக்கிறது. மனித வாழ்க்கையில் ஒவ்வொரு மயிர்க்காலிலும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக 12 முடிகள் முளைக்கின்றன.

ஒருவன் ஓர் ஆண்டுக்கு 13 சென்டிமீட்டர் நீளம் முடி வளர்க்கிறான்.  ஆரோக்கியமானவர்களுக்கு அது 18 சென்டிமீட்டர்கூட நீளலாம்.

விதிவிலக்குகளும் உண்டு. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு விழாமல் தொடர்ந்து வளர்ந்துகொண்டு தரையைத் தொடும் அளவு கூந்தல் கொண்ட பெண்களும் இருந்திருக்கிறார்கள். ஓர் இளம் அமெரிக்கப் பெண் 13 அடி வரை தன்னுடைய கூந்தலை வளர்த்தாள். அவளுடைய சாதனையை ஒரு சீனப் பெண்மணி 16 அடி நீளம் வளர்த்து தகர்த்தாள். 

தலைமுடியை வைத்து மனிதன் பல பரிசோதனைகள் செய்தான். பல வடிவங்களில் அதை வெட்டி அவன் தன் உருவத்தை அழகு பார்த்துக்கொண்டான். வீனஸ்போல தலைமுடியை வைத்துக்கொள்வது, இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது.

தொழிற்சாலை போன்ற கடினமான சூழலில் பணியாற்றும் பெண்கள் தங்களை தலையை சுருட்டிப் பின்னே முடிந்துகொள்வதும், அது கீழே விழுந்து தங்கள் பணியைத் தொந்தரவுசெய்யாமல் பார்த்துக்கொள்வதும் தொன்றுதொட்டு இருந்துவருகிறது. 

தலைக்கு சவுரி அணிந்துகொள்வது 5,000 ஆண்டுகளாக இருந்து வருகிறது. எகிப்து நாட்டில் மேல்தட்டுப் பெண்கள் தலையை முற்றிலுமாக மழித்துவிட்டு விருப்பமான விக்கை வைத்துக்கொள்வது சகஜம். ரோமாபுரியைச் சார்ந்த பெண்கள் தலையை முழுக்க வழிக்காவிட்டாலும், இருக்கிற முடிக்கு மேல் விருப்பமான வகையில் செயற்கை முடி வைத்துக்கொள்வார்கள். அது மிகவும் மோசமான நிலையை ஒரு கட்டத்தில் அடைந்தது. தோற்ற நாட்டின் பெண்களின் முடியை மழித்து, அதில் இருந்து பொய் கூந்தலைப் புனைந்துகொள்வார்கள்.

ஆசிரியப் பணி, மேலாளர் பணி போன்ற பணியில் இருக்கும் பெண்கள் தங்கள் தலைமுடியைத் தொங்கவிட்டுக்கொள்வது இல்லை. அவர்கள் இறுக்கிக்கட்டி கொண்டைபோல் போட்டுக்கொள்வது, ‘நான் முக்கியமானவள். என்னிடம் பரிச்சயமாக முயற்சி செய்யாதே’ என்கிற பொருளை மறைமுகமாக உணர்த்துகிறது. 

தற்சமயம் ஆண்களைப்போல பெண்கள் முடியை சிறிதளவு வைத்துக்கொள்வதும் உண்டு. ‘நான் என்னை அழகாகக் காண்பிக்க விரும்பவில்லை. நான் நீள முடியில்லாமலேயே பெண்தன்மையோடு இருக்க முடியும்’ என்பதை உணர்த்துவதாக இருக்கிறது. ஆண்கள்கூட அப்படி வைத்திருக்கும் பெண்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையோடுதான் நடந்துகொள்வார்கள். பெண்களின் தலையை மொட்டையடிக்கும் பழக்கம் சில பண்பாடுகளில் இருந்தது. அது தண்டனையாக வழங்கப்பட்டது. அடிமைப் பெண்கள் மொட்டையடிக்கப்படுவார்கள்.

முடி என்பது பெண் தன்னை விருப்பத்துக்கு ஏற்ப ஒப்பனை செய்வதற்கான உடற்களமாக இருந்துவருகிறது. அதில் அவளுடைய தனித்தன்மையை தக்கவைத்துக்கொள்கிறாள். அதைப்போலவே முடியை வண்ணமயமாக்குவதும் நாகரிகத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. பழுப்பு நிறமாக முடியை மாற்றிக்கொண்டால் பட்டுபோல முடி தோன்றும் என்பதால், அவ்வாறு செய்துகொள்ள பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். இரண்டாம் உலகப்போரின்போது பிளாட்டின வண்ணத்தில் தலை முடியைச் செய்துகொள்வது வழக்கம். மர்லின் மன்றோ போன்றவர்கள் அப்படித்தான் செய்துவந்தார்கள். 

கவரிமான் மயிர் நீத்தால் உயிர் நீக்கும் என்பது திருவள்ளுவர் குறிப்பிடும் உவமை.  அப்படி அறிவியல் உண்மை எதுவும் இல்லை என்று ஒரு சாரார் வாதிடுகிறார்கள்.  புள்ளி மான்களை வேறு இடத்துக்கு இடம் மாற்றுவது மிகவும் கடினம். ஏனென்றால் அவற்றைப் பிடிக்கச் சென்றால், இதயத் துடிப்பு அதிகமாக அவை இறந்துவிடுகின்றன.  அந்த வகையில் புள்ளி மான்கள் மென்மையானவை என்பதுதான் உணர்த்தப்படுகின்ற பாடம். 

முடி தலையில் இருக்கும்போது, அக்கறையுடன் பராமரிக்கப்படுகிறது. கீழே விழுந்தாலோ, அது அசுத்தமாக நிராகரிக்கப்படுகிறது. அதையும் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். இழிநிலையில் திரிந்த மனிதன், கீழே விழுந்த ரோமத்தைப்போல கருதப்படுகிறான் என்பது முடி நமக்கு உணர்த்துகிற பாடம். எனவே உயரத்தில் இருப்பவர்கள் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம். அவர்கள் வீழ்ச்சி முடி உதிர்வதைப்போல மௌனமாக நடந்து பலர் கால்களால் மிதிக்கப்படும் நிலை ஏற்பட்டுவிடும். 

தலையை இறைவனுக்காக மழித்துக்கொள்வது இப்போது பல தளங்களில் காணப்படுகிறது. ‘அழகர் கோயில்’ என்கிற தன்னுடைய ஆய்வு நூலில், ‘தமிழ்நாட்டு சைவ வைணவ நூல்களில் தலையினை மழிக்க வேண்டும் என்பது போன்ற குறிப்புகள் ஏதும் இல்லை. தலைமுடியினைக் கையினாற் பறித்துக்கொள்ளும் வழக்கம் சமணத் துறவிகளுக்கு உண்டு. பௌத்தத் துறவிகளே தலைமுடியினைக் கத்தி கொண்டு மழிக்கும் வழக்கமுடையவர். பௌத்தத் துறவியின் உடைமையாக அனுமதிக்கப்பட்ட மூன்று ஆடைகள் உள்ளிட்ட எட்டுப் பொருள்களில் மழிகத்தியும் ஒன்று. தலை முடியை மழித்துக்கொள்ளும் பௌத்தர்களின் வழக்கம் இந்தக் கோயிலில் இன்றும் அடியவர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது’ என்று பேராசிரியர் தொ.பரமசிவன் குறிப்பிடுகிறார்.

குடுமியான் மலையில் உள்ள குடுமிநாதருக்குப் பெயர் வந்ததுகுறித்து சுவாரஸ்யமான தல புராணம் உண்டு. சுந்தர பாண்டியன் என்ற அரசன் மதுரையில் இருந்து தீர்த்த யாத்திரை செய்து குடுமியான் மலைக்கு வரும்போது, நள்ளிரவில் தரிசனம் செய்துகொண்டான். மரியாதைகளையும் பெற்றுக்கொண்டான். தனக்குப் போட்ட பூ மாலையில் முடி இருக்கக் கண்டு குருக்களை நோக்கி, ‘சாமிக்குக் குடுமி இருக்கிறதா?’ என்று கேட்டானாம். ‘ஆம்’ என்று சொல்லிவிட்டாராம் குருக்கள் ஐயாவும். எதிர்பாராத சமயத்தில் வந்து சேர்ந்த அரசனுக்கு மரியாதையாகப் போடப் பூமாலை கோயிலில் இல்லாததால், வீட்டில் உபயோகப்படுத்தியிருந்த மாலையைக் கொண்டுவரச் சொல்லி அதையே அரசன் கழுத்தில் போட்டுவிட்டார் குருக்கள். அதுதான் நடந்த சமாசாரம்.

முடியைக் கண்டு வியப்பும் திகைப்புமாய்க் கேள்வி கேட்ட அரசனுக்கு, குருக்களின் பதில் கோபத்தை மூட்டிவிட்டது. நள்ளிரவு ஆகிவிட்டதால், குருக்களைக் கோயிலிலேயே சிறைப்படுத்திவிடுங்கள் என்று உத்தரவு செய்தான். மறுநாள் காலை அரசன், அமைச்சர் முதலானவர்களுடன் வந்து கடவுளைப் பார்க்கும் போது குடுமி இருக்க ஆச்சர்யப்பட்டானாம். சிகையை இழுத்துப் பார்த்ததும் ரத்தம் பீறிட்டுப் பெருகிவிட்டதாம்.

பெண்கள் கோபமாக இருந்தால் முடியை விரித்துப்போட்டுக்கொள்வது உண்டு.  அதனால்தான் கண்ணகி நீதி கேட்க வருகிறபோது, அவிழ்ந்த கூந்தலுடன் வேகமாக வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. துகிலை உரித்து அவமானப்படுத்த நினைத்த துரியோதனன், துச்சாதனன் ஆகியோருடைய ரத்தத்தைப் பூசி நறு நெய்யால் குளிக்கும் வரை கூந்தலை முடிய மாட்டேன் என்று திரௌபதி சபதம் செய்ததாக பாஞ்சாலி சபதத்தில் படிக்கிறோம். மீசை என்பது சில பண்பாட்டுத் தளங்களில் தடைசெய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது. சில பகுதிகளில் மீசையை முறுக்கிவிடுவதும் நடக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் புஷ்கர் திருவிழாவின்போது நீளமான மீசைக்கான போட்டி நடப்பதுண்டு. மீசையை ஆண்மையின் சின்னமாக தமிழ்நாட்டு மக்கள் கருதுகிறார்கள். பந்தயத்தில் தோற்றால் மீசையை எடுத்துக்கொள்வதாக சத்தியம் செய்பவர்கள் இருக்கிறார்கள்.

முடி மனிதனின் உணர்வுகளை ஏதேனும் ஒரு வகையில் அலங்காரம் மூலமும் மயிர்கூச்செறிவது மூலமும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அது முடி வெளிப்படுத்தும் உடல் மொழி. 

%d bloggers like this: