Advertisements

மிஸ்டர் கழுகு: என் வாழ்க்கையும் கடைசியை நெருங்குகிறது!

கழுகார் உள்ளே நுழைந்ததும், தனது சிறகுகளுக்குள் இருந்து சில காகிதங்களை எடுத்து விரித்தார்!

”இவை சாதாரண காகிதங்கள் அல்ல. கனலும் கண்ணீருமான கடிதங்கள். இதனை எழுதி​யிருப்பவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்ப​ராக இருந்து தற்கொலை செய்து​கொண்ட சாதிக் பாட்ஷாவின்  மனைவி ரேகா பானு. கணவர் சாதிக் இறந்த பிறகு, வாழ்க்கையின் அனைத்துவிதமான கஷ்டங்​களையும் சந்தித்து வருகிறாராம் இந்தப் பெண். சாதிக் பாட்ஷா ஆரம்பித்ததுதான் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற நிறுவனம். அதில் பின்னர் பலரும் உள்ளே வந்து நுழைந்திருக்கிறார்கள். அதுதான் சாதிக் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குப் போனது. தனது கணவர் மரணத்துக்குப் பிறகு, தனக்குச் சேர வேண்டிய பணத்தைக் கேட்டு ரேகா பானு பல்வேறு கடிதங்களை அனுப்பிய பிறகும், அவருக்கு அது தரப்படவில்லையாம். வாய்வார்த்தைகளில் கேட்பதைவிட அதிகாரபூர்வமாகக் கேட்கலாம் என்று கடிதங்களை அனுப்பியிருக்கிறார். அதற்கும் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை. ‘தன்னை இந்த கம்பெனியில் இருந்து கழற்றிவிட நினைக்கிறார்களோ?’ என்று நினைத்தவர், ‘எனக்கான பங்காக 50 கோடி ரூபாயைத் தாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அதில் ஒரு கடிதம்தான் நம் கைக்குக் கிடைத்துள்ளது!”

”அதனுடைய சாராம்சம் என்ன?”

”கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்​துக்கும் அதில் இப்போது அங்கம் வகிக்கும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் உறவினர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் ரேகா பானு அனுப்பியதாகச் சொல்லப்படும் கடிதத்தில் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. ‘இந்த நிறுவனத்தில் எனக்குள்ள பங்குகளை விற்பது தொடர்பாகப் பலமுறை கூட்டங்கள் நடந்துள்ளதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், எனக்கான செட்டில்மென்ட் தொகை மற்றும் அது தொடர்​பான நபர்களை மிகவும் சௌகர்யமாக மறைத்ததைக் கண்டு நான் மிகவும் ஆச்சர்யம் அடைகிறேன். இதன்மூலம், அமைச்சர் முன்னிலையில் உங்களுக்கும் எனக்கும் நடந்த கூட்டத்தை நினைவுகூருமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

என் குடும்பத்தில் நிகழ்ந்த மோசமான நிகழ்வுகள் மற்றும் பல்வேறு பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு வந்தீர்கள். அதன்படி என்னுடைய பங்குக்காக 50 கோடி ரூபாயை அளிப்பதாக ஒப்புக்கொண்டீர்கள். இந்த முடிவு தொடர்பாக மேலும் ஒருமுறை நிறுவனத்தின் இயக்குநர் குழுவினர், முன்னாள் மத்திய அமைச்சர் திரு ஏ.ராஜா மற்றும் என் குடும்பத்தாருடன் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது. ஆனால், இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான எந்த ஒரு ஆவணத்தையும் அளிக்கவில்லை. எழுத்துப்பூர்வமான ஆவணம் தொடர்பாக கேட்டபோது, செட்டில்மென்ட் ஆவணம் தயாரிக்க வேண்டும் என்றால், அதற்கு முன்பு பங்குகளை மதிப்பீடு செய்வது, பங்குதாரர்கள் கூட்டம் நடத்துவது, பங்குகளைத் திரும்ப வாங்குவது என்று பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவித்​தீர்கள். கனரா வங்கியில் உள்ள ஃபிக்ஸட் டெபாசிட் திரும்பப் பெறுவதற்காக நடவ​டிக்கை எடுத்திருப்பதாக தாங்கள் தெரிவித்திருந்தீர்கள். அனைத்தும் நிறைவடைந்ததும் கொடுத்து​விடுவதாகவும் உறுதி​யளித்தீர்கள். மேலும், அமைச்சரும் உறுதி அளித்ததால் அதன் மீது மரியாதை வைத்து நான் மிகவும் பொறுமையுடன் காத்திருந்தேன்.

ஆனால், நீங்கள் பங்குகளை மதிப்பீடு செய்வது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுதொடர்பான கடிதமும் எனக்கு அனுப்பவில்லை. மிகுந்த மன உறுதிகொண்டிருந்த என்னுடைய கண​வரால்கூட மேலிடத்தில் இருந்து வந்த அழுத்தத்தைத் தாங்க முடியவில்லை. நான் அனுபவிக்கும் சித்ரவதைகள் மற்றும் அலுவலகத்தில் நடக்கும் விரும்பத்தகாத சம்பவங்கள் அனைத்தும் என் வாழ்வின் கடைசிக்குக் கொண்டுபோய் விட்டுவிடும்போல இருக்கிறது. அது நடைபெற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இந்த நிறுவனத்தின் சார்பில் ஒரு அனாதை இல்லத்தை ஆரம்பித்து, அதில் என் குழந்தையைச் சேர்த்துக்கொள்ளுங்கள். செட்டில்மென்ட் வருவதன் மூலம் உங்களைப் பொறுப்புகளில் இருந்து விடுவித்ததாகி விடாது. மேலும், என்னுடைய உரிமையில் இருந்து அகற்றிவிட முடியாது’ என்று அந்தக் கடிதத்தில் தீர்க்கமாக ரேகா பானு சொல்லியிருக்கிறாராம்!”

”ஓஹோ!”

”தங்கள் நிறுவனத்தின் சார்பில் இன்னொரு நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தவணை இருப்பதாக கிரீன் ஹவுஸ் சார்பில் ரேகா பானுவுக்கு ஒரு விளக்கக் கடிதம் வந்துள்ளதாம். ‘இந்தப் பணத்துக்குப் பதிலாகப் பங்குகளைத் தரலாம் என்று யோசனை சொல்கிறீர்கள். பணமாகத் தருவதுதான் சரியானது. பணத்தை முழுவதுமாக நானே செலுத்துவதாக உறுதியளித்து, அந்தப் பொறுப்பு முழுவதையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தேன். எனவே, எந்த தேதியில், எந்த முறையில் பணத்தைச் செலுத்த வேண்டும் என்பதையும், பங்குகளை என் பெயருக்கு மாற்றுவதற்கான நடைமுறை எப்போது முடியும் என்பதையும் தெரிவியுங்கள்’ என்றும் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

‘நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளில் பங்கேற்கும்படி முதன்முறையாக குறைந்தபட்சம் ஏட்டு அளவிலாவது நீங்கள் தெரிவித்திருந்தது உன்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் எந்த ஒரு கூட்டத்திலும் நான் பங்கேற்காத நிலையில், இந்த நிறுவனத்தைப் பற்றி எனக்கு எந்த ஒரு தகவலும் தெரியாது. நிறுவனத்தின் சமீபத்திய நடவடிக்கை பற்றி தெரிந்துகொள்ள (அப்டேட்) ஆவணங்களை எனக்கு தரும்படி பலமுறை கேட்டும் உங்கள் பக்கத்தில் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. இப்போது எனக்கு போதுமான ஆவணங்களைத் தாருங்கள் என்று ஏற்கெனவே பலமுறை கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதுபோல, இப்போது மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். இதுவே அலுவலக பங்கேற்பில் முழுமையாக ஈடுபட உதவும்.

உங்களுக்கு இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள தொழிலில் துளிகூட விருப்பம் இல்லை என்பதையும், எந்த ஒரு பொறுப்பையும் எடுத்துக்கொள்வது இல்லை என்பதையும் காண்பிக்கிறது. நிறுவனத்தை கலைக்கும் முன்பு இங்கு பணிபுரியம் நம்முடைய ஊழியர்களின் கடினமான உழைப்பு, நிர்வாக ஊழியர்கள், நிறுவனரின் கனவுகள், அதற்காக என்னுடைய குடும்பம் பட்ட அவஸ்தைகள், அதற்காக இழந்த உயிர் ஆகியவற்றை நினைவுகூரும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த நிறுவனமானது வெறும் முதலீடுகளின் மேல் மட்டும் நிற்கவில்லை, பலருடைய ரத்தம் மற்றும் வியர்வையாலும் நிற்கிறது. இந்த நிறுவனத்தின் மீது அக்கறை இல்லாதவர்கள் தாராளமாக பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்லலாம். அதைவிட்டுவிட்டு தங்கள் சுய லாபத்துக்காக நிறுவனத்தை மூட நினைக்கக் கூடாது’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார் ரேகா பானு!”

”என்னதான் நடக்கிறது அங்கே?”

”இதுபற்றி விவரம் அறிந்தவர்களிடம் விசாரித்தேன். ‘நிலங்கள், இடங்களாக ஏராளமான மதிப்புக்கு சொத்துகள் இந்த கம்பெனியின் பெயரில் உள்ளது. அக்கவுண்டில் பணமாவும் பல கோடி உள்ளது. இந்த கம்பெனியைத் தொடங்கியவர் என்ற முறையில் சாதிக் பாட்ஷாவின்  பங்கைத் தாருங்கள் என்று அவரது மனைவி கேட்கிறார். ஆனால், பணம் இல்லை என்று மொத்தமாகக் கழற்றிவிடப் பார்க்கிறார்கள். இதுதான் இப்போதைய சிக்கலுக்குக் காரணம்’ என்று சொல்கிறார்கள்!”

”சி.பி.ஐ-யும் அமலாக்கத் துறையும் விளக்​கெண்ணெய் ஊற்றி விசாரித்துக்கொண்டு இருக்கும்போதா இப்படியெல்லாம் தைரியமான கழற்றிவிடல் நடக்கும்?”

”நடக்கிறதே!”

”இதற்கு அந்த கம்பெனியை வசப்படுத்தி இருப்பவர்கள் பதில் என்னவாம்?”

”அவர்கள் அனுப்பிய கடிதத்துக்குத்தான் ரேகா பானு இந்த பதில் கடிதம் அனுப்பியிருக்கிறார். ‘நீங்கள் இந்த நிறுவனத்தின் பங்குதாரர் மட்டும் அல்ல, இயக்குநர் குழுவில் ஒருவரும்கூட. அனைத்து தகவலும் பெறக்கூடிய உரிமை கொண்டவர். மேலும் நமது அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை எந்த நேரத்திலும் பயன்படுத்தக்கூடிய உரிமை கொண்டவர். இந்த நிறுவனம் சந்திக்கும் பிரச்னைகளை ஒன்றாக இணைந்து எதிர்கொள்ளக்கூடிய பொறுப்பு உணர்வும் உங்களுக்கு உள்ளது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். நமது நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடி சூழலில் சிக்கியுள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள். இந்தச் சூழ்நிலையில் பணத்துக்குப் பங்குகளாகப் பெற்றுக்கொள்ளும்படி அந்த நிறுவனத்தை கேட்பதைத் தவிர நமக்கு வேறு வாய்ப்புகள் இல்லை. இந்த நிறுவனத்தில் தங்களுடைய பங்குகள் என்பது நிலையானது (ஃபிக்ஸட்) மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால், உங்களுடைய பங்களிப்பு மற்றும் உரிமைகளில் எந்த பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை’ என்று மையமாக ஐஸ் வைத்து அந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. நிலைமையை உன்னிப்பாக கவனிப்பவர்கள் சீரியஸாக அதில் ஏதோ நடக்க இருக்கிறது என்பதை உறுதியாகச் சொல்கிறார்கள்!” என்று சொல்லிவிட்டு அடுத்த மேட்டர் தாவினார் கழுகார்.

”மவுலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவத்தை விசாரிக்க முன்னாள் நீதிபதி ரகுபதி தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை கமிஷன் பற்றி சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான கேள்விகளை முன்வைத்துள்ளது. இது அரசாங்க கட்டடத்தை அதிகமாக ஆட்டியுள்ளது” என்ற பீடிகையுடன் சொல்ல ஆரம்பித்தார்.

”சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி கவுல் பற்றி கடந்த இதழில் சொல்லியிருந்தேன். அவரது அதிரடி உடனடியாக ஆரம்பம் ஆகி​விட்டது. மவுலிவாக்கம் கட்டடம் இடிந்து விழுந்து 61 பேர் இறந்து போனார்கள். சம்பவ இடத்துக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, ‘அரசுத் துறைகளான சி.எம்.டி.ஏ, பொதுப்பணித் துறை மீது எந்தத் தவறும் இல்லை. கட்டடத்தைக் கட்டியவர்கள் செய்த விதிமுறை மீறல்தான் அனைத்துக்கும் காரணம்’  என்று விளக்கம் சொன்னார்.  இந்த நிலையில் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘கட்டடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கி அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட அரசாணையை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும். அங்கு வீடு வாங்குவதற்கு பில்டர்களிடம் பணம் கட்டியிருந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் அரசுத் தரப்பில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக சந்தேகம் இருக்கின்ற நிலையில், இதை மாநில அரசே விசாரிக்கக் கூடாது. மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் இந்த விவகாரத்தை விசாரித்தால்தான், அது நியாயமாக இருக்கும். எனவே, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.”

”ஆமாம்!”

”இந்த மனு மீதான விசாரணை கடந்த 4-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மு.க.ஸ்டாலின் சார்பில் வழக்கறிஞர்கள் அரவிந்தன், பரந்தாமன், பிரசன்னா ஆகியோர் ஆஜராகினர். வழக்கறிஞர் வில்சன் இவர்களுக்காக வாதிட்டார். அப்போது, இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடக்க வேண்டுமானால், இதை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞர் சோமயாஜி, ‘இந்த விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே, இதில் சி.பி.ஐ விசாரணை தேவையில்லை’ என்று வாதிட்டார். அதை கடுமையாக எதிர்த்த தி.மு.க தரப்பு, ஏற்கெனவே நீதிபதி ரகுபதி சில விசாரணை கமிஷன்களில் உறுப்பினராகவும், நுகர்வோர் நீதிமன்றம், குண்டர் தடுப்பு சட்ட அமைப்புகளில் பதவி வகிக்கிறார். எனவே, இந்த விசாரணை நியாயமாகவும் முழுமையாகவும் இருக்காது என்று கூறினார்.”

”தலைமை நீதிபதி என்ன சொன்னார்?”

”உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, ‘ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை கமிஷன்கள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ள வேளையில், புதிதாக அவரை இதிலும் நியமிக்க வேண்டிய அவசியம் என்ன? விசாரணை கமிஷன்களில் அவர் இருப்பதுடன், மாநில நுகர்வோர் தீர்ப்பாணையத் தலைவராகவும், குண்டர் தடுப்புச்சட்ட ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் அவர் இருக்கிறார். இப்போது இந்தப் பிரச்னையிலும் அவர் தலைமையில் அரசாங்கம் குழு அமைத்துள்ளது. நீதிபதி ரகுபதி என்ன அற்புத சக்தி படைத்த மனிதரா?’ (ஹி இஸ் சூப்பர் ஹீயூமன் பியிங்?) என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் சோமயாஜி சொன்னதுதான் உச்சகட்ட வேடிக்கை… ‘நீதிபதி ரகுபதி இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன்வந்ததால், நாங்கள் அவரிடம் இதை ஒப்படைத்தோம்’ என்றார்.”

”சூப்பர்!”

”இதைக் கேட்ட தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ‘அப்படியானால், இதுவரை அவரிடம் உள்ள பொறுப்புகளை அவர் எப்படிச் செய்துள்ளார் என்பதை இந்த நீதிமன்றம் அறிய விரும்புகிறது. எனவே, அவர் உறுப்பினராக உள்ள விசாரணை கமிஷன் மற்றும் மாநில நுகர்வோர் தீர்ப்பாணையத்தில் அவர்முன் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை, அவற்றின் நிலவரம் என்ன என்பது பற்றி விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்’ என்று உத்தரவிட்டார்.”

”என்ன சொல்லப்போகிறதாம் தமிழக அரசு?”

”தலைமை நீதிபதி கவுல் இங்கு பொறுப்புக்கு வந்து ஒரு சில நாட்களே ஆகிறது. அவர் என்ன மாதிரி முடிவுகள் எடுப்பார் என்பதும் தெரியவில்லை என்கிறார்கள் மேலிடத்தில்!”

”மவுலிவாக்கம் மர்மம் இதன் மூலமாகவாவது வெளிச்சத்துக்கு வருகிறதா என்று பார்ப்போம்!” என்று சொன்ன கழுகார் அடுத்து சொன்னது கோட்டை செய்தியை.

”செய்தித் துறை கூடுதல் இயக்குநராக பதவி வகிக்கும் எழில் என்கிற எழிலழகனின் வளர்ச்சியைப் பார்த்து வாயடைத்துப் போயிருக்கிறார்கள் அதிகாரிகள். ரிட்டயர் ஆகி வீட்டுக்குப் போக வேண்டிய எழில் இப்போது மீள் பணியமர்த்தம் செய்யப்பட்டிருக்கிறார். அதற்காக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்து பெற்ற படம் நாளிதழ்கள் அனைத்திலும் மிஸ் ஆகாமல் வந்துள்ளது. 1991-1996 அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செங்கோட்டையன் இருந்தபோது அவரிடம் பி.ஏ-வாக இருந்தவர். போக்குவரத்துத் துறையில் நடந்த ஊழல்கள் தொடர்பாக செங்கோட்டையன் மீது அடுத்து வந்த 1996-2001 தி.மு.க ஆட்சியில் வழக்குகள் போடப்பட்டன. இந்த வழக்கில் இருந்து தன்னைக் காத்துக்​கொள்ள அப்ரூவராக மாறினார். 2001-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அ.தி.மு.க பாசம் காட்டி அங்கே ஒட்டினார். அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை நீக்கி பி.ஆர்.ஓ-வாக பதவி உயர்வைப் பெற்றார். 2006-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், எழிலை கன்னியாகுமரிக்குத் தூக்கியடித்தார்கள். ஆனாலும், தி.மு.க-வுக்கு வேண்டப்பட்ட செய்தித் துறை அதிகாரி ஒருவர் மூலம் சென்னைக்கு வந்தார். அரசின் தமிழரசு பத்திரிகை அலுவலகத்தில் பணியில் அமர்ந்தார். அப்போது, ‘அமைதி தவழ்ந்திடும் தமிழகம், செம்மொழி மாநாடு’ என்ற தலைப்புகளில் கருணாநிதியையும் தி.மு.க ஆட்சியையும் பாராட்டி புத்தகங்களைப் போட்டவர். அதோடு உதவி இயக்குநராகவும், பிறகு துணை இயக்குநராகவும் பதவி உயர்வு பெற்றார் எழில். 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், பழையபடியே அம்மா பாசம் காட்ட ஆரம்பித்தார்’ என்று அவரைப் பற்றிய பழங்கதைகளைப் படிக்கிறார்கள். இரண்டு அரசாங்கங்களின் செல்லப்பிள்ளைதான் அவர் என்றும் சொல்கிறார்கள். முதல்வர் அலுவலகத்தில் உள்ள அதிகாரி ஒருவர் இவரைப் போற்றிப் பாதுகாப்பதாகச் சொல்கிறார்கள். இவருக்கு மீள் பணியமர்த்தம் கொடுத்ததன் மூலமாக, பலரும் தங்களது பணி மூப்புகள் பாதிக்கப்படுவதாக புலம்புகிறார்கள்” என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்.

Advertisements
%d bloggers like this: