Daily Archives: ஓகஸ்ட் 8th, 2014

நெய் நல்லதா? வெண்ணெய் கெட்டதா?

நாம் எல்லோரும் கொலஸ்ட்ரால் என்ற கொடிய அரக்கனை பார்த்து பயப்படுகிறோம். இதில் இருந்து தப்ப நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை தவிர்க்கிறோம். இவைகளைப் பற்றி தவறான கருத்துக்கள் உருவாகி விட்டதால் இவற்றை நாம் தவிர்த்து வருகிறோம் என்பதே உண்மை. வெண்ணெய், நெய் இரண்டும் பால் பொருட்கள். பிறந்தவுடன் குழந்தைகளும், விலங்குகளும் தாய்ப்பாலைத்தான் முதலில் அருந்துகின்றன. அவர்களுக்காகவே படைக்கப்பட்ட உணவு பால். குழந்தைகள் நன்றாக வளர்வதற்கான அனைத்து சத்துக்களும் பாலில் உள்ளன.

பாலின் வகைகள் : பகல் முழுவதும் சுரந்து இரவில் கறப்பது பகல் பால். இரவு முழுவதும் சுரந்து பகலில் கறப்பது இரவுப்பால். பகல் பால் அருந்துவதால் கபரோகம், உடல் சூடு, இளைப்பு நீங்கும். இரவுப்பால் அருந்துவதால் கண் வியாதிகள் நீங்கும். பத்தியத்திற்கு உதவும். மாடுகளுக்கு கொடுக்கப்படும் உணவின் தன்மையை பொறுத்து பாலின் குணங்கள் மாறுபடும்.

Continue reading →

பேசிக் (BASIC) மொழிக்கு வயது 50

ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் பயன்படுத்த வேண்டும் என்றால், ஓரளவிற்கு, சிறிய அளவிலாவது புரோகிராமிங் மொழி குறித்துத் தெரிந்திருக்க வேண்டும். அப்போது அனைவரும் அறிந்து பயன்படுத்தக் கூடிய புரோகிராமிங் மொழியாக "பேசிக்’ பழக்கத்தில் இருந்தது. சென்ற மே 1 அன்று இம்மொழி பயன்பாட்டிற்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இது குறித்து இங்கு காணலாம்.
பேசிக் மொழியை உருவாக்கியவர்கள் John G. Kemeny மற்றும் Thomas E. Kurtz ஆகிய இரு பேராசிரியர்களே. 1964 ஆம் ஆண்டில் மே மாதம் முதல் நாள், இதனை இயக்கிக் காட்டினார்கள். கணிதவியல் ஆசிரியர்களான இந்த இருவரும், புரோகிராமிங் கற்றுக் கொள்வது கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு அடிப்படையானது என உறுதியாக எடுத்துரைத்து, அதற்கென குறியீடுகளை எளிய முறையில் அமைக்க இதனை உருவாக்கினர். இதன் முழு பெயர் "Beginner’s AllPurpose Symbolic Instruction Code”.

Continue reading →

இன்று வரலட்சுமி நோன்பு!

Temple images

லட்சுமிதேவியை குறித்து வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். தமிழகத்தில் தற்போது பல நகரங்களிலும் வரலட்சுமி விரதம் விசேஷமாக உள்ளது. ஆடி மாதம் வளர்பிறை கடைசி வெள்ளிக்கிழமையன்று இந்த விரதத்தை பெண்கள் மேற்கொள்வர். தாலி பாக்கியம் நிலைக்க இந்த விரதம் இருப்பதுண்டு. தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் லட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். லோகமாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதெனக் கருதி நடந்தாள். இதுபோலவே பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்க சுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.
மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் அவள்.லட்சுமிதேவி பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.வரலட்சுமி விரதம் இருப்பதால் பல பலன்கள் ஏற்படும். சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள். சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதியில் காலில் விழுந்தாள். வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். அவள் பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றாள்.புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும். குறிப்பாக கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும். மாமனார் மற்றும் மாமியாருக்கு பணிவிடை செய்யும் மருமகள்களுக்கும், வரலட்சுமி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண் தனது கணவன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களை கடவுளின் வடிவமாக கருதி அவர்களுக்கு பணிவிடை செய்ததால் வரலட்சுமி விரதம் இருந்ததின் பலன் முழுவதும் கிடைத்து கணவனுடன் நீண்டநாள் வாழ்ந்தாள்.
விரத முறை: இந்த விரதம் இருக்க வீடு அல்லது கோயில்களில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் முகத்தை வைக்க வேண்டும். வசதி மிக்கவர்கள் வெள்ளி சிலை வைக்கலாம். சிலையை தாழம்பூவால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும். சிலை முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பொன், பழங்கள் ஆகியவற்றை வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிறைத்து, சந்தனம் குங்குமம் வைத்து, மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும்.பின் ஐந்து வகையான ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும். கும்ப பூஜை முடிந்தபிறகு கணேச பூஜை செய்ய வேண்டும்.
அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. பூஜையின் போதுஅஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம். வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம் கொடுக்க வேண்டும்.நைவேத்யமாக கொழுக்கட்டை படைக்கலாம். பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை மறுநாள் நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும்.இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
விரத பலன்கள்:
1. உயர்ந்த ஞானம் கிடைக்கும்.
2. மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
3. மங்கல வாழ்வு அமையும்.
4. மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும்.
5. கல்யாணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
அம்மனை பூஜை செய்ய பூஜாவிதானம் புத்தகங்களில் கூறப்பட்டுள்ள வழியையே பின்பற்றவும். அப்படிப் பின்பற்ற இயலாதவர்களுக்குச் சில எளிய பூஜா மந்திரங்கள் இதோ :
திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர் தொழ
வருமகளே உலகெல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்
ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம்பெரிது
தருமகளே தமியேன் தலைமீது நின்தாளை வையே
(வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)
மகாலட்சுமி காயத்ரீ :
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்னீ ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீ : ப்ரசோதயாத்
அர்ச்சனை நாமாக்கள் :
ஓம் லக்ஷ்மிதேவியே நமோ நம :
ஓம் தாமரைப் பூவில் அமர்ந்தவளே நமோ நம:
ஓம் பாற்கடல் உதித்தோய் நமோ நம :
ஓம் செந்தூரத் திலகம் அணிந்தாய் நமோ நம :
ஓம் நாரணன் நெஞ்சில் நிறைந்தவளே நமோ நம :
ஓம் கருணையில் சிறந்தவளே நமோ நம :
ஓம் அலை கடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே நமோ நம :
ஓம் அமரர்கள் துதிபாடும் அமுதமும் நீயே நமோ நம :
ஓம் அன்பர்களைக் காத்திடும் அலைமகளே நமோ நம :
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் விஜயலக்ஷ்மியே நமோ நம :
ஓம் ராஜ்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் ஜயலக்ஷ்மியே நமோ நம :
ஓம் தான்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் தனலக்ஷ்மியே நமோ நம :
ஓம் தைர்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் மஹாலக்ஷ்மியே நமோ நம :
ஓம் உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே நமோ நம :

தர்பூசணி

கோடை வந்துவிட்டாலே உடலுக்கு குளிர்ச்சிதரும் தர்பூசணியைத் தேடிச் செல்கிறோம். தாகத்தைப் போக்கி, சோர்ந்துபோன உடலுக்கு ஆற்றலைக் கொடுத்து சுறுசுறுப்பாக்குகிறது தர்பூசணி.

Continue reading →

உடலில் வைட்டமின் – டி அதிகமானால் குடல் புற்றுநோய் பாதிப்பு குறைவே

‘குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களின் ரத்தத்தில், வைட்டமின் – டி சத்து அதிகமாக இருந்தால், நோய் பாதிப்பின் வேகம் குறைவாக இருக்கும்’ என, ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
மனித உடலுக்கு, சூரியஒளி மூலமும், உணவுகள் மூலமும் கிடைக்கும் சத்து, வைட்டமின் – டி. குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு ரத்தத்தில் உள்ள வைட்டமின் – டி அளவை இணைத்து, ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

Continue reading →

ஸ்ரீகிருஷ்ண தரிசனம்!

தேவகி மைந்தனாம் கிருஷ்ணன், ஏழைகளான பக்தர்களையே சர்வசொத்தாக நினைப்பவன் எனப் போற்றுகிறது ஸ்ரீமத் பாகவதம். அவன் அடியவர்களுக்கோ அவன்தான் சொத்து!

அதனால்தான் ஒட்டுமொத்த ஆயர்பாடியும் அவனை அத்தனை சிறப்புகளுடன் சீராட்டி வளர்த்தது. அதற்குப் பரிசாக, பகவான் தனது பால லீலைகள் அத்தனையையும் அவர்களுக்கே சொந்தமாக்கினான்.

மண்ணை உண்ட வாயில் மண்டலத்தைக் காட்டியது, வெண் ணெய் திருடி உண்டது, மருத மரங்களாகி நின்ற தேவர்களுக்கு விமோசனம் தந்தது, பூதகி போன்ற அசுர சக்திகளை வதைத்தது, காளிங்கமர்த்தனம், கோவர்த்தனகிரி அற்புதம்… என கண்ணன் செய்த லீலைகள் ஒவ்வொன்றையும் நேரில் தரிசித்து அனுபவித்த கோகுலவாசிகள் கொடுத்துவைத்தவர்கள்தான்!

அப்படியான பாக்கியம் நமக்கும் வாய்க்குமா?

நிச்சயம் வாய்க்கும்!

அதற்காகத்தானே இந்தப் பூவுலகில் அர்ச்சாவதரமாய் பல்வேறு திருத்தலங்களிலும் திருக்கோயில் கொண்டிருக்கிறான் அவன்!

அப்படி, தான் குடிகொண்ட கோயில்களில் அவன் காட்டும் அழகு திருக்கோலங்களும் அந்தத் தலங்கள் குறித்த தகவல்களும் இங்கே உங்களுக்காக!

படத்தை பெரிதாக காண க்ளிக் செய்யவும்

* அன்னையின் மடியில்…

சென்னை-காஞ்சிபுரம், காவேரிபாக்கத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் (வேலூர் மார்க்கத்தில்) அமைந்துள்ளது பூண்டி. இங்கு ஸ்ரீவேணுகோபாலஸ்வாமி திருக்கோயிலில் எழில்மிகு கிருஷ் ணனைத் தரிசிக்கலாம். ஸ்ரீகிருஷ்ணன் அன்னை யசோதையிடம் பால் குடிக்கும் அமைப்பில் – வெள்ளியினால் ஆன அந்த விக்கிரகமும் தரிசனமும் வேறெங்கும் காண்பதற்கு அரிதானது! இப்படி, பால் குடிக்கும் பாலனை தொழுவோர்க்கு புத்ர பாக்கியம் நிச்சயம். மேலும், பெண்களுக்கு வரக்கூடிய மார்பக நோய்களையும் தீர்த்துவைக்கும் மாயக்கண்ணன், இவன் என்கிறார்கள்.

* நான்கு கரங்களுடன் ஸ்ரீவேணுகோபாலன்!

செங்கல்பட்டில் இருந்து மெய்யூர் செல்லும் வழியில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது களியபேட்டை. இங்கே ஸ்ரீலஷ்மி நாராயண பெருமாள் திருக்கோயிலில் அருளும் ஸ்ரீவேணுகோபால ஸ்வாமியின் திருவடிவம் ஒப்பற்றது. ருக்மினி, சத்யபாமா சமேதராக நான்கு திருக்கரங்களுடன் சதுர்புஜனாக இவர் அருள்வது விசேஷம்!

மேலிரு கரங்களில் சங்கு- சக்கரம்; கீழிரு கரங்களில் புல்லாங் குழல் கொண்டு சேவை சாதிக்கிறார் இந்த பெருமாள். இந்தத் திருவடிவம் விஜயநகர ஆட்சிக்காலத்திய வேணுகோபால வடிவங் களில் குறிப்பிடத்தக்கது எனலாம். நின்ற கோலத்தில் அருளும் தெய்வ வடிவங்களில் பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று வளைவுகளை (த்விபங்கம் அல்லது த்ரிபங்கம்) தரிசிக்கலாம். ஆனால், இந்த மனங்கவரும் கோபாலன் ஐந்து வளைவுகளுடன் (பஞ்சபங்கம்) திகழ்கிறார். புனிதமும் புராதனமும் மிக்க இந்த வேணுகோபாலன் இத்திருக்கோயிலில் பிரார்த்தனா மூர்த்தியாய்- புத்திர பாக்கியம் அளிக்கும் புனிதனாய் அருள்கிறார்.

* பெரியகோயில் ஞானக்குழந்தை!

காஞ்சியம்பதி பெருமாள் கோயில், பெரிய கோயில் என்றெல்லாம் போற்றப்படுவதை அனைவரும் அறிவர். வந்தவாசிக்கு அருகில் ‘பெரியகோயில்’ என்றே ஒரு திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீபெருந்தேவி நாயகனாய் ஸ்ரீகல்யாண வரதராஜர் அருள் பாலிக்கும் சந்நிதானத்தில், ஓர் சந்தான கோபாலனும் அருட் காட்சி தருகிறார். வலது கால் விரலை வாயில் வைக்க முயற்சி செய்யும் இந்த பாலகிருஷ்ணனைத் தரிசித்து வழிபட்டால் மக்கட் செல்வமும் மகிழ்ச்சியான வாழ்வும் அமையும் என்பதில் ஐயமேது?!

* தேரெழுந்தூர் அற்புதம்!

மாயவரத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது தேரழுந்தூர். கம்பநாட்டாழ்வாரின் அவதாரத் தலம். இங்கு கோயில் கொண்டிருக்கும் ஆமருவியப்பன் வரப்ரசாதியானவர். திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்ற பரந்தாமன். ஆநிரை மேய்க்கும் இந்த ஆயவனை ‘கோசகன்’ என்றும் கூறுவர். இங்கு வந்து வழிபட்டால், வாழ்வில் வளங்கள் யாவும் பெருகும்.

* மன்னார்குடி செண்டு அலங்காரர்!

ராஜ மன்னார்குடி ராஜகோபாலனை அறியாத அன்பர்கள் இருக்க மாட்டார்கள். நாரதரின் அருள்வாக்குப்படி கோப்பிரளயர், கோபிலர் என்ற முனிவர்களுக்கு, தமது பால லீலைகளை 30 திருக் கோலங்களாக பகவான் காட்டியருளினார். அதில் 30-வது திருக்கோலத்தில் மயங்கிய முனிபுங்கவர்கள், இதே நிலையில் இந்த தலத்தில் காட்சி தந்து கொண்டிருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். அதன்படியே இந்தத் தலத்தில் ஆநிரை மேய்ப்பவனாக அருள்கிறார் பகவான்.

ருக்மினி, சத்யபாமாவுடன் – இரண்டு மலர்களுக்கு இடையே ஒரு வண்டு போல் எழுந்தருளியுள்ளார். வலது திருக்கையில் மூன்று வளைவுகளை கொண்ட சாட்டைக் கயிற்றுடன் கூடிய பொற்கோல் ஏந்தியபடி, இடது திருக்கரத்தை சத்யபாமாவின் தோளில் வைத்து நின்றகோலத்தில் அருள்கிறார். சாட்டையை ‘செண்டு’ என்றும் கூறுவர். அதனால் இவருக்கு செண்டலங்காரர் என்ற திருநாமமும் உண்டு. ஸ்ரீமணவாள மாமுனிகள் இவரை துவராபதி மன்னன் என்றே போற்றுகிறார். ஸ்ரீராஜகோபாலனுடன் சந்நிதியில் காட்சியளிக்கும் ஸ்ரீசந்தான கிருஷ்ணனை, அடியார்கள் தம் மடியில் எடுத்து வைத்துக்கொண்டு வணங்கி வழிபட்டால், பிள்ளைப்பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை.

* பாசுரங்களை காட்டி அருளிய பரந்தாமன்!

நாதமுனிகளின் அவதாரத் தலமான காட்டுமன்னார்குடி, சிதம்பரத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தத் தலத்தின் நாயகன் ஸ்ரீகாட்டுமன்னார். பிரபந்தங்களை நாதமுனிகள் மூலம் காட்டிக் கொடுத்ததால் இப்பெயர். அதனால் தலமும் காட்டுமன்னார்குடி ஆயிற்று. இந்த தலத்தில் மூலவர் ஸ்ரீவீரநாராயணபெருமாளாக சதுர்புஜங்களுடன் காட்சியளிக்கிறார். உத்ஸ்வமூர்த்தி ருக்மினி, சத்யபாமாவுடன் ஆநிரை மேய்ப்பவனாக அருள்கிறார். இவர், தோற்றத்தில் ராஜமன்னார்குடி ஸ்ரீராஜகோபாலனைப் போன்றே திகழ்கிறார். பாசுரங்களைக் காட்டி அருளிய இந்த பரந்தாமனைப் பணிய நம் பாவங்கள் யாவும் பொசுங்கும்.

பசுவை பாதுகாப்போம்!-ஆக., 9 – ஆடித்தபசு

பசுக்கள் பாதுகாக்கப்படும் நாட்டில், செல்வச்செழிப்பு மிகுந்திருக்கும். அதனால் தான், தானங்களில் உயர்ந்த தானமாக, பசு தானத்தைக் குறிப்பிடுகின்றனர்.
ஒரு குழந்தை பிறந்ததும் தாயிடம் பால் குடிக்கிறது. தாய்ப்பால் வற்றிப்போனால், அதன் உயிரைக் காப்பது பசுவின் பால். மனித வாழ்வின் துவக்கத்தில் மட்டுமல்ல, அது முடிந்த பின்னும் பால் ஊற்றுகின்றனர். இப்படி வாழ்க்கை முழுவதும் நம்மோடு வருவது பசு.
இதனால் தான், சிவனை, பசுபதி என்றும், அம்பாளை கோமதி என்றும் சொல்கின்றனர். ‘கோ’ என்றால், பசு.
அம்பாள் கோமதி, பூலோகம் வந்து, உலக நன்மை கருதி தபஸ் (தவம்) இருந்தாள். ‘தபஸ்’ என்பதே பின்னாளில், தபசு ஆனது. இந்த தபசுக் காட்சி, ஆடிமாதம் பவுர்ணமியை ஒட்டி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவிலிலும், அம்பாசமுத்திரம் அருகிலுள்ள கோடரங்குளம் கிராமத்திலுள்ள தெற்கு சங்கரன்கோவிலிலும் விமர்சையாக நடைபெறுகிறது.
இப்பகுதியில் வசித்த, ஒரு சிவபக்தர் உஞ்சவிருத்தி (தானம்) பெற்று வாழ்ந்து வந்தார். தினமும் காகங்களுக்கு சாதம் வைத்தபின், சாப்பிடுவது அவர் வழக்கம். அவ்வாறு சாதம் வைக்கும் போது, ஒரு காகம் மட்டும், சாதத்தை எடுத்து, குறிப்பிட்ட இடத்தில் வைத்து விட்டு, பறந்து செல்வதை பார்த்தார். தினமும் அந்தக் காகம் அவ்வாறு செய்வதை கவனித்த சிவபக்தர், அங்கு சென்று பார்த்தார். அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் இருப்பது தெரிய வந்தது. அதற்கு பூஜை செய்து வழிபட்ட சிவபக்தர் அங்கேயே தங்கி விட்டார். இந்த தகவல் ஊர் மக்களுக்கு தெரிய வரவே, அவரைச் சென்று பார்த்தனர். அப்போது, சிவலிங்கத்தில் ஐக்கியமாகி விட்டார் பக்தர். அதனால், அதற்கு, ‘சங்கரலிங்கம்’ என, பெயர் சூட்டினர். பின், அவ்விடத்தில் கோவில் எழுப்பினர்.
இந்த இடத்தில் தான், அன்னை உமையவள், தவமிருந்தாள். அவள் பிரகாசமான முகமுடையவள். எனவே, அன்னையை, கோமதி என்றனர். அவளை தரிசிக்க தேவர்கள், பசுக்களாக மாறி வந்தனர். அந்த பசுக்களை காத்தமையால், ஆவுடையம்மாள் என்றும் அழைக்கப்படுகிறாள்.
இந்த லிங்கத்தின் முன்புறம் ராகு, இடது புறம் கேது என, இரு நாகங்கள் உள்ளன; நாகதோஷம் உள்ளவர்களுக்கு இது பரிகாரத்தலம்.
தாமிரபரணி நதிக்கரையில் இயற்கை எழில் சூழ இத்தலம் அமைந்துள்ளது. இந்த புண்ணிய நதியில் நீராடினால், பாவங்கள் தொலையும். அன்னையின் தபசுக் காட்சி நதிக்கரையில் நடைபெறுகிறது. இந்த நல்ல நாளில், பசுக்களை பாதுகாக்கும் வகையில் உதவிகளை வழங்கினால், குடும்பம் வாழையடி வாழையாக செல்வச் செழிப்புடன் திகழும்; தீர்க்காயுள், தீர்க்கசுமங்கலி பாக்கியமும் கிடைக்கும்.