சென்னை – பெங்களூரு தொழிற்பாதை… தொழில் வளர்ச்சியில் அடுத்த கட்டம்!

இண்டஸ்ட்ரியல் காரிடர். புதிய அரசு முக்கியத்துவம் அளித்து ஊக்குவிக்கும் திட்டங்களில் ஒன்று. இந்திய அளவில் நான்கு வழிகளில் இண்டஸ்ட்ரியல் காரிடர் அமைக்கவும்  அவற்றை  ஒன்றோடொன்று இணைக்கவும் வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது மத்திய அரசாங்கம்.  முக்கியமாக, டெல்லி – மும்பை, விசாகப்பட்டினம் – சென்னை, சென்னை – பெங்களூரு, அமிர்தசரஸ்/டெல்லி – கொல்கொத்தா என நான்கு வழிகளில் இது அமைய இருக்கிறது.
இதில் முதலாவதாக டெல்லி – மும்பை காரிடர் வேலைகள் நடந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக வேகமான திட்டமிடலில் இருக்கிறது சென்னை  – பெங்களூரு  இண்டஸ்ட்ரியல் காரிடர்.
ஜப்பான் நிறுவனத்துடன்..!

இதுநாள் வரை அறிவிப்பு என்கிற நிலையிலிருந்த சென்னை – பெங்களூரு காரிடருக்கான முதற்கட்ட ஆய்வு வேலைகள் தற்போது நடந்து வருகிறது. ஜப்பான் அரசுடன் (Japan International Cooperation Agency, சுருக்கமாக ஜெய்கா (JICA) இணைந்து செயல்படுத்தப்படும் இந்தத் திட்டதின் இறுதி விவரங்கள் இன்னும் முழுமையாக வெளிவராத நிலையில், இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன, தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிற விவரங்களைச் சேகரிக்க இறங்கினோம்.

தற்போது முதல்கட்டமாக இண்டஸ்ட்ரியல் காரிடர் அமைப்பதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் நிலம், நிலத்தடி நீர், மின்சாரத் தேவைகள், போக்குவத்து இணைப்பு, துறைமுக, விமான இணைப்பு மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த விவரங்களை ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும் பணியில் ஜெய்கா ஆய்வு கமிட்டி சார்பாக நிப்பான் கொய் (Nippon Koei) மற்றும் பிரைஸ்வாட்டர் ஹவுஸ்கூப்பர்ஸ் என்கிற இரண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்த நிறுவனங்கள் தங்களது ஆய்வு அறிக்கையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசிடம் சமர்பிக்க உள்ளனர். அதற்குப் பிறகுதான் திட்டத்தின் முழுமையான மதிப்பீடு, அங்கு அமைய உள்ள தொழில்கள், அரசு அளிக்க உள்ள சலுகைகள் போன்ற விவரங்கள் தெரியவரும். இதற்கிடையில் இந்த ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிப்பான் கொய் நிறுவனத்தின் அதிகாரிகளிடத்தில் தொடர்புகொண்டோம். பெயர் குறிப்பிடாமல் பேசிய அவர்கள் இந்தத் திட்டத்தின் லேட்டஸ்ட் வளர்ச்சி பற்றி எடுத்துச் சொன்னார்கள்.

‘‘இப்போதைக்கு எங்களது பணி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள சாதக, பாதகங்கள், காரிடர் பகுதியில் என்ன வகையான தொழில் களைக் கொண்டு வரலாம், அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் என்ன என்பதை கண்டறிவதுதான். குறிப்பாக, பொன்னேரி ஒரு இண்டஸ்ட்ரியல் ஹப்பாக (Hub) அமைய உள்ளதால், அங்கு உள்கட்டமைப்பை மேம்படுத்த என்ன செய்யலாம் என ஆய்வு செய்வதும் எங்கள் வேலையாக இருக்கிறது.

மேலும், எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்கள், தொழிலகங்களுக்குத் தேவையான மின் உற்பத்தி இவற்றைக் கணக்கில் கொண்டு இங்கு தொழிற் சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப் படும். இப்போதைக்குச் சுமார் 25 தொழில்கள் வரை அடையாளம் கண்ட றியப்பட்டுள்ளன’’ என்றார்கள்.

பொன்னேரியில் ஸ்மார்ட் சிட்டி!

இந்தத் திட்டத்தையொட்டி பொன்னேரிக்கு அருகே ஒரு ஸ்மார்ட் சிட்டி உருவாக இருக்கிறது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் பட்ஜெட் உரையில் வெளியானது. அனைத்து வசதிகளுடன் அமையவிருக்கும் இந்த ஸ்மார்ட் சிட்டி பொன்னேரியில் எந்தப் பகுதியில் வரவிருக்கிறது என்பதை அறிய அங்கு  சென்றோம்.

‘‘பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளதைத் தாண்டி வேறெந்த விவரங்களும் எங்களுக்குத் தெரியாது. எந்தப் பகுதியில் நிலத்தை  கையகப்படுத்த இருக்கிறார்கள் என்பதுகூடத் தெரியாது. பேரூராட்சி என்கிற வகையில் எந்த உதவிகளைக் கேட்டும் எங்களுக்கு அரசு அறிவிப்புகள் வரவில்லை” என்றார் பொன்னேரி பேரூராட்சி தலைவர் தனலெட்சுமி மோகனசுந்தரம்.

பொன்னேரி நகரத்துக்கு வெளியே ஏலியம்பேடு, கனியம்பாக்கம், செங்கனிமேடு போன்ற பகுதிகளில் ஏதாவது ஒன்றை மையமாக வைத்து இந்தத் திட்டம் அமையலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மூலம் விவசாயம் செழிப்பாக இருக்கிறது. இதில் ஏலியம்பேடு பகுதியில் பல தனியார் நிறுவனங்கள் பல ஏக்கர் நிலங்களை கடந்த காலங்களிலேயே வாங்கித் தரிசாகப் போட்டு வைத்திருக்கிறார்களாம். கனியம்பாக்கம், செங்கனிமேடு ஆகிய ஊர்களில் தரிசு நிலங்கள் அதிகம் என்பதால் இங்கு ஸ்மார்ட் சிட்டி வரலாம் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

 கிடுகிடு விலையேற்றம்!

‘‘ஸ்மார்ட் சிட்டி அறிவிப்புக்கு பிறகு ரியல் எஸ்டேட் விலைகளும் அபரிமிதமாக உயர்ந்துள்ளது’’ என்றார் பொன்னேரியை சேர்ந்த வழக்கறிஞர் பாஸ்கரன். ஸ்மார்ட் சிட்டி அறிவிப்புக்குபின் பொன்னேரியில் ரியல் எஸ்டேட் விலை சுமார் 15 – 25% உயர்ந்திருக்கிறது. முறையான அறிவிப்பு வெளிவந்துவிட்டால், விலை இரண்டு மடங்காக உயர்வதற்கும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

டிட்கோவின் உதவி!

தற்போது ஆய்வில் ஈடுபட்டுள்ள நிப்பான் கொய் (Nippon Koei) மற்றும் பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனங்களுக்குத் தேவையான உதவியை தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனமான டிட்கோ செய்து வருகிறது. இது தொடர்பாக டிட்கோவுடன்  தொடர்பு கொண்டோம்.

‘‘இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது ஆய்வுகளைத் தினசரி எங்களுக்கு வழங்கி வருகிறது. இவற்றைப் பற்றி தமிழக அரசு அதிகாரிகளுடன் பேசி அதன் சாதக, பாதகங்களை உடனுக்குடன் அந்த நிறுவனத்துக்கு வழங்குகிறோம். இதன் அடிப்படையில் அவர்களது அறிக்கை அமையும். திட்ட உத்தேச முதலீடு, எவ்வளவு முதலீடுகள் இந்த வழியில் ஈர்க்கப்படும், வேலைவாய்ப்பு உருவாக்கம் எப்படி இருக்கும் என்பது அந்த அறிக்கைக்கு பிறகுதான் ஓரளவுக்கு சரியாக சொல்ல முடியும்’’ என்றது டிட்கோ வட்டாரம்.

என்ன நன்மை?

சென்னை – பெங்களூரு இண்டஸ்ட்ரியல் காரிடர் அமைந்தால், தொழில்துறை அடையும் நன்மைகள் என்ன என சிஐஐ தமிழ்நாடு முன்னாள் சேர்மன் என்.கே.ரங்கநாத்திடம் கேட்டோம்.
‘‘இதன் மூலம் தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். இந்த காரிடர் களால் உள்கட்டமைப்பு மேம்படும் என்பதால் வெளிநாட்டு முதலீடுகள் தேடி வரும். குறிப்பாக, அந்நிய முதலீடு களை ஈர்ப்பதில் அரசாங்கம் அதிக அக்கறை காட்டிவரும் இந்த வேளையில் இண்டஸ்ட்ரியல் காரிடர் திட்டங்கள் நல்ல பலனை அளிக்கும். தவிர, இந்த வழிகளில் புதிய நகரங்கள் அமையவும் உள்ளதால், மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகும்.

ஆட்டோமொபைல் துறையில் இன்று சென்னை உலக அளவில் மிகப் பெரிய ஹப்பாக வளர்ந்துள்ளது. இது அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகரும். முக்கியமாக, பாதுகாப்புத் துறையில் 49% அந்நிய முதலீடு அனுமதிக்கப் பட்டுள்ள  இந்தவேளையில், இதைப் பயன்படுத்திப் பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில்கள் வளரவும், வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து தொழில் தொடங்கவும் வாய்ப்புகள் ஏற்படும். தவிர, உற்பத்தியல்லாத 40% தொழில்கள் ஊக்குவிக்கப்படும் என்பதால் ஐடி மற்றும் சேவைத் துறை சார்ந்த தொழில்கள் வளரவும் வாய்ப்புகள் உருவாகும்’’ என்றார்.

பொன்னேரியா, ஓசூரா?

சென்னை – பெங்களூரு இ்ண்டஸ்ட்ரியல் காரிடர் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என மூன்று மாநிலங்கள் வழியே அமைய உள்ளது. மாநிலத்துக்கு ஒரு ஹப் என மூன்று ஹப் அமைக்கத் திட்டமிடப்பட்டு இருக்கிறது. கர்நாடக அரசு பெங்களூரு நகரத்துக்கு வெளியே தும்கூர் பகுதியை ஹப்பாக அறிவித்தது. தமிழ்நாட்டிலிருந்து ஓசூரை ஹப்பாக அறிவிக்கலாம் என்கிற எதிர் பார்ப்பு இருந்தது. ஆனால், ஆந்திரா விலிருந்து கிருஷ்ணபட்டிணத்தை ஹப்பாக அறிவித்திருப்பதால்,   தற்போது பொன்னேரியானது  தொழில் மண்டல மாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு கூடுதல் பயன் கிடைக்கும்.

புதிய வழியில் எக்ஸ்பிரஸ் வே! 

புதிய தொழில் மண்டலங்களை இணைக்கும் விதமாக, புதிய சாலை வழித்தடம் (எக்ஸ்பிரஸ் வே) அமையவும் உள்ளது. சென்னை – பெங்களூரு புதிய வழித்தடமாக இது இருக்கும். தற்போதைய வழியான வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி, ஓசூர் மார்க்கமாக இல்லாமல் புதிய வழித்தடத்தில் இந்த எக்ஸ்பிரஸ் வே அமைய உள்ளது. சென்னை& பெங்களூருக்குமான தற்போதைய தேசிய நெடுஞ்சாலையின் தூரம் 350 கிமீ எனில், புதிதாக அமைய உள்ள எக்ஸ்பிரஸ் வழி 260 கிலோ மீட்டராக இருக்கும். ீபெரும் புதூரிலிருந்து ராணிபேட்டை, ஆந்திராவின் சித்தூர், பாலமனேரு வழியாக பெங்களூரு புறநகரான ஹோஸ்கோட்டில் இணையும் விதமாக இந்தச் சாலை அமைய உள்ளது. இதற்காக 2,300 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்த திட்டம். இந்தச் சாலை மார்க்கத்தில் தொழில் மண்டலங்கள் அமையும் என்பதுதான் எதிர்பார்ப்பு.

ஆனால், ஆந்திரா கிருஷ்ணபட்டிணத்தை  இண்டஸ்ட்ரியல் ஹப்பாக அறிவித்தபின், இந்த எக்ஸ்பிரஸ் வழி தவிர, எண்ணூர் – காட்டுப்பள்ளி – கிருஷ்ணபட்டிணம் துறைமுகங்களை இணைக்கும் சரக்கு போக்குவரத்துச் சாலைகள் கூடுதலாக அமைக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது.

எந்தத் தொழில்களுக்கு முன்னுரிமை?

இந்த காரிடர் அமையவிருக்கும் பாதையில் உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை தருவதாக அமையும் என அறிவிக்கபட்டுள்ளது. சுமார் 60% வரை உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு இடம் தரப்படும். ஆட்டோமொபைல் துறையில் சென்னை முன்னணியில் இருப்பதால் இதைச் சார்ந்த தொழில்கள் இன்னும் அதிகரிக்கலாம். சேவை மற்றும் பிற தொழிலகங்களுக்கு 40% இடம் ஒதுக்கப்படும். சுற்றுச்சூழல் சார்ந்த அனுமதிகள் உடனடியாகக் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது.

இந்தத் திட்டத்தின் முழுவிவரங்கள் கிடைக்க அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை காத்திருக்க வேண்டும் என்றாலும், இதன் மூலம் நமது தொழில் துறை அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி வேகமாகச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

நன்றி- நாணயம் விகடன்

%d bloggers like this: