மிஸ்டர் கழுகு: கருணாநிதியை சீண்டும் ஸ்டாலின் நண்பர்

தி.மு.க-வில் திடீர் சர்ச்சையைக் கிளப்பிய பெ.வீ.கல்யாணசுந்தரம் விவகாரம் பற்றிய முழு விவரங்களுடன் கழுகார் நம்முன் ஆஜர் ஆனார்!

”மு.க.ஸ்டாலின் வலதுகரமாக இருந்த பெ.வீ.கல்யாணசுந்தரம் தனது கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்தார் என்ற தகவல்கள் கடந்த செவ்வாய்க்கிழமை பரவியபோது, யாருமே அதனை நம்பவில்லை. ‘கல்யாணசுந்தரத்தால் கட்சியை விட்டுப் போனவர்கள்தான் அதிகம். அவரே விரக்தி அடைந்துவிட்டார் என்றால் நம்ப முடியவில்லையே… இதில் ஏதோ சதி இருக்கிறது’ என்று அறிவாலய விவரங்கள் அறிந்தவர்கள் சொல்லிக்கொண்டார்கள். அதன் பிறகு கல்யாணசுந்தரம் எழுதிய கடிதம் பரவியது.”

”கடிதத்தை முழுமையாகச் சொல்லும்!”

”சொல்கிறேன்! ‘என் உயிரினும் மேலான தலைவர் அவர்களுக்கு! கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் கழகம் வலுப்பெறும் என்பது என் எண்ணம். தளபதி அவர்களை 2016 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக உடனடியாக அறிவிக்க வேண்டும். சகோதரி கனிமொழி, திரு.ராசா, திரு.தயாநிதி மாறன் ஆகியோர் கழகத்தில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். பிரிக்கப்பட்ட 65 மாவட்டங்களுக்கும் உடனடியாகப் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஒன்றிய, நகர, பகுதி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் இரண்டு முறைக்கு மேல் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. இது உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும். நில அபகரிப்பு புகார் மற்றும் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பெற்ற கழக முன்னணியினர் எந்த முக்கியப் பொறுப்பும் வகிக்கக் கூடாது’ என்று எழுதி, ‘என்றும் கழகத்துக்காக வாழும்’ என்று குறிப்பிட்டு கையெழுத்துப் போட்டுள்ளார் கல்யாணசுந்தரம். இது ஒரு கடிதம். ‘என் உயிரினும் மேலான தலைவர் அவர்களுக்கு! அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்கிறேன்’ என்பது இரண்டாவது கடிதம். இது லெட்டர் பேடிலோ, நல்ல காகிதத்திலோ எழுதப்படவில்லை. ஸ்கிரிப்லிங் துண்டு காகிதத்தில் எழுதப்பட்டுள்ளது. இதனை எடுத்துக்கொண்டு கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு கல்யாணசுந்தரம் போனதாகவும், அவர் இவரைப் பார்க்கவில்லை என்றும் ‘கடிதத்தை கொடுத்துவிட்டுப் போகச் சொல்’ என்று சொன்னதாகவும் சொல்லப்படுகிறது!”

”விலகலுக்கு என்ன காரணம்?”

”கல்யாணசுந்தரம் இப்படி கடிதங்கள் எழுதியிருக்கிறார் என்று கட்சி நிர்வாகிகளுக்கு தெரியவந்ததும், ‘ஓஹோ! கட்சியை சீர்திருத்தும் அளவுக்கு அவ்வளவு பெரிய ஆளாக ஆகிவிட்டாரா?’ என்றார்களாம். ‘இப்படி கடிதம் எழுதுவதற்கான தைரியத்தை யார் கொடுத்தது? சாதாரணமாக இளைஞர் அணி மாவட்டத் துணை அமைப்பாளராக இருந்தவரை தலையில் தூக்கிவைத்தார் ஸ்டாலின். அதனுடைய விளைவுதான் இது’ என்கிறார்கள். கட்சியின் அமைப்புச் செயலாளராக டி.கே.எஸ்.இளங்கோவன் இருந்தார். அவர் கருணாநிதி பேச்சைத்தான் கேட்பார், கனிமொழி ஆதரவாளராகவும் இருக்கிறார் என்பதால், தனக்கு வேண்டிய ஒருவரை அமைப்புச் செயலாளர் ஆக்க வேண்டும் என்று நினைத்த ஸ்டாலின், கல்யாணசுந்தரத்தை கொண்டுவந்தார். கட்சியின் மிக முக்கியமான பணி, அமைப்புகளைச் சேர்ப்பது – பிரிப்பது மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள். இந்த இரண்டையும் கவனிக்கும் முக்கியமான வேலைகள் கல்யாணசுந்தரத்துக்குத் தரப்பட்டன.

மதுரையில் அழகிரி ஆதரவாளர்களை விசாரணை இல்லாமல் நீக்கியதும், கல்யாணசுந்தரத்தின் மீது அழகிரி பாய்ந்ததும் பழைய கதை. கல்யாணசுந்தரத்துக்கு கலைஞர் டி.வி-யின் இயக்குநர் பொறுப்பை ஸ்டாலின் வழங்கினார். ‘கட்சியில் கல்யாணசுந்தரம் தவிர வேறு யாருமே இல்லையா?’ என்று அழகிரி கேட்டார். அறிவாலயம் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்து அறக்கட்டளைப் பொறுப்பும் இவருக்குத் தரப்பட்டது. இப்படி பல்வேறு பதவிகளை சுமக்க முடியாமல் சுமந்து வந்தார். சமீபத்தில், பழனிமாணிக்கம் உள்பட பல்வேறு பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது கருணாநிதியைச் சந்தித்த பழனிமாணிக்கம், ‘தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்று சொல்லியிருக்கிறார். இது சம்பந்தமாக கல்யாணசுந்தரத்திடம் கருணாநிதி விசாரித்துள்ளார். உரிய பதில் கிடைக்க​வில்லை. ‘விவகாரங்கள் மொத்தத்தையும் என்னிடம் கொண்டுவாருங்கள்’ என்று சொல்லி நேரடியாக விசாரிக்க ஆரம்பித்தார் கருணாநிதி. இதில் இருந்துதான் கல்யாணசுந்தரம் கலங்க ஆரம்பித்தார் என்கிறார்கள். அவரது விலகலுக்கு முதல் காரணம் இதுதான் என்கிறது அறிவாலய வட்டாரம்!”

”அடுத்து..?”

”சென்னை கலைஞர் கருணாநிதி நகர் தி.மு.க-வை தனது கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று நினைப்​பவர் கல்யாணசுந்தரம். இவரது ஆதரவாளர் சம்பந்தன். இவர் கட்சித் தேர்தலில் நின்றார். அவரது வேட்புமனு செல்லாது என்று தலைமைக் கழக துணை மேலாளர் ஜெயகுமார் சொன்னார். ‘ஒருவர் எந்த டிவிஷனில் குடியிருக்கிறாரோ அந்த டிவிஷனில்தான் போட்டியிட வேண்டும். சம்பந்தம் குடியிருக்கும் டிவிஷன் வேறு; தேர்தலில் போட்டியிடும் டிவிஷன் வேறு. இதனை பொதுச்செயலாளர் ஏற்க மாட்டார்’ என்று சொல்லியிருக்கிறார் ஜெயகுமார். ‘நீங்கள் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்தானே? நான் சொன்னதை செய்யுங்கள்’ என்று கல்யாணசுந்தரம் சொன்னதாகவும், ‘சம்பளம் வாங்கினாலும் உண்மையான கட்சி விசுவாசி நான்’ என்று ஜெயக்குமார் சீறியதாகவும் சொல்லப்படுகிறது. ‘துணை மேலாளர் அந்தஸ்தில் இருக்கும் ஒருவரிடம் நான் தோற்பதா?’ என்று முடிவெடுத்த கல்யாணசுந்தரம், அதில் இருந்து திசைதிருப்ப இந்தக் கடிதங்களை எழுதிய​தாகவும் சொல்கிறார்கள்”

”ம்!”

”இந்தக் கடிதம் தன்னுடைய கைக்கு வந்ததுமே கருணாநிதி அதிகம் கொந்தளித்தார். ‘2016 தேர்தலில் ஸ்டாலினை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமானால், கருணாநிதி இல்லை என்றுதானே அர்த்தம். இதனைச் சொல்வதற்கு இவர் யார்?’ என்று கர்ஜித்தார் கருணாநிதி. ‘கல்யாணசுந்தரம் என்றாலே ஸ்டாலின் குரல்தானே’ என்று பலரும் நினைத்துவருவது கருணாநிதிக்குத் தெரியும். அந்த சந்தேகத்தையும் பலரும் கிளப்பினார்கள். ‘குடும்பத்தில் யாராவது ஒருவர் அரசியலில் இருந்தால் போதும். அழகிரி, கனிமொழி, தயாநிதி என்று வரிசையாக பலரும் வருவதால்தான், குடும்ப அரசியல் என்று பலரும் சொல்கிறார்கள்’ என்று ஸ்டாலின் சொல்லிவருவது பற்றி பல முறை சொல்லியிருக்கிறேன். அந்தக் குரலைத்தான் கல்யாணசுந்தரமும் எதிரொலித்து இருக்கிறார். ‘பூனைக்கு யார் மணி கட்டுவது? நானாவது இதனைச் சொல்கிறேன். கட்சியை விட்டு நீக்கினால் நீக்கட்டும்’ என்று சொல்லிக்கொண்டேதான் கல்யாணசுந்தரம் இந்தக் கடிதத்தை எழுதினாராம்.”

”அப்புறம்..?”

”கனிமொழி, தயாநிதி ஆகிய இருவரையும் இந்தக் கடிதம் கோபப்படவைத்தது. டெல்லியில் இருந்தார் கனிமொழி. ‘என்னை ஒதுங்கி இருக்கச் சொல்ல இவர் யார்? யாரோ செய்த தவறுக்காக நான் பலியாகி சிறையில் இருந்தேன். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு என்னை கட்சியை விட்டு ஒதுங்கச் சொன்னால் என்ன அர்த்தம்?’ என்று கருணாநிதியிடம் கனிமொழி பேசியதாகச் சொல்கிறார்கள். ‘இந்த கல்யாணசுந்தரம் முதலில் தயாநிதிமாறன் தயவில்தான் இருந்தார். தொலைத்தொடர்புத் துறையின் நியமனப் பதவியில் அவரை நியமித்தது தயாநிதி. அந்த நன்றியுணர்ச்சிகூட இல்லாமல் பேசுகிறார்’ என்று தயாநிதி ஆட்கள் பொருமினார்கள். ‘சொத்துக் குவிப்பு வழக்கில் நம்முடைய முன்னாள் அமைச்சர்கள் சிக்கினார்கள் என்றால், அது ஜெயலலிதா அரசின் பழிவாங்கும் எண்ணம் என்று பிரசாரம் செய்து வருகிறோம். அப்படி இருக்கும்போது, அனைவரையும் பொறுப்பில் இருந்து விலக்க வேண்டும் என்றால் என்ன அர்த்தம்?’ என்று முன்னாள் அமைச்சர்கள் கேட்கிறார்கள். ‘இப்படி தலைவர் வீட்டில் இருந்து கட்சி முக்கியஸ்தர்கள் வரைக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும் அறிக்கையை யார் கொடுத்த தைரியத்தில் கல்யாணசுந்தரம் எழுதினார்’ என்பதே பலரும் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொள்ளும் கேள்வி. பெங்களூரில் இருந்து செல்வி, டெல்லியில் இருந்து கனிமொழி, தயாநிதி என பல்வேறு அஸ்திரங்கள் ஒரே நேரத்தில் கருணாநிதியை நோக்கிப் பாய, ஏற்கெனவே மனதால் அடிபட்டவராக இருந்த கருணாநிதி இதனை ஏற்றுக்கொண்டு, கல்யாணசுந்தரத்தை கட்சியை விட்டு நீக்கும் முடிவை எடுத்தார் என்று சொல்கிறார்கள்!”

”ஸ்டாலின் ரியாக்ஷன்?”

”கல்யாணசுந்தரத்துக்கும் ஜெய​குமாருக்கும் மோதல் ஏற்படும்போதெல்லாம் கூப்பிட்டு சமாதானம் செய்துவைத்தவர்தான் ஸ்டாலின். கட்சி அமைப்பு முறைகளில் ஜெயகுமாரின் ஆலோசனைகள்தான் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரால் ஏற்கப்படும். அந்தளவுக்கு லாஜிக்குடன் பேசக்கூடியவர் அவர். ரகுமான்கான், பொன்முத்துராமலிங்கம், டி.கே.எஸ்.இளங்கோவன் போன்ற பெரும்புள்ளிகளே ஜெயகுமாரிடம் திணறுவார்கள். அப்படிப்பட்ட ஜெயகுமாரிடம் மோதினால் என்ன ஆகும்? ஸ்டாலினால்கூட காப்பாற்ற முடியவில்லை. ‘தலைவரைத் தூண்ட வேண்டும் என்பதற்காக இந்த அஸ்திரம் வீசப்பட்டது. ஆனால், அது நெகடிவ் ஆகிவிட்டது’ என்றும் சொல்கிறார்கள். கருணாநிதியை சீண்டுவது மாதிரி வாசகம் இருந்ததால், கல்யாணசுந்தரத்தை ஸ்டாலினாலும் காப்பாற்ற முடியவில்லை என்றே சொல்கிறார்கள்”

”அப்படியா?”

”சென்னையில் இந்தக் களேபரங்கள் நடந்துகொண்டு இருக்கும்போது, புறநகர் பகுதியான காட்டாங்கொளத்தூரில் இருந்தார் ஸ்டாலின். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாவட்ட நிர்வாகிகளின் தலைகளைத் தாண்டி கிளைக் கழக நிர்வாகிகள் கருத்தை ஸ்டாலின் கேட்க முடிவெடுத்து ஒரு பயணத்தை தொடங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க தொண்டர்களிடம் கருத்துக் கேட்க காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் ஹோட்டலுக்கு வந்திருந்தார் ஸ்டாலின். 10 மணிக்கு மீட்டிங் தொடங்குவதாக இருந்தது. ஆனால் 9.40-க்கே ஸ்டாலின் வந்துவிட்டார். கூட்டத்துக்கு அழைக்கப்பட்டவர்களைத் தவிர, மற்ற யாருக்கும் உள்ளே அனுமதி இல்லை. இதனால், மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன், அவைத்தலைவர் சுந்தர், முன்னாள் எம்.எல்.ஏ மூர்த்தி மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் அனைவரும் வரவேற்பரையிலேயே உட்கார்ந்திருந்தனர்.”

”உள்ளே என்ன பேசினார்களாம்?”

”முதலில் ஒவ்வொருவராக அறிமுகப்​படுத்திக்கொண்டு பேசச் சொன்னாராம் ஸ்டாலின். தோல்விக்கான காரணங்கள் என்ன? கட்சியை எப்படி பலப்படுத்துவது? அதில் கட்சியின் பங்கு என்ன? உங்களின் பங்கு என்ன? கட்சிப் பணியைச் செய்ய தடையாக உள்ளவர்கள் யார்? உங்கள் மனதில் தோன்றியவற்றை தைரியமாக பேசுங்கள். அப்போதுதான் கட்சியைப் பலப்படுத்த முடியும்’ என்றாராம் ஸ்டாலின்.

‘அம்மா வாட்டர் முதல் பசுமை வீடு வரை அ.தி.மு.க அரசின் திட்டங்கள் அனைத்தையும் ஜெயா டி.வி-யில் 24 மணி நேரமும் ஒலிபரப்பிக்கொண்டே இருந்தார்கள். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்துக்கு நாம் 75 ஆயிரம்தான் கொடுத்தோம். ஆனால், அவர்கள் 2.10 லட்சம் கொடுத்ததாக விளம்பரப்படுத்தினார்கள். லேப்டாப் கொடுத்ததால், மாணவர்கள் அனைவரும் அவர்களுக்கு சாதகமாக இருந்தார்கள்.  கூட்டணிக் கட்சிக்காரர்களும் நமக்கு வேலை செய்யவில்லை. தனித்து நின்றாலே ஒருசில இடங்களில் வெற்றிபெற்றிருக்கலாம். இலங்கைப் பிரச்னையில் அ.தி.மு.க அரசு அதிரடியாகச் செயல்பட்டது. அவர்கள் சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானங்கள் அவர்களுக்குச் சாதகமாக இருந்தன. ஊழலில் சிக்கியவர்களை கட்சியில் தொடர்ந்து வைத்திருப்பதால், நாங்கள் அதைப்பற்றி வெளியே பேசவே முடியவில்லை. ஓட்டுக் கேட்கப் போனால், ஊழல் கட்சி என்று சொல்கிறார்கள். நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், கட்சியினரைக் கண்டுகொள்வது இல்லை’ என்று ஒவ்வொருவரும் அடுக்கினார்களாம். ‘தனிநபர் குற்றச்சாட்டுகளை இங்கே சொல்ல வேண்டாம். அது உங்களைப் பாதிக்கும். அதுபோன்ற குற்றச்சாட்டுகளை எனக்குப் புகாராக எழுதி அனுப்பிவிடுங்கள்’ என்றாராம் ஸ்டாலின்.

மகளிர் அணி, தொழிலாளர் அணி, கிளைக் கழக நிர்வாகிகள், வழக்கறிஞர் அணி என அடுத்தடுத்து வந்தவர்களிடம் தனிநபர் குற்றச்சாட்டை தவிர்த்து, கட்சி வளர்ச்சி குறித்து மட்டும் பேசுங்கள் என்று சொல்லிவிட்டாராம் ஸ்டாலின். மாலை ஐந்து மணி வரை தொண்டர்களின் கருத்தைக் கேட்ட ஸ்டாலின், மாலையில் செங்கல்பட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்குச் சென்றுவிட்டார். அனைவரின் புகாரையும் ஸ்டாலினே தனது கைப்பட எழுதிக்கொண்டாராம். மாவட்ட அளவில் உள்ள கட்சிப் பொறுப்பாளர்களுக்கு தலைமீது கத்தி தொங்குவதாகவே இருந்ததாம் இந்தக் கருத்துக் கேட்பு கூட்டம். ‘தொண்டர்கள் கருத்தை அறிய இது வழிவகுக்கும்’ என்று கட்சிக்​காரர்கள் சந்தோஷமாகச் சொல்லிக்கொண்டார்கள்!” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார், ஆளுங்கட்சி செய்தித் துளிகள் சிலவற்றைக் கொட்டினார்.

”தலைமைச் செயலகத்தின் மிக முக்கியமான துறை அது. அந்தத் துறையின் மிக மிக முக்கியமான சில விஷயங்கள் தொடர்பான ஆவணங்கள் கொண்ட ஹார்ட் டிஸ்க்கள் மூன்று திடீரென காணாமல் போய்விட்டது. அதாவது, திட்டமிட்டு திருடப்பட்டுள்ளது என்கிறார்கள். ஜெயலலிதாவின் நேரடி மேற்பார்வையில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான ஒரு கம்பெனி சம்பந்தப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆவணங்களாம் அவை. ‘ஒரு நடவடிக்கையை எடுப்பதற்கு முன்னதாக அதிகாரிகள் மட்டத்தில் செய்யப்பட்ட ஆலோசனைகள், கருத்துப் பரிவர்த்தனைகள் அனைத்தும் இந்த டிஸ்க்கில் இருக்கிறது’ என்றும் சொல்கிறார்கள். இதைக் காணவில்லை என்பதே சில பல மாதங்கள் கழித்துத்தான் அதிகாரிகளுக்குத் தெரியவந்துள்ளதாம்.”

”அலுவலர்கள் போர்வையில் வந்திருப்பார்​களோ?”

”அடுத்து சொல்லப்போவது ஆளுங்கட்சியின் தலைமைக் கழகம் பற்றி. சென்னையின் பல இடங்களிலும் ஒரு பில் புக் வைத்து வசூல் நடக்கிறதாம். ‘அனைத்திந்திய அண்ணா தி.மு.க.’ என்று பெரிய எழுத்தில் போட்டு, லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை- 4 என்று தலைமைக் கழகத்தின் முகவரியையே போட்டுள்ளார்கள். கட்சியின் சார்பில் சமபந்தி மற்றும் சமூகநல உதவிகள் வழங்கும் விழா என்று போட்டு இந்த வசூல் நடக்கிறது. தலைமைக் கழகத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், பணம் கொடுக்காமல் போனால் தலைமைக்குத் தகவல் போய்விடுமோ என்று பயந்து பலரும் பணம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்!

%d bloggers like this: