‘காளான் விற்ற சசிகலா கடன் கொடுத்தார் ஜெயலலிதாவுக்கு!” பலே கணக்கு காட்டும் பெங்களூரு வழக்கு

”பிரெஞ்சு படத்துக்கு, ஜெர்மன் மொழியில் எழுதி, ஸ்வீடன் பாடகரிடம் பாடக் கொடுத்து, இத்தாலி மொழியில் மொழிபெயர்த்து, ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மக்களுக்காக அரங்கேற்றப்பட்ட பாடலைப்போல, தமிழக ஊழல் தடுப்பு போலீஸாரின் கீழ் செயல்பட்ட பொதுப்பணித் துறை பொறியாளர்கள் என் மனுதாரர் சசிகலாவின் சொத்து மதிப்பைக் கணக்கீடு செய்திருக்கிறார்கள்”- இது பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர் சொன்ன உதாரணம்.

பெங்களூரில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர், தன் இறுதி வாதத்தை எடுத்து வைத்து வருகிறார். 

வழக்கறிஞர் மணிசங்கரின் வாதங்கள் அமர்க்களமாக இருக்கின்றன.

பங்களாவின் மதிப்பீடு காலதாமதம்!

”என் மனுதாரர் சசிகலா பங்குதாரராக இருந்த பல நிறுவனங்களை வழக்கில் இணைத்துள்ளார்கள். சசிகலாவுக்குச் சொந்தமான கட்டடங்கள், வீடுகள், அலுவலகங்கள், நீலாங்கரை பங்களா, பையனூர் பங்களா, சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட், தி.நகரில் உள்ள வணிகக் கட்டடங்கள் ஆகியவற்றையும் வழக்கில் இணைத்துள்ளார்கள். இந்தக் கட்டடங்கள் சில, வழக்கு காலகட்டத்துக்கு முன்பும், சில கட்டடங்கள் வழக்கு காலகட்டத்திலும் கட்டப்பட்டவை. அந்தக் கட்டடங்களின் மதிப்பீட்டை தமிழக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் நியமிக்கப்பட்ட பொதுப்பணித் துறை பொறியாளர்கள் மிகைப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள்.

வழக்கு காலகட்டத்துக்குப் பிறகு ஆறு மாதங்கள் கழித்தே மதிப்பீடு செய்துள்ளதால் இடைப்பட்ட ஆறு மாதங்களில் கட்டடப் பணிக்கு செலவுசெய்த தொகையும் இந்த வழக்கில் காட்டப்பட்டுள்ளது. அந்தத் தொகைகளை இந்த வழக்கில் இருந்து நீக்க வேண்டும்.”

எவ்வளவு கூடுதல்?

”ஜெயா பப்ளிகேஷனுக்குச் சொந்தமாக சென்னை கிண்டி கணபதி காலனியில் உள்ள கட்டடத்தில் கூடுதல் கட்டடம் கட்ட ரூபாய் 39 லட்சத்து 34 ஆயிரம் செலவு செய்துள்ளதாகப் பொதுப்பணித் துறை அதிகாரி கோவிந்தன் மதிப்பீடு செய்துள்ளார். ஆனால், கூடுதல் கட்டடம் கட்ட ரூபாய் 32 லட்சத்து 94 ஆயிரத்து 834 தான் செலவு ஆனது.

சசி என்டர்பிரைசஸுக்குச் சொந்தமான சென்னை கிண்டியில் உள்ள இன்டஸ்டிரியல் எஸ்டேட் மராமத்து வேலைகள் செய்ததில், ரூபாய் 14,17,538 செலவு செய்துள்ளதாகப் பொதுப்பணித் துறை அதிகாரி கோவிந்தன் மதிப்பீடு செய்துள்ளார். ஆனால், அதற்கு ஆன செலவு 4,76,525 மட்டும்தான்.

அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு வாங்கிய பஜாஜ் டெம்போ ஆம்னி பஸ் ரூபாய் 2,03,979. ஜெயா பப்ளிகேஷன் வாங்கிய பென்ஸ் கார் ரூபாய் 9,15,000. இவை வழக்கு காலகட்டத்துக்கு முன்பு வாங்கியவை. ஆனால், வழக்கு காலகட்டத்தில் வாங்கியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.”

சசிகலாவின் நகைகள்!

”சசிகலாவுக்குச் சொந்தமான 31.3.1991-ல் வாங்கப்பட்ட 62 தங்க நகைகளின் மதிப்பு 9,38,460 எனவும், 16.1.92-ல் வாங்கிய 34 தங்க நகைகளின் மதிப்பு 17,54,868 எனவும் பொதுப்பணித் துறை அதிகாரி ஸ்ரீஹரி குறிப்பிட்டுள்ளார். இந்த நகைகள் அனைத்தும் வழக்கு காலகட்டத்துக்கு முன்பே வாங்கப்பட்டவை. இதை வருமான வரித்துறையில் காட்டி அதற்கு வரியும் கட்டியிருக்கிறோம்.

என் மனுதாரர்கள் பங்குதாரர்களாக உள்ள ஸ்ரீஆஞ்சநேயா பிரின்டர்ஸ் கம்பெனிக்காக வாங்கிய 50-க்கும் மேற்பட்ட மெஷினரிகள் மதிப்பை 84,21,000 எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த இயந்திரங்களைப் பெரும்பாலும் லீஸுக்கு எடுத்திருந்தோம். அதை எல்லாம் இதில் காட்டவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது கல்லூரி பருவத்தில் படித்த ஒரு காமெடிதான் நினைவுக்கு வருகிறது” என்று சொல்லிவிட்டு வழக்கறிஞர் மணிசங்கர் சொன்னதுதான் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் தரப்பட்டுள்ளது.”

சசிகலா வருமானத்தை கோர்ட்டில் காட்டவில்லை!

”சசிகலா, வழக்கு காலகட்டத்துக்கு முன்பே பல தொழில் நிறுவனங்கள் தொடங்கி, அதன் மூலம் பல லட்சம் வருமானத்தை ஈட்டியதோடு, பல நிறுவனங்களில் பங்குதாரராக இருந்து அதன் மூலமும் வருமானம் பெற்றிருக்கிறார். 1992-93-ல் தொழில் நிறுவனங்கள் மூலமும் விவசாயம் மற்றும் கட்டட வாடகை மூலமும் கிடைத்த ஆண்டு வருமானம் ரூபாய் 4,41,615. அதே காலகட்டத்தில் என் மனுதாரர் சசிகலாவுக்கு ஃபாரின் கிஃப்ட்-டாக வந்த தொகை ரூ.51,47,955. இந்தத் தொகை அன்பளிப்பாக வந்ததால், அதற்கு வருமானவரி கட்ட வேண்டியது இல்லை. 1993-94 ஆண்டுக்கான சசிகலாவுக்கு சொந்தமான வினோத் வீடியோ விஷன் மூலமும் விவசாயம் மற்றும் கட்டட வாடகை மூலம் 10 லட்சமும், 1994-95 ஆண்டுக்கான வருமானமாக 24,99,005 ரூபாயும், 1995-96 ஆண்டுக்கான வருமானமாக 58,06,667 ரூபாயும், 1996-97 ஆண்டுக்கான வருமானமாக 46,09,133 ரூபாயும் கிடைத்துள்ளது. இப்படி ஒவ்வொரு ஆண்டும் என் மனுதாரருக்கு கிடைத்த வருவாய்களை தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் கோர்ட்டில் காட்டாமல் மறைத்துவிட்டனர்.”

சசிகலா காளான் வளர்த்தார்!

”இதுதவிர, சசிகலா தன் விவசாய நிலத்தில் காளான் பயிரிட்டதில் கிடைத்த வருமானத்தையும் கணக்கில் காட்டாமல் மறைத்துவிட்டனர். 1989 முதல் 1990-ம் ஆண்டில் ராமச்சந்திரனுக்கு 5,96,000 ரூபாயும், சுப்ரமணிக்கு 2,25,000 ரூபாயும், நாகம்மாளுக்கு 8,70,000 ரூபாயும் கடன் கொடுத்திருந்தார். அதை 1991 முதல் 1992 வரை அவர்கள் சசிகலாவிடம் திரும்பக் கொடுத்தார்கள். அதையெல்லாம் கணக்கில் காட்டாமல் மறைத்திருக்கிறார்கள்.

தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் வீட்டில் ஆய்வுசெய்து அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றினார்கள். அதில் அவர்களுக்கு சாதகமாக இருந்த ஆவணங்களை மட்டுமே கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்கள். எங்களுக்கு ஆதரவாக இருந்த ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யாமல் மறைத்துவிட்டனர்.”

வந்த வருமானத்தையும் மறைத்துவிட்டனர்!

”என் மனுதாரர் பங்குதாரராக இருந்த நிறுவனங்களின் மூலமாக வந்த பல வருமானங்களை போலீஸார் கணக்கில் காட்டாமல் மறைத்திருக்கிறார்கள். சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மூலமாக 94-95-ம் ஆண்டுக்கான வருமானமாக ரூ.10,20,000-ம், 1995-96 ஆண்டுக்கான தொழில் மூலம் ரூ.1,94,806-ம், அதே ஆண்டு விவசாய வருமானமாக ரூ.70,000-ம், அதே ஆண்டு கட்டட வாடகை மூலம் ரூ.1,69,600-ம், 1996-97 விவசாயத்தில் ரூ.80,000-ம், கட்டட வாடகை மூலம் ரூ.7,60,200-ம், மெஷின் விற்பனை செய்ததில் முன்பணமாக ரூ.23,80,000-ம் வருமானமாகக் கிடைத்தது.

ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்தின் மூலம் 1992-93 ஆண்டில் கிடைத்த நிகர லாபம் 16,89,680. அதே ஆண்டில் விவசாயத்தில் கிடைத்த வருவாய் 9,31,000. 1993-94 ஆண்டின் நிகர லாபம் 14,65,660. அதே ஆண்டு விவசாயத்தில் வந்த வருவாய் 7,43,500. 1994-95 ஆண்டின் நிகர லாபம் 30,30,255. அதே ஆண்டு விவசாயத்தில் வந்த வருவாய் 21,68,500. 1995-96 ஆண்டின் நிகர லாபம் 29,78,964. அதே ஆண்டு விவசாயத்தில் வந்த வருவாய் 15,02,316. 1996-97 ஆண்டின் நிகர லாபம் 30,14,875. அதே ஆண்டு விவசாயத்தில் வந்த வருவாய் 15,02,310.

ஜெயா பப்ளிகேஷன் மூலம் செயல்பட்ட நமது எம்.ஜி.ஆர் நாளிதழுக்கு சந்தாதாரர்கள் மூலம் கிடைத்த தொகை 14,23,89,000. வழக்கு காலகட்டத்துக்கு முன்பே 13,54,000 வந்தது. இதுதவிர என் மனுதாரர் பங்குதாரராக இருந்த பல நிறுவனங்கள் மூலம் வந்த வருவாயும் காட்டப்படவில்லை.”

ஜெயலலிதாவுக்கு சசிகலா கடன் கொடுத்தார்!

”கனரா வங்கி, இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி… என பல வங்கிகளில் என் மனுதாரர் தனிப்பட்ட முறையிலும் அவர் பங்குதாரராக இருக்கும் நிறுவனங்கள் மூலம் வைப்பு தொகை மூலம் வந்த வட்டியைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. சசிகலாவுக்கு வேறு வழிகளில் வந்த வருமானமாக 5,51,93,959 ரூபாயை மட்டும் காட்டுகிறார்கள். ஆக, இந்த இரண்டு தொகையும் கூட்டினால் சசிகலாவுக்கு வழக்கு காலகட்டமான ஐந்து ஆண்டுகளில் கிடைத்த மொத்த வருமானம் 30,30,22,575. இதில் இருந்து என் மனுதாரர் சசிகலா, ஜெயலலிதாவுக்கு ஒரு கோடியே 50 லட்சம் கடனாக வழங்கினார். சுதாகரன் தொழில் தொடங்கவும் இளவரசி தொழில் தொடங்கவும் சசிகலா தலா 11,00,000 கடன் கொடுத்தார்” என்று விரிவாகச் சொன்னார் வழக்கறிஞர் மணிசங்கர்.

கடந்த 6-ம் தேதி நீதிபதி குன்ஹாவின் உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால், விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் 11-ம் தேதிதான் மீண்டும் விசாரணை தொடங்க இருக்கிறது.

%d bloggers like this: