டெஸ்க்டாப் பதிலாக எங்கு பதியலாம்?

முதலில் டெஸ்க்டாப் பகுதியில் சேவ் செய்வதில் உள்ள பிரச்னைகளை மீண்டும் நினைவு படுத்திக் கொள்ளலாம். இதில் பதிந்து வைப்பதனால், பயன்படுத்த எடுப்பது எளிதாகிறது. ட்ரைவ் மற்றும் போல்டர்களைத் தேடி எடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த உடனடி அணுகுமுறையே நமக்கு டெஸ்க்டாப்பில் பைல்களை சேமிக்கும் பழக்கத்தைத் தூண்டுகிறது. இதனால் பிரச்னைகளையும் நாம் வரவேற்கிறோம் என்பதே உண்மை.
முதலில், சிஸ்டம் ரெஸ்டோர் பயன்படுத்துகையில், டெஸ்க்டாப்பில் உள்ள பைல்கள் உறுதியாக மீண்டும் கிடைக்காது. இந்த ஆபத்தை பலர் உணர்ந்திருப்பதில்லை. பல பைல் பேக் அப் புரோகிராம்கள், டெஸ்க்டாப்பில் உள்ள பைல்களை கண்டுகொள்வதில்லை. தொடர்ந்து பைல்களை டெஸ்க்டாப்பில் சேவ் செய்திடுகையில், அவை குப்பையாக அமைகின்றன. தேவையான பைல் ஒன்றைத் தேடி எடுப்பது சிரமமான காரியமாகிறது. சரி, இனி எங்கு சேவ் செய்திடலாம், செய்திடக் கூடாது எனப் பார்க்கலாம்.

ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள் உள்ள சி ட்ரைவில் நம் டேட்டா பைல்களை என்றும் சேவ் செய்திடக் கூடாது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்காமல் போனால், அதனை ரீ இன்ஸ்டால் செய்திடுகையில், நம் டேட்டா பைல்கள் அனைத்தும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். இதற்குப் பதிலாக, சி ட்ரைவினை விடுத்து, டி அல்லது வேறு ஒரு ட்ரைவில் பைல்களைப் பதிந்தால், அவை வைரஸால் பாதிக்கப்படாமல் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும் சி ட்ரைவினை ரீ பார்மட் செய்கையில், பைல்களை இழக்கும் வாய்ப்பு இருக்காது.
முன்பு விண்டோஸ் சிஸ்டத்தில் பைல்களை சேவ் செய்திட My Documents என்னும் போல்டர் தரப்பட்டது. பின்னர், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இது Documents என பெயர் மாற்றப்பட்டது. அத்துடன் அதில் Music, Pictures, and Videos எனப் பல பிரிவுகளும் தரப்பட்டன. இவை மொத்தமாக libraries என அழைக்கப்பட்டன. இந்த நான்கு லைப்ரேரிகளும் சில சிறப்பு தன்மை கொண்டவை. இவை டைரக்டரிகள் மட்டும் அல்ல. பல டைரக்டரிகளின் தொகுப்பாகும். எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்கள் வீடியோக்களை பல இடங்களில் சேவ் செய்து வைக்கலாம். செய்து வைத்திடுகையில், வீடியோ டைரக்டரிக்கு லிங்க் கொடுக்கலாம். அதன் பின், வீடியோ டைரக்டரியை அணுகினால், அனைத்து வீடியோ பைல்களும் ஒரே இடத்தில் காட்டப்படுவதனைக் காணலாம். இந்த வகையில் பைல்களை சேவ் செய்வதும் திரும்பப் பெறுவதும் எளிதாகிறது. பாதுகாப்பும் கிடைக்கிறது.
இப்போதெல்லாம், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், பைல்களை ஸ்டோர் செய்திடும் பழத்தினை அனைவரும் பின்பற்றுகின்றனர். பெரும்பாலும் இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் இந்த இடம் கிடைக்கிறது. இவற்றில் அதிகம் பிரபலமானவை Dropbox, G+ Drive, or Microsoft One Drive ஆகும். இவை கூடுதல் வசதிகளை வழங்குகின்றன. இவற்றுடன் அக்கவுண்ட் வைத்துக் கொண்டு, பைல்களை இணைக்கும் வசதியையும் (Sync) அமைத்துக் கொண்டால், பைல்கள் தாமாகவே, இணைய வசதி இருக்கும்போது, இந்த க்ளவ்ட் டைரக்டரிகளில் பதிந்து வைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட டைரக்டரிகளில் நீங்கள் அமைக்கும் பைல்கள் தாமாகவே இவற்றுடன் இணைக்கப்பட்டு சேவ் செய்திடும் வகையில் அமைப்பினை உருவாக்கிக் கொள்ளலாம். இவ்வாறு சேவ் செய்திடும் பைல்களை எந்த இடத்தில் இருந்தும் நீங்கள் மீண்டும் பெற்றுக் கொண்டு திருத்தலாம், பயன்படுத்தலாம். நம் கம்ப்யூட்டர் முழுமையாக இயக்க முடியாமல் போனாலும், இந்த பைல்கள் நமக்கு என்றும் கிடைக் கும். இவ்வாறு சேவ் செய்யப்படும் பைல்களுக்கு Revision history என்ற ஒரு வசதியும் தரப்படுகிறது. அனைத்து க்ளவ்ட் ஸ்டோரேஜ் வசதிகளிலும் இந்த வசதி தரப்படவில்லை. ஆனால், பெரும்பாலான பிரிவுகளில் கிடைக்கிறது. இந்த வசதியின் மூலம், பைல் ஒன்றில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் அனைத்தும், குறிப்பிட்ட எண்ணிக்கையில், குறிப்பில் வைத்து சேவ் செய்யப்படுகின்றன. எனவே, நீங்கள் ஒரு பைலின், குறிப்பிட்ட திருத்தத்திற்கு முந்தைய பதிப்பு தேவை எனில், அதனை க்ளவ்ட் ஸ்டோரேஜில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
நீங்கள் விண்டோஸ் 8 பயன்படுத்துபவராக இருந்தால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒன் ட்ரைவின் க்ளவ்ட் ஸ்டோரேஜ் வசதி உங்களுக்கு சிஸ்டம் மூலமாகவே தரப்படுகிறது. பைல்களை ஒருங்கிணைக்கும் சிங்க் வசதியும் கிடைக்கிறது.
பைல்களை உடனே அணுகி, டபுள் கிளிக் செய்து திறக்க முடிகிறது என்ற ஒரு வசதியே, நம்மை டெஸ்க்டாப்பில் பைல்களை சேவ் செய்து வைத்திடத் தூண்டுகிறது. ஆனால், டெஸ்க்டாப் இடத்தில் பைல்களை சேவ் செய்வது சரியல்ல என்ற நிலையில், உடனுடக்குடன் டெஸ்க்டாப்பிலிருந்தே பைல்களைத் திறக்க ஏதேனும் வழி உண்டா என நாம் எண்ணலாம். வழி உள்ளது. பைல்களுக்கான ஷார்ட் கட் (shortcuts) ஐகான்களை உருவாக்கி, டெஸ்க்டாப்பில், எளிதில் பெறும்படி அமைத்தால், அதில் கிளிக் செய்து பைல்களைத் திறக்கலாம். இந்த வகையில் ஷார்ட் கட் அமைப்பதுவும் எளிதுதான். ரைட் மவுஸ் பட்டனை பைல் பெயர் மீது அழுத்தி, எந்த இடத்தில் ஷார்ட் கட் அமைக்கப்பட வேண்டுமோ அங்கு விட வேண்டும். பின்னர் கிடைக்கும் மெனுவில் Create shortcut here என்பதில் கிளிக் செய்தால், ஷார்ட் கட் அமைக்கப்படும். இந்த ஷார்ட்கட் நீக்கப்பட்டாலும், பைல் நீங்கள் சேவ் செய்த இடத்தில், டைரக்டரியில் அல்லது போல்டரில், இருக்கும். ஆனால், இவற்றையும் டெஸ்க் டாப்பில் வைத்து அது குப்பைக் களமாக மாறுவதை ஏன் உருவாக்க வேண்டும். அதற்குப் பதிலாக, இது போல உருவாக்கப்படும் ஷார்ட் கட் ஐகான்களை அப்படியே இழுத்து வந்து டாஸ்க் பாரில் பின் அப் செய்து வைக்கலாம். இதற்கு Pin to taskbar என்பதனைப் பயன்படுத்த வேண்டும்.
மேலே சொன்ன வழிகள் அனைத்தும் பொதுவாகச் சொல்லப்பட்டவையே. இதுவரை டெஸ்க்டாப்பில் மட்டுமே அவசரமாகத் திறக்க வேண்டிய, அடிக்கடி பயன்படுத்த வேண்டிய பைல்களை சேவ் செய்து பழக்கப்பட்டவர்கள், அவர்களுடைய விருப்பத்தின் அடிப்படையில் மேலே சொல்லப்பட்ட வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பைல்களை சேவ் செய்து கொள்ளலாம்.

%d bloggers like this: