குளிர்பானங்களுக்கு ‘குட் பை’ சொல்லிட்டு வெந்நீர் குடித்து நிவாரணம் பெறுங்கள்!

வெறும் தண்ணீர் மட்டுமல்ல; வெந்நீரிலும் மருத்துவ குணம் நிறையவே இருக்கிறது. சிறுநீரகத்தை பாதுகாக்க, தினந்தோறும் மூன்று லிட்டர் தண்ணீர் குடியுங்கள் என்று, தண்ணீரின் மகத்துவம் பற்றி, விழிப்புணர்வு பிரசாரம் நடக்காத இடமே இன்றைக்கு இல்லை.
அதற்கு இணையாக, வெந்நீரும் உடல் நலத்திற்கு உகந்தது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என்கின்றனர், மருத்துவர்கள்.
அப்படியென்ன பலன்களை வெந்நீர் தந்து விடப் போகிறது என, சிந்திப்போருக்காக, சில விஷயங்கள் இதோ:


வடை, பக்கோடா, பூரி என, எண்ணெயில் பொரித்த அயிட்டங்களையோ அல்லது இனிப்புகளையோ சாப்பிட்ட பின் நெஞ்சுக்குள் சிலருக்கு எரிச்சல் தோன்றும். உடனே நாம் எடுப்பது, ‘ஜெலுசில் அல்லது டைஜின்’ மாத்திரைகளை தான். ஆனால், அதெல்லாம் தேவையில்லை. ஒரு டம்ளர் வெந்நீரை எடுத்து, மெதுவாக பருகுங்கள் போதும். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போன இடம் தெரியாது.
* உண்ட பின், சுடச்சுட வெந்நீர் குடித்தால், உடலில் அதிகப்படி சதை போடுவதை தடுக்க முடியும். மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், வெந்நீர் கைகண்ட மருந்து. உடனடி நிவாரணம் நிச்சயம்.
* உடம்பு வலியா? வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடித்தால் போதும். பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு நீங்கி விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்து, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்து விடும்.
* கால் கடுக்க நின்றாலோ, அலைந்து திரிந்தாலோ, கால் பாதங்கள் வலி எடுக்கும். அதற்கும் வெந்நீர் தான் உடனடி மருத்துவம். பெரிய வாளியில், சூடு தாங்கும் அளவுக்கு வெந்நீர் ஊற்றி, அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும். காலில் அழுக்கு இருக்குமானால், வெந்நீரில் கொஞ்சம், ‘டெட்டால்’ ஊற்றுங்கள்; காலில் இருந்த வலியும் போகும்; அழுக்கும் நீங்கும்.
* வெந்நீரில், ‘விக்ஸ்’ அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு, அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பில் இருந்து விடுதலை பெறலாம். திடீரென்று தலை வலிக்கிறது என்றால், உடனே, டீ, காபியை தேடாதீர்கள். ஒரு டம்ளர் வெந்நீர் குடியுங்கள். அஜீரணக் கோளாறு, குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலைவலி ஏற்படலாம்.
* கிராமங்களில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிப்பர். உணவு கட்டுப்பாடு இல்லாமல், அஜீரணக் கோளாறுக்கு ஆளாவோர், சுக்கு வெந்நீரை வாரந்தோறும் அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.
* வீட்டில் பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
* வெயிலில் திரிந்து விட்டு, வீடு திரும்பியதும் தாகத்தை போக்க, ஐஸ் வாட்டர் குடிக்காதீர்கள். சற்று வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்க நல்ல வழி. ஈஸ்னோபோலியா, ஆஸ்துமா போன்ற நோய்கள் இருப்போர், தாகம் எடுக்கும்போதெல்லாம் கண்டிப்பாக, வெந்நீர் தான் அருந்த வேண்டும். விருந்துகளில், செமையாக கட்டி முடித்ததும், கூல் டிரிங்க்ஸ், ஐஸ் கிரீம்ஸ் பக்கம் போகாமல், ஒரு கிளாஸ் வெந்நீர் குடியுங்கள்; உடம்புக்கு நல்லது.
* ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல; வீட்டு உபயோகத்திற்கும் வெந்நீரின் உதவி பெரிது. நெய், எண்ணெய் இருந்த பாத்திரங்களை கழுவும்போது, வெந்நீரில் ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இருக்காது என்பது, பெண்மணிகளுக்கு தெரியாத விஷயமல்ல.
அதுபோலவே தரையை துடைக்கும்போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருந்தால், வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடைத்தால் கிருமிகள் மடியும்.

%d bloggers like this: