மனிதன் மாறி விட்டான்!-11

முகக் குறிப்புகள் மனிதனுக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல. உற்றுப் பார்த்தால், வெகு நாள் கழித்து வந்த எஜமானரைப் பார்த்து நாய் வாலாட்டி சிரிக்கும். பருவத்தில் இருக்கும் பெண் நாயை, பல ஆண் நாய்கள் சிரித்துக்கொண்டே சுற்றி வரும். சிங்கத்தின் ஆக்ரோஷத்தையும் புலியின் உக்கிரத்தையும் முகத்தில் இருந்து அறிந்துகொள்ளலாம். நாம் முறைத்தால், நம்மை முறைத்து சிங்கவால் குரங்குகள் மிமிக்ரி செய்யும். அதாவது, மிருகங்களுக்கும் முகக் குறிப்புகள் உண்டு. ஆனால், மனிதனைப்போல அதிகமாக முக வெளிப்பாடுகளை வேறு எந்த விலங்கும் உணர்த்த முடியாது. ‘2,50,000 குறிப்புகளை மனித முகம் வெளிப்படுத்த முடியும்’ என்கிறார் ரே பேர்ட்விசில் என்ற விஞ்ஞானி.

மனித முகக் குறிப்புகளை முதலில் கண்டறிந்த பெருமை சார்ல்ஸ் டார்வினுக்கே சேரும். ‘மனிதனும் விலங்குகளும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல்’ என்கிற மகத்தான புத்தகத்தை அவர் எழுதினார். உலகம் முழுவதும் பரவியிருந்த ஆய்வாளர்களுக்கு அவர் ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘மனித இனங்கள் பலவற்றிலும் ஒரே மாதிரியான முக உணர்ச்சிகளும் சைகைகளும் இருக்கின்றனவா?’ என்பதைக் குறித்து சில வினாக்களை எழுப்பினார். ஆச்சர்யம் ஏற்படும்போது புருவங்கள் உயர, கண்களும் வாயும் அகலமாகத் திறக்கின்றனவா? வெட்கம் வரும்போது தோலின் நிறம் அனுமதிக்கும்போது கன்னம் சிவக்கின்றதா? ஒன்றைப் பற்றித் தீவிரமாகவும் ஆழமாகவும் சிந்திக்கும்போது, ஒருவனுடைய புருவம் கீழிறங்க கண்ணிமைகளுக்கு அடியில் உள்ள சதை சுருக்கங்கள் அடைகின்றனவா? அந்தக் கேள்விகளுக்கு உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து 36  நபர்களிடம் இருந்து வந்த விடைகளில் இருந்து முகக் குறிப்புகள் பெருவாரியாக ஒத்துப்போவதை முடிவுசெய்தார்.

உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்களையே நாம் அதிகம் விரும்புகிறோம்.  மகிழ்ச்சியான ஒரு செய்தியை அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்களும் பூரிப்பை முகத்தில் வெளிப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.  அப்படி நடக்காதபோது ஏமாற்றம் அடைகிறோம். நம் வெற்றியில் மகிழ்ச்சி கொள்ளாதவர்கள், போலியாகக் கைக்குலுக்குவார்கள். அவர்கள் முகம் பொறாமையைக் காட்டிவிடும். அதனால்தான் ‘முகம் மனத்தின் குறியீடு’ என்கிறது ஆங்கிலப் பழமொழி.

எந்த உணர்ச்சியையும் எப்போதும் காட்டாத சில முகங்கள் உண்டு. அவர்கள் முகமே அப்படி. கோபமா, மகிழ்ச்சியா என்பதை அறியவே முடியாது. கண்களில் உணர்ச்சியோ, முகத்தில் மலர்ச்சியோ, உதடுகளில் சிரிப்பையோ வெளிப்படுத்தாதவர்களை ‘உம்மணாமூஞ்சி’ என்று அழைக்கிறோம். ஆங்கிலத்தில் ‘போக்கர் ஃபேஸ்’ என்பார்கள்.  ஷேக்ஸ்பியர் அப்படிப்பட்ட முகத்தை ‘பிப்ரவரி முகம்’ என்பார். வெயிலோ மழையோ காற்றோ பனியோ இல்லாத மாதம் பிப்ரவரி. இப்படிப்பட்ட முகங்களை உடையவர்களைத் தேடிப்பிடித்து மருந்துக் கடைகளின் முன் உட்கார வைத்து, தூக்க மாத்திரையைக் கேட்டு வருபவர்களிடம் மாத்திரைத் தராமல், அவர்கள் முகத்தை மாத்திரம் ஐந்து நிமிடங்கள் உற்றுப் பார்க்கச் சொன்னால், அவர்களுக்குத் தூக்கம் வந்துவிடும். ஏனென்றால், நம் எதிரே இருப்பவர்களின் முகங்கள் நம்மீது  நம்மையும் அறியாமல் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படித்தான் கொட்டாவி விடுபவர்களைப் பார்த்தால் நம்முடைய மிரர் நியூரான்கள் துடிப்படைந்து, நாமும் அவர்களைப்போலச் செய்கிறோம். மிரர் நியூரான்கள்தான் நம்முடைய நாகரிகத்தைச் செதுக்கியவை என்று குறிப்பிடுவார்கள். கடுமையான திறன்களையும் அறிவையும் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு மனித பண்பாடு மாற்ற இவையே அடிகோலின. 

உணர்ச்சிகளைக் குறைவாக வெளிப்படுத்தப் பழகுவது, தலைமைப் பண்பின் அடையாளம். அளவுடன் புன்னகை, ஏமாற்றத்தைக் காட்டிக்கொள்ளாத முகம், மகிழ்ச்சியை சன்னமாக வெளிப்படுத்தும் சிரிப்பு, கோபம் மின்னலாய்த் தோன்றி மறையும் தோற்றம் ஆகியவை பணியாளர்களிடம் ‘வாழ்வினும் பெரிதாக’ ஒருவரை எண்ண வைக்கும். அபூர்வமாக அவர்கள் காட்டும் புன்னகையும், பூரிப்பும் எதிராளிக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சியை வழங்கும். ஆனால், எந்தப் பெரிய பதவியிலும் இல்லாமலேயே அலுவலகங்களில் சிலர் சகல நேரமும் கடுகடுப்புடன் நடந்துகொள்வதையும், அவர்கள் சிந்துகிற சிரிப்பிலும் சிவப்பு நாடா கட்டப்பட்டிருப்பதையும் பார்க்கலாம். சிலரோ கைதுசெய்து அழைத்துச் செல்லும்போதும் செயற்கையாக சிரித்துக்கொண்டு போவதையும் ‘இது என்னைப் பாதிக்காது’ என்பதுபோல நடப்பதையும்கூட பார்க்கிறோம்.

ஏற்படும் உணர்ச்சிகளை மறைத்து அதற்கு முற்றிலும் மாறான குறிப்பை வெளிப்படுத்தும் கலையில் சில தேர்ந்தவர்கள் உண்டு. நாடகம், நடனம் போன்றவற்றிலும், திரைப்படத்திலும் இதுபோன்ற திறமைசாலிகளே பதக்கங்களையும் பாராட்டுகளையும் பெறுகிறார்கள். வாழ்விலும் இதில் கைதேர்ந்தவர்கள் உண்டு.  ‘முகத்தை வைத்து ஒருவனின் மனத்தை அறிய முடியுமா?’ என்கிற மேக்பத் நாடக வசனம் இப்படிப்பட்டவர்களுக்கே பொருந்தும். ஆனால், இவற்றையும் தாண்டி ஒருவரைப் பற்றிய உண்மையான உள்ளத்தைப் படிக்கும் ஆற்றல் பெற்றவர்களையே எவ்வளவு ஊதியம் கொடுத்தும் உடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று திருவள்ளுவர் குறிப்பறிதலில் தெரிவிக்கிறார். 

ஜேன் டெம்புள்டன் என்கின்ற உளவியல் அறிஞர், மார்க்கெட்டிங் பற்றிய ஒரு கட்டுரையில் விற்பனைப் பிரதிநிதி, வாடிக்கையாளரின் மனத்தை வாசிப்பது எப்படி என சில வழிமுறைகளைக் கொடுத்திருக்கிறார்.

‘ஒரு பொருளைப் பற்றி ஒருவரிடம் காண்பிக்கும்போது பார்வையைத் தாழ்த்தி முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டால், நாம் இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்று அர்த்தம். இயந்திரத்தனமான புன்னகையுடன், தாடையை முன்னுக்குத் தள்ளினால், அந்தப் பொருளில் ஆர்வம் இருக்கிறது என உணரலாம்.  அவருடைய கண்கள் பல வினாடிகள் உங்கள் விழிகளையே பார்த்தவாறு புன்னகைத்தால், அவர் உங்கள் பொருளை வாங்குவது பற்றிப் பரிசீலிக்கிறார் என்று கருதலாம். உங்கள் தலைக்கு நேராக தலையை வைத்துக்கொண்டு இயல்பான புன்னகையுடன் உற்சாகமாக கவனித்தால், விற்பனை படிந்துவிட்டது என்று அறியலாம்.’

சிக்னலில் எதை எதையோ நம்மீது திணிக்க முயற்சி செய்கிறவர்களுக்கு, இவற்றைச் சொல்லிக்கொடுக்கலாம். நாம் எவ்வளவு பார்வையைத் திருப்பினாலும், நம்மை உடும்புப் பிடி பிடித்து உபத்திரவம் செய்பவர்களிடம் இருந்து நமக்கு விடுதலை கிடைக்கும்.

உணர்ச்சியில் துள்ளிக் குதிக்காமல் இருப்பது தலைமைப் பண்புக்கு அவசியம். அதே நேரத்தில் சிடு மூஞ்சியாக இருந்தால், அது சரிப்படாது. முகத்தில் உற்சாகமும் ஆர்வமும் வசீகரமும் இருப்பவர்களே, அவர்களுடைய எண்ணங்களை அடுத்தவர்கள் மீது அம்புகளைப்போல செலுத்த முடியும். எவ்வளவு சாமுத்ரிகா லட்சணம் இருந்தாலும், உணர்ச்சியற்று மரத்துப்போன முகங்கள் மனங்களை ஈர்ப்பது இல்லை!

ஆளுமைத் தேர்வில் முகக் குறிப்புகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. நாம் அதை எதிர்கொள்ளும் சில நிமிடங்களில் எப்படித் தோன்றுகிறோம் என்பதை வைத்தே நம் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. ஆளுமை என்ற தமிழ்ச் சொல்லுக்கு ஆங்கிலத்தில் ‘பெர்சனாலிடி’ என்று பெயர். அது ‘பெர்சனா’ என்கிற கிரேக்க மூலத்தில் இருந்து வந்தது. ‘பெர்சனா’ என்றால் முகமூடி. கிரேக்க நாடகங்களில் ஒவ்வோர் உணர்ச்சியைக் காட்டவும் விதவிதமான முகமூடிகளை அணிந்துகொண்டு நடிப்பது வழக்கம். கோபம் என்றால் சிவப்பு, களங்கமின்மை என்றால் வெள்ளை, பொறாமை என்றால் பச்சை.  அதிக ஒலி, ஒளி சாதனங்கள் இல்லாத காலத்தில் நடிக்கப்படுகிற நாடகங்களில் தூரத்தில் இருப்பவர்களும் புரிந்துகொள்ள முகமூடிகளும், கடைசி வரிசையில் இருப்பவனுக்கும் போய்ச்சேர மிகை நடிப்பும் அவசியமாக இருந்தன. ஒருவகையில் ஆளுமைத் தேர்வு, நாம் எப்படிப்பட்ட முகமூடியை அந்த 30 நிமிடங்களில் அணிந்திருக்கிறோம் என்பது பற்றியே அலசுகிறது. அப்போது காட்டும் உற்சாகமும் ஊக்கமும் ஆர்வமும் பணிவும் நம்பிக்கையும் முக்கியம்.

மாதிரி ஆளுமைத் தேர்வின்போது பம்மிக்கொண்டு பதில் சொல்லி, மாதிரித் தேர்வு முடிந்ததும் பவ்யமாக அறிவுரைக் கேட்டுக்கொண்டு போகிறவர்கள், பின்னர் பணியில் நடந்துகொள்ளும் ‘பக்குவமும்’, அவர்களுக்கு இருக்கும் ‘உலகியல் ரீதியான அறிவும்’ அவர்கள் வெற்றிகரமாக முகமூடியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

%d bloggers like this: