மூளை பலம் அடைய சுட்ட மீன் சாப்பிடுங்க!

மீனில் உள்ள, ‘ஒமேகா-3’ என்ற அமிலமானது, நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தர வல்லது என, பலர் அறிந்திருப்பர். ஆனால், அதை விட சிறப்பான தகவல் ஒன்றை, தற்போது, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அது யாதெனில், வாரம் ஒரு முறை சுட்ட மீன் சாப்பிட்டால், அது மூளைக்கு நல்லது; அது, திறம்பட செயல்பட உதவும் என்பதே. சுட்ட மீனில், ‘ஒமேகா-3’ அமிலம் இருந்தாலும், அதனால், பிரச்னை ஏற்படாது என்றும், ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது:

ஒவ்வொரு வாரமும், சுட்ட மீன் சாப்பிடும் போது, வாழ்க்கையின் பிற்பகுதியில், நினைவுச் சிதைவு பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்.
அத்துடன், மூளையும் பலம் அடையும்.
சுகாதாரத் துறையினர் எடுத்த கணக்கெடுப்புப்படி பார்த்தால், வரும், 2040ம் ஆண்டில், எட்டு கோடி பேர், நினைவுச் சிதைவு நோயால் பாதிக்கப்படலாம்; 52 லட்சம் பேர், நினைவுத் திறன் இழப்பு நோயால் பாதிக்கப்படலாம் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
வரும், 2050ம் ஆண்டில், நினைவுத் திறன் பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை, 1.6 கோடியாக அதிகரிக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. அதனால், மீன் சாப்பிடுவதன் மூலம், இந்த வகை பாதிப்புகளை தவிர்க்கலாம்.
மீனில் உள்ள, ‘ஒமேகா-3’ அமிலத்தால், நோய் எதிர்ப்பு சக்தி கூடி, மூளை பலம் அடையலாம் என, முந்தைய ஆய்வுகளிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, சுட்ட மீன் சாப்பிடுவதன் மூலம், இந்த மகத்துவம் மேலும் அதிகரிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு, ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
‘நாங்கள் சைவர்கள் ஆச்சே, நாங்கள் எப்படி சுட்ட மீன் சாப்பிட முடியும்’ என, சில தரப்பினர் கேட்கலாம். மீனில் உள்ள ஒமேகா -3 அமிலச் சத்து போல, சில வகை விதைகள், பருப்புகள், சில வகை எண்ணெய்களிலும், இந்தச் சத்து உள்ளது. அதைச் சாப்பிட்டால், சைவர்களுக்கு, சுட்ட மீன் சாப்பிட்டதன் பலன் கிடைத்து விடும். கவலை வேண்டாம்!

%d bloggers like this: