ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்: மத்திய அரசு அதிரடி

மதுரை: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உட்பட இந்திய ஆட்சிப் பணியில் உள்ள அதிகாரிகளுக்கு மோடியின் புதிய அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அகில இந்திய பணிகள் 1968 ல் விதி 3 (1)ல் தற்போது புதிதாக 1(ஏ) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பணியாளர் நலத்துறை நேற்று இந்த அறிவிப்பை கெஜட்டில் வெளியிட்டுள்ளது. இதில் அனைத்து அதிகாரிகளும் பின்வரும் 6 குணங்களை கொண்டிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
1. உயர் அறநெறியுடன், நம்பிக்கை, நாணயமும் கொண்டிருக்க வேண்டும்.
2. அரசியல் கட்சிகளிடம் பாரபட்சம் இன்மை,
3. கடமையை செய்யும்போது விதிகள், நியாயங்களை கடைபிடிக்க வேண்டும்.

4. பணியில் வெளிப்படை தன்மை, பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
5. பொதுமக்களை குறிப்பாக பெண்கள், நலிந்த பிரிவினரை முறையாக நடத்த வேண்டும்.
6. பொதுமக்களுடன் நல்லுணர்வு, நற்பண்புகளை பேணிக் காக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கான நற்பண்புகளை அறிவுறுத்தியுள்ளனர்.

இதுதவிர விதி 3 (2)ல் புதிதாக 2 (ஏ) என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டு, அதிகாரிகள் செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை பற்றி விளக்கப்பட்டுள்ளது.
1. இந்திய அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை மதிப்பதில் உறுதியுடன் இருக்க வேண்டும்.
2. இந்திய ஒற்றுமை மற்றும் தேச பாதுகாப்பு, பொது அமைதி, நாகரிகம், நட்புறவை கடைபிடிக்க வேண்டும்.
3. பொதுப் பணியில் நாணயத்தை கடைபிடிக்க வேண்டும்.
4. பணியில் முடிவெடுக்கும்போது, அது பொதுநலனுக்கு உகந்ததாகவும், பொது பணம், நிலம் போன்றவற்றை பயன்படுத்தும்போது அதுபொது நலன் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும்.
5. ஒரு பிரச்னையில் தனிப்பட்ட ஆர்வம் இருந்தால், அதை வெளிப்படையாக தெரிவித்து, அதில் உள்ள குறைகளை களைவதுடன், அது பொது நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
6. தனிப்பட்ட நபர் அல்லது நிறுவனத்துடன் நிதி அல்லது வேறு நலனை வைத்துக் கொண்டு, அது அலுவலக பணியில் பாதிப்பு அல்லது தாக்கத்தை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
7. அதிகாரிகள் எடுக்கும் முடிவால், நிதி அல்லது வேறு பயனை, அவரது குடும்பமோ, உறவினரோ, நண்பரோ பெறுவது போன்று செயல்படக் கூடாது.
8. முடிவு எடுக்கும்போது பலவற்றையும் அலசி ஆராய்ந்து, சிறந்த முடிவை நியாயத்தின் அடிப்படையில் எடுக்க வேண்டும்.
9. செயல்பாடுகளில் நியாயமாக, பாரபட்சமற்றதாக நடந்து, ஏழைகள் மற்றும் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டோர் யாரையும் ஒதுக்கி வைக்கக் கூடாது.
10. ஏற்கனவே உள்ள சட்டம், விதிமுறை, ஒழுங்குமுறைகள், நடைமுறைக்கு எதிராக எந்த செயலையும் செய்யக் கூடாது.
11. சட்டப்படி தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து ஆணைகளையும், முறையாக செயல்படுத்த வேண்டும்.
12. தன் கடமையை செய்யும்போது, ரகசியத்தை காக்க வேண்டும். நம் நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பு, அறிவியல், பொருளாதார நலனுக்கு உகந்ததாக
செய்ய வேண்டும். அது வெளிநாடுகளின் நட்புறவை பாதிக்காதவாறு இருக்க வேண்டும்.
13. அனைத்து திறமைகளையும் முழுமையாக தனது பணியில் செயல்படுத்திட வேண்டும்.இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஆக., 6ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசின் கெஜட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

%d bloggers like this: