மிஸ்டர் கழுகு: ‘சந்திரபாபு நாயுடு ஆகிறார் ஸ்டாலின்!’

பாரத ரத்னா விருது பற்றிய சர்ச்சைகளில் இருந்து ஆரம்பித்தார் கழுகார்!

”இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’ பலத்த சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லியில் ஒரு தகவல் கிளப்பியது. ஐந்து பாரத ரத்னா விருதுகளுக்கான காயின்களை செய்யச் சொல்லி மத்திய அரசு ஆர்டர் கொடுத்திருப்பதாக செய்திகள் கசிந்தன. ‘ஐந்தா..? அது எப்படி முடியும். இப்போது இருக்கும் நெறிமுறைகளின்படி, ஒரு ஆண்டுக்கு மூன்று பாரத ரத்னா விருதுகளுக்கு மேல் கொடுக்க முடியாதே!’ என சில மூத்த பத்திரிகையாளர்கள் ‘லா’ பாயின்ட் பேச… ‘அதெல்லாம் தெரியாதுப்பா… அரசு உத்தரவு போட்டுவிட்டது. சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி பாரத ரத்னா விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவார்’ என்று அவர்களுக்குப் பதில் கிடைத்திருக்கிறது. அதுதான் சர்ச்சைகளுக்குக் காரணம்?”

”யார் அந்த ஐந்து பேர்?”

”முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் உறுதியாகிவிட்டதாக டெல்லித் தகவல்கள் சொல்கின்றன. பிரதமர் மோடியின் ஆசான் அவர். அதனால் அவருக்குத் தரப்படுகிறது. மற்றவர்கள் யார் என்பதை அரசு இரும்புத் திரைப்போட்டு மூடி வைத்திருக்கிறது. ‘பாரத ரத்னா விருதுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது’ என்று ஒரு செய்தி வந்தது. அதே வேகத்திலேயே சுபாஷ் சந்திரபோஸின் உறவினர் ஒருவர், ‘இந்த விருதுகள் எதுவும் நேதாஜிக்கு எந்த மரியாதையும் கொடுக்காது. தயவுசெய்து அவரை உங்கள் அரசியலில் இழுக்காதீர்கள்’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்த சந்தடியில் பலரும் சிந்துபாட ஆரம்பித்துள்ளார்கள்!”

”அது என்ன?”

”மகாராஷ்டிரா, அரியானா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் தேர்தல் வரப்போகிறது. ‘தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் கன்ஷிராம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின்  நிறுவனர் சையத் அஹமத் கான் ஆகிய இருவருக்கும் பாரத ரத்னா தரவேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.  இந்தக் கட்சியின் செய்தி தலைவர்களான மனிஷ் திவாரியும் ரஷீத்தும், ‘வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பாரத ரத்னா கொடுக்கப்பட இருக்கிறது என்றால், கோபாலகிருஷ்ண கோகலே, பகத் சிங், ராஜ்குரு, லாலா லஜபதிராய் ஆகியோருக்கும் பாரத ரத்னா கொடுக்கப்பட வேண்டும்’ என்று ஒரு பட்டியலை வைத்திருக்கிறார்கள். என்.டி.ராமாராவ் தொடங்கி, ராம் மனோகர் லோகியா வரை பல பெயர்களைக் கொண்ட பட்டியல் வாசிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும், வேறு வேறு பெயர்களைச் சொல்லி, பாரத ரத்னா தரவேண்டும் என்று கோரிக்கை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். போகிற போக்கைப் பார்த்தால் பாரத ரத்னா பட்டம் பெருமைகளை விதைப்பதைவிட சர்ச்சைகளுக்குத்தான் அதிகம் வித்திடும்போல!” என்ற கழுகார், ”டெல்லியில் அ.தி.மு.க அடைந்த பெருமையைச் சொல்கிறேன்” என்று பீடிகை போட்டார்!

”நாடாளுமன்றத்தின் கீழ்த்தளத்தில் அ.தி.மு.க-வுக்கு அறை கிடைத்துவிட்டது!”

”அது என்ன அவ்வளவு பெரிய விஷயமா?”

”இதுவரை இல்லாத விஷயம் என்றால் பெரியதுதானே! நாடாளுமன்றத்தின் கீழ்த்தளப் பாதையில்தான் பிரதமர், மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை சபாநாயகர், சில முக்கியமான அமைச்சர்களின் அலுவலகங்கள் உள்ளன. பெரிய கட்சிகளான பி.ஜே.பி-க்கும் காங்கிரஸுக்கும் இங்கு அலுவலகங்கள் இருக்கின்றன. மற்ற கட்சிகளுக்கு இரண்டாவது, மூன்றாவது தளங்களில்தான் அறைகளை ஒதுக்கீடு செய்வார்கள். இப்போது அ.தி.மு.க-வுக்கும் கீழ்த்தளத்தில் இடம் ஒதுக்கீடு செய்துள்ளார்கள். 37 இடங்களை அ.தி.மு.க பெற்றதால் இந்த அங்கீகாரம் தரப்பட்டுள்ளதாம். ‘தி.மு.க 1999 முதல் மத்தியில் ஆளும் கட்சியில் அங்கம் வகித்தது. ஆனால், அவர்களால் கீழ்த்தளத்தில் அறையைப் பெற முடியவில்லை. நாங்கள் பெற்றுள்ளோம்’ என்று அ.தி.மு.க உறுப்பினர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்!”

 

”அ.தி.மு.க-வுடன் நல்ல நட்பு பாராட்ட நினைக்கிறது பி.ஜே.பி என்று சொல்லலாமா?”

”இரண்டு கட்சிகளும் பரஸ்பர நட்பு கொள்ள நினைப்பதாகவே தெரிகிறது. நாடாளுமன்றத்தில் தயாநிதிமாறனை குறிவைத்து அ.தி.மு.க செயல்பட ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து அவரைப் பற்றிய குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டு இருக்கிறார் மக்களவை அ.தி.மு.க தலைவர் தம்பிதுரை. கடந்த திங்கள்கிழமை அன்று இந்தப் பிரச்னையை ஐந்தாவது தடவையாக எழுப்பினார் தம்பிதுரை. ‘பி.எஸ்.என்.எல் இணைப்புகளை சொந்த பயன்பாட்டுக்கு தயாநிதி மாறன் பயன்படுத்தியதால் அரசுக்கு பல நூறு கோடி இழப்பு ஏற்பட்டுவிட்டது. இதுபற்றி அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?’ என்று கேட்டார். சட்டம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘இதுபற்றி விரிவான அறிக்கையை விரைவில் தாக்கல் செய்வோம்’ என்று வாக்குறுதி அளித்துள்ளார். ‘இந்தக் கூட்டத் தொடருக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வைப்போம்’ என்று அ.தி.மு.க எம்.பி-க்கள் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்!”

”ஓஹோ!”

”தி.மு.க உள்கட்சி விவகாரங்களுக்கு வருகிறேன்! ஸ்டாலினின் நண்பரும் தி.மு.க-வின் அமைப்புச் செயலாளருமான பெ.வீ.கல்யாணசுந்தரம் எழுதிய கடிதம், அவரை கட்சியை விட்டு நீக்கியது தொடர்பாக விரிவான தகவல்களை கடந்த முறையே நான் சொல்லியிருந்தேன். பெ.வீ.கல்யாணசுந்தரத்தை கட்சியைவிட்டு நீக்குவதற்கான அறிவிப்பு தலைமைக் கழகத்தின் சார்பில் அன்பழகன் பெயரில் வெளியானது. அதை வைத்தே பலரும் பலத்த சந்தேகங்களைக் கிளப்புகிறார்கள். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதியை விட்டுவிட்டு ஸ்டாலினை முன்னிறுத்த வேண்டும் என்று சொன்னதுதான் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது கல்யாணசுந்தரம் கையெழுத்தில் எழுதப்பட்ட கடிதத்தில் இருக்கிறது. ‘இதனை பத்திரிகைகளுக்கு நான்தான் கொடுத்தேன்’ என்று கல்யாணசுந்தரமும் சொல்லிவிட்டார். ஆனால், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்கப்பட்ட அறிக்கையில், பட்டும்படாமல் கல்யாணசுந்தரத்தைப் பாதுகாக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.”

”அப்படி என்ன இருக்கிறது அந்த அறிக்கையில்?”

”சொல்கிறேன்! ‘கழக அமைப்புச் செயலாளர் பெ.வீ.கல்யாணசுந்தரம் கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதாக அறிவதால், தி.மு.கழக அடிப்படை உறுப்பினர் உள்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுகிறார்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது. ‘கட்சியில் குழப்பம் ஏற்படுத்தும் வாசகங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டு, அதனை நான்தான் பத்திரிகைகளுக்குக் கொடுத்தேன்’ என்று சொன்ன ஒருவரை, ‘அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதாக அறிவதால்’ என்று எப்படி சொல்ல முடியும்? கட்சிக்கு இது தெரியாதா? ‘அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதால்’ என்றுதானே சொல்லியிருக்க வேண்டும்? இதில் இருந்து, அவரைக் காப்பாற்ற சிலர் செய்யும் முயற்சிகள் தெரிகிறது’ என்று சொல்லி வருகிறார்கள்.”

”அப்புறம்?”

”கருணாநிதியே, ‘முதல்ல நான் பத்திரிகைகளுக்கு அந்த அறிக்கையைத் தரலைன்னு சொன்னாரு. அப்புறமா நான்தான் கொடுத்தேன்னு சொல்றாரு… என்னய்யா தைரியம் இது?’ என்று கேட்டாராம்”

”இந்தக் கடிதத்தின் பின்னணியில் ஏதோ சதி இருப்பதாக சொன்னீரே?”

”கல்யாணசுந்தரம் எழுதியதைப் போலவே இன்னும் சிலரை கடிதம் எழுத வைக்க சிலர் முயற்சி செய்துள்ளார்கள். ஆரம்பமே உல்டா ஆனதால், மற்றவர்கள் அடங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். சிலர் எக்ஸ்ட்ரீமாக பல விஷயங்களை உதிர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ‘என்.டி.ராமாராவ் இருக்கும்போதே சந்திரபாபு நாயுடு கட்சியைக் கைப்பற்றியதுபோல ஸ்டாலின் ஆட்கள் அதற்கான திட்டத்தை வகுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கான முஸ்தீபுகள் தொடங்கிவிட்டன’ என்று சொல்லி வருகிறார்கள். ஸ்டாலினைப் புகழ்ந்தும் கருணாநிதியை விமர்சித்தும் தி.மு.க-வினர் சிலரே இணையதளங்களில் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறார்கள். இவர்களை ஒன்றுசேர்க்கும் காரியங்களை ஸ்டாலினைச் சுற்றியிருக்கும் சிலரே பார்த்து வருகிறார்கள் என்ற தகவலும் கருணாநிதி கவனத்துக்குப் போனது. ‘எவ்வளவோ பார்த்துவிட்டோம் இதைப் பார்க்க மாட்டோமா’ என்ற நிலையில் கருணாநிதி இருக்கிறாராம்!”

”என்ன சொல்கிறாராம் அவர்?”

”மனம்விட்டுப் பேசிவருகிறாராம் கருணாநிதி. ‘ஒவ்வொருவருக்கும் சமமான வாய்ப்புகள்தான் நான் கொடுத்தேன். யார் யார் அதனை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்களோ அவர்களுக்கு எதிர்காலம் சிறப்பாக அமையும். கட்சியில் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியையும் மத்திய அமைச்சர் பதவியையும் அழகிரிக்கு வாங்கிக்கொடுத்தேன். கனிமொழிக்கு எம்.பி பதவியும் இருக்கிறது; கட்சிப் பதவியும் இருக்கிறது. தயாநிதி மத்திய அமைச்சராக இருந்தார். ஸ்டாலினுக்கு இளைஞர் அணிச் செயலாளர் பதவியும் பொருளாளர் பதவியும் இருக்கிறது. துணை முதல்வராக ஆக்கினேன். ‘தலைவர் தேர்தல் வந்தால் ஸ்டாலின் பெயரை நானே முன்மொழிவேன்’ என்றும் சொல்லிவிட்டேன். இதற்கு மேல் என்ன செய்யமுடியும்? நாடாளுமன்றத் தேர்தல் நடத்தும் முழுப்பொறுப்பையும் கொடுத்தேன். வேட்பாளர் தேர்வு முதல் பிரசாரம் வரை திட்டமிடாததால் தோல்விதான் கிடைத்தது. என்னால் எதுவும் செய்ய முடியாது என்பதற்காக இந்தப் பொறுப்புகளைக் கொடுக்கவில்லை. என்னால் செயல்பட முடியும். படுத்துக்கொண்டே ஆட்சியை நடத்தினார் எம்.ஜி.ஆர். பாபா ஆம்தே படுத்துக்கொண்டே பொதுச்சேவை செய்தார். பெரியாரை நாமே பார்த்தோம். அதனால் என்னாலும் சிறப்பாக செயல்பட முடியும்’ என்று சொன்ன கருணாநிதி, இரண்டு பெயர்களைச் சொல்லி அவர்கள்தான் இவ்வளவு சர்ச்சைக்கும் காரணம் என்று சொன்னாராம்.”

”வீட்டுக்குள் இருந்தே வெந்நீர் பாய்ச்சுகிறார்களா?”

”சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் நியமனத்தில் கருணாநிதி தலையிட்டார் என்று சொல்லி சர்ச்சையைக் கிளப்பிய முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, அடுத்து 12 கேள்விகளைக் கிளப்பினார். கருணாநிதியின் அசையும், அசையா சொத்து எவ்வளவு, வங்கி இருப்பு எவ்வளவு, அரசியலில் சேருவதற்கு முன் எவ்வளவு சொத்து இருந்தது, வாரிசுகள் பெயரில் எவ்வளவு இருக்கிறது, மாறன் சகோதரர்கள் மீதான சொத்து விவரம் என்ன என்று 12 விதமான கேள்விகளை கிளப்பியிருந்தார் கட்ஜு. இந்தத் தகவல் கருணாநிதிக்குச் சொல்லப்பட்டதாம். ‘இருக்கிற பிரச்னை போதாதுன்னு இவரு வேற!’ என்று சலித்துக்கொண்டாராம் கருணாநிதி!’

”வைகோவுக்கு என்ன ஆச்சு?”

”கடந்த 8-ம் தேதி காலை 10 மணிக்கு திடீரென்று பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் வைகோ. அங்கிருந்து சில மணி நேரங்களில் அப்பலோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். ‘அவருக்கு நெஞ்சுவலி’ என்று செய்தி பரவியது. 10-ம் தேதி இரவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். நெஞ்சுவலியாக இருந்தால் ஒருநாளில் எப்படி வீட்டுக்குப் போக முடியும்? ‘சர்க்கரை பாதிப்புக்கு உள்ளானவர் வைகோ. லோ சுகர் ஆனதால் மயக்கம் ஏற்பட்டது’ என்கிறார்கள்” என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்!

%d bloggers like this: