மிஸ்டர் கழுகு: போயஸ் கார்டனுக்கு வருவேன்!

”முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் வெற்றி விழாவைக் கொண்டாட முதல்வர் 22-ம் தேதி மதுரைக்குச் செல்ல இருக்கிறார். ஆனால் தென்மாவட்டங்களில் வேறொரு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது” என்று சொல்லியபடியே நம்முன் ஆஜரானார் கழுகார். என்னவென்று நாம் கேட்பதற்குள் அவரே ஆரம்பித்தார்.

”முல்லை பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழக அரசுக்கும் ஜெயலலிதாவுக்கும் மிகப்பெரிய சாதனையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெயலலிதாவுக்குப் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று அமைச்சர்கள் சிலர் தங்களது ஆலோசனையைச் சொல்ல… மதுரை பரபரப்பானது.  ‘இரண்டாம் பென்னிகுயிக்’ என்று அப்போது பட்டம் தரலாம் என்றும் சொல்லப்படுகிறது. அந்த விழாவை கட்சி பேனரில் நடத்தாமல், முல்லை பெரியாறு அணையால் பயன்பெறும் விவசாயிகள் சார்பாக நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.”

”நல்ல யோசனைதான்!”

”விழா மேடைக்கான பூமி பூஜை கடந்த 10-ம் தேதி மதுரை ரிங் ரோட்டில் நடந்தது. அ.தி.மு.க-வினர் மட்டும் பங்கேற்ற அந்த பூஜைக்கு முல்லை பெரியாறு அணைக்காகப் பல போராட்டங்களை நடத்தி, தீவிரமாக செயல்பட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் யாரையும் அழைக்க​வில்லையாம். இதுவாவது பரவாயில்லை. இன்னொரு விஷயத்தை சோகமாகச் சொல்கிறார்கள் விவசாயிகள்!”

”அது என்ன?”

”முல்லை பெரியாற்று நீரால் விவசாயிகள் மகிழ்ச்சியில் மிதக்கிறார்கள் என்று அதற்கு காரணமான முதல்வருக்கு நன்றி சொல்லி பாராட்டு விழா எடுக்கும் அதே நேரத்தில், ‘எங்களுக்கு சரியான நேரத்தில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடுங்கள்’ என்று அதிகாரிகளிடம்  கெஞ்சியபடி இருக்கிறார்கள் பாசன விவசாயிகள். கடந்த 11-ம் தேதி மாவட்ட கலெக்டர் சுப்ரமணியனிடம் பெரியாறு வைகைப் பாசன திட்டக்குழு தலைவர் முருகன், நிர்வாகிகள் அருள்பிரகாசம், முருகன், திருப்பதி ஆகியோர் மனு கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். ‘முல்லை பெரியாறு அணைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பெரியாறில் இப்போது நான்கு டி.எம்.சி தண்ணீர் உள்ளது. பெரியாறு பாசனப் பகுதியில் அமைந்திருக்கும் பேரணை முதல் மதுரை மாவட்டம் கள்ளந்திரி வரை 45 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் உள்ளது. இது இருபோக பாசனப் பகுதியாகும். அதில் முதல் போக பாசனத்துக்கு இன்னும் தண்ணீர் திறந்துவிடவில்லை. நான்கு டி.எம்.சி வருவதற்கு முன்பே, முதல் போகத்துக்கு தண்ணீர் திறந்துவிட அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் என்பது காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. இப்போது அதிகமாக தண்ணீர் வந்தும், திறந்துவிட அதிகாரிகள் மறுக்கிறார்கள். இப்போதைய சூழ்நிலையில் முதல்வர்தான் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்றாலும், அந்தத் தகவலை தெரிவித்து தமிழக அரசுக்கு புரபோஷல் அனுப்ப வேண்டியது அதிகாரிகள்தான். ஏனோ அலட்சியம் காட்டுகிறார்கள்’ என்று புகார் சொன்னார்களாம் அவர்கள்!”

”ஏன் இந்த காலதாமதம்?”

”விவசாயிகளிடம் கேட்​டால், ‘அணை, கண்மாய் மராமத்து, தூர்வாருதல் போன்ற வேலை என்றால் அதிகாரிங்க ஆர்வமா இருப்பாங்க. இது விவசாயி​களோட பிரச்னை என்பதால் அலட்சியமாக இருக்காங்க’ என்கிறார்கள். ‘அதிகாரிகள் அலட்சியம் காட்டவில்லை. தண்ணீர் திறந்துவிடுவதற்கு சில விதிகள் உள்ளன. அதைப் பின்பற்றித்தான் விடவேண்டும். 4 டி.எம்.சி வந்துவிட்டது என்று திறந்துவிட முடியாது. கடந்த ஆண்டு மேலூர் பகுதிக்குத் திறந்துவிட்டு சில பிரச்னைகள் உண்டானது. இன்னும் சில மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்ய ஆரம்பித்துவிடும். அதனால், விவசாயிகளுக்குத்தான் பிரச்னை’ என்று சொல்கிறார் மதுரை மாவட்ட கலெக்டர்.”

”பாராட்டு விழாவுக்கு முன்னதாக எடுக்க வேண்டிய முக்கியமான நடவடிக்கை இது!”

”ஜெயலலிதா அதிகப்​படியான சந்​தோஷத்தில் இருக்​கிறார். மத்திய பி.ஜே.பி அரசு தனக்கும் அ.தி.மு.க-வுக்கும் முக்கியத்​துவம் தருவதை நினைத்துத்தான் இந்த சந்தோஷம். நாடாளுமன்றத்தின் கீழ்தளத்தில் அ.தி.மு.க-வுக்கு அறை ஒதுக்கியது பற்றி கடந்த இதழில் சொல்லியிருந்தேன். இதேபோல் எங்களுக்கும் அறை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் கோரிக்கை வைக்கிறது. வடமாநிலக் கட்சிகள் பலதும் இதனை பொறாமையுடன் பார்க்கின்றன. அனைவருக்கும் ஏக்கம் வரவைக்கும் இந்த முடிவை பி.ஜே.பி எடுத்தது. மத்திய அரசு நினைத்திருந்தால், இதனைத் தராமல்கூட இருக்கலாம். இந்த நிலையில்தான் துணை சபாநாயகர் பதவியை எடுத்துக்கொள்ள அ.தி.மு.க-விடம் பி.ஜே.பி-யில் இருந்து அமித் ஷா பேசினார். ஆட்சிக்கு வந்த புதிதிலேயே இந்தப் பேச்சுவார்த்தை கிளம்பியது. அப்போது ஜெயலலிதா, ‘எந்தப் பொறுப்புமே வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார். அதனால் பி.ஜே.பி இதில் முடிவெடுக்க முடியாமல் இருந்தது. கடந்த வாரத்தில் மீண்டும் இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. அப்போதும் ஜெயலலிதாவுக்கு சொல்லப்பட்டது. ‘துணை சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடலாம்’ என்றும் தகவல்கள் வந்தன. ‘போட்டி இருக்குமானால் நிற்க வேண்டாம்’ என்று ஜெயலலிதா நினைத்தாராம். ‘எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து தர மறுக்கிறது பி.ஜே.பி. அவர்களிடம் போய் துணை சபாநாயகர் பதவிக்கு கெஞ்சத் தேவையில்லை’ என்று சோனியா சொல்லியிருக்கிறார். அதனால், காங்கிரஸ் மேலிடம் அதைப்பற்றி பேசவே இல்லை. காங்கிரஸ் இதுபற்றி கவலைப்படவில்லை என்று தெரிந்ததுமே ஜெயலலிதா அதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.

‘துணை சபாநாயகர் பொறுப்பை ஏற்றுக்கொள்​வது என்பது மத்திய அரசில் அங்கம் வகிப்பதற்கு சமம்தான்’ என்று சொல்லப்பட்டது. ‘அதனால் என்ன?’ என்ற யோசனையில்தான் ஜெயலலிதா இதற்கு ஒப்புக்கொண்டாராம். ‘இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட உடனேயே அறிவிப்பை செய்துவிட வேண்டும். கால அவகாசம் கொடுத்தால் காங்கிரஸ் உஷாராகி ஏதாவது முயற்சிகள் செய்துவிடும்’ என்று மோடி சொல்லியிருக்கிறார். அதனால்தான் 12-ம் தேதி இதற்கான முஸ்தீபுகள் தொடங்கி 13-ம் தேதி மதியம் துணை சபாநாயகராக தம்பிதுரை தேர்வாகிவிட்டார்.”

”ஓஹோ!”

”ஒருமனதாக தம்பிதுரை தேர்வு செய்யப்பட்டார் என்ற தகவல் வந்ததுமே, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா போன் செய்தார். ‘ஏகமனதாக தேர்வு செய்யப்படுவதற்கு ஒத்துழைப்பு தந்ததற்கு நன்றி’ என்று சொன்னாராம் ஜெயலலிதா. ‘துணை சபாநாயகர் பொறுப்பை அ.தி.மு.க ஏற்றுக்கொண்டதற்காக நன்றி’ என்று மோடி சொல்லியிருக்கிறார். சம்பிரதாயமான பேச்சுதான் என்றாலும் மோடி – ஜெயலலிதா நல்லுறவுக்கு இது அடித்தளம் அமைத்ததாகச் சொல்கிறார்கள். இதில் சிலர் சிக்கல் உண்டாக்கவும் பார்த்தார்கள்!”

”அப்படியா?”

”டெல்லி பி.ஜே.பி தலைமை வட்டாரத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் எதிரி ஒருவர், ‘அ.தி.மு.க-வுக்கு துணை சபாநாயகர் பதவி தரவேண்டாம்’ என்று தடங்கல் போட்டுள்ளார். ஆனால், அதனை கட்சி மேலிடம் மதிக்கவில்லை. ‘அவர் டெல்லியில் உட்கார்ந்துகொண்டு நிறைய தடங்கல் செய்கிறார். அவரைக் கண்டித்து அறிக்கை விடுங்கள்’ என்று முதல்வருக்கு சொல்லப்பட்டது. ‘அவரை பெரிய ஆளாக ஆக்க நான் விரும்பவில்லை. அவரது குணம் என்ன என்பதை, அவர்களே சில நாட்களில் தெரிந்துகொள்வார்கள். நாம் எதுவும் செய்ய வேண்டாம்’ என்றாராம் முதல்வர்!”

”சரியான லாஜிக்தான்!”

 

”தி.மு.க விஷயங்களுக்கு வருகிறேன்! கிளைக் கழக நிர்வாகிகள் வரைக்கும் இறங்கிப்போய் கருத்துகளைக் கேட்க ஆரம்பித்துள்ளார் மு.க.ஸ்டாலின். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குள் மாவட்டச் செயலாளர்களை அனுமதிப்பது இல்லை.”

”உள்ளே என்ன நடக்கிறதோ என்று பயந்து போய்​விட்டார்களா அவர்கள்?”

”அதுதான் இல்லை என்கிறார் ஒரு நிர்வாகி. ‘உள்ளே யாரை அனுமதிக்கலாம், யாரை அனுமதிக்க வேண்டாம் என்பதையே மாவட்டச் செயலாளர்கள்தான் தீர்மானிக்கிறார்கள், பிறகு எப்படி பயப்படுவார்கள்?’ என்கிறார் அந்த நிர்வாகி. மாவட்டச் செயலாளர்களுக்கு எதிரணியில் இருக்கும் நிர்வாகிகள் சுதந்திரமாக கருத்துக்களைச் சொல்லிவருகிறார்களாம்.”

”கட்சித் தேர்தல் தொடங்கிவிட்டதே?”

”ஆமாம்! தி.மு.க தலைமைக் கழகம் வெளி​யிட்டுள்ள அறிவிப்பு ஒன்று மாவட்டச் செயலாளர்களை கதிகலங்க வைத்துள்ளது. தனக்கு வேண்டாதவர்களை போட்டியிட விடாமல் தடுக்க, சம்பந்தப்பட்டவரை வேட்புமனு தாக்கல் செய்யவிட மாட்டார்கள். எங்கோ ஒரு நகரத்தில் இது நடக்கும்போது, தலைமையாலும் தடுக்க முடியாது. ஆனால், இந்தமுறை ஒரு வசதியை செய்துவிட்டார்கள். உள்ளூரில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத சூழ்நிலை நிலவுமானால், அவர்கள் தலைமைக் கழகத்துக்கு வந்து வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்பதே புதிய வழிமுறை. இதனால், பலரும் ரயில் ஏறிவந்து அண்ணா அறிவாலயத்தில் மனு தாக்கல் செய்கிறார்கள். விழுப்புரம் மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் பொன்முடி, எதிர்கோஷ்டியினருக்கு பதவிகளைப் பங்கிட்டுத்தர மறுக்கிறாராம். நான் சொன்னவர்கள்தான் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கறாராக சொல்லிவிட்டாராம். அதனால், அவருக்கு எதிரான புஷ்பராஜ் கோஷ்டி வேன்களை பிடித்துக்​கொண்டு சாரை சாரையாக தலைமைக் கழகம் வந்துவிட்டதாம். அதேபோல் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிலரும் அறிவாலயம் வந்துவிட்டார்கள். இவர்களை வேட்புமனு தாக்கல் செய்ய விடக்கூடாது என்று தடுக்க சிலர் பதுங்கி இருந்து அடித்ததாகவும் சொல்லப்படுகிறது.”

”ஆரம்பம் ஆகிவிட்டதா?”

”இனிதான் ஆக்ரோஷம் ஆகப்போகிறது. கடலூர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், லாகவமாக இந்தப் பிரச்னையை முடிக்க நினைத்திருக்கிறாராம். பல ஆண்டுகளாக இருந்தவர்களை விலக வைத்து, புதிதாக உருவாக்கப்பட்ட பகுதிகளை எதிர் கோஷ்டிக்கு தாரைவார்த்து அமைதியாக முடிக்கப் பார்க்கிறாராம். திருவண்ணாமலை மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வேலு, எதிர் கோஷ்டிகள் அனைவரையும் ஓர் அறைக்குள் கூட்டிவைத்து பங்கு பிரித்துவிட்டாராம். இப்படிப் பலரும் கமுக்கமாக முடிக்க… விழுப்புரத்தில் மட்டும்தான் விம்மல் அதிகமாகக் கேட்கிறது.”

”இப்படித்தான் ஒவ்வொரு மாவட்டத்​திலும் ஆரம்பம் ஆகும்!”

”புதிய அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஆர்.எஸ்.பாரதி, அவரது பொறுப்பை ஏற்பதற்கு நேரம் குறிக்கப்பட்டது. ஸ்டாலின் அந்த நேரத்துக்கு வந்து பாரதியை அவரது அறையில் உட்கார வைப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது, கருணாநிதியே திடீர் என்ட்ரி கொடுத்தார். அனைவருக்கும் ஆச்சர்யம். அதைவிட இன்னொரு அதிர்ச்சி!”

”அது என்ன?”

”சமீப காலமாக அறிவாலயத்துக்கு அதிகம் வராத கருணாநிதி, இப்போது தொடர்ந்து வர ஆரம்பித்துவிட்டார். கடந்த வாரத்தில் ஒருநாள் இரவு 8.45 மணி வரைக்கும் இருந்தார். ‘பல ஆண்டுகளுக்கு முன்புதான் இரவு 9 மணி வரைக்கும் அறிவாலயத்தில் கருணாநிதியை காணலாம். அந்த மாதிரி உற்சாகப் பயணத்தை தொடங்கிவிட்டாரா தலைவர்?’ என்று அவரது விசுவாசிகள் மகிழ ஆரம்பித்துள்ளார்கள்!”

”ம்!”

”கருணாநிதியைப் பார்க்க, அழகிரியின் மகன் துரை தயாநிதி வந்தாராம். ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தாராம் கருணாநிதி. ‘போயஸ் கார்டன்ல இருக்கிறதுனால இங்க வராம இருக்கியா?’ என்றாராம் கருணாநிதி. துரை தயாநிதி வீடு போயஸ் கார்டன் ஏரியாவில் இருக்கிறது. தாத்தாவை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார் பேரன். ‘போயஸ் கார்டனுக்கு நிச்சயம் வருவேன்’ என்று கிண்டலாகச் சொன்னாராம் கருணாநிதி!” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார்,

”2ஜி வழக்கில் சம்பந்தப்பட்டு தற்கொலை செய்துகொண்ட சாதிக் பாட்ஷாவின் மனைவியின் மனக்குமுறல் கடிதம் பற்றி சில இதழ்களுக்கு முன் நான் சொல்லியிருந்தேன் அல்லவா? தனது பிரச்னைகளை சட்டரீதியாக சந்திப்பதற்கு அவர் களத்தில் குதித்துவிட்டார். ‘என் கணவரால் உருவாக்கப்பட்ட கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தைத் திட்டமிட்டு சீர்குலைக்க நினைக்கிறார்கள். எனக்கான பங்குகளை தராமல் ஏமாற்றுகிறார்கள்’ என்று கம்பெனி லா போர்டுக்கு போய்விட்டார் அவர். விவகாரம் சீரியஸாக ஆகிவிட்டது. இதனை சி.பி.ஐ-யும் அமலாக்கத் துறையும் உன்னிப்பாக கவனிக்கிறது” என்று சொல்லிப் பறந்தார்!

%d bloggers like this: