இன்னும் எத்தனை மனுக்கள்தான் கொடுப்பீர்களோ? ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு… நீதிபதி குன்ஹா கோபம்

”இந்த வழக்கின் இறுதி வாதம் 40 நாட்களைக் கடந்தும் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்” – பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பு இறுதி வாதங்கள் நீண்டுகொண்டே போவதால், அந்த வழக்கை விசாரித்துவரும் நீதிபதி குன்ஹா இப்படி எச்சரிக்கை செய்துள்ளார்.

கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் வாதம் செய்துவிட்டு போன சுதாகரன், இளவரசி தரப்பு வழக்கறிஞரான மும்பையைச் சேர்ந்த அமீத் தேசாய், மீண்டும் இந்த வாரம் இரண்டு நாட்கள் தன் வாதத்தை எடுத்து வைத்துவிட்டு மும்பைக்குக் கிளம்பிச் சென்றார். இவருக்கு உதவியாக செந்தில், அசோகன், அன்புக்கரசு, பன்னீர்செல்வம் ஆகிய வழக்கறிஞர்கள் இருந்தார்கள்.

அமீத் தேசாய் வாதத்தில் இருந்து…

கூட்டுச்சதியில் ஈடுபடவில்லை!

”ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமான சொத்துகளைச் சேர்க்க எந்தெந்த வகையில் என் மனுதாரர்கள் குற்றம் செய்ய தூண்டுதலாக இருந்தார்கள் என்று புலன் விசாரணை அதிகாரிகள் தகுந்த ஆதாரங்களோடு நிரூபிக்கவில்லை. அதனால், என் மனுதாரர்கள் கூட்டுச்சதி செய்துள்ளதாக கூறுவது உண்மைக்குப் புறம்பானது. 120 பி பிரிவில் வழக்குப் பதிவுசெய்யும்போது என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று, மும்பை வெடிகுண்டு வழக்கில் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தவரை கூட்டுச்சதி செய்ததற்கான சாட்சியங்களும் ஆதாரங்களும் கிடையாது. முகமது உஸ்மான், அஜய் அகர்வால், கே.ஆர்.பரசுராமன் வழக்குகளில், கூட்டுச்சதி வழக்கு பதிவுசெய்யும்போது போலீஸார் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளையும் உச்ச நீதிமன்றம் தெளிவாக விளக்கியுள்ளது. ஆனால், அதையெல்லாம் இந்த வழக்கில் கடைப்பிடிக்கவில்லை.”

வரவுகளை வருமானத்தில் சேர்க்காதது நியாயம் அல்ல!

”இந்தச் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த புலன்விசாரணை அதிகாரி நல்லம நாயுடு, ஆரம்பம் முதலே இந்த வழக்கை முறையாக விசாரணை செய்யவில்லை. எங்கள் தரப்பினருக்கு 32 நிறுவனங்கள் சொந்தமானது என்று காட்டியிருக்கிறார்கள். அதில் 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் முகவரியைக்கூட சரியாகக் குறிப்பிடவில்லை. ஒரு நிறுவனத்தைத் தொடங்கியதும் வருமானம் கிடைக்காது. கம்பெனி தொடங்கி ஆறு மாதங்கள், ஒரு வருடம், இரண்டு வருடங்கள், ஐந்து வருடங்கள் ஆன நிலையில்தான், நல்ல வருமானம் கிடைக்கும். அப்படிதான் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள பல நிறுவனங்களுக்கு வழக்கு காலத்தில் வருமானம் வந்தது. அதற்கும் ஜெயலலிதாவுக்கும் சிறிதும் தொடர்பு கிடையாது.

நமது எம்.ஜி.ஆர், சூப்பர் டூப்பர் டி.வி நிறுவனங்கள் மூலம் இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள என் மனுதாரர்களுக்குக் கிடைத்த வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. வருமானங்களைக் காட்டினால் அது என் மனுதாரர்களுக்குச் சாதகமாக அமைந்துவிடும் என்பதால், தவிர்த்துவிட்டார்கள். நமது எம்.ஜி.ஆர் நிறுவனத்துக்கு அரசு விளம்பரங்கள் மூலம் 1,34,00,000 ரூபாய் வருமானம் வந்தது. நல்லம நாயுடுவும் வரவு வந்துள்ளது என்று ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், அதை வருமானத்தில் சேர்க்க முடியாது என்று கூறியுள்ளார். இது எந்த விதத்தில் நியாயம்?” 

இளவரசிக்கு ஆதரவு கொடுத்தார் ஜெயலலிதா!

”என் மனுதாரர் இளவரசியின் கணவர் பெயர் ஜெயராமன். இவர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் வேலை பார்த்தார். அவர் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார். அதனால், இளவரசிக்கு யாரும் ஆதரவு இல்லை என்பதற்காகக்கூட, அவரை தன் வீட்டுக்கு அழைத்து வந்து ஆதரவு கொடுத்திருக்கலாம். ஒரே இடத்தில் இருந்தார்கள் என்பதற்காக, கூட்டுச்சதி செய்தார்கள் என்பது தவறு. அதனால், இந்தக் குற்றச்சாட்டை குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்க வேண்டும்.

 

என் மனுதாரர்கள் வாங்கிய நிலத்துக்கு, வங்கி மூலமாக காசோலைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகையைக் காட்டிலும் நில உரிமையாளர்களுக்கு ரொக்கமாக நிறையத் தொகைகள் கொடுக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், அதற்கு எந்தவித ஆதாரங்களையும் காட்டவில்லை. நில உரிமையாளர்கள் தங்கள் சாட்சியத்தில்கூட இதுபற்றி எதுவும் கூறவில்லை. ஒருவர் மீது குற்றம் சுமத்தி குற்றப்பத்திரிகை தயாரிப்பதற்கு முன், குற்றம் சுமத்தப்படுபவருக்கு நோட்டீஸ் அனுப்பி நேரில் வரவழைத்து, அவர்களின் வாக்குமூலத்தையும் பதிவுசெய்ய சந்தர்ப்பம் கொடுத்து குற்றப்பத்திரிகை தயாரிக்க வேண்டும். ஆனால், என் மனுதாரர்கள் சுதாகரன், இளவரசி மீது போடப்பட்ட குற்றப்பத்திரிகை பற்றி அவர்களுக்குத் தெரியாது. என் மனுதார்களிடம் இதுபற்றி கேட்கவும் இல்லை. அதனால் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டங்களை நல்லம நாயுடு மீறியுள்ளார்.”

இவ்வாறு அமித் தேசாய் வாதங்களை முன் வைத்தார்.

நீதிபதியின் கோபம்!

அமீத் தேசாய் அன்றைய தன் வாதத்தை முடித்துவிட்டு, ”இன்னும் என் வாதங்கள் முடியவில்லை. எனக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் பல வழக்குகள் இருப்பதால், அடுத்த வாரம் மீண்டும் வந்து என் வாதத்தைத் தொடர்கிறேன்” என்றதும் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா, ”என்ன… அடுத்த வாரமா? தொடர்ந்து கோர்ட்டில் வாதங்கள் நடைபெறும். அடுத்த வாரத்தில் எல்லா வாதங்களும் நிறைவு பெற்றுவிடும்” என்றார்.

”சென்னையில் ஒரே நாளில் உங்கள் தரப்பு வாதத்தை முடித்தீர்கள். இங்கு 2013-ம் ஆண்டு, உங்கள் தரப்பின் அனைத்து வாதத்தையும் 13 நாட்களில் முடித்துள்ளீர்கள். ஆனால், இப்போது 40 நாட்கள் தாண்டியும் இங்கு முடித்தபாடில்லை. அரசுத் தரப்பு வழக்கறிஞர் 15 நாட்கள் வாதம் செய்தார். ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் 25 நாட்களும், சசிகலா வழக்கறிஞர் மணிசங்கர் வாதம் ஆறு நாட்களைத் தாண்டி இன்னும் நீடித்து வருகிறது. நீங்கள் நான்கு நாட்கள் வாதம் செய்துள்ளீர்கள். 40 நாட்களுக்கு மேல் இறுதி வாதங்கள் நடைபெற்றுள்ளது. இன்னும் எத்தனை நாட்களுக்கு வாதத்தை நடத்துவீர்கள்? இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்” என்றார். 

மொழிமாற்ற புதிய மனு!

அமீத் தேசாயின் வாதங்களுக்கு இடையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பன்னீர்செல்வம், ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்தார். அதில், ”கடந்த 1997-ம் ஆண்டு தமிழில் இருந்த குற்றப்பத்திரிகை அறிக்கை, ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், அந்த மொழிமாற்றம் சரியானதாக இல்லை. அதனால், சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி தியாகராஜன் மூலமாக, நாங்கள் அந்த குற்றப்பத்திரிகையை சரியாக ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்துள்ளோம். நீதிமன்றத்தில் உள்ள மொழிபெயர்ப்பாளர் மூலம் ஆய்வுசெய்து, அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்ற ஒரு புதிய மனு நீதிபதியிடம் கொடுக்கப்பட்டது. 

அதை பெற்றுக்கொண்ட நீதிபதி குன்ஹா, இது தொடர்பாக ஆட்சேபனை இருந்தால், மனு தாக்கல் செய்யும்படி அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங்கிடம் கூறினார். மறுநாள் பதில்மனு தாக்கல் செய்வதாக பவானி சிங் கூறினார்.

தேவையில்லாத பதில் மனு இது!

மறுநாள் பவானி சிங் தாக்கல் செய்த பதில் மனுவில், ”1997-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தமிழில் இருந்து ஆங்கிலத்தில் சரியாகத்தான் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிதான் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அவருக்கு தமிழும் ஆங்கிலமும் நன்றாக தெரிந்ததால்தான், தமிழில் இருந்த இந்தக் குற்றப்பத்திரிகையை அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். அதனால், இந்த புதிய மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதுவும் இந்த வழக்கு இறுதிகட்டத்தில் இருக்கும்போது, குற்றவாளிகள் தரப்பில் தேவையில்லாமல் இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்கள்” என்றார். அந்த பதில் மனுவைப் பார்வையிட்ட நீதிபதி அந்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில்  ஜெயலலிதா சார்பாக தனியாக ஒரு மனுவும், சசிகலா,  சுதாகரன்,  இளவரசி மூன்று பேர் சார்பாக தனியாக ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்த மனுவில், ‘மற்ற குற்றவாளிகளோடு சேர்ந்து கூட்டுச்சதி செய்ததற்கான எந்த ஆதாரமோ, சாட்சியமோ கிடையாது. அதனால், குற்றப்பத்திரிகையில் இருந்து, கூட்டுச்சதியில் ஈடுபட்டார் என்ற குற்றத்தை நீக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மற்ற மூன்று பேர் சார்பில் தாக்கல் செய்த மனுவில், ‘ஜெயலலிதாவோடு சேர்ந்து வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைச் சேர்த்த குற்றச் செயலுக்கு நாங்கள் எந்தவிதத்தில் தூண்டுதலாக இருந்தோம் என்பதையும், எந்தெந்த சொத்துகள் கூட்டுச்சதி திட்டம் தீட்டி வாங்கப்பட்டது, எப்படி கூட்டுச்சதி செய்தோம் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் சாட்சியமும் நிரூபிக்கப்படாததால் இந்தக் குற்றச்சாட்டுகளைக் குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுக்களைப் பெற்றுக்கொண்ட நீதிபதி, ”இன்னும் எத்தனை மனுக்கள்தான் கொடுக்கப்போகிறீர்கள் என்பதை நானும் பார்க்கப்போகிறேன்” என்று சற்று காட்டமாகவே சொன்னார்.

இந்த வழக்கு இன்னும் என்னென்ன திருப்பங்களைச் சந்திக்குமோ?

ஒரு மறுமொழி

  1. One thing I’d really like to say is that often before purchasing more pc memory, look at the machine in which it would be installed.
    If the machine is definitely running Windows XP, for instance, a memory limit is 3.25GB.
    The installation of more than this would purely constitute any waste.
    Make certain that one’s mother board can handle the actual
    upgrade amount, as well. Good blog post.

%d bloggers like this: