மிஸ்டர் கழுகு: பாவமாக பலவீனமாக…

கழுகார் உள்ளே நுழைந்ததும், கடந்த 15-ம் தேதி கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் கொடியேற்றிய நிகழ்ச்​சியின் புகைப்படத்தைக் கேட்டு வாங்​கினார். உற்றுப் பார்த்துவிட்டு நம்மிடம் திருப்பிக் கொடுத்துவிட்டுப் பேச ஆரம்பித்தார்!

”விஜயகாந்த் ஹெல்த் பற்றி தே.மு.தி.க தொண்டர்கள் தேம்ப ஆரம்பித்துள்ளார்கள். முக்கிய நிர்வாகிகள்கூட அவரை தனித்துப் பார்க்க அனுமதி தரப்படாததால், வருத்தமும் வதந்தியும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. சிங்கப்பூரில் இருந்து வந்த விஜயகாந்த் விமானத்தில் இருந்து இறங்கி வீல் சேரில்தான் வெளியில் வந்தார் என்பதை ஏற்கெனவே நான் சொல்லியிருந்தேன். இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று அவர் வெளியே வர இருப்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது!”

”சொல்லும்!”

”சிங்கப்பூர் மருத்துவமனையில் இருந்து சென்னை திரும்பிய பிறகு, யாரையும் சந்திக்காமல் இருந்தார் விஜயகாந்த். எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் என்று பலரும் விஜயகாந்த்தை பார்த்து நலம் விசாரிக்க நேரம் கேட்டனர். அவருடைய மைத்துனர் சுதீஷ், ‘இப்போ கேப்டனை யாரும் பார்க்க வர வேண்டாம். அவர் முழுக்க முழுக்க ஓய்வில் இருக்கணும்னு டாக்டர்கள் சொல்லியிருக்காங்க. அவரே கூடிய சீக்கிரம் உங்களைச் சந்திப்பார்!’ என்று மறுத்து வந்தார். விஜயகாந்த் வீட்டுக்கு அருகில்தான் பி.ஜே.பி தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வீடு இருக்கிறது. தமிழிசையும் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவும் அடிக்கடி சந்தித்துப் பேசுவார்கள். ‘கேப்டனைப் பார்க்க நாங்க வீட்டுக்கு வர்றோம்!’ என்று தமிழிசை கேட்டாராம். பிரேமலதாவோ, ‘இப்போ வேண்டாம். அவர் கொஞ்சம் சரியானதும் நானே உங்களை வீட்டுக்குக் கூப்பிடுறேன். தப்பா நினைச்சுக்காதீங்க!’ என்று அன்போடு மறுத்துவிட்டாராம். கூடங்குளம் போராட்டக் குழுவினர் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார்கள். அவர்களும் விஜயகாந்த்தைப் பார்க்க நேரம் கேட்டார்கள். ‘கேப்டன் கோயம்புத்தூரில் ஓய்வில் இருக்கிறார். சென்னையிலேயே இல்லை’ என்று அவர்களுக்குத் தகவல் சொல்லப்பட்டது. இப்படி மாற்றி மாற்றி சொன்ன தகவல்கள் கட்சிக்காரர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழ்நிலையில்தான், ‘எம்.எல்.ஏ-க்களும், மாவட்டச் செயலாளர்களும் சுதந்திர தினத்​தன்று கட்சி அலுவலகத்துக்கு வர வேண்டும். கேப்டன் உங்​களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்!’ என்ற தகவல் போனது.”

”எப்படி இருந்தாராம்?”

”ஆகஸ்ட் 15-ம் தேதி காலை கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்துக்கு விஜயகாந்த் வந்தார். ஒருபக்கம் சுதீஷ், இன்னொரு பக்கம் எம்.எல்.ஏ பார்த்தசாரதி ஆகிய இருவரும் அவரை கைத்தாங்கலாகப் பிடித்து கொடியேற்றும் இடத்துக்கு அழைத்துச் சென்றனர். ஹைட், வெயிட்டான விஜயகாந்த் மெலிந்திருந்தார். புதிய கூலிங்கிளாஸ் போட்டிருந்தார். ‘யாரோ விஜயகாந்த்தின் இளைய தம்பி மாதிரி இருக்கிறது’ என்று ஒருவர் சொல்லும் அளவுக்கு இருந்தாராம். பழைய வேகம் இல்லை. கொடியேற்றியதும் பார்த்தசாரதி மட்டும் விஜயகாந்த்தின் ஒரு கையைப் பிடித்தபடி கூட்ட அரங்கத்துக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார். அனைவரும்  எழுந்து விஜயகாந்த்துக்கு அருகே வர முயற்சிக்க… சுதீஷ்தான் எல்லோரையும் அமைதிப்படுத்தி உட்கார வைத்துள்ளார்.”

”யாரெல்லாம் பேசினாங்க?”

”யாரையும் பேசவிடவில்லை. உள்​ளே வந்ததுமே விஜயகாந்த் மைக்கை வாங்கிக்கொண்டார். ‘உங்களை எல்லாம் பார்த்ததுல ரொம்ப சந்தோஷம். என்னை எல்லோரும் பார்த்துகிட்டீங்களா… நான் நல்லா இருக்கேன். எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. உங்களை எதுக்கு நான் இன்னைக்கு வரச் சொன்னேன் தெரியுமா? இங்கே இருக்கும் நீங்க எல்லோரும் இனி ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரம் பேரை உறுப்பினர்களாக சேர்க்கணும். அப்போதான் 2016-ல் நாம ஆட்சியைப் பிடிக்க முடியும். இதை சொல்றதுக்குதான் நான் உங்களை வரச் சொன்னேன். எல்லோரும் கிளம்புங்க!’ என்று சொல்லிவிட்டு பார்த்தசாரதியைப் பார்க்க… அவர் விஜயகாந்த்தின் கையைப் பிடிக்க… நகர்ந்து சென்று காரில் ஏறி கிளம்பிவிட்டார் விஜயகாந்த்.”

”அவ்வளவுதானா ஆலோ​சனை?”

”அவ்வளவுதான் விஜயகாந்த்​தால் முடிந்தது என்கிறார்கள் நிர்வாகிகள். ‘கேப்டனை பார்க்கவே எங்​களுக்குப் பரிதாபமாக இருந்தது’ என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலருக்கு வருத்தம். ‘இதைச் சொல்றதுக்குதான் இவ்வளவு தூரம் வரச் சொன்னாரா? ரோபோ மாதிரி வந்தாரு… அவராகவே நாலு வார்த்தைப் பேசினாரு. ரோபோ மாதிரி திரும்பப் போயிட்டாரு. இதுக்கு வராமலேயே இருந்திருக்கலாமே! இப்படியே போய்ட்டு இருந்தா அது கட்சிக்கு நல்லது இல்லை’ என்று புலம்பியபடியே கிளம்பினார்கள். அவர்களை சமாதானப்படுத்தக்கூட அங்கே யாரும் இல்லை. விஜயகாந்த் கிளம்பியதும் சுதீஷ§ம் கிளம்பிவிட்டாராம். ‘இன்னும் சில மாதங்களுக்கு கேப்டன் ஓய்வில் இருக்க வேண்டும். அதனால அவரை யாரும் தொந்தரவு பண்ணாதீங்க’ என்று தலைமைக் கழக நிர்வாகிகள் சொல்லி வருகிறார்கள்.”

”காத்திருக்க வேண்டியதுதான்!”

”ஒரு வழியாக தமிழக பி.ஜே.பி தலை​வராக தமிழிசை சௌந்தரராஜனை அறிவித்து​விட்டார்கள். முதலில் இந்தப் போட்டியில் மோகன்ராஜுலு இருந்தார். அடுத்து ஹெச்.ராஜா வந்தார். கடைசியில் தமிழிசை அறிவிக்கப்பட்டார். கடந்த இதழில்கூட, ஹெச்.ராஜாதான் முன்னேறிக்கொண்டு இருக்கிறார் என்று நான் சொன்னேன். அவருக்கு தேசியச் செயலாளர் பதவி தரப்பட்டு, தமிழகத் தலைவர் பதவி தமிழிசைக்கு போய்விட்டது.”

”என்ன நடந்தது இடையில்?”

”பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர் ஆனவுடன், தமிழக பி.ஜே.பி-யின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. புதிய தலைவரைத் தேர்வு செய்தற்காக தமிழக மேலிட பொறுப்பாளர்கள் சதீஷ், முரளிதர்ராவ் ஆகியோர் மாவட்டத் தலைவர்களிடம் ரகசியமாக கருத்து கேட்டனர். அதில், இப்போது அமைப்பு பொதுச்செயலாளராக இருக்கும் மோகன்ராஜுலு பெயரையே 90 சதவிகித நிர்வாகிகள் சொன்னார்கள். அதற்கு அடுத்தாற்போல, தேசியச் செயலாளராக இருந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு அதிக ஆதரவு இருந்தது. மாநில துணைத் தலைவராக இருந்த ஹெச்.ராஜா, முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெயரையும் ஒரு சிலர் சொன்னார்கள். முதலில், சிபி.ராதாகிருஷ்ணன் பெயரை தலைவர் ரேஸில் இருந்து தூக்கிவிட்டார்கள். ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்துபரிஷத் உள்பட பல்வேறு லாபிகள் மூலம் தலைவர் பதவியைக் கைப்பற்ற ஹெச். ராஜா மூவ் செய்து வந்தார்.”

”மோகன்ராஜுலுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது ஏன்?”

”மாவட்டத் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் மோகன்ராஜுலுவை விரும்பினார்கள். அவர் அமைப்பு பொதுச்செயலாளராக இப்போது இருக்கிறார். கட்சியின் உள்கட்டமைப்பு விஷயங்களில் தேர்ந்தவர் என்பதால், அவரை அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்க, டெல்லி பி.ஜே.பி விரும்பவில்லை. ‘நாடாளுமன்றத் தேர்தலைப்போலவே வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவும் நீங்கள்தான் அமைப்புச் செயலாளராக இருந்து கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தி வழிநடத்த வேண்டும்’ என்று தேசிய தலைவர் அமித் ஷா இவரிடம் கூறிவிட்டாராம். இதையடுத்து, டாக்டர் தமிழிசை, ஹெச்.ராஜா ஆகிய இருவரில் ஒருவரைத் தலைவராக தேர்வுசெய்யும் வேலைகளில் கட்சித் தலைமை இறங்கியது. இருவரின் அரசியல் பயோடேட்டாக்களையும் அமித் ஷாவும் மோடியும் ஆய்வு செய்தனர். முடிவில், டாக்டர் தமிழிசையை டிக் செய்தார் அமித் ஷா. தேசியச் செயலாளராக ஹெச்.ராஜாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இல.கணேசனுக்கு, தேசிய துணைத்தலைவர் பதவி கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். தேசிய அளவில் முக்கிய பதவி கிடைக்காதது அவரது ஆதரவாளர்களுக்கு சற்று வருத்தம்தான்.”

”தமிழிசைக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி?”

”53 வயதாகும் டாக்டர் தமிழிசை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் மகள். இவர் டாக்டருக்குப் படித்துவிட்டு போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் உதவிப் பேராசிரியராக சில ஆண்டுகள் வேலை பார்த்தார். முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அந்த வேலையை உதறிவிட்டு வந்தார். கடந்த 15 ஆண்டுகளாக முழு நேர அரசியல்வாதி. கட்சியில் படிப்படியாக உயர்ந்தார். 1999-ம் ஆண்டு அவருக்கு தென் சென்னை மருத்துவ அணிச் செயலாளராக பொறுப்பு கிடைத்தது. பின்னர், மாநில மருத்துவர் அணி பொதுச்செயலாளர், அகில இந்திய மருத்துவர் அணியின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர், மாநில பி.ஜே.பி பொதுச்செயலாளர், மாநில துணைத்தலைவர் என்று உயர்ந்தார். கடந்த ஆண்டு அகில இந்திய பி.ஜே.பி தேசியச் செயலாளர் ஆனார். மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். குஜராத் மாநிலத்தின் முக்கிய விழாக்களுக்கு, இவரை சிறப்பு அழைப்பாளராக அழைத்து கௌரவித்து வந்தார். இவரை டெல்லி ஆபீஸில், ‘தமிழ்நாட்டு சுஷ்மா ஸ்வராஜ்’ என்றுதான் அழைப்பார்களாம்.”

”ஓஹோ!”

”நரேந்திர மோடியைப் பற்றி இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார் தமிழிசை. சில நாட்களுக்கு முன்புகூட மோடியை இவர் சந்தித்துவிட்டு வந்தார். மோகன்ராஜுலுவைத்தான் பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரித்தார். அவருக்கு இல்லை என்று முடிவானதும், யாருக்குத் தரலாம் என்று அவர்கள் இருவரிடமே தலைமை கேட்டுள்ளது. இவர்கள் இருவருமே தமிழிசை பெயரை வழிமொழிந்துள்ளார்கள். உடனே தமிழிசை பெயர் டிக் ஆனது! அனைத்துக் கட்சித் தலைவர்களும் தமிழிசைக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் வாழ்த்து பெரிய அளவுக்கு பேசப்படுகிறது!”

”மைத்ரேயனுக்கு ஜெயலலிதா கல்தா கொடுத்தது எதனால்?” – டாபிக் மாறினோம்.

”சொல்கிறேன்!

”மோடிக்கும் ஜெயலலிதாவுக்குமான கண்ணாமூச்சி ஆட்டத்தில் சிக்கி மைத்ரேயன் தலை உருண்டுவிட்டது. இதுவரை நீதிபதிகளைக் கொண்ட தேர்வுக்குழுவே அதாவது, கொலீஜியம் தேர்வு செய்யும் என்ற நடைமுறை இருந்தது. அதனை மாற்றி தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்தான் இனி நீதிபதிகளை தேர்வுசெய்யும் என்று புதிய மசோதாவை பி.ஜே.பி ஆட்சி கொண்டுவந்து, மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றிவிட்டது. மக்களவையில் இந்த மசோதா விவாதத்துக்கு வந்தபோது, அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை பேசினார். மிக முக்கியமான ஒரு திருத்தத்தை அவர் கொண்டுவந்தார். ‘தேசிய அளவில் நீதிபதிகளை நியமிக்க தேசிய ஆணையம் செயல்படட்டும். ஆனால், மாநிலங்களில் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க மாநில அளவில் தனி ஆணையம் ஏற்படுத்தப்பட வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்வுசெய்யும்போது மாநில அரசின் கருத்துகளையும் இந்த ஆணையம் கேட்டறிய வேண்டும்’ என்று சொன்னார் தம்பிதுரை. மாநில சுயாட்சிக்காக போராடும் அ.தி.மு.க-வின் குரல் இது. ‘மாநில அரசாங்கம் சிலரை நீதிபதிகளாக ஆக்க நினைத்தால், அதற்கு வழிவகை செய்யும் வகையில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும்’ என்பது ஜெயலலிதாவின் வாதம். அதைத்தான் தம்பிதுரை மக்களவையில் சொன்னார். மக்களவையில் பி.ஜே.பி-க்கு பலம் இருப்பதால், மசோதா நிறைவேறியது. ஆதரித்தும் வாக்களிக்காமல், எதிர்த்தும் வாக்களிக்காமல் அ.தி.மு.க  நடுநிலை வகித்தது. அ.தி.மு.க-வின் வாக்குகள் பி.ஜே.பி-க்கு தேவையில்லை என்பதால், அவர்களும் அதனைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், மாநிலங்களவையில் அது முடியாது அல்லவா?”

”ஆமாம்!”

”மாநிலங்களவையில் பி.ஜே.பி-க்குப் பெரும்பான்மை இல்லை. அ.தி.மு.க-வின் தயவு இருந்தால்தான் மசோதாவை நிறைவேற்ற முடியும். மாநிலங்களவையில் மசோதா தோற்றுப்போனால், அது செல்லாது. எனவே, 13, 14 தேதிகளில் பி.ஜே.பி பதற்றமாக இருந்தது. 13-ம் தேதி அன்று மக்களவையில் இந்தத் தீர்மானம் நிறைவேறியதும், மக்களவை துணை சபாநாயகராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த தம்பிதுரை தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் முதல்வர் ஜெயலலிதாவும் பரஸ்பரம் நன்றிகளைப் பரிமாறிக்கொண்டதை நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இதனைத் தொடர்ந்து மாநிலங்களவையில் நீதிபதிகள் மசோதாவை அ.தி.மு.க நிறைவேற்றித் தரவேண்டும் என்று சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஜெய​லலிதாவுக்குப் பேசியிருக்கிறார். பரிசீலனை செய்வதாக முதல்வர் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு பேசியிருக்கிறார். நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாகவும் சொல்கிறார்கள். யாருக்கும் அவர் பிடி கொடுக்கவில்லை.

இந்த மசோதா சம்பந்தமான வரைவு அறிக்கையை மைத்ரேயன், மெயில் மூலமாக ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்தார். மசோதா 14-ம் தேதி காலையில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட வேண்டும். அன்றுடன் இந்தக் கூட்டத்தொடர் முடிகிறது. எனவே, அ.தி.மு.க-வின் முடிவை முக்கியமாக நினைத்தது பி.ஜே.பி. மோடியே அதுபற்றி அமைச்சர்களிடம் கேட்டுக்கொண்டே இருந்தார். வாக்கெடுப்பு நடந்தது. அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்தது. உற்சாகமானது பி.ஜே.பி. ஆனால், அப்படி ஒரு அனுமதியை மைத்ரேயனுக்கு ஜெயலலிதா தரவில்லை என்பதுதான் அவரது தலை உருண்டதற்கான முக்கியக் காரணம்!”

”அவ்வளவு தைரியமா அவருக்கு?”

”அதாவது, தம்பிதுரை துணை சபாநாயகர் பதவி ஏற்பதற்கு ஜெயலலிதா ஒப்புதல் தந்துவிட்டார் என்றதும், பி.ஜே.பி-யுடன் முழுநல்லுறவு காட்ட முதல்வர் முடிவுசெய்துவிட்டதாக மைத்ரேயனே நினைத்துக்கொண்டு, ஆதரித்து வாக்களித்துவிட்டார் என்கிறார்கள். ‘மக்களவையில் ஒரு மசோதாவை எதிர்த்துவிட்டு மாநிலங்களவையில் ஆதரித்தால், தம்பிதுரைக்கு பதவி தரப்பட்டதும் அ.தி.மு.க பணிந்துவிட்டது என்று சொல்ல மாட்டார்களா?’ என்பது ஜெயலலிதாவின் கோபம். ‘மாநிலங்களின் அதிகாரத்தை முடக்கும் ஒரு மசோதாவை, கண்ணை மூடிக்கொண்டு எப்படி ஆதரிக்க முடியும்?’ என்றும் நினைக்கிறாராம் ஜெயலலிதா. இதுதான் மைத்ரேயனை உருட்டிவிட்டது” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார்,

”இணையதளங்களில் கருணாநிதியைத் திட்டியும் ஸ்டாலினைப் பாராட்டியும் தி.மு.க-வில் சிலரே ஸ்டேட்டஸ் போட்டு வருவது பற்றிச் சொல்லியிருந்தேன் அல்லவா? இதனைப் பார்த்து பதறிப்போன ஸ்டாலின், ‘என்னுடைய விருப்பத்துக்கு மாறாக, ஏதோ என் பெயரில் மிகுந்த அக்கறை கொண்டவர்களைப்போல, சிலர் வெளியிடுகிற செய்திகளுக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. கழகத் தலைவருக்கு எதிராக, கழகத் தோழர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்நோக்கத்தோடு இந்தச் செய்திகள் வெளியிடப்படுகின்றன. அதனை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். இந்த செய்திகள் அவருக்கே நெகடிவ்வாக போய்க்கொண்டு இருப்பதால் உஷார் ஆனாராம்” என்று சொல்லிவிட்டுப் பறந்தார்!

%d bloggers like this: