மிஸ்டர் கழுகு: அழகிரி உள்ளே!

‘மீண்டும் கண்கள் பனிக்கக் காத்திருக்​கிறது” என்று சொல்லியபடியே வந்தார் கழுகார்!

”அண்ணன் – தம்பி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார் கருணாநிதி. அதற்கான ஏற்பாடுகள் நாலாபக்கமும் நடந்து வருகின்றன. இதற்கான முஸ்தீபுகளை அதிகமாக எடுத்தது கருணாநிதியின் மூத்த மகள் செல்விதான் என்று சொல்கிறார்கள். ‘நம் குடும்பத்துக்குள்ளே மோதலைத் தொடர்ந்தால், அதனால் லாபம் அடையப்போவது நம்முடைய எதிரிகள்தான். அண்ணன் – தம்பி மோதலை கட்சிக்குள்ளேயே சிலரும் ரசிக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஒன்றுசேர்ந்தால், தங்கள் அரசியல் வாழ்க்கை முடிந்துபோகும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் இரண்டு பக்கமும் உட்கார்ந்து இந்த வேலைகளைப் பார்க்கிறார்கள்’ என்று அவர் சொல்லி வந்துள்ளார். தன் ஆசைகளை அவர் அனைவரிடமும் சொல்லி வந்தார். ஆரம்பத்தில் கருணாநிதி இதுபற்றி எதையும் பேச விரும்பவில்லை. ‘நேரடியாக என்னிடம் மோதுவது மாதிரி வந்து, தம்பியைப் பற்றியே தகாத வார்த்தைகள் என்னிடமே சொன்னவரை எப்படி மன்னிக்க முடியும்?’ என்று கருணாநிதி சொல்லி வந்தார். கருணாநிதி, ஸ்டாலினைத் தவிர மற்றவர்கள் கருத்து அழகிரிக்கு ஆதரவாக இருந்தது!”

 

”என்ன சொன்னார்களாம் அவர்கள்?”

”அழகிரியின் செயல்பாடுகளை அவர்கள் யாரும் நியாயப்படுத்தவில்லை. ‘அழகிரியை கட்சியை விட்டு நீக்கியிருக்கக் கூடாது. அவரையும் அரவணைத்து கட்சி நடத்தினால்தான் அனைவருக்கும் நன்மை’ என்பதே இவர்களது எண்ணமாக இருந்துள்ளது. இந்த நிலையில்தான் கருணாநிதியை சந்தித்தாராம் செல்வி. அவரிடம் கருணாநிதி நிறைய விளக்கங்கள் சொல்லியிருக்கிறார். கடைசியாக, ‘எத்தனையோ பேரை நீங்கள் மன்னித்துள்ளீர்கள். இதைவிட எவ்வளவோ நடந்துள்ளது… அப்போதெல்லாம் மன்னித்துள்ளீர்கள். இப்போது மட்டும் ஏன் தாமதிக்கிறீர்கள்?’ என்று கேட்ட செல்வி, ‘உங்களிடம் மன்னிக்கும் குணம் இருந்தால், மன்னித்து அவரையும் ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று சொன்னாராம். இந்தக் கேள்வியில் கருணாநிதியின் மனம் மாறிவிட்டாராம். ‘உள்ளே அனுமதித்த பிறகு மறுபடியும் தொந்தரவுகள் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது, சமாதானம் பேசுபவர்களின் கையில்தான் இருக்கிறது’ என்று சொல்லிவிட்டாராம் கருணாநிதி!”

”ஓஹோ!”

”ஸ்டாலின் இந்த விஷயத்தில் குழப்பமாகத்தான் இருக்கிறார். அழகிரியும் அவரது பெயரைச் சொல்லி சிலரும் ஆடும் ஆட்டங்களால் கடந்த சில மாதங்களாக பெரும் வேதனை கொண்டவராக இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இந்தப் பிரச்னையை இன்னமும் வளரவிடுவது நல்லது அல்ல என்று நினைக்கிறாராம். ‘நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் 10 தொகுதிகளுக்கு மேல் ஜெயிப்போம். அது தன்னுடைய வெற்றியாக மாறும் என்று தளபதி நினைத்தார். ஆனால், மிகப்பெரிய தோல்வி அடைந்தது கட்சி. கட்சி முழு ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே, வரும் தேர்தலைச் சந்திக்க முடியும் என்று நினைக்கிறார். அதனால், அழகிரியை அரவணைத்துப்போகவும் தயாராகிவிட்டார்’ என்று சொல்கிறார்கள். ‘தென் மாவட்டங்களில் கட்சி மிக மிக மோசமாக இருக்கிறது. அழகிரியின் குடைச்சலும் அதிகமானால், தனது எதிர்காலத்துக்குத்தான் சிக்கல்’ என்றும் ஸ்டாலின் யோசிக்கிறாராம். ஆனால், அதனை வெளிப்படையாக அவரால் சொல்ல முடியவில்லையாம்!”

”ஏனாம்?”

”ஸ்டாலின் குடும்பத்தில் இது சம்பந்தமாக கருத்து மோதல்கள் இருக்கிறதாம். மறுபடியும் அழகிரியை கட்சிக்குள் சேர்ப்பதற்கு ஸ்டாலின் மனைவி துர்க்கா உடன்படவில்லை என்றும் சொல்கிறார்கள். இந்தப் பிரச்னை சில மாதங்களுக்கு முன் தலைதூக்கியபோது சமாதானம் பேசவந்த செல்வியிடம், ‘உங்களுக்கு எந்த சகோதரர் வேண்டும் என்று முடிவெடுங்கள்’ என்று துர்க்கா சொன்னதாகவும் தகவல் உண்டு. அப்படிப்பட்ட துர்க்காவை சமாதானம் செய்ய இயலுமா என்று நினைக்கிறாராம் ஸ்டாலின். ‘கட்சிக்குள் மோதல் இருப்பதாக காட்டி குழப்பம் ஏற்படுத்துபவர்கள் அவர்கள். தலைமைப் பதவியைத் தருகிறேன் என்று தலைவரே சொன்ன பிறகும் எதிர்த்து குரல் கொடுத்து பிரச்னை உண்டாக்குபவர்கள் அவர்கள்தான். தலைவர் இருக்கும்போதே இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்று ஸ்டாலின் ஆதரவு குடும்பத்தினர் சொல்கிறார்கள். இந்த குரூப் மனமாறுதல் அடைய வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறாராம். அவரது தயக்கத்துக்கு இதுதான் காரணம் என்று சொல்கிறார்கள்!”

”ம்!”

”யார் தடுத்தாலும் இந்தப் பிரச்னை இனியும் தொடரக் கூடாது என்று கருணாநிதி நினைக்கிறாராம். ‘இதற்கு மேல் அழகிரியை பிரிந்து இருந்தால், அது நிரந்தரப் பிளவாகப் போய்விடும். இதன் மூலமாக குடும்பத்தின் ஐக்கியம் கெட்டுவிடும்’ என்றாராம் கருணாநிதி. அதற்காக இதனை ஸ்டாலினிடம் சொல்லும் மனநிலையிலும் கருணாநிதி இல்லையாம். ஸ்டாலினே தன்னிடம் வந்து, அழகிரியை சேர்த்துக்கொள்ளலாம் என்று சொல்வார் என்று எதிர்பார்க்கிறாராம் கருணாநிதி.”

”அப்படி நடக்குமா?”

”ஸ்டாலின் வாயைத் திறந்து சொல்ல மாட்டார். கருணாநிதியாக கேட்பார் என்று காத்திருக்கிறார். இப்படி ஒரு பாசப் போராட்டம் கோபாலபுரத்தில் நடந்து வருகிறது”

”தயாளு அம்மாளுக்கு ஜாமீன் கிடைத்ததுவிட்டதே?”

”கடந்த புதன்கிழமை காலையில் கருணாநிதி அதிகமான பதற்றத்துடன் இருந்தார். அன்றுதான் டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் தயாளு, கனிமொழி, ஆ.ராசா, அமிர்தம், கலைஞர் டி.வி சரத் ஆகியோரின் ஜாமீன் மனு மீது முடிவுகள் அறிவிக்கப்பட இருந்தது. ஜாமீன் கிடையாது என்று சொல்லிவிட்டால், தயாளு டெல்லி சென்று சி.பி.ஐ முன்போ அல்லது சி.பி.ஐ நீதிமன்றத்திலோ ஆஜராக வேண்டும். அதுதான் கருணாநிதியின் பதற்றத்துக்குக் காரணம். அன்றைய தினம் காலையிலேயே தயாளுவின் மனுவை மட்டும் எடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பு தந்தார் நீதிபதி ஷைனி. மதியத்துக்கு மேல்தான் கனிமொழி, ஆ.ராசா பற்றி சொல்வதாகச் சொன்னார். ‘இவர்களை பிரித்துச் சொல்கிறார் என்பதால், அவர்களுக்கு ஜாமீன் கிடைக்காது’ என்று சிலர் ஆரூடம் சொன்னார்கள். ஆனால், அவர்களுக்கும் மதியம் ஜாமீன் வழங்கினார் நீதிபதி. தயாளுவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது என்று சொன்ன பிறகுதான் கருணாநிதி தன்னியல்புக்கு வந்தாராம். ‘தயாளுவை நீதிமன்றம் விடுவித்துவிடும்’ என்று நினைத்தாராம் கருணாநிதி. அது நடக்கவில்லை. அது அவருக்கு வருத்தம் கொடுத்துள்ளதாம்!”

”ம்!”

”தன்மீது அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ரத்துசெய்து, தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தயாளு மனு தாக்கல் செய்திருந்தார். அதனை அமலாக்கத் துறை கடுமையாக எதிர்த்து வாதம் வைத்தது. சிறப்பு நீதிபதியும் அதனை ஏற்கவில்லை. இந்த நிலையில் தயாளு மீதான குற்றச்சாட்டுகள் அப்படியே இருக்கின்றன. இதனை கருணாநிதி எதிர்பார்க்கவில்லை” என்று சொல்லிவிட்டு பெங்களூரு சட்டப் போராட்டம் பற்றி சொல்ல ஆரம்பித்தார் கழுகார்!

”பெங்களூரில் நடக்கும் சொத்துக்குவிப்பு வழக்கில் ‘சிவில்’ செந்தில் என்பவர் மையப் புள்ளியாக வலம் வருகிறார். அவர் ஒரு வக்கீல். நாமக்கல்காரர். வயது 39.  ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் டீமை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு நாளும் அடுத்த நாள் வாதத்தை எப்படி எடுத்து வைப்பது என பெங்களூரு மௌரியா ஹோட்டலில் தீவிர ஆலோசனை நடத்துகிறார். வழக்கின் விவரங்களை அவ்வப்போது  ஜெயலலிதாவிடமும் சசிகலாவிடமும் போனில் சொல்லி வருகிறார்.”

”சொல்லும்!”

”நாமக்கல் வட்டாரத்தில் சிவில் வழக்குகளில் துடிப்புடன் இருந்தவர் இந்த செந்தில். சேலம், கரூர், ஈரோடு பகுதிகளில் உள்ள பல தனியார் கல்வி நிறுவனங்களின் வழக்குளை நடத்தியவர். சேலம், கரூர் அகல ரயில் பாதைத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட 2,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசை வழங்கவில்லை. இதை எதிர்த்து இவர் வழக்கு தொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நல்ல இழப்பீட்டுத் தொகையை பெற்றும் கொடுத்தாராம்.  சென்னை உயர் நீதிமன்றத்திலும் பல சிவில் வழக்குகளை டீல் செய்தாராம். இவரது பாணி நவநீதகிருஷ்ணனுக்கு பிடித்துப்போய்விட, முதல்வர் ஜெயலலிதாவிடம் செந்திலை சிபாரிசு செய்தாராம். 2011 முதல் சொத்துக்குவிப்பு வழக்கைத் தீவிரமாக கவனித்தாராம். கடந்த ஜூலையில் நவநீத கிருஷ்ணன் மேலவை உறுப்பினராகி டெல்லி சென்றதால், அவரது இடத்தில் செந்தில் உட்கார்ந்தார். போயஸ் கார்டன் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற வழக்குகளையும் செந்தில் இப்போது பார்த்து வருகிறார் என்பது கூடுதல் செய்தி!”

”வழக்கு இறுதிகட்டத்தை அடைந்து வருகிறதே?”

”ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் தனது வாதத்தை முடித்துவிட்டார். சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கரும் தனது வாதத்தை முடித்துவிட்டார். இளவரசி, சுதாகரனின் வழக்கறிஞர் வாதங்களை வைத்து வருகிறார். இன்னும் சில நாட்களில் தேதி குறிப்பிடப்படாமல் நீதிமன்றம் ஒத்தி வைக்கப்பட்டு, தீர்ப்புக்கான தேதி அறிவிக்கப்படலாம் என்கிறார்கள்!”

”ஆனால் மதுரையில் ஆர்ப்பாட்டம் அதிகமாக இருக்கிறதே… முதல்வருக்கான பாராட்டு விழாவுக்கு?”

”முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு எடுத்த முயற்சியின் காரணமாக இந்தப் பாராட்டு விழா 22-ம் தேதி நடக்கிறது. வாசகர்கள் இதனைப் படிக்கும்போது பாராட்டு விழா முடிந்திருக்கும். ‘தமிழகத்து மக்களின் குலசாமி’, ‘இரண்டாம் பென்னிகுயிக்’ என்று பல்வேறு பட்டங்களைக் கொடுத்து மதுரை மாநகரை கட்-அவுட்டுகளால் கட்சிக்காரர்கள் மறைத்துவிட்டார்கள். எந்தத் தெருவில் இருந்தும் டக்கென்று மக்கள் வெளியில் வந்துவிட முடியாது. தெரு முகப்பை மறைத்தபடி ஒரு ஃப்ளெக்ஸ் அமர்ந்திருக்கும். பஜாரில் எந்தக் கடைகளையும் கண்டுபிடிக்க முடியாது. அந்தக் கடை முதலாளிகளே அம்மா சிரித்துக்கொண்டிருக்கும் ஃப்ளெக்ஸ்களுக்குக் கீழே குனிந்து வளைந்து பாம்புபோல் ஊர்ந்துதான் தங்கள் கடைகளைத் திறக்கச் செல்ல வேண்டும். சமீபகாலமாக மாலை நேரத்தில் நகருக்குள் தீவிரமான காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்ததால், எந்த ஃப்ளெக்ஸ் யார் மீது விழுமோ என்ற அச்சத்தில் இருந்தனர் மக்கள்.”

”அ.தி.மு.க-வினருக்கு சொல்லித் தர வேண்டுமா என்ன?”

”முதல்வர் வருகையின்போது எப்படி பாதுகாப்பு கொடுப்பது என்று கலெக்டர் தலைமையில் போலீஸ் கமிஷனர், எஸ்.பி உட்பட அனைத்து காவல் துறை அதிகாரிகளும், வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர். அதில் லோக்கல் அமைச்சர் செல்லூர் ராஜுவும் கலந்துகொண்டார். அப்போதுகூட அனுமதி இல்லாமல் கண்ட இடங்களில் ஃப்ளெக்ஸ்கள் வைப்பது தவறு என்று அவர்கள் சுட்டிக்காட்டவில்லை. அதைப்பற்றியே பேசவில்லை. அந்தளவுக்கு விளம்பரத் தட்டிகளால் மாமதுரையை ‘அம்மா மதுரை’ ஆக்கிவிட்டார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். ரிங் ரோட்டில் இருந்த மாநகராட்சி டோல்கேட்டை மறைத்து, அதையே ஒரு அலங்கார வளைவாக ஆக்கிவிட்டார்கள்.  கோரிப்பாளையத்தில் இருந்து தல்லாகுளம் வரைக்கும் சாலையின் நடுவில் சென்டர் மீடியனில் தனியார் நிறுவனங்கள் விளம்பரப் பலகைகளை வைத்திருந்தனர். அதையெல்லாம் அம்மாவின் படத்தை ஒட்டி விலையில்லா விளம்பரம் செய்துவிட்டார்கள்.”

”தி.மு.க-வினர் ஏதாவது எதிர்ப்பு கிளப்பியிருப்பார்களே?”

”தி.மு.க மாநகர பொறுப்புக் குழுத் தலைவர் கோ.தளபதி, ‘இந்த விழாவுக்காக நகரில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதியில்லாமல் ஃப்ளெக்ஸ் போர்டுகளும் அலங்கார வளைவுகளும் வைத்திருக்கிறார்கள். இதற்காக சாலைகள் எல்லாம் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 1-ம் தேதி  ஸ்டாலின் வரும்போது நான்கு ஃப்ளெக்ஸ்கள் வைக்க மட்டுமே அனுமதி கேட்டோம். ஆனால், இரண்டுக்குத்தான் அனுமதி கொடுத்தார்கள். அதற்கும் எங்கள் மீது வழக்கு போட்டார்கள். சுவரொட்டிகள் ஒட்டியதற்கும் வழக்கு போட்டார்கள். இப்போது சட்டத்தை மதிக்காமல் இஷ்டத்துக்கு அ.தி.மு.க-வினர் விளம்பர போர்டுகள் வைத்துள்ளனர். கலெக்டர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்கள் கோர்ட்டில் வழக்கு போடுவோம்’ என்றார்.”

”சொல்லி ஏதாவது பயன் உண்டா?”

”மாவட்ட நிர்வாகம் இந்த சலசலப்பை எல்லாம் கண்டுகொள்ளவில்லை. அவர்களுடைய ஒரே நோக்கம், முதல்வர் கலந்துகொள்ளும் விழா சிறப்பாக நடக்க வேண்டும் என்பதுதான். முல்லை பெரியாறால் ஐந்து மாவட்டங்களிலும் 1 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த விழாவில் உண்மையான பெரியாற்று பாசன விவசாய சங்க நிர்வாகிகளான தங்களை முறைப்படி அழைக்கவில்லை என்ற குமுறல்கள் பல இடங்களில் கேட்டது. இதை வெளிப்படியாக சொல்ல அவர்களுக்குத் தயக்கம். பின்விளைவுகள் ஏதும் வந்துவிடக் கூடாது என்ற பயம்தான் அதற்கு காரணம்.

பல ஆண்டுகாலமாக பெரியாறு பாசனத் திட்ட குழு ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக மேலூர் முருகன் இருக்கிறார். அணையை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று முதன்முதலில் வழக்கு போட்டவர் முருகனின் தந்தையான சீமான்மீனாட்சிசுந்தரம்தான். அதற்குப்பின்தான் இந்தப் பிரச்னை வெளியில் பரவலாகப் பேசப்பட்டது. இதேபோல் தேனி மாவட்டத்தில் பெரியவர் அப்பாஸ் போன்றவர்கள்தான், முல்லை பெரியாறில் நமக்குள்ள உரிமைகள் என்னென்ன என்பது பற்றி பல வரலாற்று ஆவணங்களை வெளிக்கொண்டு வந்தவர்கள். அவருக்கும் முறைப்படி அழைப்பு இல்லை. ராமநாதபுரம் மாவட்ட விவசாயத்துக்கு முல்லை பெரியாற்று நீர் தேவை என்று, பென்னிகுயிக்குக்கு முன்பே ஆய்வு செய்தவர் ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி. அந்த வகையில் சேதுபதி வாரிசுகளையும் அழைக்கவில்லை. இன்னும் பல விவசாய சங்கத் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தெரிந்தவர்களையும் நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜுவுக்குத் தெரிந்தவர்களையும் விவசாய சங்கத்தினர் என்று காட்டி, அவர்கள் மூலம் முதல்வருக்கு அழைப்பிதழ் கொடுக்க வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.”

”ஓஹோ!”

”இந்தப் பிரச்னை பெரிதாகிவிடக் கூடாது என்பதால், அனைத்து விவசாய சங்க பிரமுகர்களையும் அழைத்து வருவதில் ஓ.பி.எஸ். டீம் தீவிரமாகச் செயல்பட்டது. ஐந்து லட்சம் மக்களையாவது அழைத்துவர வேண்டும் என்று முடிவு செய்திருப்பதால், ஓ.பி.ஸ், நத்தம் விஸ்வநாதன், செல்லுர் ராஜு, உதயகுமார், சுந்தர்ராஜன், ராஜேந்திரபாலாஜி, மேயர் ராஜன்செல்லப்பா ஆகியோர் பணத்தைத் தண்ணீராக செலவழித்தார்கள். முதலில் திறந்தவெளிக் கூட்டமாக போட திட்டமிட்டவர்கள், அடிக்கடி மழை வந்து பயமுறுத்துவதால், மக்கள் அமருவதற்கு  பந்தல் அமைத்தனர்.”

”எப்படா முடியும் இந்தப் பாராட்டு விழா என்று மதுரை மக்களைப் பயமுறுத்திவிட்டதா இந்தப் பாராட்டு விழா?” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார், ”அநேகமாக மதுரை பாராட்டு விழா முடித்துவிட்டு முதல்வர் கொடநாடு செல்வார்” என்றபடி பறந்தார்.

%d bloggers like this: