Advertisements

எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்க…

1. ஏழு மணி நேரக் கும்மிருட்டுத் தூக்கத்துக்குப் பின், இளங்காலை மொட்டைமாடி வெயிலில் 20 நிமிட உலாவல், தோட்டத்து வேப்பங்காற்றில் கபாலபாதி பிராணாயாமம், பின்னர் நலுங்கு மாவு தேய்த்துக் குளியல், காலையில் கரிசாலை முசுமுசுக்கைத் தேநீர், மத்தியானம் தூய மல்லிச்சம்பா சோறு, அதற்கு மிளகுவேப்பம்பூ ரசம், ‘தொட்டுக்கா’வாக நெல்லிக்காய்த் துவையல், இரவில் சிவப்பு அரிசி அவலுடன் சிவப்புக் கொய்யா சாப்பிட்டு வந்தால், எந்தத் தொற்றும் நெருங்க நிச்சயம் யோசிக்கும்!

 

2. வெள்ளிக் கலனில் குழந்தைக்கு உணவு ஊட்டுவது நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தரும் என்கிறது நவீன மருத்துவம். அதன் எதிர்நுண்ணுயிர் ஆற்றலைக் கண்டறிந்துள்ள நாசா முதலான பல ஆய்வு அமைப்புகள், வெள்ளி இழையில் சாக்ஸ், ஜட்டி, பனியன்களை உருவாக்கி, குளிக்க இயலாத விண்வெளி வீரர்களுக்கு உடுத்தி அனுப்புகிறது. வெள்ளிப் பாலாடை, வெள்ளித் தட்டு பயன்படுத்த வாய்ப்பு உள்ளோர் இதனை உணவுக் கலனாகப் பயன்படுத்தலாம். வெள்ளிக்கு மாற்று மண்பாத்திரம். மண்பாத்திரத்தில் சமைத்து, மண்கலனில் நீர் வைத்து அருந்துவது நோய் எதிர்ப்பு ஆற்றலை உயர்த்தும்!

3. எண்ணெய்க் குளியல், உடல் நோய் எதிர்ப்பு ஆற்றல் உயர உபாயம் செய்யும். நிணநீர் ஓட்டத்தைச் (Lymphatic drainage) சீராக்கி, உடலின் செல்களுக்கு இடையிலான வெப்பப் பரிமாற்றத்தைச் சூழலுக்கு ஏற்றபடி சீராக்கும் இந்த நல்வாழ்வியலை மீட்டு எடுப்பது, இப்போது காலத்தின் கட்டாயம்.

சீந்தில் அன்னப்பால் கஞ்சி செய்முறை!

ஹெச்.ஐ.வி., காச நோய்க்கு எப்போதும் நாள்பட்ட சிகிச்சை தேவை. இன்று அதற்கான மருந்துகளுடன் நோய் எதிர்ப்பு ஆற்றல் உயர வழங்கப்படும் டானிக்குகளில் மிக முக்கியமாகச் சேர்க்கப்படும் தாவரம் சீந்தில். அமிர்தவல்லி என மருத்துவ இலக்கியங்களில் போற்றிப் பேசப்படும் இந்தச் சீந்தில் சேர்ந்த அன்னப்பால் கஞ்சி, வர்ம சிகிச்சை செய்பவர்களிடமும் பாரம்பர்ய மருத்துவர்களிடமும் மிகப் பிரசத்திபெற்ற ஒரு மருத்துவ உணவு. கசப்பாக இருந்து உடலுக்கு உரம் அளிக்கும் இந்தக் கஞ்சியைத் தயாரிப்பது மிக எளிது.

சோற்றுக் கஞ்சி செய்யும்போது ஒரு துணித்துண்டில் சீந்தில் பொடியைப் பொட்டலமாகக் கட்டி, அரிசியோடு சேர்த்துப் போட்டு வேகவைக்க வேண்டும். கஞ்சி வெந்து எடுத்த பின், துணிப்பொட்டலத்தை அகற்றிவிடலாம். சீந்திலின் சத்துக்கள் கஞ்சியில் கலந்துவிடும். சீந்தில் அன்னப்பால் கஞ்சி, நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்த்து, வர்மத்தில் அடிபட்ட வலி, கணச்சூடு, காசம், மேகச் சூடு (பெண்களுக்கு வெள்ளைப் படுதலுக்கான தூண்டுதல்), அலர்ஜி… எனப் பல நோய்க்கூட்டத்தை தனி ஆளாக  நின்று வெல்லும். அருகில் ஏதேனும் தொற்று நோய்கள் இருந்தால், உங்கள் வீட்டில் இது உணவாக ஓரிரு கரண்டி நிச்சயம் பரிமாறப்பட வேண்டும்!

Advertisements
%d bloggers like this: