மனிதன் மாறி விட்டான்! -15

செல்வத்துள் செல்வம்

காதுகளை மான்கள், யானைகள், முயல்கள் போன்றவை அசைக்க முடியும், ஓசை வருகிற பக்கம் திருப்ப முடியும். ஆனால் அது குரங்குகளுக்கு இல்லை. எனவே, மனிதனும் அவற்றை  அடையவில்லை. மனிதனின் காதுக்குள் செவிக்குழாய் ஒன்று செல்கிறது. காது மடல் சேகரிக்கும் ஓசைகள் செவிக்குழாய் வழியாக உள்ளே செல்கின்றன. செவிக்குழாயின் உள்பகுதியில் ஒரு சின்ன மெல்லிய பறை இருக்கிறது. அதுவே செவிப்பறை.  அதன் கனம் பத்தில் ஒரு மில்லிமீட்டர் மட்டுமே.  அது ஒலியின் வேகத்துக்கேற்ப அசைகிறது.

செவிப்பறையின் உள்ளே நாலாயிரத் துக்கும் மேற்பட்ட சுரப்பிகள் இருக்கின்றன. அவை ஒருவித மெழுகை உற்பத்தி செய்கின்றன.  அந்த மெழுகுதான் பூச்சிகள் காதுக்குள் நுழையாமல் இருக்கும்படி பார்த்துக்கொண்டு நம் செவிப்பறை சேதமாகாமல் காத்து வருகின்றன. அதனால்தான் அடிக்கடி காதுகளைக் குடையக் கூடாது. அது செவிப்பறையை சேதப்படுத்துவதோடு மெழுகு இல்லாத ஒரு நிலையையும் ஏற்படுத்தும்.

மனிதன் மிகவும் முக்கியமாகக் கருதுபவை, பார்ப்பதும் கேட்பதும்.  அவற்றைத் தரும் பொறிகளின் அமைப்பு நுட்பமாக இருப்பதுடன் மென்மையாகவும் இருப்பதுதான் இயற்கையின் விசித்திரமான கட்டமைப்பு. 

பரிணாம வளர்ச்சியின்போது ஒவ்வோர் உயிரினமும் அப்பகுதியில் அதிகம் ஒலிக்கும் ஓசைகளுக்கேற்ப நுன்மையை வளர்த்துக்கொண்டன.  பெருச்சாளி போன்ற சிறிய பிராணிகள் சன்னமான சுருதிகளுக்கு செவிப்புலன் மந்தமாக இருந்தாலும், அதிக அதிர்வெண் கொண்ட 40,000 / 60,000 அல்லது 1,00,000 ஹெர்ட்ஸ் அடங்கிய ஒலிகளை துல்லியமாகக் கேட்கும் சக்தி வாய்ந்தவை.  யானைகளோ 10,000 ஹெர்ட்ஸ் வரையுள்ள ஓசைகளையே கேட்க முடியும். 

நம்மைக் கேட்டால் செவிகளைக் காட்டிலும் விழிகள் முக்கியமானவை என்று சொல்வோம்.  ஆனால், பெரும்பான்மையான விலங்குகள் கேட்பதைத்தான் பார்ப்பதைக் காட்டிலும் நன்மையுள்ள புலனாகக் கருதுகின்றன.    நாம் எங்கிருந்தாலும் ஒலியைக் கேட்டுவிட முடியும்.  அதனால்தான் தமிழ் இலக்கியம் செவிகளை நின்று பற்றும் பொறி என்றும், விழிகளை சென்று பற்றும் பொறி என்றும் குறிப்பிடுகின்றது. 

எதிரிகள் வரும்போது ஓசையை வைத்தே விலங்குகள் பெரும்பாலும் தங்களைக் காத்துக்கொள்கின்றன. அவற்றின் காதுகள் கூர்மையடைவதையும், ஒலி வரும் பக்கம் திரும்பு வதையும் நாம் பார்க்கலாம்.  வெளிச்சம் நுழையாத இடங்களிலும் விலங்குகள் இருக்க நேரிடுகின்றன. அடர்ந்த காடு, குகை போன்றவற்றில் இருக்கும் விலங்குகள் வலுவில்லாத விழிகளையே பெற்றிருக்கின்றன.  இருட்டில் வாழும் அவை பார்வைக்காக அதிக சக்தியை செலவு செய்ய விரும்புவதில்லை.  அதைப்போலவே கடலிலும் ஆழத்தில் இருக்கும் உயிரினங்கள் வெளிச்சத்தை நம்பி வாழ்வதில்லை.  அங்கே சப்தமே முக்கியமானதாக இருக்கிறது. 

வெளிச்சத்தை உற்பத்தி செய்துகொள்ளும் சக்தி மின்மினிப் பூச்சிகளுக்கும், சில மீன் வகைகளுக்கும் இருக்கின்றன. மற்றவற்றுக்கு அந்த சக்தி இல்லை. இந்த ரகங்களும் ஆண்கள், பெண்களை  ஈர்க்கவே இந்த உத்தியைப் பயன் படுத்துகின்றன.  பல உயிரினங்கள் சப்தங்களை எழுப்புவதன் மூலமே சமிக்ஞைகளைத் தெரிவிக்கின்றன. சிலவகை மீன்கள் உண்டாக்குகிற ஒலிகளைப் படித்து நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை இரண்டாம் உலகப் போரின்போது மனித இனம் அறிந்துகொண்டது. 

எல்லா தகவல்களையும் ஒலியின் மூலமே பறிமாறிக்கொள்வதில்லை. தேனீக்களின் நடனம் அப்படிப்பட்டது. ஆனால், அதே நேரத்தில் கர்ஜித்தல், ஊளையிடுதல், உறுமுதல் போன்ற சப்தங்கள், தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் உடல் மொழிகளாக இருக்கின்றன.  மனிதன் மட்டுமே ஒலிகளை கச்சிதமாக திரும்ப ஒலிக்கிற தன்மை உடையவனாக இருக்கிறான்.  மனித மூளை ஞாபகத்திறனை வளர்க்கும் விதத்தில் அமைந்திருப்பதால் அவனால் ஒலியின் மூலம் வலியையும், ஓசையின் மூலம் இன்னபிற உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியும். 

‘ஒளியை விட ஒலி தாமதமாகப் பயணம் செய்கிறது என்பதை உன்னிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்; நீ காதலியாக இருக்கும்போது உன் கண்களில் மின்னல் அடித்தது.  நீ மனைவியாக அருகில் வந்த பிறகல்லவா உன் உதடுகளில் இருந்து இடி இடித்தது’ என்று ஒரு கவிதை.   

ஒலி எவ்வாறு பயணம் செய்கிறது என்பது ஊடகத்தின் நெகிழித் தன்மையைப்பொறுத்து அமைந்திருக்கிறது. காற்றில் அது 745 மைல் வேகத்தில் பயணம் செய்கிறது.  நீர், இரும்பு போன்ற ஊடகங்களில் இன்னும் வேகமாக பயணிக்கிறது. அதிகபட்ச அழுத்தம் கொண்ட இரண்டு புள்ளிகளுக்கு இடையே இருக்கும் தூரத்தைத்தான் அலைநீளம் என்று அழைக்கிறோம்.  ஒரு நொடியில் உண்டாகும் அலைகளைக் கணக்கெடுத்து ஒலி வீச்சு என்று குறிப்பிடுகிறோம்.

ஒலி அலைகளை நரம்பு விசையாக மாற்றுவதுதான் செவிப்புலனின் ஆற்றலாக இருக்கிறது.  நீரிலிருந்து நிலத்தில் வந்த உயிரினங்கள் உன்னிப்பாக சப்தங்களைக் கேட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. காரணம் ஓசை காற்றில், குறைந்த வேகத்துடன் தான் பயணம் செய்யும்.  அதனால்தான், பிரத்யேகமான ஓசையைக் கவரும் உறுப்புகளை அவை நாளடைவில் பரிணாம வளர்ச்சியால் பெற்றன. 

காது என்பது கேட்கும் புலன் அல்ல. அது வெளியே தெரிகிற பகுதி மட்டுமே.  முக்கியமான பகுதிகளெல்லாம் உள்ளே இருக்கின்றன.  வெளியே தெரிகிற காது மடல் ஒலிகளைத் திரட்டுவதற்குப் பயன்படுகிறது.  காது மடலில் ஒரு சின்ன புடைப்பு காணப்படுகிறது. அது குரங்கிலிருந்து நமக்கு ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியை உணர்த்துவதாக சார்ல்ஸ் டார்வின் குறிப்பிட்டார். 

நம் காதுக்குள் மூன்று அரைவட்ட குழாய்கள் இருக்கின்றன. ஒன்று சுத்தியலின் வடிவத்தில் இருக்கிறது, இன்னொன்று அடைகல்லின் வடிவத்தில் இருக்கிறது, மற்றொன்று குதிரையங்கவடி போல இருக்கிறது. இந்த பாகங்கள் சரியாகச் செயல்படுவதால், நம் காதுக்குப் பக்கத்தில் இருக்கும் ரத்தக்குழாய்களின் செயல்பாட்டை நாம் கேட்காமல் காப்பாற்றுகின்றன.  இல்லாவிட்டால் தொடர்ந்து ரத்த ஓட்டத்தின் சத்தம் ‘ஓ’ வென்று நம் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.  இதை கைளை இணைத்து காதுகளை மூடும்போது உணரலாம். அதைப்போலவே, கடற்சங்கை காதுகளில் வைக்கும்போது கேட்கலாம்.எலும்புகளால் கடத்தப்படும் ஒலியை இவை தடுப்பதால்தான் நாம் பேசும்போது நம் காது பழுதாகாமல் பத்திரப்படுகிறது.

ஒலி அலையின் அளவு குறைவாகவும், ஒரு நொடியில் அதிக அதிர்வுகள் ஏற்பட்டாலும் அது கிரீல் என்ற ஒலியுடன் அதிக அளவு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. ஆனால், வளர வளர உச்சபட்ச கேட்கும் திறன் குறைகிறது. குழந்தை 30,000 ஒலிஅலைகள் வரை கேட்கும் சக்தி உடையவை. பதின்மப் பருவத்தில் அது 20,000 ஆயிரமாகக் குறைகிறது. 60 வயது ஆகிறபோது அது 12,000 ஆகக் குறைகிறது. அதனால்தான், வயதானால் கும்பலாக உள்ள இடத்தில் தன்னோடு உரையாடுபவர்களுடைய குரலைக் கேட்பது அவர்களுக்கு சிரமமாக இருக்கிறது. 

தொடர்ந்து ஆடிக்கொண்டே இருக்கும் கப்பலின் அசைவு காதுகளில் உள்ள அரைவட்டக்குழாய்களை முடுக்கிவிடுகின்றன. அதற்குப் பழக்கம் ஆகாதவர்களுக்கு அது கடல்காய்ச்சலை ஏற்படுத்தி விடுகிறது.  பீகில் கப்பலில் பயணம் செய்யும்போது இந்த உபாதையால் அதிகம் டார்வின் பாதிக்கப் பட்டதாகச் சொல்கிறார். ஒரு கட்டத்தில் ஏன் வந்தோம் என்று கூட அவர் நினைக்க ஆரம்பித்தார்.

காதுகள் இரண்டு வகைப்படும். கீழ்ப்பகுதி கன்னத்தில் ஒட்டாத காது, ஒட்டியிருக்கிற காது. பெரும்பான்மையானவர்களுக்கு ஒட்டாமலேயே இருக்கிறது. ஒரு கட்டத்தில் பெரிய காது இருப்பவர்கள் சாதனையாளர்கள் என்றும், சின்னக் காது இருப்பவர்கள் பழமைவாதிகள் என்றும், கூர்மையான காதுகள் இருப்பவர்கள் சந்தப்பவாதிகள் என்றும் கருதப்பட்டனர். 

சில நாடுகளில் காது தண்டனைக்குரிய பகுதியாகவும் இருந்திருக்கிறது. சோரம் போன பெண்களின் காதுகளை கத்தியால் நீக்கிவிடுவது எகிப்து நாட்டில் ஒரு பழக்கமாக இருக்கிறது.

திருவள்ளுவர் ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ என்று குறிப்பிடுகிறார்.  ‘கற்றிலனாயினும் கேட்க’ என்று வலியுறுத்துகிறார்.  படிப்பாளியாக இல்லாவிட்டாலும் கூர்ந்து கவனித்தால் அடுத்தவர்கள் பேசுவதைக் கேட்டால் பலவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.  நாம் படித்து அறிந்ததைவிட பார்த்து அறிந்ததே அதிகம் என்பது உண்மை.

ஒருவர் மற்றவரிடம் ‘காது குத்துவதற்குப் பணம் வேண்டும்’  என்று கடன் வாங்கினார்.  திருப்பித் தரவில்லை. கேட்டதற்கு ‘காதுகுத்துவதாகச் சொல்லித்தானே வாங்கினேன்’ என்று சொல்லிவிட்டார்.    கடன் கொடுத்தவர் கையைப் பிசைந்தார்.

%d bloggers like this: