அடியாட்களை உருவாக்கும் அதிசய கிராமம்!

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உயர்ந்து நிற்கும் கட்டடங்கள், வாகனங்களின் இரைச்சல், ஷாப்பிங் மால்கள், சொகுசு கார்களின் அணிவகுப்பு என, தலைநகர் டில்லிக்கு ஒரு அடையாளம் உண்டு.
ஆனால், டில்லியின் புறநகர் பகுதியில் உள்ள, அசோலா பதேபூர் பெரி என்ற கிராமம், முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் அமைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் கால் நடைகள் சுதந்திரமாக உலா வருகின்றன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை போர்த்திய வயல் பரப்புகள், டிராக்டர்கள் என, பக்கா கிராமத்து அடையாளத்துடன் உள்ள இந்த ஊரில், 50,000 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள இளைஞர்கள் ஆஜானுபாகுவான உயரம், பரந்து விரிந்த மார்புகள், கர்லாக்கட்டை புஜங்கள் என, ‘டெர்மினேட்டர்’ ஆங்கில படத்தில் வரும் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு போன்ற தோற்றத்தில் உள்ளனர். அவர்களை பார்க்கும்போதே நமக்கு உதறல் எடுக்கிறது.

டில்லியில் உள்ள மதுபான விடுதிகள், நட்சத்திர ஓட்டல், சினிமா தியேட்டர், கல்லூரிகள் போன்றவற்றில் அடியாட்களாக செயல்படுவது தான் இந்த இளைஞர்களின் பிரதான வேலை.
ஒவ்வொருவரும் சர்வ சாதாரணமாக, 100 கிலோ எடை உள்ளனர். இவர்களை, ‘பவுன்சர்கள்’ என அழைக்கின்றனர். இந்த இளைஞர்கள் ஒவ்வொருவரும் மாதம், 45,000லிருந்து, 80,000 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். பவுன்சர்களை உருவாக்குவற்காகவே இந்த கிராமத்தில், 3,000 ச.மீட்டர் பரப்பில் பிரமாண்ட ‘ஜிம்’ அமைக்கப்பட்டுள்ளது. அதி நவீன உடற்பயிற்சி சாதனங்கள் இங்கு உள்ளன. காலை, 4:30க்கு திறக்கப்படும் இந்த ஜிம், இரவு, 10:00 மணிக்கு தான் அடைக்கப்படுகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் இங்கு வந்து கடுமையாக உடற்பயிற்சி செய்கின்றனர்.
‘அடியாட்களை உருவாக்கும் எண்ணம் எப்படி தோன்றியது…’ என்ற கேள்விக்கு, அந்த கிராமத்தை சேர்ந்த விஜய் என்பவர் கூறியதாவது:
மற்ற கிராமங்களை போலவே இங்கும் ஒரு காலத்தில் விவசாயம் தான் பிரதான தொழில். 1990ல், டில்லியில் ஏற்பட்ட வர்த்தக வளர்ச்சி, எங்கள் கிராமத்தின் அடையாளத்தை மாற்றி விட்டது. டில்லியில் உருவான ஷாப்பிங் மால்கள், மதுபான விடுதிகள், இரவு விடுதிகள் ஆகியவற்றில் பிரச்னை ஏற்படும்போது, அவற்றை சமாளிப்பதற்கு, ‘பவுன்சர்’கள் தேவைப்பட்டனர். எங்கள் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் வாட்ட சாட்டமாக இருப்பர். இதனால், டில்லியிலிருந்து ஏராளமான வர்த்தகர்கள் எங்களை தொடர்பு கொண்டனர். நல்ல வருமானம் கிடைத்ததால், பவுன்சர்களை உருவாக்குவதை முழு நேர தொழிலாக மாற்றி விட்டோம். விவசாயம் பொய்த்து விட்டதால், இந்த தொழில் தான் எங்களுக்கு தற்போது கை கொடுக்கிறது, என்று கூறினார்.
ஷாப்பிங் மாலில் பவுன்சராக பணியாற்றும் விஜு கூறியதாவது:
தோற்றம் தான் கரடு முரடாக இருக்குமே தவிர, எங்கள் மனது வெள்ளை. மது, புகை, ஆபாச படம் பார்ப்பது என, எந்த கெட்ட பழக்கமும் இல்லை. இந்த தொழிலை ஒரு தவம் போல் செய்கிறோம்.
குறைந்தது, 10ம் வகுப்பு வரை படிக்கிறோம். அதற்கு பின், கடுமையான உடற்பயிற்சி செய்து, பவுன்சர்களாக உருவாகிறோம். சம்பளம் அதிகம் என்றாலும், எங்களின் உடற் கட்டை பராமரிப்பதற்காக அதிகமாக செலவிட வேண்டியுள்ளது.
சிக்கன், சப்பாத்தி, தினமும், 10 முட்டை, 12 வாழைப்பழம், 10 லிட்டர் பால் என, எங்களின் சாப்பாடு லிஸ்ட் மிக நீளமானது. இதற்காக தினமும், 500 ரூபாய் தேவைப்படுகிறது.
பலசாலியாக இருக்கிறோம் என்பதற்காக யாரிடமும் வம்பு சண்டைக்கு போவது இல்லை. பவுன்சர்களுக்கென, எங்கள் கிராமத்தில் நன்னடத்தை விதிமுறைகள் உள்ளன. அதை மீறினால், எங்குமே பவுன்சர் வேலைக்கு எங்களை சேர்க்க மாட்டார்கள்.
அதிக வருமானம் கிடைத்தாலும், எங்கள் தலைமுறையுடன் இந்த தொழில் முடிவுக்கு வர வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை. எங்கள் குழந்தைகளாவது டாக்டர், இன்ஜினியர் என, கவுரவமான வேலை பார்க்க வேண்டும். ‘அடியாள்’ என, மற்றவர்கள் அழைக்கும்போது, மிகவும் வேதனையாக இருக்கும். எங்கள் குழந்தைகளுக்கும் அந்த வேதனை வரக் கூடாது என, நினைக்கிறோம். எங்களின் ஆசை நியாயமானது தானே என, கேட்கும் ஆஜானுபாகுவான விஜுவின் விழிகளில், கண்ணீர் துளி எட்டிப் பார்க்கிறது.

%d bloggers like this: