மனிதன் மாறி விட்டான்!-18

முத்தம் தோன்றிய விதம் முத்தாய்ப்பானது. மாமிச உணவை உண்ணத் தொடங்கிய மனிதன், அதை மென்று தின்று ஜீரணிக்க வேண்டியதாக இருந்தது. தாய்மார்கள்  உதடுகள் மூலம் குழந்தைகளுக்கு மென்ற உணவை ஊட்டினர்.  அப்போது ஒருவிதமான வெதுவெதுப்பு குழந்தைகளுக்கு ஏற்பட்டது.  பசியால் குழந்தை அழும்போது, அதை சாந்தப்படுத்த உணவை ஊட்டுவதைப்போல தாய் அக்குழந்தையின் உதடுகளை தன் உதடுகளால் அழுத்த தொடங்கினாள்.  பிறகு அது அன்பின் பரிமாற்றமாக ஆனது.   நாளடைவில் ஆண்களிடமும் அன்பை பரிமாறிக்கொள்ள அந்த செயல்பாடு தொடர, அதுவே முத்தமாகப்போனது.  இப்போது உதடுகள் மூலம் உணவு பரிமாறப்படாவிட்டாலும் உணர்வு பரிமாறப்பட்டு வருகிறது.   

மனித உதடுகள் வித்தியாசமானவை.  உள்ளிருந்து வெளியே வரும் அவை மற்ற பாலூட்டிகளில் இருந்து மாறுபடுகின்றன.  சிம்பன்சிகளிலும் கொரில்லாக்களிலும் அவை பார்வைக்கு மறைந்திருப்பதைக் காணலாம்.  இந்த மாதிரி சூப்பர்லிப்ஸ் இருப்பதற்குக் காரணம் பரிணாம வளர்ச்சியில் பிடிபடுகிறது. குரங்கின் கரு 16 வாரம் இருக்கும்போது மனிதர்களைப்போன்ற உதடுகளே தோன்றுகின்றன.  ஆனால் 26 வாரங்கள் ஆகும்போது அவை மறைந்துவிடுகின்றன.  எனவே மனித உதடுகள் கருவோடு தொடர்புடையவை.

உதடு வெளியில் தெரியும் வாய், மென்மையான பகுதி. உணவை உட்கொள்ளவும் உணர்வை வெளிப்படுத்தும் ஒலியை உண்டாக்கவும் உபகரணங்களாக உதவுபவை.  முடியில்லாத உடற்பாகம், வயிர்வைச் சுரப்பிகள் இல்லாதவை. அதனால் விரைவில் உலர்ந்துவிடும் தன்மை கொண்டவை.  அதிகமான நரம்பு முடிச்சுகள் உதட்டை வந்து அடைகின்றன. அதனால் நெருக்கத்தை உணர்த்த உதடுகள் அதிகம் பயன்படுகின்றன.  மனிதனுக்கு மட்டுமே பேசுவதில் உதடுகளுக்கு உன்னதமான பங்கு உண்டு.

உதட்டைச் சுற்றி வளைவான தசைகள் இருக்கின்றன.  அவையே அவற்றைக் குவிக்க உதவுகின்றன. சிவப்பு நிறமாக இருப்பதே உதட்டின் சிறப்பு. 

பாலூட்டிகளில் மென்மையான தசைப்பிடிப்பான உதடுகள் குட்டியாக இருக்கும்போது தாயைக் காயப்படுத்தாமல் பால்குடிக்க வசதியாக இருக்கின்றன. உதடுகள் உலர்வது நமக்கு சங்கடமாக இருப்பதால்தான் அடிக்கடி நம்மையும் அறியாமல் நாக்கால் அதை ஈரப்படுத்திக்கொள்கிறோம். மற்ற உயிரினங்களில் உதடுகள் கிழிப்பதற்கும், அரைப்பதற்கும் உதவுகின்றன. பற்கள் இல்லாதபோது அவற்றுக்கு உதடுகளே பற்களாக இருக்கின்றன. 

நாம் காலையில் பல்துலக்கியவுடன் ஆரஞ்சு பழரசம் குடித்தால் அது கசக்கிறது. அதற்கு காரணம் நம் சுவை மொட்டுக்களில் பாஸ்போலிபிட் என்கிற சவ்வுகள் இருக்கின்றன. நம் பற்பசையில் கொழுப்பையும் கிரீஸையும் உடைக்கும் டிடர்ஜென்ட் இருக்கிறது. அதனால் ஏற்படும் வேதியியல் மாற்றமே இதற்குக் காரணம்.

நாம் வளர வளர சுவைகளை அறிகிறோம். சின்ன வயதில் ஆலிவ், கடுகு, காஃபி போன்றவை நமக்குப் பிடிப்பதில்லை.  ஊறுகாய் சாப்பிட்டால் உடல் எச்சரிக்கையை உச்சரிக்கிறது.  ஆனால், மூளை இவை ஆபத்தல்ல என்று தொடர்ந்து அறிவுறுத்தி நமக்கு சுவையை உண்டாக்குகின்றன.   

உதடுகள் சயனோஸிஸ் என்கிற குறைபாட்டால் நீலக்கலருக்கு மாறிவிடுகின்றது. ரத்தத்தின் ஆக்சிஜன் குறையும்போது அந்த மாற்றம் ஏற்படுகிறது. பிணங்கள் நீல உதடுகளோடு இருப்பது அதனால்தான்.  சில நேரங்களில் உதடுகள் தற்காலிகமாக உப்புகின்றன. உதடுகளில் வெடிப்பும் ஏற்படுவதுண்டு.  வைரஸ் தாக்கும்போது உதட்டின் மேல்பகுதியில் கொப்பளங்கள் தோன்றுவதுண்டு. அதிகப் புகையிலை மெல்லுகிறவர்களும் வெயிலில் எக்கச்சக்கமாக அலைகிறவர்களும் கார்சினோமா என்கிற புற்றுநோயினால் பாதிக்கப்படுகிறார்கள். அதிகமாக கீழ் உதட்டைத்தான் இவை தாக்குகின்றன.  பறவைகளில் உதடுகள்தான் கெட்டியான அலகுகளாக மாறுகின்றன. 

உதடுகளை சிவப்பாக்குவது ஆண்களைக் கவர்வதற்காக பெண்களால் தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்ட உத்தி. உடல் மொழியாக ஆழ்ந்த பொருளை மறைமுகமாக உணர்த்துவதற்கு உதடுகளில் சிவப்புச் சாயம் பூசுவது உருவானது.  செயற்கையாக அவற்றை சிவப்பாக்கிக் கொள்வதற்கும் பரிணாம வளர்ச்சிக்கும் தொடர்பு இருக்கிறது.  பாலுணர்வுடன் தொடர்புடையதாக அது தொடக்கத்தில் திகழ்ந்தது.  ஆனால் இப்போது, அழகுக்காக மட்டுமே என்று மருவிப்போய்விட்டது.   

கி.மு. 1150-ம் ஆண்டே எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட பேப்பிரஸ் ஓவியத்தில் பொதுமகளிர் நிலையத்தில் பெண்கள் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு உதட்டுச்சாயம் பூசும் ஓவியம் இடம் பெற்றிருக்கிறது. தெற்கு ஈராக்கில் 4,500 ஆண்டுகளுக்கு முன் புவாபி என்கிற ராணி ஏகப்பட்ட உதட்டுச்சாயத்துடன் அவள் புனர்ஜென்மத்திற்காக புதைக்கப்பட்பட்டது தெரியவருகிறது.  மேற்கில் சர்ச்சுகளில் உதட்டுச்சாயம் பூசுவது கடுமையாக கண்டிக்கப்பட்ட காலமும் உண்டு.  18-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் லிப்ஸ்டிக் பூசுவது தடைசெய்யப்பட்டது.  உதட்டுச்சாயம் பூசிய பெண்கள் ஆண்களின் உள்ளத்தை தப்பிதமாகக் கவர்ந்துவிடுவார்கள் என்பது அவர்களுடைய ஆட்சேபனை. 

முதலாம் உலகப்போரின்போது மறுபடியும் லிப்ஸ்டிக்ஸ் சமூக ஏணியில் சரமாரியாக முன்னேறியது. திரைப்படங்களிலும் அவை புழக்கத்திற்கு வந்தன.  இரண்டாம் உலகப்போரில் உதட்டுச்சாயம் நாட்டுப்பற்றுக்கான அடையாளமானது.  ராணுவத்திற்கு இளைஞர்களை திரட்டும்பணிக்கு சிவப்புச் சாயம் பூசப்பட்ட கவர்ச்சியான  பெண்களின் படங்கள் பயன்படுத்தப்பட்டன.  நாட்டைக் காப்பவர்களுக்கு பெண்களின் துணை உண்டு என்பதையே இது சூசகமாக உணர்த்தியது.  இரண்டாம் உலகப்போர் முடிந்தபோது மறுபடியும் அவை பின்னுக்குத் தள்ளப்பட்டன. 

1950களில் பிரான்ஸ். இத்தாலி ஆகிய நாடுகளில் வெள்ளை டைட்டானியத்தை உதட்டுச்சாயத்தில் கலந்து அதிக நிறமில்லாத வண்ணங்கள் புகுத்தப்பட்டன.  1960களில் கருத்தடை மாத்திரை வந்ததும் மறுபடி லிப்ஸ்டிகின் உபயோகம் அதிகரித்தது.  விளம்பர யுகத்தில் ஊடகங்களில் பெண்களைக் கவர்ச்சியாகக் காட்டுவதற்கு உதட்டுச்சாயம் அதிகமாக புழங்கத் தொடங்கின. 

தென்மேற்கு எத்தியோப்பியாவில் பெண்களை தட்டுப்பெண்கள் என்று அழைப்பார்கள்.  பெண்களின் இருபதுகளில்  திருமணத்திற்கு ஆறுமாதம் முன்பு அவர்கள் உதட்டின் ஒருபகுதியை கத்தரித்துவிட்டு ஒரு சின்ன ஓட்டை போட்டு அதில் ஒரு தட்டைத் தொங்கவிடுவார்கள்.  நாளாக நாளாக சின்னத் தட்டு சற்று பெரிய தட்டதாக மாறி கடைசியில் சாப்பாட்டுத் தட்டு அளவிற்கு ஒரு தட்டு தொங்கும்.  ஒரு பெண் எவ்வளவு பெரிய தட்டைத் தாங்குகிறார்கள் என்பதே அவள் அழகின் தன்மையை தீர்மானிப்பதாக இருக்கும்.  அதைப் பொருத்தே அவளைத் திருமணத்தில் ஏற்றுக்கொள்வார்கள்.  இது பலவிதமான ஆப்பிரிக்க குடிமக்களிடம் புழக்கத்தில் இருந்தது. 

அறுவைச்சிகிச்சையின் மூலமாக உதடுகளைப் பெரிதாக்கும் நடைமுறையும் சில இடங்களில் உண்டு.  இவ்வாறு செய்வது ஒருமணிநேரம் நீடிக்கும் சிகிச்சை என்பதோடு தழும்புகளையும் ஏற்படுத்திவிடக்கூடியது. 

சிக்மன்ட் ஃப்ராய்டு உதடுகளைக் குறித்து எப்போதும் எதிர்மறை எண்ணத்தை வைத்திருந்தார்.  புகைப்பது, சாப்பிடுவது, பழரசங்கள் குடிப்பது போன்றவற்றை அவர் உதடுகளின் மீது குவியும் அதீத பற்று என்று குறிப்பிடுவார்.  அதற்கு முக்கியமான காரணம் அவருடைய அண்ணன்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.  அதற்காக 33 அறுவைச்சிகிச்சைகள் அவருக்கு நடந்தது.  எனவே அவரால் இவற்றை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.  அந்தக் கோபமே அவ்வாறு மனவியல் குறைபாடு என்று அவர் சுட்டிக்காட்டும்படி வெளிப்பட்டது.

உதடுகள் உடல்மொழியையும் வெளிப்படுத்துகின்றன.  உதட்டைப் பிதுக்குவது இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது. தோல்வியுறுகிறபோதும் ஏமாற்றமடைகிறபோதும் தேர்ச்சி பெறாதபோதும் உதட்டைப் பிதுக்கி வருத்தத்தை வெளிப்படுத்துகிறோம்.  நாம் எதிர்பார்க்காத பிரமிப்பான ஒன்று நடக்கிறபோது நாம் வாய்பிளந்து நிற்கிறோம்.  அதை எழுத்தில் வியப்புக்குறியாய் காட்டுகிறோம். 

வாயைத் திறந்து கேட்பது ஆச்சரியத்தை உணர்த்துகிறது, உதட்டை இறுக்குவது அழுத்தத்தைக் குறிப்பிடுகிறது.  புன்னகை செய்வது, உதட்டைக்கடிப்பது போன்ற பலவித உடல்மொழிகள் அவற்றின்மூலம் வெளிப்படுகின்றன.  சிரிக்கும்போது நாம் எவ்வளவு தூரம் உதடுகளை விரிவாக்குகிறோம் என்பது முக்கியம். 

வாயின் மீது ஆள்காட்டி விரலை வைத்தால் மௌனமாக இருக்கச் சொல்கிறோம் என்று பொருள்.  வகுப்பிலிருக்கும் மாணவரிடம் ஆசிரியரிடம் ‘உஷ்’ என்று சொல்லி மௌனமாக இருக்கச் சொல்வதைப் பார்க்கலாம். இரண்டு மூன்று பேர் போகிறபோது இந்தச் சைகையை பயன்படுத்துகிறோம்.     

எதிரியை நோக்கும்போது உதடுகள் கோபத்தால் பின்னே செல்வதைப்  பார்க்கலாம்.  அச்சத்தில் உதடுகள் பின்வாங்குவதையும் பார்க்கலாம்.  துணிச்சலான புன்னகைக்கும் அச்சத்தோடு செய்யும் புன்னகைக்கும் வெறுமனே செய்கிற புன்னகைக்குமான இடைவெளிகளை நாம் நன்றாகக்  கண்டுபிடிக்கலாம். சிரிக்கிறபோது கீழ் பல் வரிசை நன்றாகத் தெரியவில்லை என்றால் அந்தச் சிரிப்பு போலியானது என்பது புலப்படுகிறது.  எதிர்பார்க்காத நிகழ்வுகளின் போது உதடுகளைக் குவித்து காற்றை வெளியேற்றுவதும் ஒருவித உடல் மொழி. 

கடினமான காரியங்களைச் செய்கிறபோது இரண்டு உதடுகளையும் ஒன்றின் மீது ஒன்று வைப்பதும் அவை தெரியாதவாறு செய்து எதிர்மறை உணர்வுகளைக் காட்டுவதும் கன்னத்தை உப்பச் செய்வதற்கு உதடுகளைக் குவித்து சைகை செய்வதும் அடிக்கடி பயன்படுத்தப்படும் உதடு மொழிகள்.   கீழ் உதட்டைக் கடித்து கோபத்தை வெளிப்படுத்துவதும் வாயைத் திறந்து நெற்றியில் கையை வைத்து தவறுக்கு நொந்துகொள்வதும், வாயை ஒரு பக்கம் கோணி ரகசியம் என்று உணர்த்துவதும், உதட்டைக் கொண்டு நாம் செய்கின்ற உடல் மொழிகள்.

சில நேரம் நம்மையும் அறியாமல் நம் உதடுகள் நாம் செய்யும் செய்கைகளுக்கு ஏற்ப பலவித மாற்றங்களுக்கு உட்படுகின்றன. முக வெளிப்பாட்டுகளுக்கு அவற்றின் பங்கு முக்கியம்.  உதடுகளைச் சுற்றியிருக்கிற வளைவான தசைகள் சுருங்கி அவை மூட உதவுகின்றன. உதடுகள் முன்னே வருவதற்கு அந்த தசைகளின் செயல்பாடே காரணம். கோபத்துக்கும் பயத்துக்கும் இருக்கிற முக பாவனையின் வித்தியாசம் வாயின் ஓரங்கள் எவ்வளவு பின்னோக்கி இருக்கின்றன என்பதைப் பொருத்தே அமைகிறது. 

உதடுகள் பேசுவதற்கு மட்டுமல்ல;  பலவிதமான இசைக்கருவிகளை வாசிக்கவும் பயன்படுகின்றன.  புல்லாங்குழல், நாதஸ்வரம், சேக்ஸோபோன் போன்றவற்றை வாசிக்க உதடுகள் வழியாக காற்றைச் செலுத்துகிறோம்.

சிலர் எப்போதும் சிரித்த முகத்தோடு காணப்படுவார்கள்.  சிடுமூஞ்சிகளை விட சிரித்த முகங்களையே மக்கள் விரும்புவார்கள்.  ஆனால், எப்போதும் பல்லைக் காட்டுபவர்கள் சிரித்த முகமாக கருதப்படாமல், இளித்த வாயர்களாக எண்ணப்படுவார்கள்.

தெலுங்கில் ஒரு சின்ன கவிதை. ‘மலர்ந்த பூக்கள் மறுபடியும் கூம்பும் சக்தியின்றி பூங்காவில் இருக்கின்றன. உன் இதழ்களோ மலர்ந்து மறுபடியும் அரும்பி நிற்கின்றன.’

One response

  1. nan uthadu galin upayogam yenna yentru thodarai padittha pin thontrugirathu.

%d bloggers like this: