திருமணமான பெண்களுக்கான சொத்துரிமை சட்டம்…

ஒருவர் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதன் முக்கிய நோக்கமே, தனக்குப்பின் தன் குடும்பம் பொருளாதார ரீதியில் எந்த வகையிலும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காகத்தான். இந்த நோக்கம் சரியாக நிறைவேற பெண்களுக்கு உறுதுணையாக இருக்கிறது திருமணமான பெண்களுக்கான சொத்துரிமை சட்டம் Married Women’s Property Act 1874). இந்தச் சட்டம் திருமணமான பெண்களுக்கு எந்தவகையில் பாதுகாப்பு அளிக்கிறது என்பது குறித்து விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் வழக்கறிஞர் நாகஷீலா.

‘‘இந்தச் சட்டம் மிகவும் பழைமையான சட்டம் ஆகும். இதில் தற்போது பிரிவு 6 மட்டும்தான் செயல்பாட்டில் உள்ளது. இந்தப் பிரிவானது கணவர் எடுக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை பெண்கள் சொத்தாக மாற்றுவதற்கு உதவுகிறது.

குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர்கள் கட்டாயம் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும். அப்போதுதான் வருமானம் ஈட்டுபவர் எதிர்பாராதவிதமாக உயிரிழக்கும் பட்சத்தில்,  அந்தக் குடும்பம் பொருளாதார ரீதியான பாதிப்புகளுக்கு  உள்ளாகாது.

 

ஆனால், இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தபின், சில தவிர்க்க முடியாத காரணங்களினால் கடன் வாங்க வேண்டிய நிலை சிலருக்கு உருவாகலாம். அந்தச் சமயத்தில் அந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை ஈடாக வைத்து கடன் பெறுவது வழக்கமான நடைமுறையாக இருக்கிறது. இன்ஷூரன்ஸ் பாலிசியை ஈடாக வைத்து கடன் பெற்றவர், பிற்பாடு திடீரென இறந்தால், அவர் எடுத்த இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் கிடைக்கும் க்ளைம் தொகையை கடனை அடைக்க எடுத்துக்கொண்டுவிடுகின்றனர்.

ஒருவர் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதே, எதிர்பாராத விதமாக  அவர் உயிரிழக்க நேரிட்டால், பாலிசியின் மூலம் கிடைக்கும் க்ளைம் தொகையைக் கொண்டு குடும்பத்தைப் பொருளாதார ரீதியாகக் காப்பாற்றிவிடலாம் என்பதற்காகத்தான். ஆனால், இந்த க்ளைம் தொகை கடனை திருப்பிச் செலுத்த பயன்படுத்தப்படுவதால், குடும்பத்துக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமலே போய்விடுகிறது. மேலும், பாலிசிதாரர் வரி பாக்கி ஏதும் வைத்திருந்தால், அதற்கான பணத்தையும் இன்ஷூரன்ஸ் பாலிசியின் க்ளைம் தொகையிலிருந்து எடுக்கலாம்.

 

இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து பெண்களை காப்பாற்றத்தான் இந்தச் சட்டம் உள்ளது. கணவர் எடுக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியை பெண்கள் சொத்துரிமை சட்டத்தின் பிரிவு 6-ன் கீழ் பதிவு செய்துவிட்டால், இதிலிருந்து க்ளைம் தொகையை மனைவி தவிர வேறு யாரும் பெற முடியாது.
இன்ஷூரன்ஸ் பாலிசியை இந்தச் சட்டத்தின் கீழ் பதிவதற்கு தனியாக விண்ணப்பம் உள்ளது. இதைப் பூர்த்தி செய்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்தால், அந்த பாலிசியின் மூலம் கிடைக்கும் க்ளைம் தொகை முழுவதும்  குடும்பத்துக்கு கிடைத்து, பொருளாதார ரீதியில் காக்கப்படும்.
என்ன நிபந்தனை?

இந்தச் சட்டத்தின் கீழ் பாலிசியைப் பதிவு செய்வதற்கு கணவர் தனது பெயரில் பாலிசி எடுத்திருக்க வேண்டும். மனைவி அல்லது குழந்தைகளின் பெயரில் எடுக்கும் பாலிசியைப் பதிவு செய்ய முடியாது. விவாகரத்து வாங்கியவர், மனைவியை இழந்தவர்கள் எடுக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியை இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பதிவு செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு க்ளைம் தொகை முழுவதுமாகப் போய்ச் சேருகிற மாதிரி பார்த்துக்கொள்ளலாம்.

எப்படி பதிவது?

இந்தச் சட்டத்தின் கீழ் பாலிசியை எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். இதில் பதிவு செய்தபிறகு பாலிசியின் மீது எந்தவிதமான கடனும் வாங்க முடியாது. இன்ஷூரன்ஸ் பாலிசி யானது பாலிசிதாரரின் மனைவியின் சொத்தாக மாறிவிடும்.

மேலும், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு மட்டும்தான் இந்தச் சட்டம் பொருந்தும். வேறு யாருக்கும் இந்தச் சட்டத்தில் பதிவு செய்ய முடியாது. இந்தச் சட்டத்தின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட பாலிசிகளைப் பதிவு செய்தும் வைக்கலாம்.
யாருக்கு பயன்?

அதிக ரிஸ்க் எடுத்து பிசினஸ் செய்பவர்களுக்குக் கடனும் அதிகமாக இருக்கும். தொழிலில் நஷ்டம் ஏற்படும் போது அதற்கு ஈடாக பிசினஸ் செய்பவரின் பெயரில் உள்ள சொத்து கள், சேமிப்பு, முதலீடு ஆகியவற்றை விற்றுக் கடனை அடைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.  இந்தச் சட்டத்தில் பதிவு செய்தபின் பாலிசிதாரரே விரும்பினாலும், பாலிசியை சரண்டர் செய்ய முடியாது. பாலிசியின் முழு அதிகாரமும் மனைவிக்குச் சென்றுவிடும். அதாவது, பாலிசிதாரர் உயிருடன் இருக்கும்போதே பாலிசி முதிர்வடைந் தாலும் முதிர்வுத் தொகை மனைவி மற்றும் குழந்தைகளுக்குத்தான் போகும்.

ரத்து செய்ய முடியுமா?

இன்ஷூரன்ஸ் பாலிசியை இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்தபின் எப்போது வேண்டுமானாலும் அதை  ரத்து செய்யலாம். ஆனால், அதற்குரிய காரணத்தைத் தெரிவிப்பது அவசியம். முன்கூட்டியே திட்டமிட்டு அதிக கடன் வாங்கி, அதிலிருந்து தப்பிக்க இந்தச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது. எதிர்பாராதவிதமாக நிகழும் சம்பவங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளத்தான் இந்தச் சட்டம்.

விழிப்பு உணர்வு இல்லை!

இந்தச் சட்டம் குறித்த விழிப்பு உணர்வு என்பது மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. இப்படி ஒரு சட்டம் இருப்பது குறித்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசிதாரருக்கு கூறுவ தில்லை. இதனால் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது’’ என்றார், வழக்கறிஞர் நாகஷீலா.

பெண்களையும் குழந்தைகளையும் பொருளாதார ரீதியாக பாதுகாக்க இந்த சட்டத்தைப் பயன்படுத்த ஆண்களும் ஊக்குவிக்கலாமே!

%d bloggers like this: