மனிதன் மாறி விட்டான்! -23

மரணம் ஏன்?

சூழலால் நாம் எப்படி பாதிக்கப்படுகிறோம் என்பதற்கு மீனை உதாரணமாகக் கொள்ளலாம்.  ‘தலஸோமா டூபெர்ரி’ என்கிற ஒரு மீன் சின்னக் குழுவாக வாழும் இயல்பைக் கொண்டது.  அதில் ஒன்று மட்டும் ஆணினம்.  மற்றவை பெண் இனங்கள். திடீரென அந்த ஆண் மீன் இறந்துவிட்டால், ஒரு புதிய ஆண் மீன் எங்கிருந்தாவது வந்து அந்தக் கூட்டத்தில் இணைந்துகொள்ளும். ஒருவேளை ஆண் மீன் எதுவும் வராவிட்டால், ஒரு பெண் மீனே ஆணாக மாறிவிடும்.  அப்படி மாறிய பெண் மீன், ஆண் மீனைப்போல நடந்துகொள்வது மட்டுமில்லாமல் உயிரணுக்களையும்  உற்பத்திச் செய்யக்கூடியது. எப்படிச் சூழல் ஒன்றைத் தீர்மானிக்கிறது என்பதற்கு இது இயற்கையில் நடக்கும் ஓர் அதிசயம். 

நம் உடலுக்குள்ளேயே சில அதிசயங்கள் உண்டு. ஒருவர் நம் கைகளைத் தொடும்போது அதை உணரும் வேகத்தைவிட தோள்களைத் தொடும்போது உணரும் வேகம் அதிகம். அதனால்தான் ஒருவருடைய தோளைத் தொட்டு அழைக்கிறோம்.  கணுக்காலில் தொட்டால் அதை உணரத் தாமதமாகும்.  தோள்கள் மூளைக்கு அருகில் அமைந்திருப்பதே இதற்குக் காரணம். 

மனிதனை எப்போதும் உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு கேள்வி மரணம். நாம் தொடர்ந்து வாழ முடியாதா என்கிற ஏக்கம் நம் இலக்கியங்களில் எதிரொலிக்கிறது.    விஞ்ஞானம் இதற்கு விடை காண முயல்கிறது.  ஒரு பூ விழுவதையும், மரம் சாய்வதையும், பறவை மடிந்து விழுவதையும் இயல்பாக எடுத்துக்கொள்ளும் நம்மால், நாம் மரணமடைந்து விடுவோம் என்பதை மட்டும் ஜீரணிக்க முடிவதில்லை. 

மனிதன் வேட்டையாடும்போது 30 வயதைத் தாண்டி வாழவில்லை.  விவசாயம் செய்தபோதுதான் ஆயுள் அதிகரித்தது.  இந்தியாவில் 1920-க்குப் பிறகுதான் பிறப்பு விகிதம் அதிகரித்தது. இறப்பு விகிதம் குறைந்தது. அதன்பிறகுதான் மக்கள்தொகை மளமளவென உயர்ந்தது. அதற்குக் காரணம் மருந்துகள். மனிதன் மரணம் அடையாமல் இருக்க உடல் செய்யும் ஒத்தாசை அபரிமிதமானது. சுயநல ஜீன்களைப் பற்றியும், சுயநல மூளையைப் பற்றியும் கூறியிருந்தேன்.  அவை நம்மைப் பாதுகாக்கும் நோக்கத்தில்தான் அப்படிச் செயல்படுகின்றன. சுயநலமில்லாத செல்கள் நம் உடம்பில் கவனமுடன் பணியாற்றுவதால் நாம் உயிர் வாழ முடிகிறது.  ஒரு நச்சுப் பொருள் நம் உடலில் நுழைகிறது.  உதாரணத்துக்கு ஒரு வைரஸ் நம் உடலில் உள்ள ஒரு செல்லுக்குள் நுழைந்தால் கொல்லும் இயல்புகொண்ட செல்களால் அது எச்சரிக்கப்படுகின்றது.  அவை அந்த வைரஸை தாக்கிக் கொல்கின்றன.  அதேநேரத்தில் தங்கள் சவ்வுப் பகுதியை அந்த வைரஸுக்குக் காட்டித் தற்கொலை செய்துகொள்கின்றன.  ‘என்னைக் கொன்று மற்ற செல்களைக் காப்பாற்று’ என்பதுதான் அந்த செல்லின் செயல்பாடு.  இப்படிச் சுயநலமற்றச் செல்களே நம்மை வாழவைக்கின்றன. 

மரணம் ஏன்? என்பது நமக்குள் இருக்கும் வினா. அதை நாம் அறிவியல் ரீதியாக அணுகுவதுதான் முறை. நம் உடலில் இருக்கும் உயிரியல் பழுது செய்யும் அமைப்புகள், உடலில் எந்தப் பாகம் பழுதானாலும் சரிசெய்ய முயற்சி செய்கிறது. உதாரணமாக நம்மிடம் ஒரு கார் இருக்கிறது. முடிந்த அளவுக்கு அதை ரிப்பேர் செய்து உபயோகப்படுத்திக் கொள்வோமே தவிர, ஒரு சின்ன பழுதுக்காகத் தூக்கி எறியமாட்டோம். அதைப்போல நம்முடைய உடலிலும் இயல்பாக ஒரு ‘ரிப்பேர் மெக்கானிஸம்’ இருக்கிறது. 

இயற்கை எப்போதும் எது முக்கியம் என்பதைத் தீர்மானிக்கிறது. பாம்பு சட்டையை உரிப்பது அதற்கு அவசியம். சில நண்டு வகைகளில் வெளிப்புற எலும்புக் கூட்டைப் புதுப்பிப்பது வழக்கம்.  சுறாக்கள் கணக்கற்ற முறையில் பற்களைப் புதுப்பிப்பது அவசியம். கார்களில் டயர்களையும், பேரிங்குகளையும் நாம் அடிக்கடி மாற்றுவதைப்போல ஒவ்வோர் உயிருக்கும் தேவையான பாகத்தை இயற்கை புதுப்பித்துத் தருகிறது.  மனிதனுக்குப் பற்கள் இரண்டு முறை விழுந்து முளைக்கின்றன.  மூன்றாவது முறை அது முளைப்பதில்லை.  காரணம், ஒரு பல் முளைப்பதைவிட இதயத்தைச் சீராக்குவதுதான் நமக்கு அத்தியாவசியம்.   நமக்கு மூன்றாம் முறை பல் முளைப்பதற்குச் செலவிடும் சக்தி ஒருவர் பழுதடைந்த எஞ்சினை புதுப்பிக்காமல் தங்க ஸ்டியரிங் பொருத்துவதைப்போல ஆடம்பரமானது. 

சிலவற்றில் இயற்கை நமக்குத் தாராளமாகப் புதுப்பித்துத் தரும் கருணையைக் காட்டுகிறது.  உதாரணமாக எத்தனை முறை கத்தரித்தாலும் முடியும் நகமும் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. சிலருக்குப் பிரச்னைகள் இருந்தாலும் பலருக்கு அவை புதுப்பிக்கப்படுவதற்குக் காரணம் தேவையும், அதிக சக்தி விரயமாகவில்லை என்கிற யதார்த்தமும்தான்.  நம் உடலில் பல செல்கள் பழுதடைந்துகொண்டே இருக்கின்றன.  அவற்றைத் தொடர்ந்து உடல் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது.  ஒரு கட்டத்தில் மூளை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்ற அத்தியாவசியமான பாகங்களைச் சரியாக இயங்கச் செய்வதுதான் முக்கியம் என்கிற பட்சத்தில், தோலில் உள்ள பழுதடைந்த அத்தனைச் செல்களையும் உடலால் புதுப்பிக்க முடிவதில்லை.  கார், பழுதாகும்போது எப்படிப் புதிய காரைப்போல அது செயல்பட முடியாதோ அதைப்போலவே வயதாக வயதாக நம் உடலும் இளமையில் இருந்த மாதிரி இயங்க முடிவதில்லை.  அனைத்துச் செல்களையும் புதுப்பிக்கும் வேகம் குறைகிறபோது, நம் தோலில் சுருக்கங்கள் விழுகின்றன.  நமக்கு வயது தெரிய ஆரம்பிக்கிறது.  அப்போதும் உடல் கழுவி விட்ட காரைப்போல நம் உடலை ஒப்பேற்றி இயங்கச் செய்கிறது. 

இயற்கை எப்போதும் எது சரியான விகிதம் என்பதைத் தீர்மானித்து உச்சபட்ச செயல்பாட்டை வழங்குகிறது. சைக்கிளை வைத்துக்கொண்டு அதில் எவ்வளவு அதிவேகமாகச் செல்ல முடியுமோ அந்த வேகத்துக்கு இயக்குவது மட்டுமே விபத்து ஏற்படாமல் தடுக்க உதவும். நாம் உயிர் வாழ்வதற்கு எது முக்கியம் என்பதை அனுசரித்துத்தான் நம் உடம்புக்கான ஆற்றலை நெறிபடுத்துகிறது நம் உயிர்.  உதாரணமாக ஆபத்து நேரும்போது  பல்லி வாலைக் கழற்றிவிட்டுவிட்டு  மறுபடியும் வளர்த்துக் கொள்கிறது.  அதற்குத் தற்காலிகமாக வால் போனாலும் உயிர் எஞ்சியிருக்கிறது.  அதேநேரத்தில் சுவரில் உறுதியாக செல்ல வால் அவசியம். எனவே, அதன் வால் இயற்கையால் புதுப்பிக்கப்படுகிறது. இந்தத் தேவை நாய்களுக்கு இல்லை. நாகலாந்தில் வாலற்ற பல நாய்களை நான் பார்த்தேன்.  அங்கு நாய்க்கறி விசேஷம். ஒரு விருந்தினர் வந்தால் வால் காலி. நான்கு பேர் வந்தால் நாயே காலி. நம்மூரில் ‘டோபர்மேன்’ இன நாய்கள், வால் தங்கள் மீது திணிக்கப்பட்டதாகக் கருதி கடித்துக்கொள்ளும் என்பதால் சின்ன வயதிலேயே வெட்டி விடுகிறார்கள். 

தேனீக்கள் எட்டு அவுன்ஸ் தேனை சாப்பிட்டால் ஒரு அவுன்ஸ் மெழுகை உற்பத்திச் செய்ய முடியும்.   அவை மெழுகைச்  சிக்கனமாகப் பயன்படுத்திக் கூட்டைக் கட்டவேண்டும்.  அதிகபட்சம் தேனைச் சேகரிக்க அறுகோண வடிவமே ஏற்றது என்பதை உணர்ந்து அவை வட்ட வடிவத்திலோ, சதுர வடிவத்திலோ ஒவ்வோர்  அறையையும் அமைக்காமல் அறுகோண வடிவத்தில் அறைகளை அமைத்துக் கூட்டைக் கட்டுகிறது.  இன்று கணித வல்லுநர்கள் அதன் கணித அறிவை வியந்து பாராட்டுகிறார்கள்.     நம் உடலில் எலும்பு முறிந்தால் அதைச் சரிசெய்யும்  பொருட்டு நம்முடைய அனைத்துச் சக்தியும் அந்த இடத்தை நோக்கியே செல்லும்.  அந்த நேரத்தில் நகங்களின் வளர்ச்சிகூட குறைவாக இருக்கும். காயம் ஏற்பட்டால் அதை முதலில் குணமாக்குவதே உடலின் முதல் பணி. ஜனாதிபதி வருகிறபோது அனைத்து வழிகளையும் அவருக்கு மட்டும் அகலத் திறந்து வைத்து இருப்பதுபோலத்தான். 

நமக்கு ஒரு நாளைக்கு ஆணாக இருந்தால் 1,640 கலோரிகளும், பெண்ணாக இருந்தால் 1,430 கலோரிகளும், எதுவும் செய்யாமல்  படுக்கையில் இருந்தாலும் தேவைப்படும்.  இந்தக் கலோரிகள் நம் உடலைப் பழுது பார்க்கத்தான் பயன்படுகிறது. தினமும் மாரத்தான் ஓடுகிற   ஒருவனுக்குக்கூட 5,000 கலோரிகளுக்கு மேல் தேவை இல்லை. அவனால் அதற்குமேல் சாப்பிடவும் முடியாது.  ஆதலால், நம்முடைய இந்த உணவை உடல் மிகவும் நுணுக்கமாகப் பயன்படுத்தித் தேவையான செயல்பாட்டை மட்டுமே கவனித்துக்கொள்கிறது.  சில இனங்களில் உணவு அரிதாகும்போது பெண் பறவைகள் வாழ்வதற்கு ஆண் பறவைகள் சாப்பிடாமல் செத்துப்போவது உண்டு.  அந்த இனம் வாழ பெண் பறவைகள் தொடர்வது அவசியம் என்பதால் பரிணாம வளர்ச்சி இப்படிப்பட்ட மாற்றத்தை செய்திருக்கிறது.

%d bloggers like this: