டீம் இந்தியா! உலகக் கோப்பை ஸ்கேனிங்

ப்போதுதான் தோனி, லாங்-ஆனில் சிக்ஸ் தூக்கி இந்தியாவுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்ததுபோல் இருக்கிறது. அதற்குள் நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. 2015-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை இதோ… டி.வி-க்கு எட்டும் தூரத்தில்!

இந்தியா, உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 15-ம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது. கடந்த முறை உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இருந்த சச்சின், ஷேவாக், யுவராஜ் சிங், கௌதம் காம்பீர், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் போன்ற மேட்ச் வின்னிங் சீனியர்கள் யாருமே இந்த முறை இல்லை. அணியின் ஒரே சீனியரான தோனி தலைமையில் மீண்டும் உலகக் கோப்பையில் களம் இறங்கும் இந்திய அணி வெற்றி பெறுமா?

ஒரே சூப்பர் ஸ்டார் தோனி!

2015-ம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி மீண்டும் வெல்லும் எனக் கணிப்பதற்கு ஒரே காரணம் மகேந்திர சிங் தோனி மட்டுமே. தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் சீனியரான தோனி, கடந்த முறை இந்தியாவுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத்தந்த திறமைசாலி; அனுபவசாலி. இரண்டு உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியவர். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் பல நாட்டு வீரர்களுடன் விளையாடி, அவர்களின் பலம் – பலவீனங்களை நன்கு அறிந்துவைத்திருப்பவர். எந்த பௌலருக்கு எந்த நேரத்தில் பந்து வீச வேண்டும், எந்த பேட்ஸ்மேனைத் திடீரெனக் களம் இறக்கி எதிர் அணியின் வியூகங்களைக் குலைக்க வேண்டும்… போன்ற வெற்றி ஃபார்முலா அறிந்தவர். ஆகவே, மீண்டும் ஒருமுறை உலகக் கோப்பை பெறுவதற்கான இந்தியாவின் ஆபத்பாந்தவன்!

இப்போது டெஸ்ட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி, மனதளவில் மிகவும் ரிலாக்ஸாகி இருப்பார் என்றே எதிர்பார்க்கலாம். வெளிநாட்டு மைதானங்களில் இந்திய அணி சொதப்பும் என்பதைப் பொய்யாக்கி, மீண்டும் ஓர் உலகக் கோப்பையைப் பெற்றுத்தந்தால், இந்திய கிரிக்கெட்டின் எவர்கிரீன் சூப்பர் ஹீரோ பட்டத்தை நிரந்தரமாகத் தக்கவைத்துக்கொள்வார் தோனி!

தோனிக்குக் கைகொடுப்பார் கோஹ்லி!

துணை கேப்டனும் துடிப்பான பேட்ஸ்மேனுமான விராட் கோஹ்லிதான் இந்திய பேட்டிங்கின் மீகாமன். 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 282 ரன்கள் அடித்திருக்கிறார் கோஹ்லி. ’22 வருடங்களாக இந்திய கிரிக்கெட் அணியை தன் தோளில் தூக்கிச் சுமந்தவர். அதனால்தான் இன்று மைதானம் முழுக்க அவரைத் தோளில் சுமந்து வருகிறோம்’ என, கடந்த முறை உலகக் கோப்பையை வென்றதும் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி குறிப்பிட்டார் விராட் கோஹ்லி. இந்த முறை சச்சினாக இருந்து இந்திய பேட்டிங் டிப்பார்ட்மென்ட்டுக்குத் தோள் கொடுக்கவேண்டியது கோஹ்லியின் கடமை. இந்தியாவின் ரன் மெஷினாக மாறி கோஹ்லி ரன்களைக் குவித்தால், அரை இறுதிக்கு இந்தியா முன்னேறுவது எளிமையாக இருக்கும்!

ஆல் ரவுண்டு பலம்!

சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்டூவர்ட் பின்னி, அக்ஸர் பட்டேல் ஆகியோர் இந்திய அணியின் ஆல் ரவுண்டர்கள். ரெய்னா, ஜடேஜா இருவரும் முக்கிய பௌலர்கள் சொதப்பும்போது, சட்டென இடையில் புகுந்து விக்கெட்டுகளைப் பறிக்கும் திறமைசாலிகள். அதேபோல் ஐந்தாவது, ஆறாவது வரிசையில் பேட் பிடித்து ‘ஸ்லாக்’ ஓவர்களில் குபீர் ரன் குவிக்கும் கில்லாடிகள். ஸ்டூவர்ட் பின்னிக்கு இது முதல் உலகக் கோப்பை என்றாலும் தோனிக்கு அடுத்தபடியாக வயதில் மூத்தவர் பின்னிதான். 30 வயதான பின்னிக்கு பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே திறமையை வெளிப்படுத்த மிகச் சரியான வாய்ப்பு இது. அஸ்வினும் அக்ஸர் பட்டேலும் சுழற்பந்துகளோடு மட்டையையும் சுழற்றினால், இந்திய அணிக்கு அது பெரிய ப்ளஸ்!

ஆனால், இது கோட்டுக்கு இந்தப் பக்கம்தான்… கோட்டுக்கு அந்தப் பக்கம் பல பலவீனங்களைக் கொண்டுள்ளது டீம் இந்தியா.

 

சீனியர்கள் நஹி!

2015-ம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்திருக்கும் 15 பேர்கொண்ட இந்திய அணியில், 11 பேருக்கு இதுதான் முதல் உலகக் கோப்பை. இதில் ஆல் ரவுண்டராக இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் ஸ்டூவர்ட் பின்னி, இதுவரை ஆறு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். உலகக் கோப்பை இந்திய அணியில், 50-க்கும் குறைவான ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் எட்டு வீரர்கள் இடம்பிடித்திருக்கிறார்கள். அனுபவம் இல்லாத வீரர்களுடன் முதல்முறையாக உலகக் கோப்பையில் களம் இறங்கியுள்ளது இந்திய அணி. 2015-ம் ஆண்டு உலகக் கோப்பையில், புதுமுக வீரர்கள் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பு. ஆனால், இதை அவர்கள் சரியாகப் பயன்படுத்தி, உலகக் கோப்பையை வாங்கித் தருவார்களா?

பேட்ஸ்மேன்கள் இல்லை!

கடந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர், 9 போட்டிகளில் 482 ரன் குவித்திருந்தார். இவருக்கு அடுத்தபடியாக காம்பீர், ஷேவாக், யுவராஜ் சிங் ஆகியோர் 350 ரன்களுக்கும் மேலாக ரன் குவித்திருந்தனர். ஆனால், இந்த முறை இந்திய அணியில் அப்படியான ரன் குவிக்கும் வீரர்கள் இல்லை. கடந்த உலகக் கோப்பையில் சதம் அடித்து இப்போதைய அணியில் இடம்பிடித்திருக்கும் ஒரே இந்திய வீரர், விராட் கோஹ்லி.

கடந்த முறை சச்சின் டெண்டுல்கர், ஷேவாக், கௌதம் காம்பீர் என முதல் வரிசையில் இறங்கி விளையாட, திறமையான ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் இருந்தனர். ஆனால் இந்த முறை, இந்தியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களின் தரம் ஆவரேஜ்தான். தவான், ரோஹித் ஷர்மா, ரஹானே என அனுபவமே இல்லாத, குறிப்பாக வெளிநாட்டு மைதானங்களில் இதுவரை திறமையை வெளிப்படுத்தாத வீரர்களே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். தோனி, சுரேஷ் ரெய்னா என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கைகொடுத்தால் மட்டுமே, இந்தியா எதிர் அணிக்குச் சவாலான இலக்குகளை நிர்ணயிக்க முடியும்; எதிர் அணியின் இலக்குகளைத் துரத்திப் பிடிக்கவும் முடியும்!

ஸ்ட்ரைக் பௌலர் யார்?

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமானவை. ஆனால், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இதுதான் முதல் உலகக் கோப்பை. கடந்த உலகக் கோப்பையில் இந்தியாவின் நட்சத்திர பௌலராக இருந்த ஜாகீர்கான், 9 போட்டிகளில் 21 விக்கெட்டுகளைப் பறித்து, தொடரில் அதிக விக்கெட் குவித்த பௌலராக இருந்தார். ஆனால் இந்த முறை, இந்தியாவின் ஸ்ட்ரைக் பௌலர்… இஷாந்த் ஷர்மா. இவருக்கு இதுதான் முதல் உலகக் கோப்பை. இவர் இதுவரை 75 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 106 விக்கெட்டுகளை மட்டுமே சாய்த்திருக்கிறார்.

புவனேஷ் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ் போன்ற மற்ற பௌலர்கள் 50 ஒருநாள் போட்டிகள்கூட விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள். அதேபோல், இந்திய அணியின் ஸ்பின் பௌலிங் மிகவும் பலவீனமாக இருக்கிறது. அஸ்வின் மட்டுமே பிரதான பந்துவீச்சாளர். ஆனால், இவரது சுழல் ஆஸ்திரேலியாவில் எடுபடுமா என்பது சந்தேகமே. அணியின் இன்னொரு ஸ்பின்னரான அக்ஸர் பட்டேல் பற்றி கணிக்கக்கூட முடியாது. அந்த அளவுக்கு சூப்பர் ஜூனியர் அவர்.

எப்போதுமே, ‘பேட்டிங் செம ஸ்ட்ராங், பௌலிங் ஓ.கே’ என்ற சரிவிகிதக் கூட்டணியில்தான் இந்திய அணி உலகக் கோப்பைக்குத் தயாராகும். ஆனால், இந்த முறை பேட்டிங், பௌலிங் என இரண்டு டிப்பார்ட்மென்ட்டுமே 50/50 என்ற ‘கரணம் தப்பினால் மரணம்’ நிலையில் இருக்கின்றன. ஆனால், ‘அனுபவம் இல்லாத வீரர்கள்’ என்ற பலவீனமே சமயங்களில் ‘இள ரத்தம்’ என்ற பலமான அஸ்திரமாகிவிடும். அந்த அஸ்திரத்தை எய்தவேண்டிய பொறுப்பு, இப்போது தோனி கையில் இருக்கிறது. 

%d bloggers like this: