சுற்றுலா போகலாம் வாரீங்களா!

‘வேறு வேலையே இல்லையா…’ என நினைத்து ஒதுக்கும் பல விஷயங்களில் ஒன்று, நிறைய இடங்களுக்கு பயணப்படுவது. அதாவது, வருடம் ஒரு முறையேனும் நம் அன்றாட வேலை, பிரச்னையிலிருந்து விலகி, வேறு இடம் சென்று, அந்த சூழ்நிலை, பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்ள விரும்புவது.
அதுக்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியாது என்று சொல்வோர், இனியாவது, அவ்வப்போது இரண்டு, மூன்று நாட்களுக்கு, ஒரு சின்ன, ‘டூர்’ சென்று வருவது நல்லது. இது மாதிரி இரண்டு, மூன்று நாட்கள் என்றால், நம் குடும்ப உறுப்பினர்கள் அல்லாது பழகிய தோழமைகளோடு சென்றால் இன்னும் நல்லது.
அவ்வப்போது சுற்றுலா செல்ல நேரிடும்போது, ‘இன்று சுற்றுலா வந்துள்ளோம்… நம்முடன் இருப்பவர்களால் நமக்கு எந்த தொந்தரவும் வரப்போவதில்லை; சந்தோஷம் மட்டுமே…’ என, மனதளவில் சிந்தித்தாலே, பல மனக் கவலைகளுக்கு தீர்வு கிடைக்க வழி வகுக்கிறது.
நம் உறவுகளே நம்முடன் இது மாதிரி வரும்போது, நம் வழக்கமான உணவும், பேச்சும், வீட்டு பிரச்னையும் தான் முதன்மை பெறும். அதனால், அறிமுகமில்லாத பல பேர் கூடும் இந்த மாதிரி பயிற்சி வகுப்புகளை தவறவிடாதீர்கள். அவர்களின் பேச்சு, உணவு பழக்கம், உடை என எல்லாமே நமக்கு ஏதாவது ஒரு நல்ல விஷயத்தையும்; நமக்கு இது தேவையில்லை என்கிற மாதிரியான ஒரு தவறான பழக்கத்தையும் தெரிந்து கொள்ள உதவும்.

முக்கியமாய் பல மனக் குழப்பத்தோடு இருக்கும் நாம், இப்படி பல பேர்களை சந்தித்து உறவாடும் போது தான் நமக்கான பிரச்னையும், மனக் குழப்பமும் இவர்களை ஒப்பிடும் போது ஒன்றுமே இல்லை என்கிற தெளிவும் ஏற்படுகிறது. இது சுயநலமாய் தோணலாம்; ஆனால், உளவியல் ரீதியாக இது நிரூபிக்கப்பட்டது. நம்மை விட அல்லல்படும் ஆயிரம் பேர் உள்ளனர் என்பது புரியும்போது, நம் பிரச்னைக்கான தீர்வு கண்டுபிடிக்க தேவையான மனத் தெளிவு நமக்கு கிடைக்கும்.
புரியவில்லை: நாங்களும், சுற்றுலா சென்றிருந்தோம்… அங்கு வந்திருந்த பல பெண்கள் வீட்டு நிர்வாகிகள்; சமையல், கணவர், பிள்ளைகள் என, அவர்களை சுற்றியே தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள். அவர்களுக்கு தெரிந்த பல விஷயங்கள் நமக்கு தெரியலை; நமக்கு தெரிந்த சில விஷயங்கள் அவர்களுக்கு புரியலை.
ஒரு பெண், சமையல் பற்றி சுவாரசியமாக லெக்சர் கொடுத்துக் கொண்டிருந்தார். மற்றொரு பெண், அடுத்த மாதம் ரிஷிகேஷ் போகலாம் என்பதாக கூறிக் கொண்டிருந்தார். சமையல் பற்றி பேசிய பெண்ணிற்கு ரிஷிகேஷ் என்று சொல்ல வரலை; கிண்டலும், கேலியும் ஓடிக்கொண்டிருந்தது. ‘எனக்கு சமையல், என் பிள்ளைகள் என, என் உலகமே என் வீடு தான்; அதை தாண்டி இந்த ரிஷி, ருஷிகேஷ் எல்லாம் எனக்கு எதுக்குப்பா…’ என்றதும், கேலியும், கிண்டலும் நின்றுவிட்டது.
பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறிட்டாங்க என்பது சும்மா சொல்லப்படுகிறதா? இல்லை… பெண்களே இதைத் தான் விரும்புகின்றனரா என்பதும் தெரியலை.
இது தப்பா என்கிற விவாதத்திற்குள் நாம் செல்ல விரும்பலை. ஆனாலும், ஒரு மனக் குழப்பம்… நம்மை மாதிரி படித்து வேலைக்கும், சமுதாயத்தில் பல காரியங்களில் ஈடுபட்டும் இருக்கிற நகரத்து பெண்கள் மிக அதிகமான சுதந்திரத்தையும், படித்தும் வேலைக்கு போகக் கூடிய சூழ்நிலையும், வாய்ப்பும் கிட்டாத கிராமத்து பெண்கள் இன்னும் அதே சுதந்திரமற்ற நிலையிலும் தான் இன்னும் இருக்கின்றனரா என்கிற மாதிரியான எண்ண ஓட்டங்கள் மனதுக்குள்.
நமக்கு மிகப் பெரிய பிரச்னையாக தெரிந்ததெல்லாம் அவர்களுக்கு தூசியாக தோன்றியதும்; நாம் கவுரவம் என நினைத்துக் கொண்டிருந்தவைகள் மிக சாதாரணமாய் அவர்களுக்கு தோன்றியதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இன்பமும், துன்பமும்; வேலையும், ஓய்வும் எல்லாருக்கும் பொது. பின் ஏன், எதற்காக, நாம் மட்டும் மன கஷ்டத்தோடு வாழணும் என்கிற கேள்வி எழுகிறது. இந்த மாதிரியான ஒன்றுகூடும் விழா, நிகழ்ச்சிகளில் இதற்கான பதிலும் கிடைக்கிறது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.
உலகமே இருண்டுவிட்டதாய் நினைத்து கொண்டிருக்கும் பெண்கள், தங்கள் வேரிலே படிந்து போன இப்படியான எண்ணங்களை விட்டு வெளியில் வரவேண்டும்.
விந்தைகளை பார்க்கணும்!: வெளியில் நடக்கும் எத்தனையோ விஷயங்களை, ‘அடடே…’ என, விழியினைப் பிதுக்கி பார்க்கிறோம்.
நமக்குள்ளும் இதுமாதிரியான சந்தர்ப்பங்களில் நடக்கும் பல விந்தையினை பார்க்க முயலணும். பற்பல வீணான எண்ணங்கள்
நம் நினைவில் இருக்கும் வரை, வாழ்வின் அற்புதத்தை நம்மால் அறிய முடியாமல் போய்விடுகிறது உங்களின் அர்த்தமற்ற சில எல்லைகளை உடைத்தெறியுங்கள்; உற்சாகமாக இருங்கள்; பின்பு பாருங்கள்…
பல இடங்களில் உங்களையே உதாரணம் காட்டுவர். உங்களுக்குள் இருக்கும் திறமைகளை முழுவதுமாக அறிந்து கொள்ளவும், பிறருடைய சாமர்த்தியத்தை புரிந்து கொள்ளவும் இது மாதிரியான வெளி வட்டார சுற்றுலாக்கள் அவசியம். மனித வாழ்க்கையே ஒரே ஒரு வினாடி தான் என்ற புத்தர், அதற்கான விளக்கத்தையும் சொல்கிறார், ‘வாழ்வு ஒரே ஒரு நொடி என்று அர்த்தமில்லை. ஆனால், ஒவ்வொரு நொடியாக வாழ வேண்டும்; ஒவ்வொரு நொடியிலும் முழுமையாக வாழ வேண்டும்’ என்பது தான் அது.
இனி, இதுமாதிரியான அனுபவத்திற்காகவாவது, சின்ன சின்ன சுற்றுலாக்களை அமைத்துக் கொள்வோம்!

%d bloggers like this: