பட்டர் புரூட் என ஒரு பழம் இருப்பது தெரியுமா? பெரும்பாலானவர்கள் இப்பழத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை. வெண்ணெய் பழம் என இதை அழைக்கின்றனர். இரண்டாம் சீசன் காலங்களான ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் காய்த்து, சந்தையில் விற்பனைக்கு வரும்.
தற்போது ஜனவரி இறுதியில், வரத்து துவங்கியதால் பழக்கடைகளில் விற்பனைக்கு வைத்துள்ளனர்.
இதில், பச்சை நிறத்திலுள்ள மேல் பகுதியை நீக்கி உள்ளே வெண்ணெய் போன்ற பகுதியை பாலுடன் சேர்த்து கலக்கி, சர்க்கரையும் சேர்த்து சாப்பிடுகின்றனர். ஐஸ்கிரீம் போன்ற சுவை உள்ளதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். அக்காலத்தில் ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த அவக்கோடா பழங்கள், தற்போது பல நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள், பாடி லோஷன், ஷாம்பூ, முகத்துக்கு போடும் கிரீம் போன்றவையும் தயாரிக்கப்படுகிறது.
நட்சத்திர ஓட்டல்களில் புரோட்டா, சப்பாத்தி போன்ற உணவு பொருட்கள் மிருதுவாக இருக்க, அவக்கோடா பழத்தின் வெண்ணெய் போன்ற சதை பகுதியை கலந்து தயாரிக்கின்றனர். இந்த பழங்களை துபாய் போன்ற நாடுகளில் விரும்பி சாப்பிடுகின்றனர். குளிர்ச்சியான இந்த பழம் உடம்பின் சூட்டை குறைக்கும் தன்மை உள்ளது.