ரஜினியை சந்திக்கும் திட்டம்; விஜயகாந்தை கைகழுவுகிறதா பா.ஜ.க?

ரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வுக்கு ஆதரவுக்கோரி நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்திக்கப் போவதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருக்கும் கருத்தால்,  தேர்தல் கூட்டணிக்கு இனியும் தேமுதிக விஜயகாந்தை எதிர்பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு அக்கட்சி வந்திருப்பதாக  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது.
வெவ்வேறு கட்சிகளிலிருந்து விலகி 2 ஆயிரம் பேர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக அரசியல் களம் சூடாகி உள்ள நிலையில்,   பா.ஜ.க கூட்டணியில் விஜயகாந்த் இடம்பெறுவாரா மாட்டாரா  என்ற விவாதங்கள் பலவாறாக நடந்துவருகின்றன.

இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த காஞ்சிபுரம் மாநாட்டிலும் விஜயகாந்த் தனது கூட்டணி முடிவை அறிவிக்காததால், பா.ஜ.க எரிச்சலடைந்துள்ளது.
பா.ஜனதாவின் இந்த எரிச்சல், இன்றைய நிகழ்ச்சியில் அப்பட்டமாக வெளிப்பட்டது. நிகழ்ச்சிக்குப்பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பொன்ராதாகிருஷ்ணன்,  “தேமுதிக தலைவர் விஜயகாந்த் “கிங்”கா  அல்லது “கிங்மேக்கரா?” என்பதைப் பற்றி பாஜகவுக்கு கவலை இல்லை” என்று  கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் அமைந்த கூட்டணியைபோல் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக கூட்டணி தொடரும். தேமுதிக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் ‘கிங்’கா அல்லது ‘கிங் மேக்கரா?’ என்று தொண்டர்கள் மத்தியில் கேட்ட கருத்து பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அதே சமயம் விஜயகாந்துடன் உள்ள எங்கள் கூட்டணி இன்னும் தொடர்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில்,  நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு கோரும் திட்டமும் உள்ளது என்றார்.

மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் வீற்றிருக்கும் பா.ஜ.கவிற்கு,  பாராளுமன்றத்தேர்தலில் தன் பலத்தை நிரூபிக்க முடியாத தேமுதிகவின் அலட்சியமான நடவடிக்கைகள் பாஜக வை எரிச்சல்படுத்திக் கொண்டிருக்கிறது.  

அவ்வப்போது மோடிக்கு சென்று சேரும் இந்த தகவல்கள், பா.ஜ.கவை வேறு திசையை நோக்கி பயணிக்கும் முடிவுக்கு தள்ளியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்கும் திட்டம் மோடியினால் வகுக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

கூட்டணி குறித்து விஜயகாந்திடமிருந்து எந்த சமிங்ஞையும் கிடைக்காததால், அவரை  கைகழுவிவிட்டு,  ரஜினி ஆதரவுடன் சட்டமன்றத்தேர்தலை சந்திக்க பா.ஜ.க திட்டமிட்டிருப்பது பொன்ராதாவின் இந்த பேட்டி உணர்த்துகிறது. ஆனால் இதற்கு ரஜினி எந்த அளவிற்கு அசைந்து கொடுப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஏனெனில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியே நேரில் வந்து பார்த்தும், ரஜினி மழுப்பலாக நழுவி விட்டார்.

இருப்பினும் கூட்டணி குறித்த முடிவை தெரிவிப்பதில் விஜயகாந்த் இழுத்தடிப்பதால், ரஜினியிடம் ஆதரவு கோரப்போகிறோம் என்ற தகவலை பரப்பினாலாவது அவர் விரைந்து ஒரு முடிவுக்கு வருவார் என்ற எண்ணத்திலும் பொன் ராதாகிருஷ்ணன் இவ்வாறு கூறி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதாவுக்கு விஜயகாந்த் அல்லது ரஜினிகாந்த் என்ற சினிமா நட்சத்திரத்தின் ஆதரவை எதிர்பார்த்து தமிழக அரசியலில் களம் காண நினைப்பது உண்மையிலேயே அக்கட்சிக்கு பின்னடைவான ஒன்றுதான்!

%d bloggers like this: