மிஸ்டர் கழுகு: சுவாதி கொலை! – ஒற்றைக் காதலா… ரெட்டை மதமா?

போலீஸ் வேட்டையில் முளைக்கும் புதிர்கள்

ரபரப்புடன் வந்தார் கழுகார். ‘‘சுவாதி கொலை விவகாரத்தில் உள்ள இரண்டு புதிர்களைச் சொல்கிறேன்’’ என்று ஆரம்பித்தார்.
‘‘முதல் புதிர்… ஜூன் 15-ம் தேதிதான் சுவாதி அவரது ஃபேஸ்புக்கில் கடைசி ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். சுவாதியின் மரணத்துக்குப் பிறகு அவரது ஃபேஸ்புக் பக்கத்தை போலீஸார் முடக்கிவிட்டனர். இருந்தாலும், அவரது பழைய ஸ்டேட்டஸ்களைத் தீவிரமாகத் துருவி வருகின்றனர். ஃபேஸ்புக்கில் 700 பேர் ஃபாலோ செய்கிறார்கள். அவர்களில் ஒருவர், சுவாதி போட்ட பதிவை மற்றவர்களுக்கு

ஃபார்வர்டு செய்திருக்கிறார். அதில், ‘தவறு செய்துவிட்டோம் என்பதற்காக அதை நினைத்து வருந்திக்கொண்டே இருக்காதீர்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் சுவாதி. அவர்  எந்த மனநிலையில் இப்படியொரு ஸ்டேட்டஸை போட்டார் என்பதற்கான விடை தேடும் முயற்சியில் சைபர் க்ரைம் போலீஸ் டீம் தற்போது மும்முரமாக இறங்கியிருக்கிறது. அந்தப் பதிவு யாருக்காக… ஏன் போட்டார் என்பது பற்றி சுவாதிக்கு நெருக்கமானவர்களிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்’’ என்றவர், இரண்டாவது புதிரைச் சொன்னார்.

‘‘சுவாதி கொலை சம்பவத்தை நேரில் பார்த்தவர் தமிழ்ச்செல்வன். சூளைமேடு ஏரியாவைச் சேர்ந்தவர். ‘வழக்கமாக நான் தினமும் காலை 6.30 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் போவேன். அங்கிருந்து வேலைக்குச் செல்வேன். என்னைப்போலவே, இளம் வயதுப் பெண் ஒருவர் அதே நேரத்துக்கு ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவார். 10 நாட்களுக்கு முன்பு, நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அப்போது ஒரு வாலிபர் அந்தப் பெண்ணுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டி​ருந்தார். ஒருகட்டத்தில், அந்தப் பெண்ணின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தார். அதற்கு அவர் ஏனோ எதிர்ப்புக் காட்டவில்லை. கொலை நடந்த நாளன்று அதே வாலிபர், நான் நின்றுகொண்டிருந்த நடைமேடையில் வேகமாக ஓடினார். அவரை சிலர் விரட்டிக்கொண்டு ஓடினர். அந்த வாலிபர்தான் அன்று, அந்தப் பெண்ணிடம் தகராறு செய்து கன்னத்தில் அறைந்த வாலிபர் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. நானும் அந்த வாலிபரை விரட்ட முயற்சி செய்தேன். ஆனால், அதற்குள் அவர் ஓடிவிட்டார். பிளாட்பாரத்தில் கும்பல் கூடியிருந்த இடத்துக்கு ஓடிவந்து பார்த்தபோது, அங்கே ரத்தவெள்ளத்தில் கிடந்தது ஏற்கெனவே கன்னத்தில் அறை வாங்கிய அதே பெண் என்பதைப் புரிந்துகொண்டேன். பிறகு, பத்திரிகைச் செய்திகளில் அந்தப் பெண்ணின் பெயர் சுவாதி என்று அறிந்தேன். நான் வசிக்கும் சூளைமேடு ஏரியாவில்தான் குடியிருந்தவர் என்பதைக் கேள்விப்பட்டபோது அதிர்ச்சியாக இருந்தது’ என்றார். இந்த க்ளூவை வைத்தும் போலீஸார் மெல்லப் புலனாய்வை நகர்த்த ஆரம்பித்துள்ளார்கள்.”
‘‘ம்!”
‘‘கடந்த மூன்று மாதங்களில் சுவாதியின் செல்போனில் பேசிய, அவருக்கு வந்த மொத்த நம்பர்களையும் வாங்கிய போலீஸார், அதை ஷார்ட் லிஸ்ட் செய்து வருகிறார்கள். ஆனாலும், கொலையாளியை ‘அரெஸ்ட்’ செய்வதில் இன்னும் தடை இருக்கிறது.’’
‘‘என்ன தடை?’’
‘‘போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, ‘அந்தப் பெண் சுவாதியின் குடும்பத்தில் இருந்து இதுவரை எங்களுக்கு எந்த ஒத்துழைப்பும் சரிவரக் கிடைக்கவில்லை. சுவாதி இறந்தது தொடர்பான சம்பிரதாய சடங்குகள் முடியட்டும் என்று காத்திருக்கிறோம்’ என்றனர். 508 கேள்விகளை ரெடி பண்ணி வைத்திருக்கிறார்கள். இந்த விவகாரம் காதல் தொடர்பானதா என்று முதலில் சந்தேகித்தது போலீஸ். இது தொடர்பாகச் சந்தேகப்பட்ட இரண்டு பையன்களில் ஒருவர், அந்தப் பெண் கொலையாகிக் கிடந்தபோதே சம்பவ இடத்துக்கு வந்துவிட்டாராம்.  ‘அப்போதே அந்தப் பையன் தனக்குத் தெரிந்த விஷயங்களை எல்லாம் சொல்லிவிட்டார். அதிலேயே அவருக்கும் இந்தக் கொலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுபோல் இருக்கிறது. அதன்பிறகு, இஸ்லாமிய இளைஞர் பிலால் சாதிக் என்று இன்னொருவரை சுட்டிக்காட்டினார்கள். ஆனால், அவரை விசாரிக்க ஆரம்பித்த ஒரு மணி நேரத்திலேயே அவர் ஓர் ‘அப்பாவி’ மாதிரி தெரிகிறது’ என்று சொல்கிறார்கள் போலீஸில்!’’
‘‘சுவாதி கொலையில், இப்போதைக்கு போலீஸ் யாரை அதிகம் சந்தேகப்படுகிறது?’’
‘‘குடும்பப் பின்னணி, சுவாதியின் நடவடிக்கைகள், சுவாதியின் நண்பர்கள், சமீப காலமாக அவருக்கு யார் மூலமாவது தொந்தரவு இருந்ததா என்ற விவரங்கள், தின நடவடிக்கைகள் ஆகியவற்றை சுவாதியின் குடும்பத்தினரிடம் இருந்து போலீஸால் முழுமையாக வாங்க முடியவில்லையாம். ‘அந்தக் குடும்பத்தில் இன்னும் இரண்டு பெண்கள் இருக்கின்றனர். அவர்களின் எதிர்காலம் கருதி இவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று நினைத்தோம். முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு சுவாதி குடும்பத்தினர் எழுதியக் கடிதத்தில் போலீஸ் எங்களைத் தொந்தரவு செய்கிறது என்று  புகார் அளித்துள்ளனர். போலீஸ் விசாரணையை இவர்கள் ஏன் தொந்தரவாக நினைக்க வேண்டும் என்பது புரியவில்லை. மேலும் குற்றவாளியின் புகைப்படம் எங்களுக்கு சி.சி.டி.வி கேமரா மூலம் கிடைத்ததும் அதைக் கொண்டுபோய், சுவாதியின் அப்பாவிடம் காட்டினோம். அவர் அதைப் பார்க்கவே ஏனோ மறுத்துவிட்டார். இதுதொடர்பாக, நாங்கள் இன்னும் விசாரணையைத் தீவிரப்படுத்தி பார்த்தபோது, அந்தக் குடும்பத்தினர் முதலமைச்சரை நேரில் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் வாங்கித் தரும்படி, சில முக்கியப் புள்ளிகளைத் தொடர்புகொண்ட விவரங்களும் தெரியவந்துள்ளது. ‘இதெல்லாம் ஏன்?’ என்று புரியவில்லை. எனவே, போலீஸுக்கு குடும்பத்தினர் ஒத்துழைப்புக் கொடுத்தால் மட்டும்தான் உண்மையை வெளிக்கொண்டு வர முடியும்’ என்கிறது போலீஸ்!”
‘‘வேறு யார் மீது அதிகமான சந்தேகம் இருக்கிறதாம்?”
‘‘மத அமைப்புகள் சிலவற்றின் தலைகள் இதில் உருள ஆரம்பித்து உள்ளன. ‘சுவாதியும் பிலால் சாதிக் என்ற இளைஞரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். இது இரண்டு குடும்பங்களின் தரப்பிலும் அதிருப்தியைக் கிளப்பி உள்ளது. அது இந்தச் சம்பவத்துக்குக் காரணமா என்றும் விசாரிக்கிறோம்’ என்கிறது போலீஸ்!”
‘‘ஏதோ பீகார் இளைஞர் என்கிறார்களே?”
‘‘கொலையாளியை நேரில் பார்த்தவர்களிடம் சி.சி.டி.வி  படங்களைக் காட்டி விசாரிக்கிறார்கள். ஆனால், உருப்படியான தகவல் கிடைக்கவில்லை. பீகார் இளைஞர் கடந்த சில நாட்களாக சுவாதியைத் தொந்தரவு செய்துள்ளார். சுவாதியின் வீடு, நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன், பரனூர் மகேந்திரா சிட்டியில் சுவாதி வேலை பார்க்கும் அலுவலகம்… என்று அனைத்து இடங்களில் உள்ள சி.சி.டி.வி-க்களிலும் அந்த இளைஞரின் உருவம் பதிவாகி உள்ளன. அநேகமாக தமிழ்ச்செல்வன் சொல்வது இந்த நபராக இருக்கலாம். அந்த அடிப்படையில், தற்போது அந்த பீகார் இளைஞரை விசாரிப்பதற்கான வேலைகளும் நடக்கிறது. ஒற்றைக் காதல் விவகாரமா அல்லது ரெட்டை மத விவகாரமா என்று இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்’’ என்றவர் அரசியல் பக்கம் திரும்பினார்.
‘‘தேர்தல் தோல்விகளை அடுத்து மாவட்டச் செயலாளர்கள் களையெடுப்பு தற்போது தி.மு.க-வில் சூடுபிடித்துள்ளது. உள்ளடி வேலையில் ஈடுபட்டு, எதிரிகளை அழிப்பதாகக் கட்சியை அழிக்க நினைத்தவர்கள் தேவையில்லை என்று முடிவெடுத்துவிட்டனர். தூத்துக்குடியிலும், நாகப்பட்டினத்திலும் தற்போது களை எடுப்புப் பணி நடைபெற்றுள்ளது.’’
‘‘ஓஹோ!’’
‘‘தூத்துக்குடியின் வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜாராமன் மாற்றப்பட்டுள்ளார்.  ‘கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட சுப்பிரமணியன், 400 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார். விளாத்திக்குளம் வேட்பாளர் பீமராஜும் தோல்வியைத் தழுவினார். டாக்டர் கிருஷ்ணசாமியும் தோற்றார். மாவட்டச் செயலாளர் தூத்துக்குடி பெரியசாமி மீது இருந்த விசுவாசத்தின் காரணமாக, அவருக்கு ஆகாத மூன்று வேட்பாளர்களையும் உள்ளடி வேலை​களால் ராஜாராமன் தோற்கடித்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது. அத்துடன் பெரியசாமி மீதும் தலைமைக் கழகத்தின் கடும் அதிருப்தி விழுந்துள்ளது’ என்கிறார்கள்.’’

‘‘ஏ.கே.விஜயன் மிக முக்கியமானவர் ஆச்சே?”
‘‘நாகை மாவட்டத்தில், தெற்கு மாவட்டச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், வடக்கு மாவட்டச் செயலாளர் குத்தாலம் கல்யாணம் ஆகியோரும் மாற்றப்பட்டுவிட்டார்கள். இங்கிருக்கும் ஆறு தொகுதிகளில் நான்கில் தி.மு.க போட்டியிட்டது. இரண்டை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது. அதில், 5 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி தோற்றது.  இதையடுத்து, முன்னாள் மாவட்டச் செயலாளர் மா.மீனாட்சிசுந்தரம் விரிவான புகார் கடிதத்தை நேரடி​யாகவே ஸ்டாலினைச் சந்தித்துக் கொடுத்தார். ‘தற்போதைய மாவட்டச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் யாரையும் மதிப்பதில்லை. கட்சியின் சீனியர்களையும் வாடா, போடா என்று திட்டுகிறார். அ.தி.மு.க-வை எதிர்த்து வேலை செய்வதற்கு வியூகம் வகுக்கவில்லை என்று குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார். அதன்பிறகு நாகை யூனியன் சேர்மன் வடுகூர் ராஜேந்திரன், வேதாரண்யம் ஒன்றியச் செயலாளர் குமரவேல், ஏ.கே.எஸ்.விஜயனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். அதுபோல, வடக்கு மாவட்டச் செயலாளர் குத்தாலம் கல்யாணம், அவரது மகன் அன்பழகனை தேர்தலில் சீட் வாங்கி நிறுத்தினார். ஆனால், ஜெயிக்க முடியவில்லை. சீர்காழி தொகுதியில் கனிமொழியின் ஆதரவாளரான கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிள்ளை ரவீந்திரன் தோற்றுப் போனார். குத்தாலம் கல்யாணம் சரியாக வேலை செய்யவில்லை… அதனால்தான் நான் தோற்றுப்​போனேன் என்று கனிமொழியிடம் புகார் தெரிவித்து உள்ளார் கிள்ளை ரவீந்திரன். விசாரணையிலும் அதைத்​தான் பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறார் ரவீந்திரன்.
‘‘அடுத்து ஆளும் கட்சிக்குக்கு வாரும்! அமைச்சர் மணிகண்டன் மாவட்டச் செயலாளர் பதவிக்கு வேட்டு வந்தது எப்படி?’’
‘‘மாவட்ட கோட்டாவின்படியும் மன்னார்குடி குடும்பத்தினரின் உதவியாலும் மணிகண்டன் அமைச்சரவையில் இடம்பிடித்தார். அமைச்சரான 15 நாட்களுக்குள் மாவட்டச் செயலாளர் பதவியும்  வந்தடைந்தது. அடுத்தடுத்து பதவிகள் வந்ததால் அதிகாரிகளிடமும், ஆளும் கட்சி சீனியர்களிடமும் மரியாதைக் குறைவாகவும், அதிகாரத் தோரணையுடனும் நடந்துகொள்வதாக இவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது. மாவட்டத்தின் உயர் அதிகாரிகள் தனது வீட்டுக்கு வந்து சந்திக்க வேண்டும் எனக் கட்டளை இட்டுள்ளார். இது தவிர மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள், பணிநியமனங்கள் போன்றவற்றிலும் தலையிட்டுள்ளார். இதனால் அந்தத் தொகுதியின் பிரதிநிதிகள் கட்சித் தலைமையிடம் மணிகண்டனின் நடவடிக்கைகள் குறித்து புகார் செய்துள்ளனர். மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்த 20 நாட்களிலேயே அந்தப் பதவியை இழந்துள்ள மணிகண்டனின் அமைச்சர் பதவிக்கு மேலேயும் கத்தி தொங்கிக் கொண்டிருப்பதாகப் பேச்சு உள்ளது’’ என்றபடி பறந்தார் கழுகார்.

%d bloggers like this: