விண்டோஸ் 10 – பயன் தரும் குறிப்புகள்

மெதுவாக, பல தயக்கங்களுடன் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிய பயனாளர்கள், அதனை எளிதாகவும் விரைவாகவும் இயக்கத் தேவையான குறிப்புகளைத் தேடுகின்றனர். ஏற்கனவே, அடிப்படை செயல்பாடுகள், புதிய வசதிகளைத் தரும் சாதனங்கள் குறித்த வழிமுறைகள், இங்கு தரப்பட்டன. இங்கு சில புதிய குறிப்புகள் மற்றும் சில இயக்க வசதிகளுக்கான சுருக்க வழிகளை பார்க்கலாம். குறிப்பாக, இங்கு பைல் எக்ஸ்புளோரர் செயலியை இயக்குவது குறித்து இங்கு காணலாம்.

பைல் எக்ஸ்புளோரர் விண்டோ: நாம் எல்லாரும் நம் பைல்களைக் காண, பைல் எக்ஸ்புளோரர் விண்டோவினைத் திறக்கும் ஷார்ட் கட் கீ குறித்து தெரிந்திருக்கிறோம். அது Windows key+E. ஒரு விண்டோவில் பைல் எக்ஸ்புளோரரைத் திறக்க இது பயனுள்ள ஷார்ட் கட் கீ ஆக உள்ளது. டாஸ்க் பார் சென்று, அதில் காணப்படும் இதன் ஐகானையும் கிளிக் செய்து திறக்கலாம். இந்த இரண்டு வழிகளுக்கும் இடையே உள்ள நேர வேறுபாடு சில மைக்ரோ விநாடிகளாக இருக்கலாம். ஆனால், இரண்டு எக்ஸ்புளோரர் விண்டோக்களைத் திறக்க என்ன செய்திடலாம்? மீண்டும் ஒரு முறை ஐகானில் கிளிக் செய்தல் அல்லது ஷார்ட் கட் கீ அழுத்துதல் என செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டும். பல வேளைகளில், போல்டர்கள் அல்லது டைரக்டரிகளுக்கிடையே பைல்களை நகர்த்த, இரு பைல் எக்ஸ்புளோரர் விண்டோக்களைத் திறந்து செயல்பட வேண்டியதுள்ளது. இரண்டாவது விண்டோ திறக்க, மீண்டும் இதே வழிகளைக் கையாள வேண்டும். விண்டோஸ் கீயை அழுத்தி, ‘E’ இருமுறை அழுத்தினால், இரண்டு பைல் எக்ஸ்புளோரர் விண்டோக்கள் திறக்கப்படும். அல்லது ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, ஐகான் மீது இருமுறை கிளிக் செய்தாலும், இரண்டு விண்டோக்கள் திறக்கப்படும். அதன் பின்னர், அவற்றைச் சுருக்கி, நமக்குத் தேவையான இடத்தில் இழுத்து வைத்துக் கொள்ளலாம்.

Quick Access பட்டியல்
: விண்டோஸ் 10ல், பைல் எக்ஸ்புளோரர் பயன்பாடு மெருகூட்டப்பட்டுள்ளது. Quick Access பட்டியல் அமைப்பது புதுப்பிக்கப்பட்டுள்ளது. நாம் பயன்படுத்திய போல்டர்களை இந்த பட்டியலின் மேலாக ‘பின்’ செய்து வைக்கலாம். இதன் மூலம், ஒரே கிளிக் செய்து இவற்றைப் பெறலாம். ‘பின்’ செய்தவற்றின் கீழாக, நாம் பயன்படுத்திய போல்டர்கள் காட்டப்படுகின்றன. இது நாம் குழுவாகச் சில பைல்களைப் பயன்படுத்துகையில் நமக்கு அவற்றைக் கையாள விரைவான செயல்பாட்டினைத் தருகிறது.
பைல் எக்ஸ்புளோரர் திறக்கும் போல்டர்: விண்டோஸ் 10ல், பைல் எக்ஸ்புளோரர், Quick Access தேர்ந்தெடுத்த நிலையில் திறக்கிறது. முன்பு வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பழகியவர்கள், This PC (முன்னதாக My Computer)யில் திறக்க விருப்பப்படலாம். இதில் வழக்கமான டேட்டா போல்டர்கள், ட்ரைவ்கள், யு.எஸ்.பி. இணைக்கப்பட்டிருந்தால் அதற்கான ட்ரைவ் எனக் காட்டப்படும். இவை தான் வேண்டும் என்றால், ரிப்பனில், View திறக்கவும். பின்னர் Options> Change folder> options கிளிக் செய்திடவும். இந்த பட்டியலில், தேவைப்படும் ஆப்ஷன்களைத் தேர்வு செய்து அமைத்திடவும். Quick Access லிஸ்ட்டில் உள்ள எதிலும், நீங்கள் பைல்களை நகர்த்தி, அவற்றில் சேர்த்து விடலாம். அப்போதைய போல்டரை ‘பின்’ செய்திட Pin என்பதில் கிளிக் செய்து, Quick Access பட்டனில் இணைக்கவும். இது ரிப்பனில் ஹோம் டேப்பில் உள்ளது.
விரிக்கப்பட்ட Send To மெனு: பைல் அல்லது போல்டர் ஒன்றில் ரைட் கிளிக் செய்து (ஒன்றல்ல பல பைல் மற்றும் போல்டர்களிலும் கூட) பல விஷயங்களை மேற்கொள்ளலாம். பைல்களை காப்பி செய்திடலாம்; நகர்த்தலாம். அல்லது பைல்களைச் சுருக்கி .zip பார்மட்டில் அமைக்கலாம். அல்லது தேர்ந்தெடுத்ததனை, மின் அஞ்சல் இணைப்பாக அனுப்பலாம். இதில் இன்னும் சில ஆர்வமூட்டும் விஷயங்கள் உள்ளன. நீங்கள் ரைட் கிளிக் செய்வதன் முன்னர், ஷிப்ட் கீ அழுத்தினால், கிடைக்கும் மெனுவில் பல புதிய விஷயங்கள் தரப்படுகின்றன.
Send To மெனுவில் வசதிகளை ஏற்படுத்த: இந்த மெனுவினைப் பெறுகையில், மாறா நிலையில் கிடைக்கும் ஆப்ஷன்களை நீக்கலாம்; புதியதாகவும் இணைக்கலாம். அவை ஷார்ட் கட் கீகள். ஆனால், அவற்றைக் கண்டுபிடிக்க சற்று முயற்சி எடுக்க வேண்டும். நம் யூசர் ப்ரபைல் உள்ளாக அவை அமைக்கப்பட்டுள்ளன.
அந்த போல்டருக்குச் செல்ல, Run box (Windows key+R) திறக்க வேண்டும். அதில் shell:sendto என டைப் செய்திடவும். அதன் பின், எண்டர் தட்டவும். Fax Recipient என்ற ஷார்ட் கட் கீயை இங்கு நீக்கவும். அதன் பின், உங்களுக்குப் பிரியமான, தேவைப்படும் போல்டர்கள், புரோகிராம்களுக்கு ஷார்ட் கட் கீகளை அமைக்கவும். எடுத்துக் காட்டாக, இங்கு நோட்பேட் அல்லது மற்ற டெக்ஸ்ட் எடிட்டர்களுக்கு ஷார்ட் கட் கீ அமைத்துவிட்டால், நம் பைல்களை எடிட் செய்திட உதவும். இதே போல இமேஜ் எடிட்டர் புரோகிராம் களுக்கு ஷார்ட் கட் கீ அமைத்து, ஆப்ஜெக்ட்களை எடிட் செய்திடப் பயன்படுத்தலாம்.
Quick Access டூல்பார் அமைப்பு: நீங்கள் விண்டோஸ் 7 தொகுப்பிலிருந்து, விண்டோஸ் 10க்கு நேரடியாக மாறி இருந்தால், பைல் எக்ஸ்புளோரரில் ஆபீஸ் ஸ்டைலில் ரிப்பன் ஒன்றைப் பெரிய மாற்றமாகக் காணலாம். அதுனுடன் இணைப்பாக உள்ள Quick Access Toolbar குறிப்பிடத்தக்கதும், கூடுதல் பயன் தருவதுமாக உள்ளது. இந்த டூல் பாரினை, நாம் அதிகம் பயன்படுத்தும் கட்டளைகளுடன் நம் வயப்படுத்தி வைக்கலாம். இதன் மூலம் நாம் ரிப்பனைப் பயன்படுத்துவதனைத் தவிர்க்கலாம். டூல்பாரின் வலதுபுறமாக உள்ள அம்புக் குறியினை அழுத்தினால், நாம் இந்த டூல்பாரினை எந்த வழிகளில் வகைப்படுத்தலாம் என அறியலாம்.
எந்த கட்டளை உங்கள் பயன்பாட்டிற்கு விரைவாக வேண்டுமோ, அதில் ரைட் கிளிக் செய்து, Add to Quick Access Toolbar என்பதில் கிளிக் செய்தால் போதும். அது மட்டுமின்றி, விண்டோஸ் சிஸ்டத்தில் பல ஆண்டுகள் புழங்கும் ஒரு சிலருக்குத் தெரியாததையும் இங்கு காணலாம். உங்களுக்கு வேண்டிய கட்டளைகள் அனைத்தையும் தேர்ந்தெடுத்த பின்னர், அனைத்தையும் ஒரு குழுவாக்கி, அந்த குழுவினை அப்படியே Quick Access டூல்பாரில் இணைத்துவிடலாம். குரூப்களைக் கூட அப்படியே இணைக்கலாம். எடுத்துக் காட்டாக, நான் View டேப்பில் உள்ள, Panes குரூப்பினை இணைத்தேன். இதன் மூலம் Preview pane அல்லது Details pane பிரிவை மறைத்து வைக்கலாம்.
மேம்படுத்தப்பட்ட தேடல் வசதி: பைல் எக்ஸ்புளோரர் விண்டோவில், வலது மேல் மூலையில் உள்ள தேடல் கட்டத்தினைப் பார்த்து பயன்படுத்தியிருக்கிறீர்களா? ஏதேனும் ஓரிரு சொற்களை அதில் டைப் செய்தால், அந்த சொற்கள் உள்ள பைல்கள், அப்போது திறக்கப்பட்டிருக்கும் போல்டரில் இருந்தால் காட்டப்படுவதனைப் பார்க்கலாம்.
இது வழக்கமாக நாம் பெற்று பயன்படுத்தி வரும் வசதி ஆகும். ஆனால், மேம்படுத்தப்பட்ட தேடல்களை இப்போது மேற்கொள்ளலாம். இதில் நான் பயன்படுத்துவது datemodified வகையாகும். இது தேதிகளை, இந்த வாரம், சென்ற வாரம், சென்ற மாதம் மற்றும் முந்தைய வாரம் எனவும் சேர்த்து பைல்களைத் தேடிப் பெறலாம். எடுத்துக் காட்டாக, இந்த மாதம் நீங்கள் பயன்படுத்திய அல்லது உருவாக்கிய எக்ஸெல் ஸ்ப்ரெட் ஷீட் பைல்களைக் காண வேண்டும் என்றால், type:excel datemodified:this month என்ற கட்டளையைக் கொடுக்க வேண்டும். இந்தக் கட்டளை நீங்கள் விரும்பும் இரண்டு வகை விருப்பங்களையும் ஏற்றுக் கொண்டு அதற்கேற்ற பைல்களைத் தேடிக் காட்டும்.
தேடல்களை ஸ்டார்ட் மெனுவில் பின் செய்திட: மேலே காட்டியுள்ளபடி, ஒவ்வொரு முறையும் கட்டளைகளை டைப் செய்திட நீங்கள் விரும்பவில்லையா? அப்படியானால், அந்த தேடல்களை, ஒரு ஷார்ட் கட் கீயில் அமைத்து, அதில் கிளிக் செய்வதன் மூலம், அதில் கிடைக்கும் பைல்களை நீங்கள் பெறும் வழியை அமைக்கலாம் இல்லையா! இவ்வாறே, பல கட்டளைகளுக்கு ஷார்ட் கட் அமைத்து ‘பின்’ செய்திடலாம். அந்த ஷார்ட் கட் வழியில் கிளிக் செய்து பைல்களைப் பெறலாம்.
பைல்களை குழுவாக அமைக்க: நாம் பைல்களை அதன் பெயர், அமைத்த நாள், அளவு, வகை மற்றும் சில பிரிவுகளில் பட்டியலாக்க தெரிந்துள்ளோம். date, size, மற்றும் type வகை அனைத்தும் பார்த்தவுடன் தெரியாது. இவற்றை ரிப்பனில் வியூ டேப் அழுத்தி, குரூப் கட்டளையைப் பெறலாம். பைல் எக்ஸ்புளோரர் விண்டோவில், ரைட் கிளிக் செய்தாலும் கிடைக்கும். ஒவ்வொரு வகையிலும் எத்தனை பைல்கள் இருக்கின்றன என்றும் அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு தலைப்பிலும் ரைட் கிளிக் செய்து அவற்றை விரிக்கலாம் அல்லது சுருக்கலாம்.

%d bloggers like this: