ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய 7 மூலிகைகள்!

மூலிகைச் செடிகள்!

மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள், வேலைச் சுமை போன்ற பல்வேறு காரணங்களால் நம் உடல்நிலை அடிக்கடி பாதிப்புகளுக்கு உள்ளாகிறது. அவற்றை எல்லாம் கைவைத்தியத்தில் சரிசெய்துகொள்ளும் வகை யிலும், ஆரோக்கியத்துக்கு உடனடியாகப் பயன்தரக்கூடிய வகையிலும் ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கவேண்டிய மருத்துவ குணம்நிறைந்த மூலிகைச் செடிகள் பற்றிச் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் வேலாயுதம்.

 

‘‘வேகமாக மாறிவரும் நகர மயமாதல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் வீடு வாங்குவதே பெரிய பிரச்னையாக இருக்கும் சூழலில், ‘வீட்டில் செடி வளர்க்க இடம் இல்லையே?’ என்று மறுகுபவர்கள் பலர். குறைந்த பட்சமாக வெறும் 1 X 1 என்ற அளவிலான மண்தொட்டி போதும்… மிக முக்கியமான மூலிகைச் செடிகளை வளர்க்க! அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பால்கனி போன்ற சிறு இடங்களிலும் செழிப்பாக செடிகள் வளர்க்கலாம்’’ என்ற வேலாயுதம், அப்படி வளர்க்கப் பரிந்துரைக்கத்தக்க மூலிகைகளின் பலன்களைப் பட்டியலிட்டார்.

துளசி

* துளசி, சளியைப் போக்கும் சிறந்த நிவாரணி. மேலும் சிறந்த கிருமிநாசினியான துளசிச் செடியை வளர்ப்பதால், வீட்டைச் சுற்றிலும் உள்ள விஷ ஜந்துகள் மற்றும் கிருமித் தொற்றுகள் வரவு கட்டுப்படும்.

* ஆக்சிஜனை அதிகளவில் வெளிவிடும் திறன்கொண்ட துளசிச் செடியால், சுவாசிப்பதற்கு தூய்மையான காற்று கிடைக்கும்.

* தினமும் இரவு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் 10 துளசி இலைகள் போட்டுவைத்து, மறுநாள் காலையில் துளசியை மென்று, அந்த நீரையும் பருகிவர, ஆரோக்கியம் வளரும்.

* சரும நோய்களுக்கு மஞ்சள் மற்றும் துளசியை தண்ணீர் சேர்த்து அரைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவிவர… பலன் கிடைக்கும்.

கற்றாழை

* சோற்றுக் கற்றாழை யின் மருத்துவ குணம் வாய்ந்த சதைப் பகுதியை பலமுறை நன்றாகக் கழுவி எடுத்து சாப்பிடலாம். அல்லது மோர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் குடிக்கலாம் (அந்த வழவழப்பான சாற்றை அப்படியே சாப்பிட்டால் உடலுக்குக் கெடுதல் என்பதால், நன்கு கழுவிவிடவும்). இதன் மூலம் உடல் சூடு குறையும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் சீராகும்

*கற்றாழையின் சதைப் பகுதியை ஆண்கள், பெண்கள் அனைவரும் உடலில் தடவி சிறிது நேரம் கழித்துக் குளித்துவர, சரும வறட்சி நீங்கி தேகம் பளபளப்பாகும்; முகப் பருக்கள் குறையும்.  

* அடிபட்ட இடங்களில் சோற்றுக் கற்றாழை சதையை வைத்துக்கட்டினால், ரத்தம் கட்டுதல் ஏற்படாது.

கற்பூரவல்லி

* கற்பூரவல்லி இலை அல்லது சாறு, சளிக்கு சிறந்த மருந்து. குறிப்பாக, பச்சிளம் குழந்தைகளுக்குச் சளி, ஜலதோஷம் ஏற்பட்டால், தாய்ப்பாலுடன் கற்பூரவல்லி சாற்றைக் கலந்து கொடுக்க… உடனடி குணம் கிடைக்கும்.

* கற்பூரவல்லி இலையில் பஜ்ஜி செய்தும் சாப்பிடலாம்.

நிலவேம்பு

* நிலவேம்புக் கஷாயம் குடித்தால் கடுமையான காய்ச்சலும், சளியும் குணமாகும். குறிப்பாக, குளிர்காலங்களில் வாரம் ஒருமுறை இதைக் குடித்துவர, காய்ச்சல் வருவது கட்டுப்படுத்தப்படுவதுடன், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுப்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும், வயிற்றுப் புண் குணமாகும்.

* நிலவேம்புச் செடிகளின் நெடியால் வீட்டைச் சுற்றிலும் விஷ ஜந்துகள் வருவது கட்டுப்படும்.

தூதுவளை

* அடிக்கடி மூச்சிரைத்தல், இருமல் ஏற்படுபவர்கள், நெஞ்சு சளி உள்ளவர்கள் தூதுவளை இலையுடன் இஞ்சி சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டுவர (வாரத்துக்கு இரு வேளை மட்டும்) நல்ல பலன் கிடைக்கும்.

* தூதுவளையை பொடியாகச் செய்யும்போது சத்துகள் குறைந்துவிடும் என்பதால் முடிந்தவரையில் துவையலாகச் செய்து சாப்பிடவும்.
 

பிரண்டை

* பிரண்டையில் காரம் அதிகமாக இருக்கும் என்பதால் பலரும் அதைச் சாப்பிட விரும்புவதில்லை. ஆனால், அதன் மருத்துவக் குணங்கள் ஏராளம். பிரண்டையின் நரம்புபோன்ற பகுதியை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கவும். பிறகு, சாதாரண அல்லது புளித்த மோரில் சிறிது நேரம் ஊறவைக்க, அதன் காரத்தன்மை குறையும். பின்னர் அதனுடன் உளுத்தம் பருப்பு சேர்த்து துவையல்செய்து சாப்பிட்டால்… மூட்டுவலி, எலும்புத் தேய்மானம் குறைந்து எலும்பு பலமாகும், வயிற்றுப் புண் குணமாகும். மேலும், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்களின் இடுப்புவலி குறையும்.

* பிரண்டைத் துவையல் பசியை அதிகரிக்கும் திறன்கொண்டது. சரியாகச் சாப்பிடாத குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

வெற்றிலை

* வெற்றிலைக் கொடியை வீட்டில் வளர்க்க அதிக இடம் தேவையில்லை. அவ்வப்போது கொடியைக் கத்தரித்து தேவையான அளவுக்கு வளர்த்துக்கொள்ளலாம். இதுவும் விஷ ஜந்துகளை அண்டவிடாது.

* வெற்றிலைச் சாறு, அனைத்து வயதினருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

* மதியம் சாப்பிட்டவுடன் வெற்றிலையுடன் பாக்கு, ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காய், சுண்ணாம்பு சேர்த்து வாயில்போட்டு மென்றால்… ஜீரண மண்டலம் பலம்பெறும். ஜீரணக் கோளாறுகளும், சளியும் சரியாவதுடன், தொண்டை வலியும் குணமாகும்.

* வெற்றிலை புகையிலைப் பொருட் களுடன் சேர்ந்தது எனவும், புற்றுநோயை உண்டாக்கும் எனவும் சிலர் நினைக்கின்றனர். வெறும் வெற்றிலை, உடலுக்கு நன்மையே செய்யும். மேலும் வெற்றிலையை மென்ற பிறகு நன்றாக வாய் கொப்பளிக்க, பற்களில் கறை படிவதும் கட்டுப்படும்’’ என்ற வேலாயுதம்,

‘‘அதிக இட வசதி உள்ளவர்கள் அருகம்புல், மணத்தக்காளி மற்றும் கீரை வகைகள், புதினா என்று இன்னும் சில மூலிகைகளை வளர்த்து பலன் பெறலாம். ஒரே தொட்டியில் தொடர்ந்து ஒரே செடி வளர்ப்பதைத் தவிர்த்து, ஆறு மாதங்கள் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை வேறு வேறு செடிகளை மாற்றி வளர்க்க, செடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும்’’ என ஆலோசனையும் கூறுகிறார்.

மூலிகை வளர்ப்போம்… ஆரோக்கியம் காப்போம்.

%d bloggers like this: