விதை நடப்போறீங்க்களா.. இதை நோட் பண்ணுங்க!

மாடித்தோட்டம்

மாடித்தோட்டம் அமைக்க நினைத்து, அதற்கான வேலையில் இறங்கிய பின்னால் ஆயிரம் சந்தேகங்கள் எட்டிப் பார்க்கும். இதுவரை நேரடியாக விவசாயமே செய்யாதவர்களுக்கு பல சந்தேகங்கள் வருவது இயல்புதான். மாடித்தோட்டத்தில் விதை நடும்போது கவனிக்க வேண்டிய சில நுட்பங்களைப் பகிர்ந்துகொள்கிறார், திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மையத் தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார். 

விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்க..!

 

‘‘நடவு செய்வதற்கு முன்பாக விதைகளை விதைநேர்த்தி செய்து விதைப்பது அவசியம். அவரை குடும்பத்தைச் சேர்ந்த விதைகளை, வடிகஞ்சி, ரைசோபியம் கலந்த கலவையில் கலந்து நடவேண்டும். ஆறவைத்த ஒரு லிட்டர் வடிகஞ்சியில் 10 கிராம் ரைசோபியம் கலந்து, அந்தக் கரைசலில் விதையை முக்கி எடுத்து, நிழலில் உலர்த்தி நடவேண்டும். அவரை தவிர்த்து மற்ற காய்கறி விதைகளை, வடிகஞ்சி, அசோஸ்பைரில்லம் கலந்த கரைசலில் (ஒரு லிட்டர் கஞ்சிக்கு பத்து கிராம் அசோஸ்பைரில்லம்) முக்கி நிழலில் உலர்த்தி நடலாம். இவற்றை வாங்க முடியாதவர்கள், சாதாரண தண்ணீரிலே விதைகளை ஊறவைத்து நடலாம். இளம்சூடான தண்ணீரில் விதைகளை சிறிது நேரம் ஊறவைத்து நடும்போதும் முளைப்புத்திறன் அதிகரிக்கும். பாகல், பீர்க்கன் போன்ற விதைகளை நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.

விதைகளை நடவு செய்யும் முறை!

மண்ணின் தரத்துக்கு ஏற்ப ஆழத்தை முடிவு செய்ய வேண்டும். தளர்வான மண்ணாக இருந்தால் இரண்டு அங்குல ஆழம் வரைக்கும் நடலாம். கடினமான மண்ணாக இருந்தால் ஓர்  அங்குல ஆழத்தில் நடவேண்டும். கடினமான மண்ணில் அதிக ஆழமாக விதையை ஊன்றக் கூடாது. மாடித்தோட்டங்களில் பெரும்பாலும், தென்னைநார் கழிவைத்தான் செடி வளரும் ஊடகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதால், அதில் இரண்டு அங்குல ஆழம் வரை நடலாம்.

பொதுவாக  விதைகளின் முனைப்பகுதி கீழ் நோக்கி இருக்குமாறு வைத்து, மண்ணில் ஓர் அங்குல  ஆழத்தில் ஊன்ற வேண்டும். கட்டைவிரல், ஆட்காட்டி விரல் ஆகிய இரண்டு விரல்கள் மூலமாக விதையை எடுத்து, ஈரமான மண்ணில் வைத்து, ஓர் அழுத்து அழுத்தினால் விதை மண்ணுக்குள் இறங்கும்.

அவரை, பீன்ஸ் போன்ற முனைப்பகுதியில் ‘கோட்டிங்’ உள்ள விதைகளை கீழ்ப்பகுதியில் இருந்து பக்கவாட்டில் வருமாறு ஊன்ற வேண்டும். இரண்டு அங்குல  ஆழத்தில் விதையை ஊன்றிய பிறகு, பெருவிரல் மூலமாக விதை ஊன்றிய இடத்தை அழுத்தி காற்று போகாமல் மூடிவிட வேண்டும். விரலால் அழுத்துவதன் மூலமாக விதைக்கும், மண்ணுக்கும் தொடர்பு உண்டாகும். விதையைச் சுற்றிலும் மண் இறுக்கமாக இருப்பதால் மண்ணில் உள்ள ஈரத்தை விதை உறிஞ்சிக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

விதை ஈரமாக ஈரமாக… மேல் தோல் விலகி, விதை முளைக்கத் தொடங்கும். விதை ஊன்றிய பிறகு, அந்த இடத்தை சரியாக மூடாமல், காற்று போகும்படிவிட்டால் விதை முளைக்காது.

நேரடியாக ஊன்றக்கூடாத விதைகள்!

கத்திரிக்காய், தக்காளி, மிளகாய் போன்ற காய் கறிகளின் விதைகளை நேரடியாக ஊன்றக்கூடாது. மாடித்தோட்டத்தின் ஓர்  ஓரத்தில், மூன்றடி அகலம், ஆறு அடி நீளம், அரையடி உயரத்தில் மண்ணைக் கொட்டி மேட்டுப்பாத்தி அமைத்துக்கொள்ள வேண்டும். அந்த பாத்திகளில் கல், குப்பைகள் இல்லாமல் சுத்தமாக்கி, சமமாக மட்டப்படுத்த வேண்டும். பாத்திகளில் குச்சியால் கோடு போடுவது போல கீறி, அந்தக் கோட்டில் காய்கறி விதைகளைத் தூவி, கைகளால் லேசாக மண்ணைத் தள்ளி விதைகளை மூடி, பூவாளி மூலமாக தண்ணீர் தெளிக்க வேண்டும்.

20 முதல் 25 நாட்களுக்குள் நாற்றுகள் வளர்ந்துவிடும். அந்த நாற்றுகளை தொட்டிகளில் எடுத்து நடவு செய்ய வேண்டும். கீரைகளை விதைப்பதற்கும் இதுபோன்ற மேட்டுப்பாத்திகள்தான் சிறந்தது. பொன்னாங்கண்ணி, புதினா போன்ற கீரைகளுக்கு விதை தேவையில்லை; சமையலுக்கு வாங்கும் கீரைகளின் தண்டுகளை நட்டுவைத்தாலே போதுமானது.

 


டெரஸ் கார்டன் டிப்ஸ்!

காலைநேர சூரியஒளி படும் இடங்களில், அதாவது கிழக்குப் பகுதியில் சிறிய செடிகளும், மேற்குப் பகுதியில் பெரிய செடிகளும் இருப்பதுபோல் மாடித்தோட்டத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். மாற்றி அமைத்தால், பெரிய செடிகளின் நிழல், சிறிய செடிகளின் மீது விழும். செடி நன்றாக இருக்கும். ஆனால், எதிர்பார்த்த மகசூல் கிடைக்காது.

பொதுவாக, மாடித்தோட்டங்களில் பப்பாளி செடி இடம் பெறுகிறது. பப்பாளி செடி இருந்தால், வெள்ளை நிறத்தில் இருக்கும் மாவுப்பூச்சி தாக்குதல் இருக்கும். இதை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால், மற்ற காய்கறிச் செடிகளையும் காலி செய்துவிடும். எனவே, மாவுப்பூச்சியின் நடமாட்டம் தொடங்கிய உடனே, 10 எலுமிச்சைப் பழங்களைப் பிழிந்து சாறெடுத்து, அதனுடன் 10 மடங்கு தண்ணீர் கலந்து மாவுப்பூச்சி தாக்குதல் உள்ள இடங்களில் தெளித்தால், மாவுப்பூச்சி அழிந்துவிடும்.

%d bloggers like this: