விண்டோஸ் 10: பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க்

இந்த டிஜிட்டல் உலகில் ஒருவர் ஏறத்தாழ குறைந்தது பத்து பாஸ்வேர்ட்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டியதுள்ளது. வங்கிகள் 180 நாட்களுக்கு மேல், கட்டாயமாக பாஸ்வேர்டை மாற்றச் சொல்லிக் கட்டாயப்படுத்துகின்றன. இதில், வங்கிகள், புரபைல் (Profile) பாஸ்வேர்ட் மற்றும் ட்ரான்ஸாக்சன் (Transaction) என்ற ஒன்றையும் அமைக்கச் சொல்லியும், அவற்றையும் குறிப்பிட்ட காலக் கெடுவில் மாற்றச் சொல்லியும் அறிவுறுத்துகின்றன. சமூக ஊடகங்கள், மின் அஞ்சல் அக்கவுண்ட்டுகள், சில இணைய தளங்கள் என எத்தனை வகை இடங்களில் நாம் பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. வங்கி கணக்குகளில் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்களைக் காட்டிலும், நம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் தான் மிக முக்கியமானவை என்று நான் கருதுகிறேன். ஏனென்றால், வங்கி கணக்கின் பாஸ்வேர்டினை மறந்துவிட்டால், நிதி பரிமாற்றத்தை, ஏ.டி.எம். மையங்கள் அல்லது நேரடியாக வங்கிகளில் மேற்கொள்ளலாம். ஆனால், கம்ப்யூட்டரின் பாஸ்வேர்டை மறந்துவிட்டால், அவ்வளவுதான். எந்த வேலையும் ஓடாது. யாரிடமும் சென்று முறையிட முடியாது.
விண்டோஸ் 10 இயக்கத்தில், நாம் செட் செய்த பாஸ்வேர்டை மறந்து விட்டால், அதனை ரீ செட் செய்திட “பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க்” ஒன்றை உருவாக்கி வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இதனை எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம். அதற்கு முன்னர், ஒரு சிறு எச்சரிக்கை. இந்த பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க் செயல்முறை, விண்டோஸ் 10 சிஸ்டத்தில், நீங்கள் லோக்கல் அக்கவுண்ட் ஒன்றைப் பயன்படுத்தி இருந்தால் தான் இயங்கும். மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் கொண்டு அமைத்திருந்தால் இயங்காது.

பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க் என்பது நாம், யு.எஸ்.பி. ட்ரைவ் ஒன்றில் உருவாக்கும் பைல் ஆகும். இதனை உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில், இணைத்துப் பயன்படுத்தினால், விண்டோஸ் 10 லாக் ஸ்கிரீனில் நம் பாஸ்வேர்டை ரீசெட் செய்திட இது உதவிடும். இந்த டிஸ்க்கை ஒரு முறை உருவாக்கி வைத்துக் கொண்டால் போதும். பின்னர், அதனை எப்போதும் பயன்படுத்திக் கொள்ளலாம். (ஆனால், இந்த யு.எஸ்.பி. ட்ரைவினை எங்கு பத்திரமாக வைத்துக் கொள்கிறோம் என்பதனை நினைவில் வைத்திருக்க வேண்டும்) இனி எப்படி இதனை உருவாக்குவது எனப் பார்க்கலாம்.
1. யு.எஸ்.பி. ட்ரைவினை உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் இணைக்கவும்.
2. அடுத்து விண்டோஸ் கீ + எஸ் அழுத்தவும். இதஆல் சர்ச் பார் கிடைக்கும்.
3. அதில் User Accounts என டைப் செய்திடவும்.
4. தொடர்ந்து User Accounts என்பதில் கிளிக் செய்திடவும்.
5. அடுத்து Create a password reset disk என்பதில் கிளிக் செய்திடுக.
6. அடுத்தபடியாக, Next என்பதில் கிளிக் செய்திடவும்.
7. அங்கு கிடைக்கும் கீழ்விரி மெனுவில் கிளிக் செய்திடுக.
8. தொடர்ந்து, எந்த சாதனத்தில் பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க் உருவாக்கப்பட வேண்டுமோ, அதில் கிளிக் செய்திடுக.
9. இனி, உங்கள் லோக்கல் அக்கவுண்ட் பாஸ்வேர்டை டைப் செய்திடவும். இது உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டருக்குள் நுழைய நீங்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்டாக இருக்க வேண்டும்.
10. அடுத்து Next என்பதில் கிளிக் செய்திடுக. பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க் உருவாக்கப்படும். உருவாக்கப்படும் செயல்பாடு எவ்வளவு முடிவடைந்திருக்கிறது என்று காட்டப்படும்.
11. இந்த நிலை 100% ஐ அடைந்தவுடன், Next என்பதில் கிளிக் செய்திடுக.
12. தொடர்ந்து Finish என்பதில் கிளிக் செய்து வெளியே வருக.
உருவாக்கப்பட்ட யு.எஸ்.பி. ரீசெட் ‘டிஸ்க்கினை’ பேர் ஏதேனும் எழுதி, பத்திரமாக வைக்கவும்.
இனி இதனைப் பயன்படுத்தி எப்படி பாஸ்வேர்டை ரீசெட் செய்வது எப்படி என்பது எனப் பார்க்கலாம்.
1. முதலில், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் ரீசெட் டிஸ்க்கை இணைத்து, கம்ப்யூட்டரை பூட் செய்திடவும். ரீசெட் டிஸ்க் இருப்பதை உணர்ந்து கொண்ட கம்ப்யூட்டர் அதற்கான பக்கத்தினைக் காட்டும். அதில் உள்ள கீழ்விரி மெனுவில் கிளிக் செய்திடவும்.
2. எந்த ட்ரைவில் உங்களுடைய பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க் உள்ளது என்பதைக் காட்டவும்.
3. Reset Password என்பதில் கிளிக் செய்திடவும்.
4. தொடர்ந்து இருமுறை Next கிளிக் செய்திட வேண்டியதிருக்கும்.
5. அடுத்து கிடைக்கும் கீழ்விரி மெனுவில் கிளிக் செய்திடவும்.
6. அடுத்து Next கிளிக் செய்திடவும்.
7. இங்கு புதிய பாஸ்வேர்ட் ஒன்றை அமைக்கவும்.
8. மீண்டும் அதே புதிய பாஸ்வேர்டினை உள்ளீடு செய்திடவும்.
9. அடுத்து Password Hint ஒன்றைத் தர வேண்டும்.
10. தொடர்ந்து Finish என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.
உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டருக்கான பாஸ்வேர்ட் அமைக்கப்பட்டுவிட்டது. இனி, இதனையே பயன்படுத்தி உங்கள் கம்ப்யூட்டரை இயக்கலாம்.

%d bloggers like this: