மிஸ்டர் கழுகு : வளைக்கப்படும் வைகுண்டராஜன்!

“ஆளும் அ.தி.மு.க-வுக்கு ஒரு காலத்தில் கஜானாவாக இருந்த வைகுண்டராஜன், இன்று அந்தக் கட்சியையே அசைத்துப் பார்க்கும் சக்தியாக மாறி விட்டதாக உளவுத்துறை கொடுத்துள்ள செய்தி மேலிடத்தை ஆட்டுவிக்க ஆரம்பித்துள்ளது. அதற்கு செக் வைக்கத் தொடங்கிவிட்டது மேலிடம்” என்ற தகவலோடு உள்ளே நுழைந்தார் கழுகார்.

 

கழுகாரைச் சொல்லவிட்டுக் காத்திருந்தோம். ‘‘மண்ணையும் பொன் ஆக்கலாம் என்ற யுக்தியை தென் மாவட்டத்தில் கண்டுபிடித்தவர் வைகுண்டராஜன். அவருக்கு, அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் மாறிமாறி ஆதரவு தெரிவித்தன. ஒரு கட்டத்தில், அ.தி.மு.க-வின் நெருக்கமான சகாவாக மாறினார் வைகுண்டராஜன். ஜெயா டி.வி-க்கான பின்னணி உதவிகளை இவர் முழுமையாகச் செய்ததாக அப்போதே செய்திகள் வலம் வந்தன. சில ஆண்டுகளுக்கு முன் வைகுண்டராஜன் – ஜெயலலிதா நட்பில் விரிசல் விழுந்தது. அப்போது, தி.மு.க-வுடன் நெருக்கம் ஆனார் வைகுண்டராஜன். இந்த மோதலைத் தொடர்ந்து, அவருக்கு செக் வைக்க முடிவு செய்த அரசு, தனியார் நிறுவனங்கள் தாது மணல் எடுக்கத்  தடை விதித்தது. இது வைகுண்டராஜனின் அஸ்திவாரத்தை ஆட்டிப்பார்த்தது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல ஆண்டுகளாக தாது மணலை ஏற்றுமதி செய்தவருக்கு சிக்கல் வந்தது. ஆனாலும்…!”
‘‘என்ன ஆனாலும்…?”

‘‘அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனது வர்த்தகத்தை அதிகாரிகள் துணையோடு தொடர்ந்து செய்துவந்தார். ‘மேலிடம்தான் அவருக்கு எதிராக இருந்தது. ஆனால், அதிகாரிகள் அவருக்கு மறைமுக உதவிகள் செய்து வந்தார்கள். தடையை மீறி மணல் அள்ளப்பட்டது. மணல் கொண்டு செல்லப்பட்டது. தாதுமணல் பிரித்து எடுக்கப்பட்டது’ என்று ஒரு புகார் கடிதம் மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாம். எவ்வளவு மணல் அள்ளப்பட்டது, எவ்வளவு பிரிக்கப்பட்டது, தடை இருந்த இந்த மூன்று ஆண்டு காலத்தில் எவ்வளவு மின் கட்டணம் செலுத்தப்பட்டது என்ற விவரங்கள் அந்தக் கடிதத்தில் உள்ளதாம். இந்தத் தகவல்கள் வருவதற்கும் டெல்லி தகவல்கள் வருவதற்கும் சரியாக இருந்தது!”
‘‘அது என்ன டெல்லி தகவல்கள்?”

‘‘சசிகலா புஷ்பா, நாடாளுமன்றத்தில் முதல்வரைப் பற்றி புகார் கூறும் அளவுக்கு தைரியம் வந்ததன் பின்னணியில் வைகுண்டராஜன் இருப்பதாக மேலிடத்துக்குத் தகவல் கிடைத்துள்ளதாம். சசிகலா புஷ்பாவை ஆரம்பத்தில் கார்டனுக்குள் நுழையவைத்ததே வைகுண்டராஜன்தானாம். அந்த தைரியத்தில்தான், ஜெயலலிதா மீதே குற்றச்சாட்டை வைத்தார். ‘நான் அப்படிப்பட்ட சமூகத்தில் இருந்து வரவில்லை’ என்று தன் பாதிப்பை சாதிப் பார்வையில் திருப்புவதற்கும் அந்த வட்டாரத்தின் தூண்டுகோல்தான் காரணம் என்றும் உளவுத்துறை அறிக்கை கொடுத்துள்ளது. இவை போதாது என்று, ‘அமைச்சர்களின் ரகசியங்களை வெளியிடுவேன்’ என்று சசிகலா புஷ்பா சொன்னார். இப்படி தினமும் ஒரு அதிர்ச்சி ஸ்டேட்மென்ட்களை வெளியிட்ட சசிகலா புஷ்பா, அடுத்து சொன்னதுதான் அதிர்ச்சி ரகம். ‘என்னை அதிகம் சீண்டினால் சில காரியங்களை நான் செய்வேன். அது தமிழக அரசியலையே திருப்பிப் போடும்’ என்று சொன்னார் சசிகலா புஷ்பா!”

‘‘அதிர்ச்சிகரமான பிரகடனமாக இருக்கிறதே?”

‘‘ஆமாம்! உளவுத்துறை போலீஸாருக்கு இதன் ரகசியங்கள் என்ன என்பது முதலில் புரியவில்லை. ஆனால், அடுத்து சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர் ஒருவர் சொல்லிய செய்திகள் அதிர்ச்சிகரமாக அமைந்தன. ‘எங்க அக்கா பக்கம் சில எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு யார் பின்னணி என்று சொல்லத் தேவையில்லை. அந்த பின்னணியை வைத்து சில காரியங்கள் விரைவில் நடக்கும். அப்போது அரசியல் ஸ்திரத்தன்மையே ஆட்டம் காணும்’ என்று சொல்லி வருகிறாராம். அதாவது, தனக்கு நெருக்கமான 20 எம்.எல்.ஏ-க்களை வைத்து சீண்டிப்பார்க்க, வைகுண்டராஜன் திட்டப்படிதான் இந்த டெல்லி நகர்வுகள் இருந்ததாக ஆளும்கட்சி மேலிடம் சந்தேகப்படுகிறதாம்!”
‘‘என்ன நடக்கும்?”
‘‘வைகுண்டராஜன் வர்த்தகம் மீது சில நாட்களுக்கு முன் நடவடிக்கையைத் தொடங்கிவிட்டார்கள். மூன்று லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரத்தை நெல்லை மாவட்டத்தில் உள்ள திசையன்விளையில் வைத்து பிடித்துவிட்டார்கள். தடை என விதிக்கப்பட்டு இருந்தாலும் நெருக்கடி இதுவரை கொடுக்கவில்லை. முதன்முறையாக, வைகுண்டராஜனின் லாரிகள் பிடிக்கப்பட்டு இருக்கின்றன. மதுரை பி.ஆர்.பி-க்கு நடந்தது மாதிரி வைகுண்டராஜனும் வளைக்கப்படலாம்.”
‘‘ம்!”
‘‘வைகுண்டராஜன் தரப்பில், ‘தற்போதுள்ள நடவடிக்கைகளைவிட கடுமையாகவே ஜெயலலிதா அரசு நடவடிக்கை எடுக்கும்’ என்று எதிர்பார்க்கிறார்களாம். ‘தாது மணலை எடுக்க உரிமை தருவதுதான் மாநில அரசின் வேலை. மற்றபடி, இந்தத் தொழிலில் பலவித அனுமதிகளைத் தருவது மத்திய அரசுதான். இப்படியான சட்ட நுணுக்கங்களை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கும் வைகுண்டராஜன் தரப்பினர், ஜெயலலிதா அரசால் மணல் பிசினஸை நிச்சயமாக ஏற்று நடத்த முடியாது. மத்திய அரசிடம் பல விவகாரங்களில் முறைப்படி அனுமதி பெற்றுதான், இந்தக் கனிம மணல் தொழிலை நடத்த முடியும். டெல்லியில் எங்கள் கொடிதான் பறக்கிறது. பார்க்கலாம்’ என்கிறார்களாம். தற்போதைய நிலவரப்படி ஜெயலலிதா அரசால், வைகுண்டராஜனின் பழைய நிறுவனங்கள் எதையும் முடக்க முடியாதாம். புதிதாக எந்த அனுமதியும் தராமல் இருக்கலாம். ஆனால், இந்த தாது மணல் மேற்கு வங்கத்திலும், இலங்கையிலும் அதிகம் கிடைக்கிறது. அங்கெல்லாம் வைகுண்டராஜன் தரப்பினருக்கு ஏற்கனவே பிசினஸ் தொடர்புகள் உண்டு. அதையெல்லாம் புதுப்பித்து அவரது கஸ்டமர்களுக்குத் தொடர்ந்து தாது மணல் சப்ளையைத் தொடரும் ஐடியாவும் வைகுண்டராஜனுக்கு இருக்கிறதாம்.” 

‘‘ஓஹோ!”
‘‘வைகுண்டராஜன் மீது கடுப்பில் இருக்கும் மேலிடம், தொழிலை முடக்கி இவரைக் கைது செய்ய வேண்டும் என்று நினைக்கிறதாம். அதற்கு முன்னோட்டமாகத்தான் சசிகலா புஷ்பா மீது வழக்குகள் பாய்ந்து வருகிறதாம். சசிகலா புஷ்பா விவகாரத்தில் ராஜ்யசபா சபாநாயகர் அனுமதி பெற்று அவரை கைது செய்யும் வேலைகளும் தொடங்கிவிட்டது. தனக்குப் பின்புலமாகத் தன் சமுதாயம் இருக்க வேண்டும், அதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று வைகுண்டராஜனிடம் சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளாராம். சிலருடைய வீக்னஸ், வைகுண்டராஜனின் கையில் உள்ளதால், அதை வைத்து அவர் சதுரங்கம் ஆட முடிவு செய்துள்ளார்.”
‘‘சமூகம் சார்ந்த பிரமுகர்கள் சமீபத்தில் வெளிப்படையாகப் பேட்டி கொடுத்துள்ளார்களே?’

‘‘ஆமாம்! அனைத்து நாடார் சமுதாயக் கூட்டமைப்பு என்ற பெயரில் கணேசன் நாடார் என்பவர் சென்னையில் பேட்டி கொடுத்தார். தனது பேட்டிக்கு என்ன நோக்கம் என்பதை அவர் தனது கடிதத்திலேயே சொல்லி இருந்தார். ‘சசிகலா புஷ்பா விவகாரம் தொடர்பாக’ என்று சொல்லித்தான் இந்த பேட்டிக்கு அவர் நிருபர்களை வரவைத்தார். ‘சசிகலா புஷ்பா பிரச்னை அவரது சொந்தப் பிரச்னை. அதற்குள் சமுதாயத்தை இழுக்க வேண்டாம். ஜெயலலிதா அடித்தார் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை. சசிகலா புஷ்பாவின் செயல்பாடுகளால் சமூகத்துக்கு அவமானம் ஏற்பட்டு உள்ளது. சமூகத்தை இந்தப் பிரச்னையில் வீணாக இழுக்க வேண்டாம். சசிகலா புஷ்பாவின் கணவர், மகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்’ என்று கணேசன் நாடார் சொல்லி இருக்கிறார். ‘சாதி அஸ்திரத்தை சசிகலா புஷ்பா எடுத்ததால் அதற்கு பதிலடி தருவதற்காக ஆளும்கட்சி ஏற்பாடு செய்தது இது’ என்கிறார்கள். இதில் பிரபலமான நாடார் மகாஜன சங்கம், தெக்‌ஷனமாற நாடார் சங்கம் ஆகியவை இந்தப் பிரச்னையில் தலையிடவில்லை. இவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைத்தான் அந்த சமூக மக்கள் எதிர்பார்க்கிறார் களாம்!” என்றவர் அடுத்த சப்ஜெக்ட்டுக்கு மாறினார்.

‘‘தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சற்குணபாண்டியனின் மறைவு, கட்சித் தலைவர் கருணாநிதியை துயரத்தில் ஆழ்த்திவிட்டது. உடல் நலிவுற்று இருந்த நிலையிலும் சற்குணபாண்டியனின் இல்லத்துக்கே சென்று அவரது உடலுக்கு கருணாநிதி அஞ்சலி செலுத்தினார். அண்ணாவால் ‘சொல்லின் செல்வி’ என்று அழைக்கப்பட்டவர் சற்குணப்பாண்டியன். இரண்டு தடவை ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ ஆகவும், ஒரு தடவை அமைச்சராகவும் இருந்தவர். மிகவும் எளிமையானவர். மகளிரணி நடவடிக்கைகளில் தீவிரம் காட்டியவர். அவர் உடல் நலிவுற்றுப் போனதால், கடந்த சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து அவரது மருமகள் சிம்லா முத்துச் சோழன் நிறுத்தப்பட்டார்.”
“தி.மு.க துணைப்பொதுச்செயலாளர் பதவிக்கு பலரும் முட்டிமோதுகிறார் களாமே?”
“அந்தப் பதவி சற்குணபாண்டியன் மருகளுக்குத் தரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் சற்குணபாண்டியனின் சமூகத்தைச் சேர்ந்த ஆலடி அருணா மகள் டாக்டர் பூங்கோதை, முன்னாள் எம்.எல்.ஏ-வான ராதாபுரம் அப்பாவு, மாணவரணி செயலாளர் கடலூர் புகழேந்தி ஆகியோரும் துணைப் பொதுச்செயலாளர் பதவியைப் பிடிக்கும் முயற்சியில் இருக்கிறார்கள்” என்றபடியே பறந்தார் கழுகார்.

%d bloggers like this: