20 லட்சம் பேருக்கு சாப்ட்வேர் பயிற்சி

இணையத் தேடல் பிரிவில் பிரம்மாவாக இயங்கும் கூகுள் நிறுவனம், இந்தியாவில் 20 லட்சம் சாப்ட்வேர் பொறியாளர்களுக்குத் தன் ஆண்ட்ராய்ட் மொபைல் ஆப்பரேட்டிங் திட்டத்தில் பயிற்சி அளிக்கும் திட்டத்தினைத் தொடங்க இருக்கிறது. நூறு கோடி பேருக்கு மேல் மொபைல் போன் பயனாளர்களாக இருக்கும் இந்திய நாட்டில், லட்சக் கணக்கில் இயங்கும் மென்பொறியாளர்களை இலக்காகக் கொண்டு, இந்த திட்டத்தினை வகுத்துள்ளது.

மிகுந்த அளவில், செலவழிக்கத்தக்க வருமானம் ஈட்டல், அதிகமான எண்ணிக்கையில் இளைஞர்கள் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் அதிவேக இணைய பயன்பாடு ஆகிய அனைத்தும் பல பன்னாட்டு நிறுவனங்களின் கவனத்தை இந்தியாவின் பால் ஈர்த்து வருகின்றன. இந்தியாவில், மொபைல் போன் பயன்படுத்துபவர்களில், ஐந்தில் ஒரு பங்கினர் தான், ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் பிரிவு இனி அதிவேகமாக வளர இருக்கின்றது. அதற்கான தொடக்க நிலை தொடங்கிவிட்டது. ஸ்மார்ட் போன்களின் விற்பனை மற்றும் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. Strategy Analytics என்ற ஆய்வு அமைப்பின் கணிப்பின்படி, ஸ்மார்ட் போன் பயன்பாட்டில், இந்தியா அடுத்த ஆண்டில், அமெரிக்காவின் இரண்டாவது இடத்தைப் பிடிக்க உள்ளது. முதல் இடத்தில் சீனா உள்ளது.
தொழில் நுட்பத்திற்குப் பெயர் பெற்ற ஐபோன்களைத் தயாரித்து வழங்கும் ஆப்பிள் நிறுவனம், பெங்களூருவில், ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டம் வடிவமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான மையம் ஒன்றைத் திறக்க இருப்பதாகச் சென்ற மே மாதம் அறிவித்தது. இந்த மையத்தில், ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும், இந்தியாவிற்குத் தேவையான அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தயாரிப்பவர்களுக்கு தொழில் நுட்ப உதவி வழங்கப்படும்.
இணையத்தைத் தொடர்பு கொள்வோரில், இந்தியாவில், பெரும்பாலானவர்கள், தங்கள் மொபைல் போன்கள் வழியாகத்தான் தொடர்பு கொண்டு வருகின்றனர். எதிர்காலத்தில் இணையத் தொடர்பினை மேற்கொள்பவர்கள் அனைவருமே, இந்தியா மட்டுமின்றி, பிற நாடுகளிலும், மொபைல் சாதனங்களையே பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில், மொபைல் சாதனங்களில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களை வடிவமைப்பதில், இந்தியா உலக அளவில் முதல் இடம் பெறும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே, அந்த வகையில் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சிக்கு உறுதுணையாக, கூகுள் 20 லட்சம் பேருக்குத் தன் மொபைல் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பயிற்சி அளிக்கும் திட்டத்தினை வடிவமைத்து அமல்படுத்தத் தயாராகி வருகிறது.
Android Skilling என அழைக்கப்படும் இந்த பயிற்சித் திட்டம், தனியார் மற்றும் அரசு பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடைமுறைக்கு வரும். அத்துடன், அரசு நிதி உதவியுடன் நடத்தப்படும் National Skill Development Corporation of India கழகத்தில், இந்தப் பயிற்சி கட்டணத்துடன் வழங்கப்படும்.
கூகுள் நிறுவனத்தின் கூற்றுப்படி, 2018 ஆம் ஆண்டில், இந்தியாவில் 40 லட்சம் புரோகிராம் வடிவமைப்பவர்கள் இருப்பார்கள். இது உலக அளவில் மிகப் பெரிய எண்ணிக்கையாகும். இவர்களில் 25%க்கும் குறைவானவர்களே, மொபைல் சாதனங்களுக்கான புரோகிராம் வடிவமைப்பதில் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், தன் ஆசிய நாடுகள் சுற்றுப் பயணத்தின் போது, “இந்தியா, ஐ.ஓ.எஸ். சிஸ்டம் வளர்ச்சியில் ஈடுபடும் திறன் வாய்ந்த புரோகிராமர்களைக் கொண்ட நாடாக வளர்ந்து வருகிறது” என்று குறிப்பிட்டார். அப்போது மேலும் பேசுகையில், பெங்களூருவில் ஆப்பிள் நிறுவனம் அமைக்க இருக்கும் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணி மையத்தில், புரோகிராம் வடிவமைப்பவர்களுக்குத் தேவையான சாதனம் மற்றும் சாப்ட்வேர் வசதிகள் செய்து தரப்படும் என்றார். இவற்றின் மூலம் உலகளாவிய ஆப்பிள் பயனாளர்களுக்கான புரோகிராம்கள் வடிவமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மொபைல் சாதனங்களைப் பயன்படுத்த இருக்கும் அடுத்த சந்ததியினருக்குத் தேவையான புரோகிராம்களுக்கான புதிய சாப்ட்வேர் வழிமுறைகளைக் கொண்ட புதிய லட்சக்கணக்கான பொறியாளர்களை, ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இலக்கு வைத்து தங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன என்று இந்தப் பிரிவில் ஆய்வு நடத்துபவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தையில் வெற்றி பெற, உள்நாட்டு தேவைகளுக்கேற்ப மாறுபட்ட சாப்ட்வேர் புரோகிராம்களும், சேவை வழங்குவதற்கான வழிமுறைகளும் தேவைப்படும் என இப்பிரிவினைக் கண்காணித்து வரும் Counterpoint Research என்னும் ஆய்வு அமைப்பின் தலைவர் நெயில் ஷா குறிப்பிட்டுள்ளார்.

%d bloggers like this: