இந்திய இணையத்தின் இமாலய வரலாறு 2020ல் 417 கோடி இணையப் பயனாளர்கள்

வரும் 2020 ஆம் ஆண்டில், இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, உலகளாவிய அளவில், 417 கோடியாக இருக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் அப்போது 73 கோடி பேர் இணையத்தில் இயங்குவார்கள். சுற்றுலா, இணையம் வழி வர்த்தகம், உடல் நலம் காத்தல் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் எனப் பல பிரிவுகளில் தொடர்ந்து இணையம் பயன்படுத்தப்படுவது அதிகரிக்கும்.

வர்த்தக உலகில் புதிய வாய்ப்புகளைத் தேடுபவர்கள், இணையத்தில் அவர்களின் முயற்சியை இந்த்ப் பிரிவுகளில் மேற்கொள்ளலாம்.
இந்தியாவில் இணையப் பயன்பாடு சீனாவிற்கு அடுத்த நிலையில், உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த வகையில் அண்மையில், அமெரிக்காவை மிஞ்சி விட்டது.
நம் காலத்தில், நம் வாழ்க்கையை இணையம் பெரிய அளவில் பாதித்து மாற்றியுள்ளது. நம் பணி மேற்கொள்ளும் சூழ்நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. வாழ்க்கை முறையே பொதுவாக மாறியுள்ளது.
மேற்கண்ட தகவல்கள் நாஸ்காம் அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இணையத்தில் மேற்கொள்ளும் வர்த்தக நடவடிக்கைகளில், 70% மொபைல் போன்களின் வழியே மேற்கொள்ளப்படுகிறது. இணையம் பயன் படுத்துவோரில், 75% பேர் தங்கள் தாய் மொழியிலேயே அதனைச் செயல்படுத்துகின்றனர் என்பதுவும் உற்சாகம் தரும் ஒரு தகவலே.
அமெரிக்காவில் இயங்கும் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (Boston Consulting Group) என்ற ஆய்வு மையமும் இதே போன்ற தகவல்களை வெளியிட்டுள்ளது. தற்போது நகரங்களில் மட்டுமே ஏற்பட்டு வரும் இணைய வழி வர்த்தகம் போல இனி கிராமப் புற மக்களிடமும் ஏற்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில், இணையத்தில் இணைந்து செயலாற்றுபவர்களில் 48% பேர் கிராமப் புற மக்களாக இருப்பார்கள். 2015ல், 15 கோடியாக இருக்கும் இவர்களின் எண்ணிக்கை, 2020ல், 31.5 கோடியாக உயர்ந்திருக்கும்.
கிராமப்புற இணையப் பயனாளர்களில், 70% பேர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை தருகின்றனர். தகவல்களைத் தேடுபவர்கள் 41% பேர். மின் அஞ்சல் மற்றும் நண்பர்களுடன் டெக்ஸ்ட் வழி தொடர்பு கொள்வதில் 30% பேர் உள்ளனர்.
பயனாளர்களின் வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் பார்க்கையில், 5 கோடி பேர், 18 முதல் 50 வயதுடையவர்களாக உள்ளனர். இவர்கள், நல்ல ஊதியம் பெறுபவர்களாகவும், வர்த்தகம் மூலம் வருமானம் ஈட்டும் வசதி படைத்தவர்களாகவும் உள்ளனர்.
வர்த்தக நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, இவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்து முடிவெடுத்து வைத்துள்ள நிறுவனங்களின் பொருட்களையே வாங்குகிறார்கள். அதே போல, சரியான வழிகளில் பணத்தைச் செலவிடுபவர்களாகவும் உள்ளனர். இவர்கள், டிஜிட்டல் உலகில் நாளொன்றுக்கு 2 முதல் 3 மணி நேரம் செலவிடுகின்றனர்.
சற்று குறைவான வசதியுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக, கல்லூரி மாணவர்களாக, 2.31 கோடி பேர் உள்ளனர். தங்கள் பணி வாய்ப்புகளைத் தேடி நகரங்களை நோக்கி நகர்பவர்களாக உள்ளனர். தினந்தோறும் 2 முதல் 3 மணி நேரம், இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
தங்கள் வாழ்நாளில், மிகத் தாமதமாக இணையத்திற்கு வந்தவர்களாக 2 கோடி பேர் உள்ளனர். இவர்கள் வயது 30 முதல் 50க்குள் இருக்கிறது. மேலே குறிப்பிட்ட கல்லூரி மாணவர்களைக் காட்டிலும் சற்று வசதி குறைவானவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் தங்கள் பணத்தை சேமித்து வைப்பதில் நோக்கம் உடையவர்களாக இருப்பதால், தாங்கள் செலவழிக்கும் பணத்திற்கு மதிப்புள்ள, பயனுள்ள பொருட்களையே விரும்புகின்றனர். ஒரு வார காலத்தில், 4 அல்லது 5 முறை இணையத்தை இவர்கள் பயன்படுத்துகின்றனர்.
புதியதாக இணையத்தை ஆர்வத்துடன் பயன்படுத்துபவர்கள் 2.7 கோடி பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், கிராமத்தில் வாழும் பெண்களே. இவர்கள் அதிக பட்சம் இணையத்தில் நாளொன்றுக்கு 15 நிமிடங்களே செலவிடுகின்றனர்.
வர்த்தகம் மேற்கொள்ளப்படும் பொருட்கள், செலவு செய்யப்படும் வசதிகளைத் தரும் பிரிவுகள் எனப் பார்த்தால், நகர்ப் புறங்களில் உள்ளவர்களைப் போலவே, கிராமப்புறத்தில் இருப்பவர்களும் அதே பிரிவுகளுக்கு முன்னுரிமை தருகின்றனர். நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் அதிக பட்சம் (41%) பயணங்களுக்கு (பஸ் மற்றும் ட்ரெயின்) இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
கிராமப் புறங்களில் இருப்பவர்கள், அதிசயத்தக்க வகையிலும், அத்தியாவசியத்தின் அடிப்படையிலும், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் மொபைல் போன்களையும் அதன் துணை சாதனங்களையும் வாங்க, இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவில் வர்த்தக ரீதியாக, 1995 ஆம் ஆண்டில், ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று, அரசின் பொதுத் துறை நிறுவனமான விதேஷ் சஞ்சார் நிகாம் நிறுவனம், இணையப் பயன்பாட்டினை மக்களுக்கு வழங்கியது. ஆறு நகரங்களில், டயல் அப் வழி இணைய இணைப்பு வழங்கப்பட்டது. 21 ஆண்டுகள் ஓடிவிட்டன. இதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும் முன்னேற்றமும் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன. சாதாரணமாக டெக்ஸ்ட் மட்டுமே சாத்தியப்பட்ட அன்றைய நாளில் இருந்து, இன்று மொபைல் போன்களில் கோப்புகளையும் படங்களையும் பரிமாறிக் கொண்டு, அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள வழி தரும் வகையில் இணையம் வளர்ந்துள்ளது.

%d bloggers like this: