மூன்று முகங்கள்! – சிந்து, திபா, சாக்‌ஷி

ரியோ ஒலிம்பிக் போட்டிகள் நடந்துகொண்டிருந்தபோது இந்தியாவின் 70-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் பிரேசிலின் இந்தியத் தூதரகத்தில் நடந்தன. இதற்காக இரவு விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பசியோடும் ஆர்வத்தோடும் இந்திய விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். விருந்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு என்ன தெரியுமா? கூல்ட்ரிங்ஸும் வேர்க்கடலையும்!

ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை திபா கர்மகர் ரியோவுக்குக் கிளம்பும்போதே தன்னுடன் ஒரு பிஸியோதெரப்பிஸ்டை அழைத்துச்செல்ல அனுமதி வேண்டும் எனக் கோரியிருந்தார். ஆனால், நமது விளையாட்டு ஆணையம் அவரின் கோரிக்கையைக் குப்பைத்தொட்டிக்கு அனுப்பிவிட்டது. எந்நேரமும் காயங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிற போட்டியில், பிஸியோதெரப்பிஸ்ட் இல்லாமலேயே களத்தில் இறங்கினார் திபா.

இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற பின்னர்தான் விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் திபாவிடம், `உனக்கு என்ன வேண்டும்?’ எனக் கேட்டார். திபா கேட்டது பிஸியோதெரப்பிஸ்ட்!

டூட்டிசந்த்… முதன்முதலாக ஒலிம்பிக்கின் 100மீட்டர் ஓட்டத்துக்குத் தகுதிபெற்ற இந்திய வீராங்கனை. அவரை ரியோவுக்கு அழைத்துச் செல்லும்போது, வசதிகள் குறைவான எக்கானமி க்ளாஸ் டிக்கெட்டும்,  அதிகாரிகளுக்கு பிசினஸ் க்ளாஸ் டிக்கெட்களும் போடப்பட்டிருந்தன.

36 மணி நேரப் பயணம், உடல் அளவிலும் மனதளவிலும் சோர்ந்துபோன டூட்டி, ரியோவில் இறங்கியதும் இந்தப் பாரபட்சத்துக்காகக் கதறி அழுதார்.

ஒருபக்கம் ரியோ சென்ற வீரர்களுக்கு வசதிக் குறைபாடுகள். மருத்துவ வசதிகள் இல்லை. அவர்களை அருகில் இருந்து கவனிக்கக்கூட ஆட்கள் இல்லை. ஆனால், ரியோ ஒலிம்பிக்கைக் காரணம்காட்டி இங்கு இருந்து கிளம்பிய  விளையாட்டுத் துறை அதிகாரிகளோ, வீரர்களுக்கு உதவிகள் செய்யாமல் டூரிஸ்ட் ஸ்பாட்களில் `செல்ஃபி ’ எடுத்துக்கொண்டிருந்தனர்.

இப்படி ஒரு மோசமான விளையாட்டுக் கலாசாரம் கொண்ட நாட்டில், ரியோ ஒலிம்பிக்கில் இந்தியப் பெண்கள் நிகழ்த்திக்காட்டியிருக்கும் சாதனை மிகப் பெரியது. அது வெறும் ஒரு வெள்ளி… ஒரு வெண்கலம் அல்ல.  40 தங்கம், நான்கு கிரிக்கெட் உலக கோப்பைகளுக்கு இணையான சாதனை. இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த இவர்கள்தான், இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றி தலைநிமிரச் செய்திருக்கிறார்கள். ஆண்கள் அனைவரும் சோபிக்காமல்  போக, மங்கையர் அணிதான் மானம் காத்திருக்கிறது.

இந்தியாவில் நீங்கள் என்ன தொழில் வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால், விளையாட்டு வீரராகவும் விவசாயியாகவும் மட்டும் இருந்துவிடக் கூடாது. அதிலும் விளையாடும் பெண்ணாக இருந்தால், இன்னும் மோசம். பயிற்சியாளர் தொடங்கி அதிகாரிகள் வரைக்கும் பலரின் பாலியல் தொல்லைகளைத் தாண்டி ஓட வேண்டியிருக்கும். படிப்பைக் காட்டிலும் விளையாட்டில் ஆர்வம் காட்டுகிற பெண்களுக்கு, குடும்பத்தினர் ஆதரவு 10 சதவிகிதம்கூட இருக்காது; சமூகமும் சும்மா விடாது… சாதிக்கவேண்டிய வயதில்தான் திருமணம் செய்துவைக்க முயற்சிக்கும். குடும்ப அழுத்தங்கள், குழந்தைப்பேறு மற்றும் வளர்ப்பு, சம்பாத்தியம் என இந்த வீராங்கனைகள் எதிர்கொள்கிற தடைகள் ஏராளம். சில ஆண்டுகளுக்கு முன்னர், கபடி உலகக் கோப்பையை வென்ற இந்தியப் பெண்கள் அணி, வெளிநாட்டில் இருந்து திரும்பிவந்து, ரிக்‌ஷா பிடித்து வீட்டுக்குச் சென்றது இந்தியாவில்தான் நடந்தது. இத்தகைய சூழலில் விளையாட்டுத் துறையில் பெண்கள் சாதிப்பதைத் தாண்டி அதில் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதே மிகப் பெரிய சவாலாக மாறிவிட்டது.

சிந்துவும் சாக்‌ஷியும் பதக்கங்கள் வெல்ல, திபா கர்மகரும், லலிதா பாபரும் பதக்கங்களை வெல்லத் தவறினாலும், சர்வதேச அரங்கில் நமக்கான அங்கீகாரத்தை பெற்றுத் தந்திருக்
கிறார்கள். இந்தப் பெண்கள் ஒவ்வொருவரின் கதையையும் தேடினால், இந்திய விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரும் சொல்கிற அத்தனை குறைபாடுகளும் அவமானங்களும் புறக்கணிப்பு
களும் அவர்களுக்கும் இருந்திருக்கின்றன. ஆனால், இந்தப் பெண்கள் அதனால் எல்லாம் தேங்கிவிடவில்லை. தங்களுடைய உழைப்பை மட்டுமே மூலதனமாக்கி முந்திச் சென்றுள்ளனர். சறுக்கல்களை மீறியும் சாதித்துள்ளனர். 

சாக்‌ஷி மாலிக்

ஹரியானா, ரோஹ்டாக் மாவட்டம் மோக்ரா கிராமத்தில் பிறந்தவர் சாக்‌ஷி மாலிக். பெண் குழந்தைகளைக் கருவிலேயே கொன்றுவிடும் முரட்டுக் கிராமத்தில் பிறந்த பெண். 1000 ஆண்
களுக்கு 822 பெண்கள்தான் என்ற அந்த  ஊரின் விகிதாசாரமே அந்த ஊரின் நிலையைச் சொல்லிவிடும். சாக்‌ஷியின் தந்தை சுக்பிர் மாலிக்குக்கு டெல்லி போக்குவரத்தில் பணி. சாக்‌ஷிக்கு மல்யுத்தப் போட்டிகளை வேடிக்கை பார்க்கப் பிடிக்கும். அவரது தாத்தா ஒரு லோக்கல் மல்யுத்த வீரர். அவர் தன் பேத்தியைத் தோளில் வைத்துக்கொண்டு ஊர் எல்லாம் சுற்றிவருவார். அவருக்கு ஊர்க்காரர்கள், `நமஸ்கார் பயில்வான்ஜி’ என்று வணக்கம் வைப்பார்கள். தன்னையும் எல்லோரும் `பயில்வான்ஜி’ என அழைக்கவேண்டும் என சாக்‌ஷி கேட்பார். தாத்தா அவளிடம் `அதுக்கு நீயும் மல்யுத்தம் செய்து பெரிய பயில்வான் ஆகணும் குட்டிப் பாப்பா’ என்பார். தாத்தா விதைத்த மல்யுத்த விதை… 12 வயதில் விருட்சமாகி நின்றது. 

 

ஈஸ்வர் தாஹியாவிடம் மல்யுத்தப் பயிற்சிக்குச் சேர்ந்தார் சாக்‌ஷி. ஆனால் சாக்‌ஷி அங்கே பயிற்சி எடுக்க, சண்டையிட பெண்கள் யாருமே இல்லை. பையன்களோடுதான் சண்டைபோட வேண்டும். சாக்‌ஷி முஷ்டியைத் தட்டிக்கொண்டு அதற்கும் தயாரானார். அவர்களை அடித்தும் வீழ்த்தினார்.

`என்னிடம், ஊர்க்காரர்கள் தொடர்ச்சியாகக் குறைபட்டுக்கொள்வார்கள். `என்ன தாஹியா… என்ன பண்ற? சிங்கமும் ஆடும் ஒரே குளத்துல தண்ணி குடிக்குமா?’ என்பார்கள். ஆனால் நான் பெண்களை ஒருநாளும் ஆடாக நினைத்தது இல்லை. இப்போது அது உண்மையாகிவிட்டது. சாக்‌ஷி தன்னை ஒரு சிங்கம் என்று நிரூபித்துவிட்டாள்’ என்கிறார் சாக்‌ஷியின் பயிற்சியாளர் ஈஸ்வர் தாஹியா.
12 வயதில் சாக்‌ஷி பயிற்சிக்குச் சேர்ந்தபோது தந்தை சுக்பிரை, குடும்பத்தினரும் உறவினரும் திட்டித்தீர்த்தனர். `இதெல்லாம் பொண்ணுங்க ஆடுற ஆட்டமா… அவ உடம்பு வீணாகிடும், அப்புறம் அவளை எவன் கல்யாணம் பண்ணிக்குவான்?’ என ஆளாளுக்கு எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆனால், சுக்பிர் அதை எல்லாம் புறம் தள்ளி தன் மகளின் கனவை நனவாக்குவதில் குறியாக இருந்தார். உறவினர்களின் இந்தக் கூப்பாடுகளுக்குப் பயந்தே தன் மகளை திருமணம், திருவிழா என எந்த நிகழ்ச்சிக்கும் அழைத்துச் செல்ல மாட்டார் சுக்பிர்.  

மாவட்ட அளவில் தொடங்கி படிப்படியாக தேசிய அளவில் கவனம் பெறத் தொடங்கினார் சாக்‌ஷி. 2010-ம் ஆண்டில் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார். 2014-ம் ஆண்டில் நடந்த டேவ் சூல்ஸ் சர்வதேசப் போட்டியில், அமெரிக்க வீராங்கனை ஜெனிஃபர் பேஜை வீழ்த்தி தங்கம் வென்றபோது, இந்தியா சாக்‌ஷியைக் கவனிக்கத் தொடங்கியது. 2014-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2015-ம் ஆண்டு சீனியர் ஆசியன் ரெஸ்லிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் என… கடந்த ஆறு ஆண்டுகளில் சாக்‌ஷியின் சக்ஸஸ் ரேட் எப்போதும் ஏறுமுகம்தான்.

இதே மோக்ரா கிராமத்தில் முன்பு சாக்‌ஷி பயிற்சிபெறுவதை விமர்சித்த பலரும், இன்று தங்களின் பெண் குழந்தைகளை மல்யுத்தப் பயிற்சிக்கு அனுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். சாக்‌ஷி மாதிரியான ஒரு சாதாரண பெண்ணின் வெற்றி சாதித்துக்காட்டியது இதைத்தான்.

திபா கர்மகர்

ஜிம்னாஸ்டிக்ஸில் நான்காம் இடம்தான். பதக்கம் இல்லைதான். ஆனால் `ஜிம்னாஸ்டிக்ஸ் என்றால் கிலோ எவ்வளவு?’ என்று கேட்கக்கூடிய நாட்டில், திபாவின் சாதனை அசாதாரணமானது.
ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் கடினமானது ப்ரோடுநோவா என்ற செயல்வகை. ப்ரோடுநோவாவுக்கு இன்னொரு பேர் இருக்கு… `valult of death’. மில்லி செகண்டைத் தவறவிட்டாலும் அடுத்த செகண்ட் மரணப்படுக்கைதான். உலகம் முழுக்க இந்த ப்ரோடுநோவாவை வெற்றிகரமாக, முழுமையாகச் செய்துகாட்டியவர்கள் மொத்தமே ஐந்து பேர்தான். அதில் திபாவும் ஒருவர்.

 

இறுதிப்போட்டியில் `ப்ரோடுநோவா’வுடன் திபா களத்தில் இறங்குவார் என யாருமே நினைக்கவில்லை. தங்கம் வென்ற சிமோன் பைல்ஸ்கூட திடுக்கிட்டுப்போனார். மரணத்தின் கதவுகளைத் தட்டித்திரும்புகிற இந்த ப்ரோடு நோவாவை ஒரேநாளில் திபா செய்துகாட்டிவிடவில்லை. கடந்த மூன்று மாதங்களில் மட்டுமே 1000 முறைக்கு மேல் அதைத் திரும்பத் திரும்பச் செய்து பிழைகளைக் களைந்திருக்கிறார். 

திபாவின் சொந்த மாநிலம் திரிபுரா. இது இந்தியாவின் மிக ஏழை மாநிலங்களில் ஒன்று. திபாவுக்கு சிறுவயதில் இருந்தே ஃப்ளாட் ஃபீட் பிரச்னை இருந்தது. ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுக்குக் கொஞ்சமும் பொருத்தம் இல்லாத கால்கள். ஆனால்,  ஜிம்னாஸ்டிக்ஸில் அவ்வளவு ஆர்வம். ஐந்து வயதிலேயே தொடங்கிவிட்டது பயிற்சி. ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்குத் தடைபோடுகிறார்கள் என்று வருகைப்பதிவுக்கும் மார்க்குகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிற ஆங்கில மீடியம் பள்ளியில் இருந்து நின்றுவிட்டார். சாதாரணப் பள்ளி ஒன்றில் படிக்கத் தொடங்கினார். `விளையாட்டுதான் உன் எதிர்காலம்’ எனச் சொல்லிச் சொல்லி வளர்த்தார் அப்பா. `ஒழுக்கமும் பயிற்சியுமே  உன்னை உயர்த்தும்’ எனக் கண்டிப்பு காட்டியவர் திபாவின் பயிற்சியாளர் பிஸ்வாசர் நந்தி.

பயிற்சிகள் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, சில மாதங்களுக்கு முன்னர் வரைகூட பயிற்சிபெற சர்வதேசத் தரம்வாய்ந்த பயிற்சிக் கூடங்கள் இந்தியாவில் இல்லை. கிழிந்துபோன மேட்களும் எம்பிக்குதிக்க ஸ்கூட்டர் சீட்களும்தான் பயிற்சிக்கான உபகரணங்கள். எந்நேரமும் மழை பெய்துகொண்டே இருக்கும் அகர்தலாவில் இருக்கும் திபாவின் பயிற்சிக்கூடமோ வெள்ளத்தில் மாதத்துக்கு இருமுறை குளம் ஆகிவிடும். சர்வதேச நிறுவனங்களின் ஸ்பான்ஸர்ஷிப் எதுவும் கிடைக்கவில்லை. அப்பாவின் வருமானத்தில்தான் பயிற்சியைத் தொடர்ந்தார் திபா.

ஆனால் திபாவுக்கு எப்போதும் இந்த இல்லைகளைப் பற்றி எல்லாம் கவலையே இல்லை. திபா தன்னை மட்டுமே நம்பினார். ஒவ்வொருநாளும் போராடினார். துல்லியம்தான் வெற்றிக்கு உதவும் என நம்பினார். அந்த நம்பிக்கைதான் இன்று அவரை இந்த உயரத்துக்கு இட்டுச்சென்றுள்ளது.

பி.வி.சிந்து

கபில்தேவ் கிரிக்கெட் உலகக் கோப்பையை கையில் பிடித்திருக்கிற காட்சி, 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் தோனி அடித்த அந்த இமாலய சிக்ஸர், அபினவ் பிந்த்ரா 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அந்தப் பெருமிதத் தருணம்… இவற்றுக்கு இணையான ஒரு கொண்டாட்ட மனநிலையை இந்தியா முழுக்க உருவாக்கியிருக்கிறார் சிந்து. ஒரு பேட்மின்டன் போட்டியின் இறுதிப்போட்டியை ஒட்டுமொத்த இந்தியாவையும் டி.வி-யில் பார்க்கவைத்ததே மிகப்பெரிய சாதனைதான்!

தரவரிசையில் 10-ம் இடத்தில் இருக்கிற ஒரு வீராங்கனை, உலகின் நம்பர் 1 வீராங்கனையை எதிர்த்து ஆடும்போது எளிதில் சரணடைந்துவிடுவார். ஆனால் சிந்து, கரோலினை முதல் செட்டிலேயே தோற்கடித்தார். அதற்கு அடுத்தடுத்த செட்களையும் எளிதில் விட்டுக்கொடுத்துவிடவில்லை. சிந்துவிடம் இருந்து வெற்றியைப் பிடுங்க கரோலின் போராட வேண்டியிருந்தது.

2015-ம் ஆண்டு ஜனவரி  மாதம், எழுந்து நடக்க முடியாத அளவுக்கு காலில் காயம்பட்டு வீல்சேரில் இருந்தார் சிந்து. ஒலிம்பிக் தொடங்க 17 மாதங்களே இருக்கிற நேரத்தில் இப்படி ஒரு காயம் அவரை மிகவும் பாதித்தது. ஆனால் அந்த நிலையிலும் சிந்து சோர்ந்துபோய்விடவில்லை. தன் பயிற்சியைக் கைவிடவில்லை. வீல்சேரில் உட்கார்ந்துகொண்டு என்ன செய்யமுடியும்? ஆனால் அவருடைய பயிற்சியாளர் கோபிசந்த் வீல்சேரோடு சிந்துவை கோர்ட்டில் கொண்டுபோய் நிறுத்திவிடுவார். உட்கார்ந்தபடியே பயிற்சியைத் தொடர வைத்திருக்கிறார். மூன்று மாதங்கள் இப்படி ஒற்றைக்காலில்தான் பயிற்சிசெய்திருக்கிறார் சிந்து.

மூன்று மாதங்கள் கழித்து கால்கள் குணமாகி சிந்து எழுந்து நின்றபோது, மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியிருந்தது. முன்பைவிட பயிற்சி நேரத்தை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. தொடர்ந்து ஏழு மணிநேரம் பயிற்சி… கடந்த 10 மாதங்களாக இதுதான் சிந்துவின் வாழ்க்கை.

சிந்து பிறந்ததில் இருந்து சைவம் மட்டுமே சாப்பிட்டு வளர்ந்தவர். ஆனால் கோபிசந்த், சீன பாணி பயிற்சிகளைக் கொடுக்கிற ஆசாமி. அதனால் தன்னிடம் பயிற்சி பெறுகிற ஒவ்வொரு
வரும் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை, அவரே அருகில் இருந்து கண்காணிப்பார். உணவில் கட்டாயம் சிக்கன் இருக்க வேண்டும். தொடர்ச்சியாக விளையாடுவதற்கான பலத்தை அதுதான் கொடுக்கும் என்பது கோபிசந்த்தின் நம்பிக்கை. சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்த பிறகு சிந்துவை சிக்கன் சாப்பிடச் சொன்னபோது, அவர் அதை உடனே ஏற்றுக்கொண்டார். அவருக்கு முக்கியமானது தொடர்பயிற்சியும், அதற்கான உடல்வலிமையும்தான். எக்காரணம் கொண்டும் எதிலும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதுதான் சிந்துவின் குணம். அதனால்தான் பயிற்சியாளர் கோபிசந்த் என்ன சொன்னாலும் கேட்டு நடந்து, அதை அப்படியே அச்சுப்பிசகாமல் பின்பற்றி இலக்கை எட்டி இருக்கிறார்.

விளையாட்டு ஆர்வமுள்ள குடும்பத்தில் பிறந்தவர் சிந்து. அப்பா ரமணா, அர்ஜுனா விருதுவென்ற வாலிபால் விளையாட்டு வீரர். அதனாலேயே சிந்துவுக்கு ஏழு வயதாக இருக்கும்
போதே எந்த விளையாட்டில் ஆர்வம் என்பதைக் கண்டறிந்து அதில் முழுமூச்சோடு உதவத் தொடங்கிவிட்டார். ஒவ்வொரு நாளும் 56 கி.மீ பயணம் செய்துதான் பயிற்சி பெற வேண்டும். சிறுமி சிந்து தயாராகவே இருந்தார்.

ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றதுமே சிந்துவிடம் இருந்து முதலில் பறிக்கப்பட்டது அவருடைய செல்போன். காரணம் கவனம் சிதறக் கூடாது. கூடவே அவருக்கு பிரியமான ஐஸ்கிரீம் சாப்பிடுவதையும் நிறுத்தியிருக்கிறார் கோபிசந்த். ஆனால் சிந்து எல்லாவற்றையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு பயிற்சியைத் தொடர்ந்திருக்கிறார். `மூன்று மாதமாக அவர் செல்போன் பயன்படுத்துவது இல்லை. முதலில் நான் சிந்துவுக்குத் தரப்போவது அவளுடைய செல்போனைத்தான். அவர் ஐஸ்கிரீம் லஸ்ஸி சாப்பிடுவதையும் தடைபோட்டிருந்தேன். இப்போது அவர் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்’ என்று கோபிசந்த் பேட்டி கொடுத்திருக்கிறார்.

 

ஐஸ்கிரீமும் செல்போனும் பெரிய விஷயம் இல்லைதான். ஆனால் சிந்து தன் இலக்கு நோக்கிய பயணத்துக்காக எதையும் விட்டுத்தரத் தயாராக இருந்திருக்கிறார். அந்த அர்ப்பணிப்புக்குத்தான் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது!

%d bloggers like this: