மிஸ்டர் கழுகு : கார்டன் கல்யாணம்… கலங்கிய ‘தங்கத் தம்பி’!

“வளர்ப்பு மகன் திருமணத்தால் எழுந்த சர்ச்சையாலோ, என்னவோ… தன் தோளில் தூக்கி வளர்த்த விவேக் திருமணத்துக்கு வருவதை தவிர்த்துவிட்டார் முதல்வர்” என்றபடியே வந்தார் கழுகார்.
“சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி. அவருடைய மகன் விவேக். ஜாஸ் சினிமாஸ் நிர்வாக இயக்குநர். விவேக் என்றால் ஜெயலலிதாவுக்கு செல்லம். ‘என் வீட்டு கல்யாணமாக, விவேக் கல்யாணத்தை நடத்த​வேண்டும்’ என ஜெ சொன்ன பிறகுதான் விவேக்குக்குப் பெண் பார்க்கும் படலம் கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பித்தது. கார்டனின்

அதிகார மையமாக உருவாகியிருந்த விவேக்கிற்கு மனைவியாகப் போகிற பெண் என்றால், சும்மாவா? திவாகரனின் கண் அசைவில்தான் பெண் பார்க்கும் படலமே நடந்தது. மதுரையில் இருந்து திவாகரனுக்கு நெருக்கமான நபர் மூலம்தான், கல்யாணஓடை பாஸ்கரன் மகளைப் பார்த்துள்ளார்கள். விவேக்குக்குப் பிடித்துவிட்டது. அதற்குள் பெண்ணின் தந்தை பாஸ்கரன் மீ்து செம்மரக் கடத்தல் விவகாரம் இருக்கிறது என கார்டனுக்கு தகவல் எட்டியது. ‘சிக்கலான இடத்தில் பெண் எடுக்க வேண்டாம்’ என நினைத்தார்கள். ஆனால், விவேக்கின் பிடிவாதம் காரணமாக இந்தத் திருமணம் உறுதியானது. ஆகஸ்ட் 29-ம் தேதி நாள் குறிக்கப்பட்டது. அப்போதே திருமணத்துக்கு தான் வரமுடியாது என்பதை விவேக்கிடமே சொல்லிவிட்டாராம், ஜெ.
‘‘ம்!’’

‘அதனால் பத்திரிகைகள்கூட அதிகம் கொடுக்கவி்ல்லையாம். ஆடம்பரத்தையும் குறைத்துக் கொண்டார்களாம். தனது மகன் திருமணத்தை நடத்துவது போலத்தான் தனது அண்ணன் மகன் விவேக்கின் திருமணத்துக்கான ஏற்பாடுகளையும் செய்துவந்தார் திவாகரன். தங்கள் குடும்பத்தின் விழாவாக மட்டுமே நடத்த திவாகரன் விருப்பப்பட்டார். சென்னை வானகரம் ஏரியாவில் அ.தி.மு.க. பொதுக் குழு வழக்கமாக நடக்கும் இடத்திற்கு அருகில்தான் திருமணம் நடந்தது. வழிநெடுக அலங்கார வளைவுகளோ தோரணங்களோ பேனர்களோ என எதுவும் திருமண மண்டபத்தைச் சுற்றி இல்லை. அ.தி.மு.க. நிர்வாகிகள் யாரும், பேனரோ, போஸ்டரோ ஒட்டவில்லை. ஆனால், சென்னை முழுவதும் மணமக்களை வாழ்த்தி, ‘அம்மா அவர்களின் நல்லாசியுடன், எங்கள் தங்கத் தம்பி திருமணத்துக்கு வரவேற்கிறோம்’ என நண்பர்கள் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.’’
‘‘ஜெயலலிதாவின் மன ஓட்டம் என்ன?’’

‘‘ ‘கட்சித் திருமணமாக நடத்தவேண்டாம்’ என்று மட்டும் சொன்னாராம். திருமணத்துக்கு முந்தைய தினம் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு கிளம்பிய விவேக்கிடம், ‘என் ஆசி உனக்கு என்றும் உண்டு’ என்று சொல்லித்தான், கார்டனில் இருந்து வழி அனுப்பி வைத்தார் ஜெ. மாப்பிள்ளை அழைப்பில் திவாகரனோடு, சசிகலா, இளவரசி, திவாகரன் மனைவி லதா, ஆகியோர்தான் முன்வரிசையில் இருந்தனர். சாரட் வண்டியில் மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெற்றது. திருமணத்தில் பட்டுவேட்டி, சட்டை சகிதமாக வாசலுக்கு வந்து நின்றுவிட்டார் திவாகரன். அவரோடு இளவரசியும்  பெண்ணின் அப்பா பாஸ்கரனும் எல்லோரையும் வரவேற்றார்கள். திருமண மண்டபத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பௌன்சர் ஆட்கள் கருப்பு நிற காஸ்ட்யூமில் நின்று​கொண்டிருந்தனர்.’’
‘‘ம்!’’
‘‘விவேக்கின் அத்தையான சசிகலா, பச்சை நிற பட்டுப் புடவையில் முன் வரிசையில் அமர்ந்து இருந்தார். அவருக்கு அடுத்த வரிசையில் அவருடைய கணவர் நடராஜன் அமர்ந்திருந்தார். ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளவில்லை. முகூர்த்த நேரத்திற்கு முன்பே மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வர அவரை முதல்வரிசையில் அமரவைத்தார் திவாகரன். முதல் வரிசையில் சசிகலாவுக்கு அருகில் அவருடைய அண்ணி சந்தானலெட்சுமி அமர்ந்திருந்தார். திவாகரன் மகன், ஜெய ஆனந்த்தான் மாப்பிள்ளைக்கு தோழனாக நின்று உதவிகளையும் செய்துகொண்டிருந்தார். மகன் திருமணத்தில் ஏக பூரிப்பில் இருந்தார் இளவரசி. தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். தனது ரசிகர் மன்ற பட்டாளத்துடன் பாஸ்கரன் மண்டபத்துக்குள் நுழைந்தார். இளைஞர் படையோடு பந்தாவாக என்ட்ரி ஆன பாஸ்கரன் முதல் வரிசையில் போய் அமர்ந்துகொண்டார். சுதாகரன் மட்டும் மிஸ்ஸிங். மாப்பிள்ளைக்கு பெற்றோர் ஸ்தானத்தில் திவாகரனும் அவருடைய மனைவி லதாவும் நின்றார்கள். இருவருக்கும் விவேக் பாத பூஜை செய்தார். இளவரசியை அழைத்து அவருக்கும் பூஜை செய்யவைத்தார் திவாகரன். பொன்னிறப் பட்டுப்புடவையோடு, மணமகள் மேடை ஏறியதும், வேதமந்திரங்கள் முழங்க, திருவாசக வரிகள் வாசித்து, கன்னிகா தானமும், அதற்கு அடுத்து மாங்கல்ய முகூர்த்தமும். நடைபெற்றன. மணமகள், கழுத்தில் மணமகன் தாலி கட்ட, அதற்கு பிறகு தங்கத்தால் ஆன செயினை மணமகள் கீர்த்தனா கழுத்தில் அணிவித்தார் விவேக்.’’

‘‘ம்!’’
‘‘சசிகலா மேடை ஏற அவருடன் சந்தானலெட்சுமியும், இளவரசியும் சேர்ந்து நிற்க, அவர்கள் காலில் விழுந்து ஆசிபெற்றனர் மணமக்கள். அதன் பிறகே நடராஜன் மேடைக்கு வந்து மணமக்களை வாழ்த்தினார். ஐ.பி.எஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேலும் காத்திருந்து மணமக்களை வாழ்த்தினார். அமைச்சர்களோ, எம்.எல்.ஏ-க்களின் தலைகளோ எங்கும் தென்படவில்லை’’ என திருமண செய்திகளுக்கு சுபம் போட்டுவிட்டு அடுத்த செய்திக்கு தாவினார்.

‘‘சில அமைச்சர்கள் தலைக்கு மேல் கத்தி தொங்கி கொண்டிருக்கிறது என இரண்டு இதழ்களுக்கு முன்பு சொல்லியிருந்தேன். சண்முகநாதன் தலை உருண்டுவிட்டது. அவருக்கு பதில் மாஃபா பாண்டியராஜன் புதிய அமைச்சர் ஆகியிருக்கிறார். சட்டசபை முடிந்த பிறகுதான் அமைச்சர்கள் மாற்றம் நடக்கும் என சொல்லியிருந்தேன். ஆனால், அதற்கு முன்பே நடப்பதற்கு காரணம், அன்றைய தினம் நடந்த சசிகலா புஷ்பாவின் மதுரை விசிட்தான். மீடியாவிடம் அவர் இன்னும் உக்கிரத்துடன் ஆளும் கட்சிக்கு எதிராகப் பேசிவருவதை மேலிடம் ரசிக்கவில்லை. சசிகலா புஷ்பா வந்த போது அவருடன் ஒரு படையே வந்தது. இதையெல்லாம் பார்த்துதான் அவருக்கு ஆதரவாளராக முன்பு இருந்த சண்முகநாதனை அமைச்சரவையில் இருந்து நீக்கியிருக்கிறார் ஜெயலலிதா. சசிகலா புஷ்பாவை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். சட்டசபையிலும் டி.வி. விவாதங்களில் சிறப்பான பங்களிப்பை செய்தற்காக மாஃபா பாண்டியராஜனுக்கு கேபினெட்டில் இடம் கிடைத்திருக்கிறது’’ என்றபடி பறந்தார் கழுகார்.

%d bloggers like this: