சேமிப்புக் கணக்கில் தூங்கும் பணம்… கூடுதல் வருமானம் தரும் ஃப்ளெக்ஸி ஆப்ஷன்!

ம்மிடம் இருக்கும் பணத்தை வங்கி சேமிப்புக் கணக்கில் (Saving Account) போட்டு வைத்திருப்பதைவிட வங்கி வைப்பு நிதியில் (Fixexd Deposit) போட்டு வைத்தால், சில சதவிகிதம் கூடுதல் வருமானம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், நாம் ஏன் வங்கி வைப்பு நிதியில் பணத்தைப் போட்டு வைக்காமல் சேமிப்புக் கணக்கில் அதிகமான பணத்தைப் போட்டு வைக்கிறோம்? நமக்குப் பணம் வேண்டும் என்கிறபோது, உடனே சுலபமாக எடுக்க முடியும்(லிக்விடிட்டி) என்பதால்தான்.  

இதே பணத்தை  வைப்பு நிதியில் போட்டு வைத்திருந்து, குறித்த காலத்துக்கு முன்பே எடுத்தால், அபராதம் கட்ட வேண்டியிருக்கும்.  இதற்கு பயந்தே தேவைப்படாத பணத்தை பலரும் வங்கிச் சேமிப்புக் கணக்கிலேயே வைத்துவிடுகிறோம்.
ஒரு வேளை… நாம் நினைக்கும் பணத்தை சுலபமாக எடுக்கவும், அதேசமயம் சற்று அதிக வட்டியும் கிடைத்தால் நன்றாக இருக்கும்தானே!  அப்படி ஒரு திட்டம் இருக்கவே இருக்கிறது. அந்தத் திட்டம்தான் ஃப்ளெக்ஸி டெபாசிட் (Flexi Deposit).  இந்த ஃப்ளெக்ஸி டெபாசிட் திட்டம் பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
ஃப்ளெக்ஸி டெபாசிட்டுகள் என்பது ஸ்வீப் அக்கவுன்ட் (Sweep account), ஃப்ளெக்ஸி டெபாசிட் அக்கவுன்ட் (Flexi deposit account) என இரண்டு வகைப்படும். இந்த இரண்டு வகை டெபாசிட்டும் எல்லா வங்கிகளிலும் இருக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும், இதில் ஏதாவது ஒன்று, பல வங்கிகளில் நடைமுறையில் இருக்கும். முதலில், ஸ்வீப் அக்கவுன்ட் பற்றி பார்ப்போம்.

ஸ்வீப் அக்கவுன்ட் (Sweep account)

இந்த வகைக் கணக்கு சேமிப்புக் கணக்காகத் தொடங்கப்படும். குறைந்தபட்சத் தொகையாக          (Minimum Balance) ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும். இது வங்கிக்கு வங்கி மாறுபடும்.
உதாரணமாக, பத்தாயிரம் ரூபாய் குறைந்தபட்சத் தொகை என்று கொள்வோம். இந்தத் தொகையைவிட கூடுதலான பணம் எப்போதெல்லாம் சேமிப்புக் கணக்கில் இருக்கிறதோ, அந்தப் பணம்  உடனே டெபாசிட்டாகக் கருதப்பட்டு அதிக வட்டி ஈட்டித் தரும். இதில் கவனிக்கப்பட வேண்டியவை சில…
சில வங்கிகள் இந்த குறைந்தபட்ச தொகையை நாமே நிர்ணயம் செய்து கொள்ள அனுமதிக்கும். உதாரணமாக, உங்கள் மாதாந்திர தேவை ரூ.10,000  என்று வைத்துக்கொண்டு, இதனை விட அதிகப் பணத்தை சேமிப்புக் கணக்கில் போடும்போது அதனை டெபாசிட்டாக மாற்றச் சொல்லலாம்.
அடுத்து, கவனத்தில்கொள்ள வேண்டியது கன்வெர்சன் யூனிட் (conversion unit) பற்றி. இதில் இரண்டு வகை உண்டு. ரூபாய் ஆயிரம் யூனிட் தொகையாகக் கொண்ட வங்கிகள் ஒரு வகை. யூனிட் 1 ரூபாய் என வைத்தி ருக்கும் வங்கிகள் மற்றொரு வகை. 
உதாரணமாக, உங்கள் சேமிப்புக் கணக்கில் ரூ.16,200 இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். குறைந்தபட்ச பராமரிப்புத் தொகை ரூ. 10,000. ஆயிரம் ரூபாய் யூனிட் தொகையாகக் கொண்ட வங்கியானது ரூ.6,000 மட்டும் எடுத்துக்கொள்ளும். அதாவது, ரூ.6,000 போக மீதமுள்ள ரூ.10,200 சேமிப்புக் கணக்கிலேயே தொடரும். இந்தத் தொகைக்கு சேமிப்புக் கணக்கு வட்டி கிடைக்கும். இதுவே யூனிட் 1 ரூபாய் என வைத்திருக்கும் வங்கியில் 6,200 ரூபாயையும் டெபாசிட்டுக்கு எடுத்துக்கொள்ளும்.
இதில், ஆட்டோ ஸ்வீப்  (Auto Sweep)  வசதி உண்டு. ஆட்டோ ஸ்வீப் வசதியில், குறைந்தபட்சத் தொகைக்கு மேல் செல்லும்போது, டெபாசிட் கணக்குக்கு பணம் சென்றுவிடும். இந்த வகைக் கணக்கில், டெபாசிட்டுகள் ஒரு வருடத்துக்கானதாகத்தான் திறக்கப்படும்.

ஃபிளெக்ஸி டெபாசிட் அக்கவுன்ட்!
இந்த வகை கணக்கை சேமிப்புக் கணக்காக ஆரம்பிப்பதற்குப் பதிலாக டெபாசிட் கணக்காக ஆரம்பிக்க வேண்டும். உதாரணத்துக்கு,  டெபாசிட் தொகை ரூ. 1 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். மூன்று வருடம் அல்லது  ஐந்து வருடம் என டெபாசிட் காலத்தை வட்டி விகிதம் பார்த்துத் தேர்வு செய்யலாம்.  அதிக வட்டி விகிதம் அளிக்கும் டெபாசிட் காலத்தை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்.
சேமிப்புக் கணக்கில் தேவை ஏற்படும்போது தேவையான பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.  மேற்சொன்ன உதாரணத்தில், தேவை ரூ.30,000 என்றால், ரூ.70,000 டெபாசிட் கணக்காகவும், ரூ.30,000  சேமிப்புக் கணக்காகவும் மாற்றப்படும். ரூ.70,000-த்துக்கு  மூன்று வருட வட்டி விகிதம், ரூ.30,000-க்கு சேமிப்புக் கணக்கின் வட்டியும் அளிக்கப்படும். இதிலும் சில விஷயங்கள் கட்டாயம் கவனிக்கப்பட வேண்டும்.
முதலில், டெபாசிட் சேமிப்பு வங்கிக் கணக்குக்கு  மாற்றப்படும் போது எல்ஐஎஃப்ஓ (LIFO – last in first out) அல்லது எஃப்ஐஎஃப்ஓ (FIFO – first in first out) முறையில் மாற்றப்படும். எல்ஐஎஃப்ஓ, அதாவது பின்வந்தது முதலில் செல்ல வேண்டும் என்று அர்த்தம். எஃப்ஐஎஃப்ஓ, அதாவது முதலில் வந்தது முதலில் செல்ல வேண்டும். இவை நம் கணக்கில் தொடங்கப்பட்ட  டெபாசிட் கணக்குகளைக் குறிப்பிடுகிறது. சாதாரணமாக, பின்வந்தது முதலில் செல்வது நமக்கு குறைந்த வட்டி நஷ்டத்தை உண்டாக்கும். காரணம், டெபாசிட் மூடப்படும்போது, வட்டி அபராதம் (Penal Interest) போடப்படும். முதலில் தொடங்கப்பட்ட  டெபாசிட்டுகள் அதிக நாட்கள் இருந்திருக்கும். ஆகையால், வட்டி அபராதமானது நாள் கணக்கில் போடப்படும்போது இதில் நமக்கு நஷ்டம் அதிகம். வங்கிக்கு வங்கி இந்த முறை மாறுபடுவ தால் இதை கேட்டு அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியானது ஒரு ரூபாய் யூனிட் கொண்ட வங்கியா என்று பார்க்கவும். இதில்தான் அதிக வட்டி கிடைக்கும்.
இந்த வகைக் கணக்கில் முதலீட்டா ளருக்கு முக்கிய நன்மை, தேவையான போது பணம் எடுக்கும் வசதி மற்றும் கூடுதல் வட்டித் தொகை தான். தவிர, இந்த வகையான கணக்கு, தானே புதுப்பிக்கப்படுவதால்,  கணக்கு வைத்திருப்பவர் வங்கிக்கு இதற்காக செல்ல வேண்டாம்.
இதில் குறைபாடு என்னவென்று பார்த்தால், நாம் நிர்ணயம் செய்துள்ள சேமிப்புக் கணக்குத் தொகையைவிட, கையிருப்பு குறையும் போதெல்லாம் அபராதத் தொகை வசூலிக்கப்படும். அதேபோல், குறிப்பிட்ட காலத்துக்கு முன் டெபாசிட் கணக்கு மூடப்பட் டால், முன்கூட்டியே மூடுவதற்கான  கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த வகைக் கணக்குகளை, ஆன்லைன் மூலமே ஆரம்பித்துக் கொள்ளலாம். ஆன்லைன் மூலமே இயக்கவும் செய்யலாம். இனியாவது ஃப்ளெக்ஸி டெபாசிட் திட்டத்தை பயன்படுத்தி அதிக லாபம் பார்ப்பீர்கள்தானே!

%d bloggers like this: