ஆண்ட்ராய்ட் சிஸ்டம் ‘நகெட்’ பயனாளர்களுக்கு வெளியீடு

கூகுள் அண்மையில் அறிவித்த அதன் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் புதிய பதிப்பு 7.0, ‘நகெட்’ பயனாளர்களுக்குச் சென்ற வாரம் ஆகஸ்ட் 22 திங்கள் அன்று வெளியிடப்பட்டது. தொடக்கத்தில் இந்த சிஸ்டம், இதனை ஏற்றுக் கொள்ளக் கூடிய நெக்சஸ் மாடல் போனுக்கு மட்டும் கிடைக்கும். அடுத்தபடியாக, எல்.ஜி. வி.20 (LG V20) மாடல் போனுக்கு வழங்கப்படும். இந்த சிஸ்டத்தைப் பெறும், நெக்சஸ் அல்லாத வேறு நிறுவன மொபைல் போன் இதுவாகத்தான் இருக்கும். தொடர்ந்து இன்னும் சில மாதங்களில், மற்ற ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களுக்கு இது வழங்கப்படும்.

இந்த சிஸ்டம் மே மாதம் வெளியிடப்பட்டாலும், ஜூன் மாதம் தான் இதன் பெயர் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த சிஸ்டம் முழுமையாக வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 6 அன்று, இந்த சிஸ்டம் கொண்ட எல்.ஜி. வி20 மாடல் வெளியாகும் என எல்.ஜி. நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் முற்றிலும் புதிய வசதிகளையும் அம்சங்களையும் இங்கு காணலாம்.
விரைவாக செட்டிங்ஸ் அமைப்பு: இப்போது, போன் திரையின் மேல் பகுதியிலிருந்து கீழாக ஸ்வைப் செய்தால், அதில் அனைத்து அப்ளிகேஷன்களுக்கும் பட்டன்கள் எப்போதும் கிடைக்கும். இந்த சிறிய பட்டன்களை இயக்கி எந்த ஒரு செயல்பாட்டையும் இயக்க, நிறுத்த முடியும். ஏர்பிளேன் மோட் எனப்படும் வை பி அல்லாத குறுகிய சில வசதிகள் மட்டுமே கொண்ட செயல்பாடு, பிளாஷ் லைட், வை பி ஹாட் ஸ்பாட் ஆகியவற்றை இது போல விரைவாக இயக்கலாம். மேலும், செட்டிங்ஸ் அமைப்பு திரையில் நாம் காணும் முதல் திரையிலேயே, டேட்டா பயன்பாடு, செட்டிங்ஸ் அமைப்பின் தற்போதைய நிலை, மீதம் இருக்கும் பேட்டரி திறன் போன்ற பலவற்றைக் காணலாம்.
அனைத்தையும் உடனே மூட: நாம் எத்தனை அப்ளிகேஷன்களை, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயக்கினாலும், அவை அனைத்தும் மிக அருமையாக சிஸ்டத்தால் நிர்வகிக்கப்படும். தற்போது இவை அனைத்தையும் மூடுவதற்கு ஒரே பட்டன் தரப்பட்டுள்ளது. இது டாஸ்க் ஸ்விட்ச்சர் திரையின் மேல் வலது பக்கம் உள்ளது. இதனை அழுத்த, திறந்து இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து செயலிகளும் மூடப்படுகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோ: சாம்சங் தன் சில மொபைல் போன்களில், ஒரே டிஸ்பிளே திரையில், இரண்டு (multi-window mode) செயலிகளை இயக்கும் திறனை அளித்தது. கூகுள் தற்போது இதனை இந்தப் புதிய நெகட் சிஸ்டத்தில் கொண்டு வந்துள்ளது. குரோம் பிரவுசரை இயக்கும்போது கூட, இரண்டு டேப்களில், இரண்டு இணைய தளங்களைத் திறந்து வைத்து, இரண்டையும் இயக்கலாம். இந்த இரண்டு திரைக்கும் இடையே டெக்ஸ்ட் மற்றும் படங்களை இழுத்து மற்றொன்றுக்கு அனுப்பலாம்.
இதனை இயக்க, அப்ளிகேஷன் ஒன்று பயன்படுத்தப்படுகையில், Overview கீயை அழுத்திப் பிடித்தால், திரை இரண்டாகப் பிரிந்து, தற்போதைய அப்ளிகேஷன் ஒரு திரைப் பகுதியிலும், இன்னொரு பகுதியில், அதற்கு முன்னால் திறந்து இயக்கப்பட்ட அப்ளிகேஷன்களின் பட்டியலும் காட்டப்படும். நாம் நமக்குத் தேவையானதை டேப் செய்து பெற்று, இன்னொரு திரையில் இயக்கலாம். இது விண்டோஸ் இயக்கத்தில் உள்ள Alt+Tab கீகள் இயக்கம் போன்றதாகும்.
இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. Overview கீயை டேப் செய்து, பின் அதனை அழுத்தியவாறே அப்ளிகேஷன் கார்ட் ஒன்றையும் அழுத்தித் திறந்து இயக்கலாம். அதனை அப்படியே திரையின் மேற்புறத்திற்கு இழுத்துச் சென்றால், திரை பிரிக்கப்பட்டு இயக்கும் வசதி தரப்படும். இதில் என்ன சிறப்பு என்றால், இரண்டாகப் பிரிக்கப்பட்ட திரை பகுதிகள் இரண்டிலும், அவற்றைப் பெரிதாகவும், சிறியதாகவும் அமைத்திட, ஸ்லைடர் பட்டன் தரப்பட்டிருக்கும். மீண்டும் ஒரே திரை டிஸ்பிளே வேண்டும் என்றால், Overview கீயை அழுத்தி இயக்க வேண்டும். இரு திரைக் காட்சியிலிருந்து வெளியேறிவிடுவீர்கள்.
அதே போல, Recent Apps டேப்பில் இருமுறை தட்டி இயக்கினால், அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷனையும், அதற்கு முன்னால் இயக்கிய அப்ளிகேஷனையும் பெற்று செயல்படலாம்.
நமக்கு அடிக்கடி வேண்டிய அப்ளிகேஷனை, இதன் Share menuவில் ‘பின்’ செய்து வைக்கலாம். இதனால், எந்த அப்ளிகேஷனை இயக்கினாலும், இதனைப் பெறும் வகையில், அதன் சிறிய ஐகான் மேலாகக் கிடைக்கும். இதே போல, ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷனை ‘பின்’ செய்திடலாம். அனைத்து அப்ளிகேஷன்களையும் மேலாக ஒட்டி வைத்த இடத்திலிருந்து நீக்க வேண்டும் என்றால், “Clear All” என்பதில் அழுத்தினால் போதும். அனைத்தும் மறைந்துவிடும். அதன்பின் புதியதாக மீண்டும் ஒட்ட வைத்துக் கொள்ளலாம்.
அறிவிப்புகளுக்கு பதில் அளிக்க: இந்த சிஸ்டத்தில் ஒரு செயலியை இயக்கிக் கொண்டிருக்கும்போது, நமக்கான தகவல்கள் அறிவிப்புகளாய் வருகையில், அந்த செயலியை நிறுத்திச் செல்ல வேண்டியதில்லை. செயலியை இயக்கியவாறே, அந்த அறிவிப்பிற்கான பதிலை அமைத்து அனுப்பலாம். ஒரே செயலியிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட நோட்டிபிகேஷன்கள் வந்தால், அவை அனைத்தும் நோட்டிபிகேஷன் அறிவிப்பு இடத்தில், ஒரு குழுவாகக் காட்டப்படும். எடுத்துக் காட்டாக, ஜிமெயில் செயலியிலிருந்து, மூன்று புதிய அஞ்சல்கள் வந்துள்ள தகவல் இருப்பின், அந்த மூன்றும் ஒரு குழுவாக, ஒரு கார்டாக, நோட்டிபிகேஷன் பேனலில் காட்டப்படும். இதில் இரு விரல்களை வைத்து இழுத்தால், விரிக்கப்பட்டு அனைத்து நோட்டிபிகேஷன்களையும் தனித்தனியே பார்க்கலாம்.
பேட்டரி திறன் சேமிப்பு: ‘நெகட்’ சிஸ்டத்திற்கு முன் வந்த மார்ஷ்மலாய் சிஸ்டத்தில், பேட்டரி திறன் சேமிக்க சில வசதிகள் தரப்பட்டன. அப்ளிகேஷன்கள் பயன்பாட்டில் இல்லாத போது, அதற்கான மின் சக்தி குறைக்கப்பட்டது. இந்த புதிய சிஸ்டத்தில், இந்த வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. இது ‘Doze’ என அழைக்கப்படுகிறது. இப்போது, போனின் ஸ்கிரீன் அணைக்கப்பட்டவுடன், அல்லது போனை பாக்கெட்டில் வைத்து அல்லது பைகளில் வைத்து எடுத்துச் செல்லப்படும்போதும், அனைத்து அப்ளிகேஷன்களும், ‘deep doze’ என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டு முற்றிலும் இயங்கா நிலையில் வைக்கப்படும். இதனால், மின்சக்தி செலவு மிக மிகக் குறைவாகவே இருக்கும்.
புதிய வசதிகள்: இந்த ‘நகெட்’ சிஸ்டத்தில், Data Saver என்னும் வசதி புதியதாகத் தரப்பட்டுள்ளது. இதனை இயக்கி வைத்தால், ஏதேனும் ஓர் அப்ளிகேஷன் இயங்குகையில், அதிலிருந்து டேட்டா இணையம் வழி அனுப்பப்பட மாட்டாது. அதே போல, டேட்டா இணையத்திலிருந்து அந்த அப்ளிகேஷனுக்கு வருவது தடை செய்யப்படும். இதனால், இணைய இணைப்பில் டேட்டா அளவினைக் கவனமாகக் கையாளலாம்.
‘நெகட்’ சிஸ்டம் கூடுதலாகப் பல மொழிகளை அறிந்ததாக அறிமுகம் ஆகியுள்ளது. அதே போல, பல்வேறு இடங்களை, அதன் இருப்பிடமாக (Location) அமைத்து இயக்கலாம்.
பொதுவாகவே, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் பேக் அப் மற்றும் பேக் அப் செய்ததை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் வசதி தரப்படும். இது ‘நெகட்’ சிஸ்டத்தில் கூடுதல் சிறப்பினைப் பெற்றுள்ளது. கூகுள் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்படும் சாதனங்களின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டுள்ளது. இவற்றில் பேக் அப் ஆக அமைக்கப்படும் டேட்டா மற்றும் செட்டிங்ஸ் அமைப்புகள், புதிய ஆண்ட்ராய்ட் போனுக்கு எளிதாக மாற்றப்படுகின்றன.
எமோட்டிகான் குறியீடுகள் ‘எமோஜி’ என அழைக்கப்படுகின்றன. இந்த சிஸ்டத்தில் 72 புதிய எமோஜிக்கள் அறிமுகமாகியுள்ளன. இவை அண்மையில் யூனிகோட் அமைப்பினால், அனுமதிக்கப்பட்டவை. கீ போர்ட் மூலம் இவற்றை அமைக்கவும் முடியும்.
Daydream மற்றும் Vulkan என்ற இரு கட்டமைப்பு வசதிகள் தரப்பட்டு, கேம்ஸ் விளையாட வேகம் கூடுதலாகக் கிடைக்கிறது.
இதில் இயங்கும் சாப்ட்வேர் செயலிகள் அப்கிரேட் செய்யப்படுகையில், அவை ‘நெகட்’ சிஸ்டத்தில் வேகமாக அப்கிரேட் செய்யப்படுகின்றன.
மேலே சொல்லப்பட்டுள்ள வசதிகள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வசதிகள் என்ற வகையில் தரப்பட்டுள்ளன. இவை தவிர, இன்னும் பல வசதிகளும், மாற்றங்களும் இருக்கலாம். இன்னும் ஓரிரண்டு மாதங்களில் அனைத்து புதிய ஆண்ட்ராய்ட் போன்களும் ‘நெகட்’ சிஸ்டத்துடன் வரத் தொடங்கும். இவற்றை முழுமையாகப் பயன்படுத்த மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் உதவியாய் இருக்கும்.

%d bloggers like this: